ஆராய்ச்சி முன்னுரை அறிஞர் அண்ணா அவர்கள்
இராவண காவியம் – திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டு வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு, இராவண காவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும். எனினும், இந்நூல் எதிர்பாராத தல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக.
இதுபோல் ஒரு நூல் வெளிவந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின் போக்கிலே ஏற்பட்டு வரும் புதிய எழுச்சியை அறிந்தோர், அறிந்திருந்தனர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இதனை அறிவித்தே விட்டார் பல ஆண்டுகளுக்கு முன்னரே,
“தென்றிசையைப் பார்க்கின்றேன் என்செய்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!” என்பது கவிஞர் கூற்று.
இராவண காவியம் நோக்கம்,
இராவண காவியம், புரட்சிக் கவிஞரின் புதுக் கவிதைபோல், புதிய தமிழகத்தின் ஓவியம். இதனுடைய நோக்கம், முன்னுள்ள ஏடுகளின் மூலம் ஏற்பட்ட கேடுகளைக் களைந்து, இந்நாள் நினைவுக்கேற்ப, அவற்றினை ஆராய்ந்து, புது உருவாக்கித் தருவது. பழைய உருவிலே பற்றுக்கொண்டோருக்கு இது பயங் கரப் புயலாகத் தோன்றும். இதனை ஆக்கியோர் அறிவார், மனித இயல்பறிந்தோர் ஆச்சரியமும் கொள்ளார்.
இராம நவமி கொண் டாடும் நாட்களிலே, நாட்டிலே, இராவண காவியம் ஆக்கப்படு வது அதிசயம் என்று கருதிப் பயனில்லை, அறிவிப்பு என்று கொள்ள வேண்டும் – பழமை மடிகிறது என்பதற்கான அறிவிப்பு.
ஜாரின் கொடுமை உண்டாக்கிய சூழ்நிலையேதான் ஒரு லெனின் தோன்ற முடிந்தது. தோன்றினதால்தான், யார் தேவகுமாரன் என்று தேயத்தினரால் வணங்கப்பட்டு வந்தானோ அவன், மக்களின் இரத்தத்தை உறிஞ்சிடும் பேயன் என்று ஏற்பட்டது. ஜார் இல்லையேல் லெனின் இல்லை; அவசியம் இராது. அஃதேபோல், இராமாயணத்திற்கு ஆக்கந் தேட முனைவோரும், சித்திரம் தீட்டிடுவோரும், சிறு கட்டுரை யாக்கிடுவோரும் இன்று புதுக் கூத்தாட முற்பட்டிருக்கவில்லை யானால், இக் காவியமும் எழுந்திராது. ஒன்றின் விளைவு மற்றொன்று – விளைவு மட்டுமல்ல – ஒன்றுக்கு மற்றொன்று மறுப்பு.
இராமன் தெய்வமாக்கப்பட்டான்; இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்கனாக்கப்பட்டான்.
கோவிலுக்கு ஓர் உருத் தேவை என்பதற்காக, கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய இராமன் கையில், மகத்துவம் பொருந்திய கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும் கவி கற்பித்துக் கொண்டார். வாலும் வில்லும் வணக்கத்துக்குரிய பொருள்களாக் கப்படவே, தோள் வலியும் மனவலியும் படைத்த ஒரு மன்னன் மிலேச்சனாக்கப்பட்டான்.
இராமனுக்குச் செந்தாமரைக்கண் அமைத்தார் கவி; எனவே, இராவணன் கண்கள் செந்தழலை உமிழ்ந்தன என்று தீட்டலானார். அவருடைய நோக்கம், இராமனைத் தேவனாக்க வேண்டும் என்பது. அதற்கேற்றபடி கதை புனைந்தார்.
இராவண காவியம், முன்னாள் கவி, தம் நோக்கத்துக்காக இராவணன் மீது ஏற்றிய இழிகுணங்களையும், கொடுஞ் செயல் களையும் களைந்தெறியவும், இராவணனுடைய தூய்மைக்கு ஆதாரமான பல புகலவும், அஃதே போல, இராமனுடைய குணம் செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் . தவறுகளைத் தெளிவுபடுத்தவும் தோன்றிய நூலாகும்.
இராமன் கோவில் எங்கும் காணப்படும் இக் காலத்திலே, இம் முயற்சியில் ஈடுபட “நெஞ்சழுத்தமும்” அதிகம் வேண்டுமல்லவா? அஃது ஆசிரிய ருக்கு அப்படியே அமைந்திருக்கிறது.
