இராவண காவியம் எதற்கு?

கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைக் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிய காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளை யாடற் புராணம் எல்லாம் எதற்கு?

தொல்காப்பியம் இருக்க நன்னூல் எதற்கு? நளவெண்பா இருக்க நைடதம் எதற்கு? வில்லிபாரதம் இருக்க நல்லாப் பிள்ளை பாரதம் எதற்கு? சிவசாமி அரிச்சந்திர நாடகம் இருக்க நீதிநெறி அரிச்சந்திர நாடகம், மூக்கு வேளார் அரிச்சந்திர நாடகம், அரிச்சந்திர விலாசம் எல்லாம் எதற்கு?

ஒன்றிரண்டு மூன்று திருவிளையாடற் புராணங்களும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் எதற்கு? நான்கு வேதம், ஆறங்கம், பதினான்கு தருமசாத்திரம், பதினெண் புராணம், இருபத்தெட்டாகமம், நூற்றெட்டுபநிடதம் எல்லாம் எதற்கு?

இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி? அவையெல்லாம் எதற்கென்பதுகூடத் தெரியாதவனா கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாய்? தெரிந்து கேட்கிறாயா? அல்லது தெரியா மலேதான் கேட்கிறாயா? தெரிந்துந் தெரியாமலுங் கேட்கிறாயா? நீ எப்படிக் கேட்பினுஞ் சரி. அவை யெல்லாம் படிப்பதற்குத்தான் படிப்பது எதற்கு என்று கேட்டுவிடாதே. படிப்பது அறிவு பெறுவதற்காக; வேண்டுமென்றால் படியாதவரை ஏமாற்றுவதற் கென்று வைத்துக் கொள்.

உலகில் பல மொழிகள் வழங்குகின்றன. ஒவ்வொரு மொழி யிலும் எண்ணிறந்த இலக்கிய இலக்கண நூல்கள் எழுதப்பட் டுள்ளன. ஒரே பொருளைப் பற்றிப் பத்துப் பதினைந்து நூல்கள் கூட உள்ளன. இவை ஒரு நூலைச் சுருக்கியோ பெருக்கியோ அல்லது சுருக்கியும் பெருக்கியுமோ – தொகுத்தும் வகுத்தும் தொகைவகை விரியில் – எழுதப்பட்ட நூல்களாக இருக்கும்) அல்லது எதிர் நூல்களாக இருக்கும்.

தமிழ், வடமொழி முதலிய எல்லா மொழிகளிலும் இவ்விருவகை நூல்களும் நிரம்ப உள்ளன இவ்வாறு இருப்பது ஒரு மொழிக்குரிய இயல்புமாகும். இது கற்றவர் எல்லார்க்கும் தெரிந்ததொரு செய்தியேயாகும். “இராவண காவியம் எதற்கு?” என்ற கேள்வியைக் கேட்டவர்க்கும் இது தெரிந்திருக்குமென்றே நம்புகிறேன். தெரிந்திருந்தோ, தெரிந்துத் தெரியாமலுமிருந்தோ, அல்லது தெரியாமலேயிருந்தோ கேட் டிருந்தாலும் சரி. ‘எதற்கு’ என்பதை அறிவுறுத்த வேண்டியது, அவர் புரிந்து கொள்ளும்படி விளக்கிக் கூறுவது, அவருடைய இப் பேரையத்தைத் தீர்த்து வைப்பது நம் கடமையாகும்; இன்றியமையாத கடமையுங்கூட ஆகும்.

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

கம்பருக்குத் திருநாளும் பெருநாளும்

“இராவண காவியம் எதற்கு?” என்ற இக்கேள்வியாரால், எப் போது, ஏன் கேட்கப்பட்டது? பழந் தமிழராகிய நம் முன்னையோர் ஒழுக்க முறைகளை நாமும் அறிந்து கொள்வதற்காகப் பேரிலக்கண நூல் – தொல்காப்பியம் – செய்து வைத்த தொல் காப்பியர் இருக்க, தமிழர் வாழ்க்கைச் சட்டநூலும் உலகப் பொது நூலுமான ஒப்புயர்வற்ற திருக்குறளை நமக்குத் தந்த வள்ளுவர் இருக்க, பழந்தமிழ் மக்களின் அகம்புற வாழ்வை அருந்தமிழ்ப் பாக்களால் வகைபெற அமைத்துக் கொடுத்த பன்னூற்றுக் கணக்கான சங்கப் புலவர்களிருக்க, கற்றார் கல்லாதார் ஆகிய எல்லாத் தமிழ்மக்கட்கும் அறிமுகமானவரான ஒளவையார் இருக்க, இமய முதல் குமரிவரை ஒரு மொழி வைத்தாண்ட தமிழர் பெருமைக்கோர் அகச்சான்றாக உள்ள சிலப்பதிகாரத்தைச் செய்த இளங்கோவடிகள் இருக்க, இன்னும் எத்தனை யெத்தனையோ செந்தமிழ்ப் புலவர்களிருக்க, அவர்களுக்கெல்லாம் திருநாட்களில்லை, பெருநாட்களில்லை, கொண்டாட்டமில்லை, மாநாடுகளில்லை.

அவர்களிற்பலர் பெயரினைக்கூடத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில்லை ; அறியவும் விடுவதில்லை .

ஆனால்,

அப்புலவர்களி லொருவரான கம்பருக்கு மட்டும் திருநாளும் பெருநாளும் கொண்டாடப்பட்டு வருகின்றன; ஆண்டுதோலும் பல இடங்களில் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. ஏன்?

அங்கேதான் இருக்கிறது நுட்பம். அது ஒரு தந்திரம் என்றுங்கூடச் சொல்லலாம். அது ஒரு கூட்டத்தாரின் தன்னல மென்பதே பொருத்தமானதாகும். எங்ஙனம்? மேல் எடுத்துக்காட் டிய புலவர் பெருமக்களெல்லாரும் தமிழர் வாழ்வுக்காக, தம் இனப்பெருமைக்காகத் தம் தமிழ்ப்புலமையைப் பயன்படுத்தினர்.

கம்பரோ, தமிழர் வீழ்வுக்காக, தமிழினப் பகைவரான ஆரியர் வாழ்வுக்காகத் தம் தமிழ்ப் புலமையினை, தம் தமிழ்க் கவித் திறத்தினைப் பயன்படுத்தினார்;

தமிழினத்தை ஆரியத்துக்கு, ஆரியர்க்கு அடிமையாக்கத் தமது தமிழ்க் கவித்திறத்தினைப் பயன்படுத்தினார்; அதற்குத் தம் தமிழ்க் கவித்திறத்தினைக் கருவியாகக் கொண்டனர் எனலாம்.

இதற்காகத்தான் கம்பருக்குத் திருநாளும் பெருநாளும் கொண்டாடப்படுகின்றன.

8, 9, 10-10-1948 இல், சென்னையில் நடந்த கம்பர் மாநாட்டில். நண்பர் பி. ஸ்ரீ ஆச்சாரியா என்பார், “இராவண காவியம் எதற்கு?” என்ற ஓர் வினாவை எழுப்பி ஒரு கண்டனச் சொற் பெருக்காற்றினார். அது 12-10-48 ‘சுதேசமித்திர’னில் வெளி வந்துள்ளது.

அதாவது,

‘இராவண காவியம்’ என்ற ஒரு நூல் வெளிவந்ததையும், சென்னை அரசினர் அதற்குத் தடைவிதித்திருப்பதையும் குறிப் பிட்டு, “இராவண காவியம் என்று ஒரு தனி நூல் அவசியம் இல்லை. ஏனெனில், கம்பராமாயணத்தையே இராவண காவிய மாகவும் கொள்ளலாம். இராவணனுடைய பராக்கிரமத்தைக் கம்பன் சித்திரித்திருப்பதைச் சற்றுக் கவனித்தால் இதன் உண்மை விளங்கும்.”

இராவணனுடைய வீரம் மறம் வளர்க்கும் வீரம்.

“ஆங்கிலப் பேராசிரியரான மில்டன் என்பவன் இயற்றியுள்ள “சுவர்க்க நீக்கம்” என்ற அரிய கவிதையில், சைத்தான்தான் முக்கிய நாடகப் பாத்திரம். அதே போல் கம்பராமாயணத்திலும் இராவணனுடைய முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை. ஒரே ஓர் அடிப்படையான வித்தியாசம் என்னவெனில், இராமனுடைய வீரம் அறம் வளர்க்கும் வீரம்; இராவணனுடைய வீரம் மறம் வளர்க்கும் வீரம்.

ராக்ஷஸ ராஜ்யத்தைக் கம்பன் வர்ணித்திருக்கும் முறையைப் பார்க்கும் போது, கம்பன் இராமபக்தனா? அல்லது இராவண பக்தனா? என்று கூடச் சந்தேகப்பட வேண்டியிருக் கிறது. கபந்தன், விராதன், கும்பகர்ணன் முதலியவர்களைப் பற்றிக் கூறுகையில் கம்பன் புனைந்திருக்கும் ஹாஸ்ய சித்திரம் சொல்நயம் பொருள் நயத்துடன் விளங்குகிறது.”