எங்ஙனம் எனில், அவர் முன்னாள் கவிபோல ஆரியரின் போற்றுதல், அரசர்களின் மாலை மரியாதை ஆகியவற்றினைப் பெறும் எண்ணம் கொள்ளாமல், மக்கள் மன்றத்திற்கு, மனத்திற்பட்ட உண்மையை எடுத் துரைப்பதே தமிழன் மாண்பு என்ற கொள்கையினராவர். அவர் தன்மான இயக்கத்தவர். எனவே, தகுமா? முறையா? ஏற்றதா? என்ற கேள்விகளை அல்ல, சொல்லித்தீர வேண்டும் – உண்மை வெல்லும் – இன்று அல்லது நாளை என்ற உறுதியைத் துணைக் கொண்டு இந்நூலைச் செய்துள்ளார்.
இராமனும் இராவணனும்
இராமனும் இராவணனும் – உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல, கற்பனைகள்.
இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரே யொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர் – மதிப்பர் – வணங்குவர்.
ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.
தன்மான இயக்கத்தவர் – இராவண தாசர்களல்லர். இராவ ணனுக்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்துப் பூஜாரிகளாக வேண்டும் என்பதற்காக அல்ல இக்காவியம் புனைந்தது. பழி சுமத்தினரே பண்டைக் கவிஞர்கள் இராவணன் மீது. இது முறையல்லவே, துருவிப் பார்க்குங்கால் விஷயம் முற்றிலும் வேறாகவன்றோ உளது என்று எண்ணித் தீட்டியதே இந்த ஏடு.
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்கு மருந்து இது.
“தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா!” என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.
இதோ ஆரியம், இதோ திராவிடம்
இராமாயணம் தீட்டப்பட்ட காலம், இந்தப் பரந்த பூபாகத்திலே இருவேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல், நாட்டுநிலை அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை.
திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவரு மிலை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோ மில்லை . ஏனெனில், இது மறைக்க முடியாத உண்மையாகிவிட்டது.
திராவிடம் – ஆரியம் எனும் இருவேறு பண்பாடுகள் இருந்தன, கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்துவிட்டது என்று புன்முறுவலுடன் கூறுவர்.
பிரித்துக் கூறக்கூடாது என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது மட்டுமல்ல, அவர்தம் ஆராய்ச்சியாலும் தெரிவது, பிற்காலத்தில் பிரிக்கக்கூடாதவாறு, ‘சர்வ ஜாக்கிரதையாக’ மிகத் திறமையுடன், அந்நாளிலே ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்கிறார்கள் என்ற உண்மையும் தெற்றென விளங்குகிறது.
கண்டுபிடிக்கவே முடியாத கனவு! வெளிக்குத் தெரியாமல் நடைபெறும் விபசாரம்! ஓசைப்படாமல் கடிக்கும் நாகம்! – இவைபோல் இது பிரிக்கவே முடியாதபடி கலந்து போயிருக்கக் கூடும்.
இஃதோ புதைபொருள் தோண்டப்படும் காலம். மொகஞ்சதரோக்கள் காணப்படும் காலம்! மனித அறிவுக்கு எட்டாதது என்று எண்ணப்பட்ட எண்ணற்ற விஷயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கண்ட காலம். எனவேதான், எது ஆரியம், எது திராவிடம் என்று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்து போய்விட்டது என்று கூறப்படும் தன்மையை, மாற்றிட முடிகிறது.
மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே. எவ்வளவு முன்னேற்பாடாக, திராவிடக் கலையினைச் சிதைத்தும் குறைத்தும், ஆரியத்தை அத்துடன் இணைத்தும் இழைத்தும், ஒட்டியும் கட்டியும், பூசியும் தூவியும் பலவகையாலும் பலகாலமாகப் பாடுபட்டுக் கலந்தும், இன்று இந்தப் “பாவிகள்” எப்படியோ துப்புக் கண்டுபிடித்து, துருவித் துருவிப் பார்த்துச் சலித்தும் புடைத்தும் புடம் போட்டும் பார்த்து, இதோ ஆரியம், இதோ திராவிடம், இன்னது இன்ன அளவு உள்ளது என்று பிரித்துக் காட்டுகின்றனரே! அந்த நாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்நாள் வந்ததே விபத்து! என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர்; அவர்கள் கவலைப்படு கிறார்களே என்பதற்காகக் காலவேகம் வேலை நிறுத்தம் செய் யுமா? தடையும், எதிர்ப்புப் படையும் அந்த வேகத்தை அதிகப் படுத்துகின்றன.