எது பராக்கிரமம்?

இவைதாம் நண்பர் பி.ஸ்ரீ ஆச்சாரியா அவர்கள், “இராவண காவியம் எதற்கு?” என்ற வினாவிற்குக் கூறும் விடையாகும். இவ்விடை உண்மையாகவே அவ்வினாவிற்கேற்ற விடையாகுமா? என்பதுதான் ஆராய்ச்சிக்குரியதொன்றாகும்.

முதலாவதாக, ‘கம்பராமாயணத்தையே இராவண காவிய மாகவுங் கொள்ளலாம்; இராவணனுடைய பராக்கிரமத்தைக் கம்பன் சித்திரித்திருப்பதைச் சற்றுக் கவனித்தால் இதன் உண்மை விளங்கும்’ என்னும் கூற்றை நோக்குவாம்.

இராவணனுடைய பராக்கிரமத்தை எம்முறையில் சித்திரிக் கிறார் கம்பர்? ஒருவனுடைய நற்செயல்களைச் சிறப்பிப்பதுதான் பராக்கிரமமே அன்றி, அவன் கொடிய வல்லரக்கன், அரக்கத்தன்மையால் இன்னின்ன கொடுமைகள் செய்தான் என்பன எங்ஙனம் ஒருவனுடைய பராக்கிரமமாகும்? கொலைஞர், திருடர் முதலியோரும் செயற்கரிய அரும்பெரும் ஆற்றல்மிக்க செயல்கள் தாம் செய்கின்றனர்.

அவை உலக மக்களால் ‘பராக்கிரமம்’ என்று புகழப்படுகின்றனவா? கோட்சே என்பான், உலகம் போற்றும் உத்தமர் காந்தியடிகளைச் சுட்டுக் கொல்லும் அளவுக்கு அத்தகு அரும்பெருஞ் செயலைத்தான் செய்தான். பகுத்தறிவுடைய எந்த ஒரு மகனாலும் செய்யமுடியாத செயற்கருஞ் செயல்தானே அது? கோட்சேயின் அச்செயற்கருஞ் செயலை அவனது பராக்கிரமம் என்னலாமா? அது ‘செயல்’ என்னும் சொல்லின் செம்பொருளாகுமா? ஒரு போதும் ஆகாது.

இவ்வாறுதானே இராவணன் கொடியன் என்னும் முறையில் இராவணனுடைய செயற்கருஞ் செயல்கள் பல கம்பரால் சித்திரிக்கப்படுகின்றன? ‘அறக்கொடியோனான இரக்கமென் றொரு பொருளிலா அரக்கன், உலக மாதாவாகிய சீதாபிராட்டி யாரைத் தூக்கிச் சென்றனன்; பாவியாகிய இராவணன் அன்னை சீதாபிராட்டியைப் பலவாறு துன்புறுத்தினன், பலவந்தம் செய்தனன் என்பன போன்றவை தாமே கம்பரால் சித்திரிக்கப்படும் இராவணனுடைய பராக்கிரமங்கள்? இவை எங்ஙனம் அவனுடைய பராக்கிரமங்கள் ஆகும்?

வெட்சி நிரை கவர்தல்

இரக்கமில்லாத அரக்கனின் அறக்கொடுஞ்செயல்களல்லவோ இவை? இவையா இவ்வுலகையே கட்டியாண்ட, ஏன்? ஏழுலகையுமேகூட அடக்கியாண்டவன் எனப்படும் ஓர் ஒப்பற்ற தலைவனின் புகழுக்குரியவை? ‘ஈச்சுரன்’ என்னும் பட்டப் பெரியனைத் தனியுடைமையாகப் பெற்றிருந்த ஒரு மாவீரனுக்குக் கூறப்படும் பராக்கிரமங்கள்? ஆனால், இராவணன் பகைவனான வடவாரிய ராமன், தமிழ்க் கம்பரால் கடவுளாக்கப்படுகிறான்.

தம்மினத்தவளான தமதரச குடும்பப் பெண்ணான காமவல்லியை (சூர்ப்பநகை) உருக் குலைத்த இராமன் செயல் அறச்செயல் எனப்படுகிறது.

அக் கொடுஞ்செயலைச் செய்த இராமன், பெண் கொலை செய்தும், ஏன்? மூக்கு முலையறுத்து, வன்கொலை செய்தும் கம்பரால் அறம்வளர்த்தோன் எனப் புகழப்படுகிறான்.

தன் உடன் பிறப்பை உருக்குலைத்துக் கொன்ற கொடியனான இராமன் மனைவியைக் கொல்லாததோடு, யாதொரு தீங்கும் செய்யாது, ‘வெட்சி நிரை கவர்தல்’ என்னும் தமிழர் போர் முறைப்படி எடுத்து வந்து பாது காப்பில் வைத்து, அவளுக்கு வேண்டியவளான திரிசடையைத் துணையாக வைத்துப் போற்றி வந்த இராவணன் செயல் அறக் கொடுஞ் செயல்! இந்நற்செயலைச் செய்த இராவணன் அறக் கொடியோன்! இதுதான் கம்பருடைய கவிச் சித்திரம் போலும்!

தன் நாட்டினுள் தன் உடன்பாடின்றி வந்ததே தவறாக இருக்க, தன் தங்கையை, ஒரு குற்றமும் செய்யாத உடன்பிறப்பை உருக் குலைத்துக் கொன்றதற்கு ஒப்பான செயலைத் திருப்பிச் செய் யாது, அக்கொடியோன் மனைவியை எடுத்துவந்து பாதுகாத்து வந்தது எங்ஙனம் அறக்கொடுஞ்செயலோ நமக்கு விளங்கவில்லை.

இனி ஆரிய முனிவர்கள் செய்த கொலைவேள்வியைத் தடுத்த இராவணனது பராக்கிரமம் கம்பரால் அறக்கொடுஞ் செயலெனச் சித்திரிக்கப்படுகிறது. கொலை வேள்வியைத் தடுத்த, துடிக்கத் துடிக்க உயிர்களைக் கொல்வதைத் தடுத்த இரக்கமுள்ள ஒருவன், கொல்வது குற்றமெனக் கூறிய அருட்குணமுள்ள ஒருவன் கொடும் பாவி! அக்கொலை வேள்வி செய்யத் துணைசெய்த ஒருவன் அறங்காத்தோன்! இவ்வறநெறியைக் கம்பர் எங்குக் கற்றாரோ நாமறியோம்.

“அவிசொரிந் தாயிரம் வேட்டலினும் ஒன்றன் உயிர்செகுத்துண்ணாமை நன்று” என்னும் வள்ளுவர் வாய்மொழியைக் கம்பர் அறிந்திலர் போலும்! கொலை மறுத்த கொன்றுண்ணாக் குணக் குன்றை அறக்கொடியோன் என்ற கம்பரின் போக்கு நமக்கு விளங்கவில்லை.

இராவண காவியச் சிறப்பு

ஆரியர்க்குச் ‘சுரர்’ என்னும் பெயர்

ஆரியர் இந்நாட்டிற்கு வருமுன் தமிழரிடைக் குடிப்பழக்கம் இல்லை. ஆரியர் சோமக்கொடிச் சாறு முதலியவற்றிலிருந்து கள் உண்டாக்கிக் குடித்து வந்தனர். (சாராயம் முதலிய மதுவகைகளும் கள்ளெனவே படும்) இராவணன் முதலிய தமிழர் தலைவர்கள் அதைத் தடுத்து வந்தனர்.

ஆரியர்க்குச் ‘சுரர்’ என்னும் பெயர் “கள்” உண்டதனால் ஏற்பட்ட பெயரேயாகும். சுரர் – தேவர். பூசுரர் – ஆரியர்.

இராவணன் முதலிய தமிழர் குடியாதவர் – அசுரர். சுரர் – கள். சுரர் – கள்ளுண்போர் – குடியர். அசுரர் – குடியாதவர்.

அறிவை மயக்கும் கள்ளுண்ணாதவன், குடிப்பதைத் தடுத்தவன் அறக்கொடியோன். குடிக்க உதவியவன் அறம் வளர்த்தோன்! இது, கல்வியிற் பெரிய கம்பர் கண்ட அறம் போலும்! குடிப்பழக்கம் இல்லாத நாட்டில் திருட்டுத்தனமாகக் குடிப்பது குற்றம் என்பதைக் கம்பர் அறியார் போலும்!

அயல் நாடர்களாகிய அவ்வாரியர்கள் இராவணனுடைய நாட்டுக்குள் அவன் உடன்பாடின்றி வந்தது முதல் குற்றம்; அவ் வாறு வந்ததோடு, நாட்டுமக்கள் தடுத்துங் கேளாமல் அந்நாட்டு விலங்குகளைக் கொன்று தின்றது இரண்டாவது குற்றம் அந்நாட்டு மக்களின் கால்நடைகளை – ஆடு மாடுகளை – உடை மைகளை – கண்டுங் காணாதும் திருட்டுத்தனமாகக் கொன்று தின்றது மூன்றாவது குற்றம்; அரசன் ஆணையையும் புறக்கணித்து அக்கொலைத் தொழில், புலைத்தொழில் செய்தது நான்காவது

குற்றம்; குடிப்பழக்கமில்லாத நாட்டில், மதுவிலக்குச் சட்டத்தை மீறிக் குடித்தது ஐந்தாவது குற்றம்; வடநாட்டரசர்களைத் துணைக்கழைத்துவந்து வடதென்னாட்டுப் பகையை உண்டாக்கி வைத்தது ஆறாவது குற்றம். இன்னும் கூறிக்கொண்டே போகலாம் அவ்வாரியர் செய்த கொடிய குற்றங்களை.

இங்ஙனம் பல குற்றங்களை அடுக்கடுக்காகச் செய்தாரை அவ்வாறு செய்யாதீர் என்று எச்சரித்தது அறக்கொடுஞ்செயல்! கொலை வேள்வியை மறுத்த, குடிப்பதை மறுத்த வள்ளுவரும் அறக்கொடியோர் தானே! ஆரிய முனிவர்கள் செய்த கொலைவேள்வியை, குடியைத் தடுத்தது; சீதையை எடுத்து வந்து பாதுகாப்பில் வைத்திருந்தது ஆகிய இவ்விரு பெருங்குற்றங்களும் – அறக்கொடுஞ்செயல்களும் –

இராவணன் நிலையில் இருந்து பார்த்தால், அவன் தன் கடமையைச் செய்தானே என்பதல்லாமல் ஒரு போதும் குற்றமெனப் படா.

இவ்விடங்களில் கம்பர் இராவணனைத் திட்டியதிட்டு ஓர் உண்மைத் தமிழ்மகன் வாயிலிருந்து, அஃதும் செந்தமிழைக் கற்றுத் தெளிந்து, ‘கல்வியிற் பெரியவன்’ என்னும் பட்டம் பெற்ற ஒரு கவிப் புலவன் வாயிலிருந்து வரக்கூடிய சொற்களா?

அம்மம்மா! என்ன வைவு! ‘இராவண காவியம் எதற்கு?’ என்றவர் கருத்துப்படி, வைதலை வாழ்த்தாகக் கொண்டால் மட்டும் அது இராவணன் பராக்கிரமத்தைச் சித்திரித்ததாகும்.

அப்போது வேண்டுமானால் இராவண காவியம் வேண்டி யதில்லைதான். அரக்கர் செயலெனக் கூறப்படும் அறக்கொடுஞ் செயலினும் கொடிய அறக்கொடுஞ் செயலான கம்பர் செயலின் முன் எங்ஙனம் கம்பராமாயணத்தையே இராவண காவியமாகக் கொள்ள முடியும்?

இனி, வீராதிவீரனும் தீராதிதீரனும், அவன் பெயரைக் கேட்டாலே பகைவர்க்கு எலும்பில் காய்ச்சலுண்டாகும் போர்த்திற முடையவனும், பகைவர்களாலேயே ‘இராவணேச் சுரன்‘ என்று புகழப் பெற்றவனுமான இராவணனைச் சைத் தானுக்கு ஒப்பிடும் அக்கண்டனக் காரரின் உவமைத்திறனுக்கு ஒப்பானவர் – உவமை கூறத்தக்கவர் – இனியொருவர் தனியாகப் பிறந்து வரவேண்டியதுதான்! சைத்தான் கட்டுக்கதைப் படைப்பு. இராவணன் வரலாற்றுத் தலைவன். இந்நிலையில் உவமை எப்படிப் பொருந்துமோ அவரைத்தான் கேட்க வேண்டும்.

பொருளினும் உவமை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் உவமையிலக்கணங்கூடத் தெரியாத அப்பாவியைக் கேட்டென் பயன்?

இராமனுக்கும் இராவணனுக்கும் ஒரே ஒரு அடிப் படையான வித்தியாசம்

‘ஆரியர் என்போர் இன்று இல்லை. ஆரியராவது திரா விடராவது? இது வெறும் புளுகுமூட்டை . நாங்கள் ஆரியர் வழிவந்தவர் அல்லர்; ஆரியரல்லர்’ என்னும் திருக்கூட்டத்தைச்சேர்ந்த இவர் (பிஸ்ரீ), ஆரியர் குலப்பகைவனான இராவணனைச் சைத்தானுக்கு ஒப்பிடுமளவுக்கு இராவணன் மீது வெறுப்புக் கொண்டதன் காரணம் நமக்கு விளங்கவில்லை.

இனி, ‘இராமனுக்கும் இராவணனுக்கும் ஒரே ஒரு அடிப் படையான வித்தியாசம், இராமனுடைய வீரம் அறம் வளர்க்கும் வீரம்; இராவணனுடைய வீரம் மறம் வளர்க்கும் வீரம்’ என்பது.

ஆம், கம்பர் கொள்கைப்படியே – கூற்றுப்படியே – தனக்கு யாதொரு தீங்குஞ் செய்யாத ஒரு தமிழ் மூதாட்டியைத் துடிக்கத் துடிக்க வன்கொலை செய்வதும், வழியில் தென்படும் தமிழர் களையெல்லாம் வம்பில் கொல்வதும், எதிர்ப்படும் பெண்களை யெல்லாம் மூக்கு முலையறுத்துக் கொல்வதும், தன்மீது காதல் கொண்ட ஓர் அரசகுடும்பப் பெண்ணை அவ்வாறே வன்கொலை செய்வதும்,

வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொல்வது

தனக்கு என்றும் எத்தகைய தீங்கும் செய்யாதவனும், பகையில்லாதவனும், தன்னுடன் எதிர்பொ வாராதவனுமான வீர வாலியை, மற்றொருவனோடு போர் செய்து கொண்டிருக்கும்போது மறைந்து நின்று அம்பெய்து கொல்வதும்,

இலங்கை செல்லும் வழியில் கடற்கரையில் வாழ்ந்துவந்த யாதொரு குற்றமும் செய்யாத தமிழ்க்குடி மக்களை ஒருசேரக் கொல்வதும், இலக்குவனோடு எதிர்த்துப் பொருதுகொண் டிருந்தபோது குறுக்கே வந்து இராவணன் உயிரைக் குடிப்பதும், இன்னோரன்ன இராமன் செயல்கள் எல்லாம் அறம் வளர்க்கும் வீரச் செயல்கள் தாம்!

கம்பன் இராவண பக்தன் அல்லன்; இராம பக்தனேயாவன்.

நாம் முன்னர் எடுத்துக்காட்டிய இராவணன் செயல்களெல்லாம் மறம் வளர்க்கும் – பாவத்தை வளர்க்கும் – வீரச் செயல்கள்தாம்! படிப்போரே தீர்ப்புக் கூறிக்கொள்ளட்டும்.

ராக்ஷஸ ராஜ்யத்தைக் கம்பன் எதற்காக அப்படி வர்ணித் தான்? தன் கவித்திறத்தினைக் காட்ட, வலிபொருந்திய அவ் விலங்கையும் இராமபிரானால் அழிக்கப்பட்டது என இராமன் பெருமையை மிகுதிப்படுத்திக் காட்டவுமேயல்லாமல், கண்டனக் காரர் நினைக்கின்ற நினைப்புப்படி கம்பன் இராவண பக்தன் அல்லன்; இராம பக்தனேயாவன்.

கம்பரைவிட உண்மையான முதல் தரமான இராவணத் துரோகி அன்றுமில்லை, இன்று மில்லை, இனி யென்றும் இருக்கப் போவதுமில்லை.

மேலும், ஒரு நாட்டைப் பற்றி வர்ணிப்பவன் அந்நாட்டு மன்னனுக்குட் பக்தனாகப் போவதுமில்லை. பகைவன் நாட்டின் இயல்பைச் கூறுதல் கவிக்கு இயல்பேயாகும்.

காமச்சுவை மிக்க கம்பராமாயணம்

கவந்தன், விராதன், கும்பகர்ணன் முதலியோரைப் பற்றிக் கம்பர் புனைந்துரைத்துள்ளதைக் கூறப்புகின் அஃதொரு தனிச் காவியமாகும். என்னே கம்பன் இழிப்புப் புனைந்துரை!

இனி, கவிநலங்கனிந்த, கற்பனை வளம் நிறைந்த, காமச்சுவை மிக்க கலைக்களஞ்சியமான பல்லாயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணமிருக்க, அதில் இராவணன் பெருமை நலம்படக் கூறியிருக்க, இராவண காவியம் எதற்கு? எனின்,

அது தான் நண்பர் பி. ஸ்ரீ போன்றவர்கள் இராவண காவியத்தை வெறுப்பதும், அவர்கள் விருப்பத்தின்படி ஆள்வோர் அதைப் பறிமுதல் செய்ததும், தமிழ்மக்கள் படிக்கக் கூடாதெனத் தடைவிதித்ததும் ஆகும்.