இரண்டும் கற்பனைகளே
இராவண காவியத்தை இந்த மனநிலையின் கனியயெனக் கொள்ள வேண்டும். இதுவும், அந்நாள் இராமாயணம் போலக் கலைப்போர் முரசுதான். இரண்டும் கற்பனைகளே.
- முன்னது இராமனைத் தேவனாக்க!
- ,இராவணனைத் தேவனாக்க வல்ல – தமிழனாக்க.
அதாவது வீரனாக்க! முன்னதற்குக் கவி, வானையும் வானிலுறைவோரையும் துணைக்கொள்ள நேரிட்டது. இந்நூலுக்கு அது தேவையில்லை. முன்னூலில் புதைந்துள்ளவை களைக் கொண்டே, இராவணனின் உருவம் இத்தன்மையது என்று எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். சம்பராசுர யுத்தம் என்று முன்னூல் கூறுகிறது. அசுரன் அவன் என்று பயங்காட்டுகிறது.
இராவண காவியத்திலே சம்பரன் அசுரனல்லன், பாண்டி யன் எனப்படுகிறது. எதைக் கொண்டு இம்முடிவு கட்டுகிறார் ஆசிரியர்? முன்னூலீலே சம்பராசுரன், மீனக்கொடியோன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது; ஆக, மீனக்கொடி பாண்டியனுக்குரியது எனவே சம்பரன் அசுரனென்று. ஆரியரால் நிந்திக்கப்பட்ட பாண்டிய மன்னனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறது இந்நூல்.
இஃதே போலவே, இந்நூலின்கண் காணப் படும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் ஆதாரங்கள், இராமாயணத்தி லிருந்து சலித்து எடுக்கப்பட்டவையே யாகும்.
இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், ஆரிய நேசர்கட்கும், ஒரே ஒரு வழிதான் உண்டு இராமாயணமே பொய்க்கதை, அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்துவிடுவதுதான். வேறு மார்க்கம் இல்லை.
இராவண காவிய சுவை
கதை கிடக்கட்டுமய்யா, காவிய ரசனை இருக்கிறதே! அது, கம்பனின் இராமாயணத்தில் பொங்கி வழிகிறதே! அஃதிருக்கட் டும் அச்சம் ஏன்? கொச்சைத் தமிழிலே, ஏதேதோ கூறிடுவோர் கூறட்டும். அழகு கவிதையில் ஆரிய இராமன் மிளிர்கிறான் என்று கூறுவதற்கும் இந்தப் பொல்லாத குழந்தை இடந்தர வில்லை.
கூற வேண்டியதைக் காவியச் சுவை குறைவுபடா வண்ணம் கூறிவிட்டிருக்கிறார். அங்கு ஆறு ஓடும் விதம் எவ்வளவு அழகுபட உளதோ, அவ்வளவு அழகுபட இங்கு முளது. அங்கு இயற்கைக்குத் தமிழ் ஆபரணம் பூட்டப்பட்டிருப்பது போலவே, இராவண காவியத்திலும் பொலிவுறப் பூட்டப்பட்டுள்ளது. அதிலாவது, தேவாம்சம் புகுந்து தமிழின் இனிமைக்கு ஊறு தேடுகிறது. இதன்கண் அக்குறையும் கிடையாது.
அது ஆரியங் கலந்த கடுந்தமிழில் புலவர்க்காக ஆக்கப்பட்டது. இது எளிய இனிய தனித்தமிழில் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இயற்றப் பட்டது. எடுத்துக்காட்டாகச் சில கூறுவோம்!
1. கதிரவன் தோற்றம்
“அளித்தகை யில்லா வாற்ற லமைந்தவன் கொடுமை யஞ்சி வெளிப்பட வரிதென் றுன்னி வேதனை யுழக்கும் வேலை களித்தவர் களிப்பு நீங்கக் காப்பவர் தம்மைக் கண்ணுற் றொளித்தவர் வெளிப்பட் டன்னக் கதிரவ னுதயஞ் செய்தான்.”
(சூரியன், இராவணன் கொடுமைக்கு அஞ்சி வெளிவரமுடியாமல் வருந்திக்கொண்டிருக்கும் போது, இராமன் படையைக் கண்டு வெளிப்பட்டான்.)