போலிப் பொய்க்கூற்றுகளைப் போக்குதற்காகவே

வான்மீகியார் ஒரு சாதாரண அரசகுமரனாகக் கூறியுள்ள இராமனைக் கம்பர் திருமாலின் திருவிறக்கம் ஆக்கினதும், எவளோ ஒருத்தி பெற்று எறிந்துவிட்டுச் செல்ல, சனகனால் கண்டெடுத்து வளர்க்கப்பட்ட சீதையைத் திருமகளின் திருவிறக்கம் ஆக்கினதும், தமிழர் மாபெருந் தலைவனான இராவணனை அரக்கர் தலைவன் ஆக்கினதும், மானமிக்க மறத்தமிழர்களை வானரங்கள் – குரங்குகள் – ஆக்கினதும், தம் இனத்தைக் காட்டிக் கொடுத்த மானங்கெட்ட தமிழர்களை – ஆரிய அடிதாங்கிகளை ஆழ்வார்ப்பட்டம் சூட்டிப் பெருமைப்படுத்தினதும் ஆன இன்னோரன்ன போலிப் பொய்க்கூற்றுகளைப் போக்குதற்காகவே இராவண காவியம் செய்யப்பட்டதாகும்.

இராவண காவியம் - அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

அரக்கர் எனவும், குரங்குகளெனவும்

வான்மீகி காலத்து இலங்கையிலிருந்த அரக்கர்களும் கிட்கிந்தையிலிருந்த வாலி முதலியோர் போன்ற அத்தகைய குரங்கு களும் கம்பர் காலத்தில் இருந்ததாக வரலாறில்லை. வான்மீகி வேண்டுமென்றே தமிழரில் ஒரு சாராரை அரக்கர்களெனவும், ஒரு சாராரைக் குரங்குகளெனவும் இழித்துக் கூறினர். தமிழினம் தோன்றிய நாட்டொட்டு இலங்கை தமிழர் வாழ்வகமாகவே இருந்து வந்திருக்கிறது. அவ்வரக்கர் இடைக்காலத்தே தோன்றி இராவணன் காலத்தோடு அடியோடு அழிந்தொழிந்தனர் போலும்! தமிழர் பகைவராகிய வான்மீகி அங்ஙனம் இழித்துரைக்கினும்,

உண்மையுணர்ந்த தமிழ் மகனாகிய கம்பர் தம் முன்னோரை அங்ஙனமே அரக்கர் எனவும், குரங்குகளெனவும் இழித்துரைத்த கயமைத்தனத்தைத் தமிழ்மக்கள் உணரவே இராவண காவியம் செய்யப்பட்டதாகும். 

கம்பராமாயணத்தை உண்மையென நம்பி, கம்பர் கவிச் சுவையில் ஆழ்ந்து, இராவணன் முதலிய தமிழர் தலைவர்களை அரக்கர் எனவும், தமிழர்களாகிய தங்களுக்கும் அவர்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை யெனவுங்ண்டு, இராவணன் முதலியோர் தங்களுக்கு ஏதோ செய்யத்தகாத தீங்கு செய்தனர போலவும், தங்களுடைய தீராக் குலப்பகைவர் போலவும் எண்ணி, கம்பரைக் காட்டினும் கடைப்பட்ட முறையில் காய்மொழி கூறிக் கடிவதும், தமிழர் குலப் பகைவனான ஆரியராமனைப் போற்றிப் புகழ்வதோடமையாது, கோயில் கட்டிக் கும்பிட்டு வருவதுமான தமிழ் மக்களது அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்தவேயாகும்.

சூர்ப்பநகை மூக்குமுலை அறுத்துக் கொன்றது

பழந்தமிழ் அரச குடும்பத்திற் பிறந்து ஒரு நாட்டை ஆண்டு வந்த தமிழரசியாகிய காமவல்லியை (சூர்ப்பநகை), கொடுங் குணமும் கடுஞ்செயலும் காமப்பித்துங்கொண்ட கண்கொண்டு பார்க்கமுடியாத அழகில்லாத கொடிய அரக்கி எனவும்,

அவளை மூக்குமுலை அறுத்துக் கொன்றது தகும் எனவும், மூக்குமுலை யறுபட்ட அவள் அவ்வலங் கோலத்துடனே ஆயிரங்கல் தொலைவிலுள்ள வடபகுதியிலிருந்து இலங்கை சென்று, மானவெட்கமின்றித் தன் அண்ணனிடம் சீதை சிறப்புக் கூறி, உனக்காக அவளை எடுத்துக் கொண்டு பெயரும்போது இராமன் தம்பி இவ்வாறு செய்துவிட்டனன் எனக் கூறியதாகவும்,

அது கேட்ட அரக்கனாகிய இராவணன் தன் தங்கையின் மானக் கேட்டைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாதவனாய்ச் சீதையின் பால் காதல் கொண்டு சென்று சீதையைச் சிறையெடுத்து வந்த தாகவும் கூறும் அடாத அப்பெரும்பழியினை அப்படியே நம்பி, தங்கள் பழம் பெருந்தலைவனையும், தலைவியையும் நாத்தழும் பேறப் பழித்துவரும் தமிழ் மக்களுக்கு உண்மையை உணர்த்தி இனவுணர்ச்சியுண்டாக்கி, அத்தமிழர் தலைவர்கள் மீது வேண்டு மென்றே சுமத்தப்பட்டுள்ள அடாப் பெரும்பழியைத் துடைப் பதற்கேயாகும்.

இராமனது அறக் கொடுஞ்செயலை உணராது தமிழ் மக்கள்

தன்னாட்டில் தனித்துலவிய ஒரு தமிழ்த் தலைவியைக் (அரசியை) கண்டு காமுற்று, அவள் மறுத்துங் கேளாது வற்புறுத்தவே மீறிச் சென்ற அத்தமிழ்த் தையலைத் தன் தம்பியைக் கொண்டு மூக்குமுலை யறுத்துக் கொன்ற இராமனது அறக் கொடுஞ்செயலை உணராது தமிழ் மக்கள் கம்பன் சொல்லில் மயங்கி, இவ்வளவு காலமாய் அக்கொடுங்கொலை இராமனைக் கடவுளெனக் கொண்டு வணங்கி வந்த அத்தீச் செயலின் கழு வாயாக, இராவணன் அரக்கன் அல்லன், தமிழர் தலைவன், தன் மான முடையவன்; தமிழர்க்காகத் தமிழர் வாழ்வுக்காகத் தனிக் களத் தொருவனாய் உயிர்விட்ட தகைமிகு செம்மல்;

அன்னான் தங்கையாகிய காமவல்லி தாபதநோன்பு நோற்றிருந்த (கைம்மை) தகைமிகு தமிழ்மகள் என்பதைத் தமிழ்மக்கள் உணர்ந்து தம் தவற்றை – தப்பெண்ணத்தை திருத்திக் கொள்வதற்கே யாகும்.

கம்பர் கூற்றுப்படியே, தன்மீது காதல் கொண்ட ஒருத்தி அரக்கியாக இருந்தாலுங்கூடத் தன் சொல்வன்மையால் அவள் மனத்தை மாற்றி யனுப்பும் ஆற்றலில்லாது, தம்பியைக் கொண்டு உருக்குலைத்துக் கொன்ற இராமனை நல்லவனென்றும்,

தனித்துலவிய இராமன் மீது காதல் கொண்ட கொடிய அரக்கி எனக் கொண்டு, அக்காம வல்லியைத் தங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்திக் கண்டபடி இழித்தும் பழித்தும் கூறிவரும் தமிழ் மக்களின் அறியாமையைப் போக்கி, ஒரு பெண்ணின் மனத்தை மாற்ற முடியாதவன் எங்ஙனம் கடவுளாக முடியும்?

அவள் மனத்தை மாற்ற முடியவில்லை யெனில், மறுத்துவிட்டுச் சென்று விடலாமல்லவா? ஓடோடவா துரத்துவான்;

ஆண்மகன் ஒருவன் மீது ஒரு பெண்மகள் காதல் கொள்வது மூக்கு முலையறுக்கக் கூடிய அவ்வளவு பெரிய குற்றமா?

என்னும் ஆராய்ச்சியறிவைத் தமிழ்மக்கட் குண்டாக்கி, காமவல்லியை உருக்குலைத்துக் கொன்ற இராமன் செயல் கொடிதினும் கொடிய அறக் கொடுஞ் செயல் என நல்ல தீர்ப்புக் கூறவே யாகும்.

தமிழ்மூதரசி தாடகை

தன்னாட்டுட் புகுந்து குடிமக்களின் ஆடுமாடுகளைத் திருடிக் கொலைவேள்வி செய்துண்டு வந்த ஆரியமுனிவர் செயலைக் கண்டித்து வேள்வி செய்யாமல் தடுத்து வந்த தாடகை என்னும் தமிழ்மூதரசியைப் பெண்ணென்றும் முதியாளென்றும் பாராமல், கோசிகன் என்னும் ஆரிய முனிவன் சொற்படி கொன்ற இராமன் கொடுஞ் செயலைப் போற்றியும்,

கொலை வேள்வியை மறுத்து வந்த தாடகையின் நற்செயலைத் தூற்றியும், அவ்வரக்கியைக் கொன்றது சரியே. முனிவர்கள் செய்து வந்த முதுமறை வேள்வியை அழித்து வந்த கொடியாள் ஒழிந்தாள். ஒரே அம்பில் இராமச் சந்திரன் அவ்வரக்கியைக் கொன்று அறத்தை நிலை நாட்டினான் என்னும் வெற்றுரையை அப்படியே மெய்யென நம்பி, இராமனைப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மூதாட்டியைத் தூற்றித் திரியும் தமிழர்களின் மயக்கவுணர்வினைப் போக்கி, உண்மையை உணரும்படி செய்யவே யாகும்.

தாடகை அர்க்கியல்லள்; விந்தச்சாரலில் அடைந்திருந்த ஒரு நாட்டை ஆண்டு வந்த தமிழரசி;

ஆண் மக்கள் கண்டு வெள்கும் படி செங்கோல் செலுத்திய செவ்வியள்; ஒழுக்கமே உருவானவள்; கொலை மறுத்த குணப் பெருங்குன்றம். அத்தமிழரசி செய்த பெருங்குற்றம் – கொலைத் தண்டனைக் குரிய அத்தகு குற்றம் – கொலை வேள்வியை மறுத்ததேயாகும். அயல் நாடர்களாகிய ஆரியர்கள் அவ்வரசியின் உடன்பாடின்றி அவள் ஆட்சிக்குட் பட்ட தமிழ் நாட்டுக்குள் வந்ததே குற்றமாயிருக்க, அந்நாட்டரசி சொல்லையுந் தட்டிக் கொலைவேள்வி செய்ததை மறுத்த, தடுத்த அரசியைக் கொன்றது கொடுமையினுங் கொடுமை!

பெண் கொலைக்கஞ்சா இராமன் அறக்கொடியோன் என்பதைத் தமிழ் மக்கள் உணரும்படி செய்வதற்கே யாகும். 

தமிழ் மக்களைத் தன் ஆடல் பாடல் ஒப்பனைகளால் வழிப்படுத்தி ஆரியர்க்கடிமையாக்கி வந்த சவரி என்னும் அரிய மங்கையைத் தமிழ்ப் பெண் என்றும், இராமனிடம் கொண் டிருந்த அன்பினால் பரமபதம் அடைந்தனள் என்றும் மனமுருகப் போற்றிப் புகழ்ந்து வரும் உண்மையறியாத் தமிழர்க்கு அவ்வாரிய மங்கையின் ஐந்தாம்படை வேலையை அறிவுறுத்தி, இன்றும் தமிழகத்தில் பல சவரிகள் உள்ளனர்: ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யவே யாகும்.

கொடிய ஆரிய முனிவர்கள்

ஆரியராமன் ஏழிரண்டாண்டு பூழிவெங்காள வாழ்க்கை நடத்துதற்குமட்டும் தமிழகத்திற்கு வரவில்லை ; தமிழகத்தில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே வந்தான். வடநாட்டில் என்ன காடுமலைகளா இல்லை? தமிழ்நாட்டுக்குள் ஏன் வர வேண்டும்? தமிழர் தலைவர்களை வஞ்சித்துக் கொன்று தங்கள் ஆதிக்கத்தை இங்கு நிலை நாட்டவே ஆரிய முனிவர்கள் அவனை இங்கு அழைத்து வந்தனர்;

காமவல்லியைக் காணும்படி செய்தனர்; தமிழ்நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உளவு வேலை செய்து வந்தனர்; தம்மை அன்புடன் வரவேற்று ஊணுடையுதவிப் போற்றிய தமிழ்மக்களுக்கு உள்ளிருத்து கொல்லும் கொடுநோய் போல் இருந்து வந்தனர்; உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்தனர்.

அக் கொடிய ஆரிய முனிவர்களே தமிழ் நாட்டை ஆரியத்துக்கு அடிமைப்படச் செய்தனர்; தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை அழித்தொழித்தனர்; தமிழினத்தைச் சிதைத்துச் சின்னா பின்னப் படுத்தினர்; ஆரியமொழியைத் தமிழரிடைப் புகுத்தித் தனித் தமிழை உருக்குலைத்தனர்; தமிழகத்தின் பரப்பைச் சுருக்கினர்; ‘பிடி சாபம்’ என்பவெல்லாம் பிற்காலத் தமிழர்களை ஏய்க்க எழுதிவைத்த பொருளற்ற போலிப் பொய்யுரையே யாகும் என்னும் இன்னபல ஆரிய முனிவர்களின் குணஞ்செயல்களைத் தமிழ் மக்கள் அறிந்து கொள்ளவே யாகும்.

அத்தகைய தமிழ்ப் பகைவர்களான ஆரிய முனிவர்கள் எழுத வைத்த ஆரிய நூல்களை உயர் நூல்களென எண்ணி வாய்விட்டுப் போற்றியும் எழுதியும் வரும் தமிழர்க்கு அவ்வாரிய நச்சு நூல்களின் உண்மையை உணர்த்தவேயாகும்.

வாலி என்பான், இராவணன் ஆட்சிக்கீழ்த் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த ஒரு பழந்தமிழ் மன்னன்; மாபெரு வீரன் சீரிய செங்கோலினன்; குணப்பெருங்குன்றம். வாலி முதலியோர்  குரங்குகளல்லர், தமிழர்களே. வாலி சுக்கிரீவனோடு போர்செய்து கொண்டிருக்கும்போது மறைந்திருந்து அம்பெய்து கொன்ற இராமன் எவ்வகையினும் அறம் வளர்த்தோன் ஆகான்; அறக் கொடியோனேயாவன்.

இராமனிடம் நேர்மையோ, வீரமோ, தெய்வத் தன்மையோ அணுவளவாவது இருந்திருக்குமானால் வாலியிடம் அறிவுரை கூறி இருவரையும் உறவாக்கியிருப்பான். அவ்வாறு சொல்லியும் வாலி கேட்கவில்லையானால் அவனோடு போர் செய்து கொன்றிருப்பினும் குற்றமில்லை.

மனைவியை யிழந்த அவ்விருவரும் ‘மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்’ என்றபடி ஒன்றுகூடி ஒரு குற்றமும் செய்யாத வாலியைக் கொன்றது கொடு மையினும் கொடுமை என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தவே யாகும்; வாலி, சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்து கொண்டு அவனை ஊரைவிட்டோட்டினன் என்பது, வாலி மேல் வேண்டு மென்றே சுமத்தப்பட்ட அடாப்பழியே யாகும் என்பதைத் தமிழ் மக்கட்கு அறிவுறுத்தவே யாகும்.

பேருருவெடுக்கவோ, பெருங்கடலைத் தாண்டவோ, அசோக வனத்தை யழிக்கவோ, கட்டுக்காவலையுடைய இலங்கையைத் தீக்கிரையாக்கவோ, சஞ்சீவி மலையை அடியோடு தூக்கவோ அத்தகு ஆண்மையுடையவனல்லன் அனுமன். மகேந்திரமலையி லிருந்து இலங்கைக்குப் பாயவேண்டிய வேலை அன்றில்லை.

இவ்வளவே அனுமன் செயல்

இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே சிறு அகழி; அதன் குறுக்கே பாலம் இருந்தது. அனுமன் திருட்டுத்தனமாக அவ்வழியே இலங்கை சென்று, கடைமகனான பீடணனைக் கண்டு ஆசைவார்த்தை கூறி, அவன் துணையால் சீதையைக் கண்டு மீளும்போது காவலரால் பிடிக்கப்பட்டு, இராவணனால் நல்லறிவுறுத்தித் துரத்தப்பட்டான். இவ்வளவே அனுமன் செயல். இதையே கல்வியிற் பெரியவர் கம்பர் அவ்வாறு பெருமைப் படுத்திக் கூறித் தமிழரை ஆரியர்க்குக் காட்டிக் கொடுத்த அக் கயவனைத் தமிழ்மக்கள் கோயில் கட்டிக் கும்பிடும் அளவுக்குச் செய்துவிட்டனர். அனுமனின் இரண்டகச் செயலினைத் தமிழ் மக்கட்கு அறுவுறுத்தி, அனுமன் போன்ற காட்டிக் கொடுக்கும் கயவர்களைப் போற்றும் ஏமாளித்தனத்தைப் போக்குவதற்கே யாகும்.

இனவிரண்டகனான பீடணன்

மண்ணாசைப் பெருக்கால், மணிமுடி புனைந்து மன்னனாக வேண்டும் என்ற விருப்பால், உளவுவந்த அனுமனுடன் சேர்ந்து கொண்டு நள்ளிரவில் கள்வனைப்போல வெளிச்சென்று, குலப்பகைவனான ஆரியராமன் காலில் அடியற்ற மரம்போல் வீழ்ந்து அண்ணனைக் கொன்று ஆரியரால் ஆழ்வார்ப்பட்டம் பெற்ற இனவிரண்டகனான பீடணனை நல்லவனென்றும், நீதிமானென்றும், நீடுவாழ்வோன் (சிரஞ்சீவி) என்றும் போற்றிப்புகழும் தமிழர்களின் மயக்க அறிவைப் போக்கி, கோடரிக் காம்பாகிய அக்கொடியோனாற்றான் தமிழர் ஆரியர்க்கடிமைப் படலாயினர்; தமிழினம் சீர்குலைந்தது; தமிழ்ப்பண்பாடு கெட்டது; தமிழர் வாழ்வு சரிந்தது; தமிழர் சூத்திரப் பட்டம் பெற்றுத் தாழ்த்தப்பட்டவராயினர்; அண்டிப்பிழைக்க வந்த ஆரியர் அடிகள் (சாமி) ஆக உயர்ந்தனர்; தொழுங்குலமாயினர்; தமிழரின் தலைவர்களாயினர் என்னும் உண்மையறிவை உண்டாக்கித் தமிழ்மக்களின் தாழ்வைப் போக்குவதற்கே யாகும்.