– கம்பராமாயணம்: அணிவகுப்புப் படலம் – 24
“இருண்டபே ரிருளை நீக்கி இளங்கதிர்ச் செல்வன் துப்பில் திரண்டுமே பொருது வென்று சென்றவர் போக மண்ணிற் புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ டிரண்டுநா ளாயிற் றென்ன எண்ணுவான் போல வந்தான்”
– இராவண காவியம்: இரண்டாம் போர்ப் படலம் – 1 (துப்பு – வலி துப்பில் திரண்டு – வலிமிக்கு)
2. கதிரவன் மறைவு
“தன்றனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் தைத்த
மின்றளிர்த் தனைய பன்மா மணியினை வெளியிற் கண்டான் ஒன்றொழித் தொன்றா மென்றவ் வரக்கனும் ஒளிப்பான் போல வன்றனிக் குன்றுக் கப்பால் இரவியும் மறையப் போனான்.”
(சூரியன் மகனான சுக்கிரீவன் இராவணனது மணிமுடியைச் சிதைக்க இராவணன் அங்கு நின்று சென்றது போல, மகன், வென்றிகண்ட மகிழ்வால் சூரியனும் மறைந்து சென்றான்.)
– கம்பராமாயணம்: மகுடபங்கப் படலம் – 41
“குருதி யாடிக் குவிபிணக் காடணர்
பரவை போலப் படர்செங் களத்தினை
பரிதி காணப் படாதெனச் செல்லவே
இரவு வந்த தினுங்கொலு வேனெனா.”
(அணர்தல் – மேல் நோக்கி எழுதல், பரவை – கடல்)
– இராவண காவியம் : முதற் போர்ப்படலம் – 77)
விரிக்கிற் பெருகும், புலவர் குழந்தை பெருங்காப்பியத்திற்குள்ள இலக்கண முறை சிறக்கச் செய்துள்ளார். கவிச்சுவை, ஓசை, உவமைகள், அணிகள் அழகுடன் அமைந்துள்ளன. அகம் புற இலக்கணங்களில் கூறப்படும் களவு, கற்பு, போர் முறை, வீரம்
முதலியவற்றிற்கோர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது இது. எனவே, சிறந்ததோர் காவியமாக அமைந்துள்ள இராவண காவியம் தமிழின் இனிமை கண்டு சொக்குவோருக்கு, விருந்தாக அமையுந்தகைமைத்து.
இராமாயணம், ஆரிய ஆதிக்கத்துக்குப் பயன்பட்டதென்பது மறுக்கொணாத உண்மை . பண்டித நேரு அவர்கள் தம் திருமக ளாருக்குத் தீட்டிய திருமுகத்திலேயும் இதனைக் குறித்துள்ளார். நோக்கமே அந்நூலுக்கு அதுதான்.
தோழர் புலவர் குழந்தை, தமிழர் – தமிழ் இனம் விழிப்புற்று வீறு கொண்டு, விடுதலை பெற்று, வீரமக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்குடையார். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை, தமிழை, தமிழ்க் கவிப்புலமையை இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.
காவியத்திலே – தமிழ்நாடு, தமிழ், தமிழர் தன்மை , ஆரியர் வருகை, அவரைத் தமிழர் ஆதரித்தமை, ஆரியரின் உட்கருத்து, அவர் தம் உளவு முறை, கெடுநினைப்பு தீயசெயல் ஆகியவற்றினை விரித்துரைத்திருக்கிறார்.
பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு
சுருங்கக் கூறுமிடத்து இந்நூல், பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு; தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், காவியச்சுவை யறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்; தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு; காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறை கூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்.
இவ்வரிய நூலை, மிகச் சிரமப்பட்டு, தமிழரின் தன்மானம் தழைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் எழுதியுள்ளமைக்குப் புலவர் குழந்தைக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், நந்தமிழ் மக்கள் இதற்குப் பேராதரவு தருவர் என்று அவர்க்கு உறுதி கூறுகிறேன். தமிழராகிய நீவிர், உமக்கென ஆக்கப் பட்ட இத்தனித் தமிழ்க் காவியத்தைப் போற்றியாதரிப்பீர் என்ற நம்பிக்கையை ஈடேற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.
காஞ்சிபுரம் 15-9-46
அன்பன், அண்ணாத்துரை
ஆராய்ச்சி அணிந்துரை