இராவண காவியம் - கலைஞர் கருணாநிதி

இராவணன் சீதையை !

தங்கையை உருக்குலைத்துக் கொன்ற கொடியனை அக்காட்டிற் சென்று பொருதழிக்காது, ‘வெட்சி நிரைகவர்தல்‘ என்னும் புறப்பொருளிலக்கணப்படி, பகைவர்தம் ஆடுமாடுகளை யும், மனைவி மக்கள் போன்ற இன்றியமையாப் பொருள்களை யும் கவர்ந்து வந்து பாதுகாத்து, அப்பகைவர் தேடிவரின் நல்லறிவு புகட்டியனுப்புதலோ, பொருது வெல்லுதலோ செய்யும் தமிழர் போர்முறைப்படி இராவணன் சீதையை எடுத்து வந்து இலங்கையில் வைத்துப் பாதுகாத்து வந்தானேயன்றி, அவள்மீது காதல் கொண்டு எடுத்து வரவுமில்லை, அவளை வற்புறுத்தவு மில்லை.

அங்ஙனம் செய்ய எண்ணியிருந்தால் அவனுக்கு அது அரியதுமன்று. வேண்டுமென்றே அவன்மீது பிற்காலத் தமிழர்க்குக் கெட்ட எண்ணம் உண்டாகும் பொருட்டு அவளைக் கற்பழிக்க வலுவந்தம் செய்ததாக எழுதி வைத்தனர் ஆரிய வான்மீகியார்;

தமிழ்க் கம்பரோ, அதைத் தம் கவித்திறத்தால் தமிழ்மக்கள் மனத் தில் பசுமரத்தாணிபோல் பதியும்படி செய்து, ஆழ்வார்ப்பட்ட மும், கல்வியிற் பெரியவர் கம்பர் என்ற பட்டமும் பெற்றுவிட்ட னர். இவ்வுண்மையறியாது, ஒருதாரக் கொள்கையுடைய இராவணனை, உலக மாதாவாகிய சீதா பிராட்டியாரைக் கற்பழிக்க வலுவந்தம் செய்த கயவன், காமுகன்; திருமகளை இராமபிரா னிடத்திலிருந்து பிரித்தெடுத்துவந்த கொடியவன் என்றெல்லாம் தூற்றித் திரியும் தமிழர்க்கு உண்மையறிவுறுத்தவே யாகும்;

இராவணன் ஒருதாரக் கொள்கை – ‘கற்பென்னுந் திண்மை’ யுடையவன் என்பது, அவன் பொருது களத்தில் இறந்ததும், கோப்பெருந் தேவியான வண்டார்குழலி (மண்டோதரி) உடனுயிர் நீத்தமையே சான்று பகரும்.

இவ்வளவு நாளாய்ப் பழித்தது போகட்டும். இனியாவது உத்தமனாகிய இராவணனைப் பழியாதிருக்கும்படி செய்வதற்கேயாகும்.

இராவணனை நேரிடையாக எதிர்த்து வெல்ல வில்லை

இராமன், இராவணனை நேரிடையாக எதிர்த்து வெல்ல வில்லை. பீடணன் உளவாளியாக இருந்தான். நீலன் முதலிய நான்கு பெரும் படைத்தலைவர்கள் பெரும் படையுடன் சென்று இராமனுடன் சேர்ந்து கொண்டனர். இராவணனை வெல்லும் உளவையெல்லாம் பீடணன் சொன்னான்.

சேயோன் (இந்திர சித்து) தனியாக ஓரிடத்தில் பொருதுகொண்டிருக்கும்போது இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் சென்று வளைத்துப் பொருது கொன்றனர்.

இராவணன் இலக்குவனோடு பொரும் போது இராமன் குறுக்கே சென்று அம்பெய்து கொன்றான். பீடணன் உளவாளியாகாமல் இருந்திருந்தால், இராவணனை வெல்வேமென்று இராமன் கனவுகூடக் கண்டிருக்க முடியாது.

உண்மை யிவ்வாறிருக்க, இராவணன் படைகள் அத்தனையும் அடியோடு அழிந்தொழிந்தன. இராமன் படைகள், படைவீரர்கள் ஒருவர்கூடச் சாகவில்லை; எல்லோரும் உயிர்த்தெழுந்தனர். இராமன் அம்புக்கெதிர் நிற்க ஆற்றாது இராவணன் அழிந்தான் புண்ணியம் பாவத்தை வென்றது.

தமிழர்க்கு உண்மையை உணர்த்தவே யாகும்.

அதர்மம் தர்மத்திற்குத் தோற்றது. தேவர்களைத் துன்புறுத்தி வந்த கொடிய வல்லரக்கனை இராமபிரான் கொன்றான். ஒழிந்தது. அரக்கர் குலம். அரக்கர் குலத்தை ஒழிக்கவே திருமால் இராமனாக உலகில் திருவவதாரம் செய்தார். அரக்கர் பூண்டை அடியோடொழிந்த ரகுராமன் வாழ்க. “ரகுபதி ராகவராசாராம் பதீத பாவன சீதாராம்” என்று நாமாவளி பாடிக் களிக்கும் தமிழர்க்கு உண்மையை உணர்த்தவே யாகும்.

ஆரிய ஆதிக்கத்தைத் தமிழகத்தினின்று அடியோடொழிக்கவே இராவண காவியம் செய்யப்பட்டது. இராவணன் தமிழர் மாபெருந் தலைவன்; விந்த முதல் குமரிவரை ஒருமொழி வைத் தாண்ட பழந்தமிழ் வேந்தன்; தண்டமிழ் வேலித் தமிழகத்தே ஆரியத் தொத்து நோய் பரவாமல் – புகாமல் தடுத்துநின்ற தனித் தமிழ்க் காவலன்; தமிழ்நாட்டை, தமிழை, தமிழினத்தைக் காக்கத் தனிக்களத்தொழிந்த தன்மானத் தமிழன், ஆரியரால் அரக்கர் என்றவர் எல்லாரும் தமிழர்களே.

ஏமாந்த தமிழர்கள்

சென்ற இரண்டாவது உலகப் பெரும்போரின் போது சப்பானியரை நாம், ‘சப்பானிய அரக்கர்’ என்று அழைத்தது போல, வலியவர்களாகிய எதிரிகளை – தமிழர் களை – ஆரியர்கள் அரக்கர்கள் என்று அழைத்தனர்; கொடிய இழிகுணங்களையெல்லாம் கற்பித்தனர். நெடுநாட் பிரச்சாரத்தால் கம்பன் கவியைக் கொண்டு தமிழ் மக்கள் உண்மையென நம்ப வைத்துவிட்டனர்.

ஏமாந்த தமிழர்கள் தங்கள் முன்னோரை அரக்கர்களென்றும், தங்கட்கு யாதொரு தொடர்புமில்லாத புறம்பானவரென்றும், கொடியவர்களென்றும் கொள்ளலாயினர். தமிழர் குலப்பகைவர்களாகிய ஆரியர்களை நல்லவர் என்றும், தங்கள் முன்னோர்களைக் கெட்டவர் என்றும் கூறலாயினர். இம்மயக்க வுணர்வை மாற்றி, இராவணன் முதலியோரைத் தமிழர்களெனத் தமிழர்கள் உணரும்படி செய்யவே இராவண காவியம் செய்யப்பட்டது.

பிரமன் மகன் புலத்தியன். புலத்தியன் மைந்தன் விச்சிரவால் விச்சிரவாவுக்கு மூத்த மனைவியிடம் பிறந்தவன் குபேரன் விச்சிரவாவுக்கு இளைய மனைவியிடம் பிறந்தவர் இராவணன் முதலிய நால்வரும். விச்சிரவாவின் மூத்த மனைவி மகனான குபேரனைத் தேவன் எனவும், அரனது தோழன் எனவும், விச்சிர வாவின் இளைய மனைவி மக்களான இராவணன் முதலியோரை அரக்கர் எனவும் கூறும் பித்தலாட்டத்தைப் போக்கவே இராவண காவியம் செய்யப்பட்டது.

ஆரியராமன் தமிழர்குலப் பகைவன்

ஆரியராமன் தமிழர்குலப் பகைவனெனவும், தமிழர் தலைவனை வஞ்சித்துக் கொன்ற மாகொடியோன் எனவும், தமிழரைக் கொண்டே தமிழர் தலைவனைக் கொன்று தமிழ் நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டிய அறக்கொடியோ னெனவும் தமிழர் உணர்ந்து, அக்கொடியோனைத் தெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட்டு வரும் அறியாமை நீங்கி அறிவு தலைப்படும் பொருட்டே இராவண காவியம் செய்யப்பட்டது.

நேரு எழுதிய கடிதங்களில்!

இனி, வாலி சுக்கிரீவன் முதலியோரும் குரங்குகளல்லர், தமிழர்களே. இராவணன் முதலியோரை அரக்கர்கள் என்றதுபோல, வாலி முதலியோரைக் குரங்குகள் என்றனர் ஆரியர். என்பதற்குச் சான்றாக,

நேரு அவர்கள் தம் மகளுக்கு (இந்திராக்காந்திக்கு) எழுதிய கடிதங்களில் – அந்நூல் 117ஆம் பக்கத்தில் “இராமாயணப் போர் ஆரிய திராவிடப் போரேயாகும். தென்னாட்டில் வாழ்ந்த திராவிடர்களைத் தாம் ‘குரங்குகள்’ என்றனர்” என்று உண்மையை வெளியிட்ட பிறகும், எத்தனையோ ஆராய்ச்சி அறிஞர்கள் இராவணன் முதலியோரை அரக்கர்கள் எனவும், வாலி முதலியோரைக் குரங்குகள் எனவும் கூறிவருவதும், எழுதி வருவதும், நாடகத்தில் அவ்வாறே கோலமிட்டு நடித்து வருவதும், படம் எடுப்பதும் ஆகிய தவறுதலைக் கொள்கையை மாற்றி,

இராமாயணப் போர் ஆரிய திராவிடப்போரே. அரக்கர்கள், குரங்குகள் என்பார் எல்லாரும் தமிழர்களே.

பகைகொண்டு வழிகூறும் ஆரியர்கள் வேண்டுமென்றே அவ்வாறு எழுதிவைத்தனர். என்னும் உண்மையைத் தமிழ்மக்கள் உணரும்படி செய்து, தமிழ்நாட்டினின்றும் அக்களங்கத்தை அகற்றவே இராவண காவியம் செய்யப்பட்டது.

சூர்ப்பநகை, மண்டோதரி, கும்பகர்ணன்

தமிழர்களை ‘அரக்கர்கள்’ என்றதோடமையாது ஆரிய வான்மீகியார், தமிழரச குடும்பத்தினரை சூர்ப்பநகை, மண்டோதரி, கும்பகர்ணன் என்பன போன்ற இழிபெயரிட்டுப் பழித்துரைத்தனர்.

  • சூர்ப்பநகை: சூர்ப்பு – முறம். நகை – பல். சூர்ப்பநகை – முறப்பல்லி, முறம் போன்ற பல்லையுடையவள்.
  • மண்டோதரி: மண்டு – பெரிது. உதரம் – வயிறு. மண்டோதரி – பெருவயிறி.
  • கும்பகர்ணன்: கும்பம் – குடம். கர்ணம் – காது. கும்பகர்ணன் – குடக்காதன், குடம்போன்ற காதையுடையவன்.

ஓர் அரச குடும்பத்தினர், அஃதும் பேரரச குடும்பத்தினர் தங்கள் மக்களை – முறப்பல்லி, பெருவயிறி, குடக்காதன் என்றா பெயரிட்டழைத் திருப்பர்?

கல்வியிற் பெரியவர் கம்பரும் இவ்விழிதன்மைக்கு ஏற்றங்கொடுத்துதானே யுள்ளார்?

கம்பருக்கு இச்சொற்களின் பொருள் தெரியாமலா இருந்திருக்கும்? தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகளை உயர்குலத்தோர் என்போர், வயிறி, சொரட்டச்சி, நெட்டக்காலன் என இவ்வாறு அழைத்து வருகின்றனர். ஆனால், பேரரச குடும்பப் பிள்ளைகளை யார் இவ்வாறு இழிபெயரால் அழைத்திருக்கக் கூடும்?

ஆரியரால் தமிழினத்துக்குண்டாகிய இவ்விழி தன்மையைப் போக்கவே கம்பராமாயணமிருக்க இராவண காவியம் செய்யப்பட்டது.

ஆரிய அடிமை கம்பன்

இராவணன் காலத்தே விந்த முதல் குமரிவரை வாழ்ந்துவந்த தமிழ்க் குடிமக்கள், தமிழ்ப் பேரரசர்கள், சிற்றரசர்கள், தண்டமிழ்ப் பெண்டிர்கள் ஆகிய எல்லாரையுமே ஆரிய அடிமையாகிய கம்பரால், தமிழ்மக்கள் வாயினால் உச்சரிக்கவே முடியாத அத்தகு இழிதன்மையாகப் பழித்துக் கூறியிருக்கும் பழிப்புரையைப் போக்கி, இராவணன் முதலியோரின் பெருமையையும், அக்காலத் தமிழ்மக்களின் சிறப்பினையும் திறம்பட எடுத்துக் காட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் வரலாறு இடையறாது தொடர்ந்து நடைபெறுதற் பொருட்டே இராவண காவியம் செய்யப்பட்டது.

குடி, கொலைவேள்வி போன்ற ஆரியர் செயலை, ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்த

  • பொன்னன் (இரணியன்),
  • பொற்கண்ணன் (இரணியாக்கன்),
  • சூரன், மாவலி (மகாபலி),
  • மாந்தரன் (நரகா சுரன்),
  • சம்பரன்

மேலும் தமிழ் அரக்கர்கள் பட்டியல்

முதலிய தமிழர் தலைவர்களை வஞ்சித்துக் கொன்றதோடு, அவர்களை அசுரர்களெனத் (அரக்கர்) தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வெறுக்கும்படி செய்த பித்தலாட் டத்தை வெளிப்படுத்தவே இராவண காவியம் செய்யப்பட்டது.

அனுமன், சுக்கிரீவன், பீடணன் போன்ற கொடுந் தமிழர்கள் செய்த ஆரிய அடிமைத்தனத்தை, இனவிரண்டகச் செயலை, மானங்கெட்ட மறச்செயலை எடுத்துக்காட்டி, அன்னாரின் ஐந்தாம்படை வேலையால் இராமன் வெல்லவும் இராவணன் தோற்கவும் நேர்ந்ததேயன்றி, இராமன் தனியாக எதிர்த்து இராவணனை வெல்லவில்லை. அக்கோடரிக் காம்புகளின் இரண்டக உளவால் இராமன் அடைந்த வெற்றியை உண்மையான வெற்றியெனக் கொண்டு இராமனைப் போற்றிப் புகழும் தமிழர்களின் திரிபுணர்ச்சியைப் போக்கவும், ‘ஆரியர் வென்றார் தமிழர் தோற்றார்’ என்னும் அடாப் பழிமொழியை அகற்றவுமே இராவண காவியம் செய்யப்பட்டது.

ஆரியமோகத்தால் !

  • பெயரைக் கேட்கினும் ஆரியர் அஞ்சி நடுங்கிய ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பிறந்தநாள் கொண்டாடுவ தில்லை;
  • மயத்தையுங் கடந்து சென்ற கரிகாலன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை;
  • தமிழைப் பழித்த வடவர் தலையில் இமயக் கல்லேற்றி வந்த செங்குட்டுவன் பிறந்தநாள் கொண்டாடு வதில்லை.

தமிழ்நாட்டில், தமிழர்களால், ஆனால், கம்பராமாயணத்தால் ஏற்பட்ட ஆரியமோகத்தால், ஆரியராமன் பிறந்த நாளை, ‘ராமநவமி’ எனக் கொண்டாடி வருகின்றனர் நற்றமிழ் மக்கள்.

அந்த ராமநவமி நாளில் – ராமலீலாக் கொண்டாண்டத்தில் – தமிழர் மாபெருந்தலைவனான,

இராவணன் உருவத்தைத் தீயெட்டரிக்கும் வடவர் கொடுஞ்செயலைக் கண்டு மகிழும் தமிழர்களின் அறியாமையைப் போக்கவே இராவண காவியஞ் செய்யப்பட்டது.

இராவணன் தலைசுடுகிறோம்!

‘ஆடித் திங்களில் இராவணன் பட்டதும்’ எனக் கூறிக் கொண்டு, பகைவன் ஒழிந்த நாளைக் கொண்டாடுவதுபோல, ஆடி முதல் நாளில் இராவணன் தலைசுடுகிறோம் என, குடுமியைப் போக்கி, மஞ்சப்பூசி, அதன் கண்ணில் ஒரு பச்சைக் கோலைக் குத்தித் தேங்காய் சுடுவதும், ஆடிப் பதினெட்டன்று ஆற்றில் குளிப்பதும் களிப்பதும் ஆகிய தமிழ்மக்களின் அறியாமையைப் போக்குவதற்கே இராவண காவியஞ் செய்யப்பட்டது.

இராவணன் திருநாள்

தமிழர் பண்பாட்டைப் போக்கித் தமிழ் மக்களை ஆரிய நாகரிகத்திற்கு அடிமையாக்கி, ஆரிய ஆதிக்கத்தைத் தமிழ்நாட் டில் நிலைபெறச் செய்து, ஆரியர் உயர்மக்களாகவும், தமிழர் தாழ் மக்களாகவும் வாழும்படி செய்த வடவாரிய ராமன் பிறந்தநாளை இவ்வளவு நாளாய்க் கொண்டாடி வந்த இழிவின் கழுவாயாக ஆண்டுதோறும் ஆடி முதற்கிழமையில் இராவணன் திருநாள் கொண்டாடவும், இராவணன் பெருமையைத் தமிழ்மக்கள் அறியும்படி செய்யவும், பழையபடி தமிழ்ப் பண்பாடு தழைத் தோங்கும்படி செய்யவுமே இராவண காவியஞ் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டுப் பார்ப்பன மக்கள்

“இனத்தின் பெயரால் ஆரியர் – திராவிடர் என்று பிரித்துப் பேசி வேற்றுமையை வளர்ப்பது, சமூக ஒற்றுமையைக் குலைப்பது நாகரிக மற்ற செயல்.

தமிழ்மொழி பேசுபவர்களை இரு கூறாகப் பிரித்துப் பேசுவது அழகல்ல” என்று பேசியும் எழுதியும் வரும் தமிழ்நாட்டுப் பார்ப்பன மக்கள், தமிழ்நாட்டிற் பிறந்து, தமிழையே தம் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் படித்து, தமிழினாலேயே வாழ்ந்து வரினும்,

தமிழர் பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும், பழக்க வழக்கத்திற்கும், தமிழ் மரபுக்கும் மாறுபாடாக வாழ்ந்து வருவதையும், தமிழினும் வடமொழியை உயர்வுடையதாகக் கருதியும் பேசியும் எழுதியும் வருவதையும், வடமொழியை அளவுக்கு மீறிக் கலந்து தமிழின் தனித்தன்மையைக் கெடுப்பதோடு, தனிமரபாகப் பேசியும் எழுதியும் வருவதையும் தமிழ்மக்கள் உணர்ந்து கொள்வதற்காகவே இராவண காவியம் செய்யப்பட்டது.

ஆரிய மயக்க மருந்து

கம்பராமாயணத்தால், தமிழ்மக்கட்கு ஏற்பட்ட ஆரிய மோகத்தால் ஆரியமொழி தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுத் தமிழ்மொழி சீர்குலைந்துவிட்டது. ஆரிய மயக்க மருந்துண்டு மயங்கிய தமிழ்மக்கள், ஆரிய மொழிக் கலப்பால் தமிழ்மொழி வளரும் என்னும் பொய்யுரையை மெய்யென நம்பி, அளவு கடந்து ஆரியச் சொற்களைக் கலந்து தனித்தமிழ்த் தன்மையைக் கெடுத்துவிட்டனர்.

ஆரியக் கலப்பினாலேயே தமிழ் திரிந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வேறு மொழிகள் தோன்றின.

அம்மொழிகள் பேசுவோர் தாங்கள் பழந்தமிழர் வழி வந்தவர் – தமிழர் என்பதை அறியாது, வேறு இன மக்களெனத் தங்களை எண்ணித் தமிழர்களைப் புறக்கணித்து வருவாராயினர். தமிழ் மக்களும் அன்னாரை அங்ஙனமே எண்ணலாயினர்.

இக் குறைபாடுகளையெல்லாம் போக்கிப் பழையபடி தனித்தமி ழாக்கங் காணவும், தமிழ் மக்கட்குத் தமிழ்ப்பற்றை யுண்டாக்கவும், தமிழன் ஆரியச் சார்பற்று வாழவுமே இராவண காவியஞ் செய்யப்பட்டது.

பழந்தமிழ் வரலாறுகளையெல்லாம்…

தமிழர் பண்பாடு, நாகரிகம், மணமுறை, வாழ்க்கைமுறை, ஆட்சிமுறை, வீரம், கொடை, நடை, மேம்பாடு, ஒருமை வாழ்வு, ஒழுக்கமுறை, பழந்தமிழ் நாட்டின் வரலாறு, தமிழர் தந் தாய் மொழி யாந் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்துவந்த வரலாறு, தமிழ் வரலாறு, தமிழ்மக்கள் உலக முதன் மக்களாய், உலக மக்களுக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த நிலை, ஆரியர் வருகை, ஆரிய நாகரிகம், ஆரியக் கொள்கை, ஆரியச் சூழ்ச்சி இன்ன பல பழந்தமிழ் வரலாறுகளையெல்லாம் இன்றைய தமிழ் மக்கள் அறிந்து, இன்றுள்ள தந்நிலைக்கிரங்கித் தமிழினவுணர்ச்சி யுற்று ஒன்றுபட்டு வாழ்தற் பொருட்டு வீறிட்டெழவே இராவண காவியஞ் செய்யப்பட்டது.

இராமாயணத்தின் உண்மை வரலாற்றைத்…

கம்பன் கவிநயத்தில், கற்பனைத் திறத்தில், கலைச் சிறப்பில், காவியச் சுவையில் கட்டுண்டு, ஆரியச் சேற்றில் அழுந்திக்கிடக்கும் தமிழ் ரசிக மணிகளைத் தட்டி யெழுப்பித் தனித் தமிழுலகில் உலவச் செய்து, பழந்தமிழகத்தின் இயற்கை வளத்தினை, இன்ப வாழ்வினை, இயல் நெறி முறையினை இனிது கண்டு களிக்கும் படி செய்யவே இராவண காவியம் செய்யப்பட்டது.

ஆரிய வால்மீகியாலும், ஆரிய அடிமையான தமிழ்க் கம்பராலும் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட பொய்க் கூற்றுக் களை அகற்றவும், இயற்கைக்கு ஒவ்வாப் புனைந்துரைகளைப் போக்கவும், இராமாயணத்தின் உண்மை வரலாற்றைத் தமிழ்மக்கள் உணர்ந்து கொள்வதற்காகவுமே இராவண காவியம் செய்யப்பட்டது.

இராவண காவியம் தடை!

தமிழகத்தே ஆரியச் சார்பினரான போலிச் சோழர் ஆட்சிக் காலத்தே (கிபி. 13ஆம் நூற் ) ஆரிய மேம்பாட்டுக்காகத் தமிழரைத் தாழ்த்திக் கம்பராமாயணம் செய்யப்பட்டது.

1946 இல் தமிழரின் அவ் விழிவைப் போக்க இராவண காவியம் செய்யப்பட்டது. தமிழகத்தை ஆளும் வடவராதிக்கத்தின்கீழ் இயன்ற ஒரு கட்சி யாட்சியினரால், தமிழ்மக்கள் படிக்கக் கூடாதெனப் படித்தால் ஆரிய ஆதிக்கம் ஆட்டங்கண்டு விடுமென –

1948இல் இராவண காவியம் தடை செய்யப்பட்டது. இவ்வாட்சி யொழிந்து, தமிழகத் தில் தனித் தமிழராட்சி ஏற்படின், இராவண காவியத் தடை நீக்கப்பட்டுத் தமிழ்மக்கள் படிக்க முற்படின், “கம்பராமாயணம் இருக்க இராவண காவியம் எதற்கு?” என்பது, அப்போது விளங்கும்.

குறிப்பு: இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் (1948இல்) மேலே குறிப்பிட்டுள்ளபடியே, 1967 இல் தமிழகத்தில் தனித் தமிழராட்சி ஏற்பட்டு, 17-5-71இல் தடை நீக்கப்பட்டு, 23 ஆண்டு கட்குப் பின்னர் இராவண காவியம் இரண்டாம் பதிப்பு வெளி வருகிறது.

இருபத்து மூன்று ஆண்டுகளாக, எப்போது காவியத் தடை நீங்கும், எப்போது நாம் படித்து இன்புறுவோம்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் படித்துப் பயனடைந்து, “கம்பராமாயணம் இருக்க இராவண காவியம் எதற்கு?” என்பதை விளக்குவார்களாக.

இராவண காவியம் எதற்கு? 

இராவண காவியம் புத்தகம்

இராவண காவியம் கதை

Related Post

இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

Posted by - September 30, 2020 0
ஆராய்ச்சி முன்னுரை அறிஞர் அண்ணா அவர்கள் இராவண காவியம் – திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டு வந்த…

இராவண காவியம் – கலைஞர் கருணாநிதி

Posted by - September 30, 2020 0
இராவண காவியம் – தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் காலத்திற்கும் கருத்துக்கும் ஒவ்வாதனவற்றை – முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கவழக்கங்களை – பழமையை அழித்துப்…

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

Posted by - September 30, 2020 0
இராவண காவியம் பற்றி தலைவர்களின் பரிந்துரைகள் வடமொழியில் இராமகாவியம் செய்த வான்மீகியும், தமிழ்க் கம்பரும், இராமனை நல்லவன் எனவும், இராவணனை இரக்க மென்றொரு பொருளிலாக் கொடிய அரக்கன்…

இராவண காவியம் கதை

Posted by - October 1, 2020 0
இராவண காவியம் கதை சுருக்கம் இராவண காவியம் (Ravana Kaviyam) 20-ம் நூற்றாண்டில் புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட தமிழ்  காவியம் ஆகும். இந்த நூலை 1946இல்…

இராவண காவியச் சிறப்பு

Posted by - September 30, 2020 0
இராவண காவியச் சிறப்பு இராவண காவியம் நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.” – மு கருணாநிதி   அறிஞர் அண்ணா…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்