இராவண காவியம் பற்றி தலைவர்களின் பரிந்துரைகள்

வடமொழியில் இராமகாவியம் செய்த வான்மீகியும், தமிழ்க் கம்பரும், இராமனை நல்லவன் எனவும், இராவணனை இரக்க மென்றொரு பொருளிலாக் கொடிய அரக்கன் எனவும் வேண்டுமென்றே எழுதி வைத்தனர்.

கம்பரோ வடநாடுகளுள் ஒன்றன் மன்னன் மைந்தனான இராமனைக் கடவுளென நம்பி வணங்கும் படியும், தென்னாட்டின் மாபெருந் தலைவனும் தங்கள் முன்னோனுமான இராவணனைத் தமிழன் அல்லன்; எவனோ ஒரு கொடிய அரக்கன் என நம்பி வெறுக்கும்படியும் தமிழ் மக்களை மயக்கிவிட்டனர்.

தமிழ் மக்களின் அம்மயக்கவுணர்வைப் போக்கி உண்மையை யுணரும்படி செய்யும் பொருட்டே இராவண காவியம் தோன்றியது. இதன் விளக்கத்தை “இராவண காவியம் எதற்கு?” என்ற கட்டுரையிற் காண்க.

தமிழ் மக்களின் இழிவு நீக்கப் போந்த இராவண காவியம் என்னும் இத் தனித்தமிழ் இலக்கியக் குழந்தை, 1946இல் பிறந்து வளர்ந்து ஈராட்டைப் பருவத்தை அடைந்து, ஓடியாடி விளை யாடி, மழலையுரையாடித் தமிழ்மக்களை மகிழ்வித்து வந்தது. அது கண்டு மனம் பொறாத ஒரு சிலரின் தூண்டுதலினால், தமிழ கத்தின் அன்றைய ஆட்சியாளர், 2-6-1948இல் அக் குழந்தையைத் தமிழரிடைச் செல்லாமல் தடை என்னும் சிறையிலிட்டனர்.

தமிழகத்தில் தனித்தமிழர் ஆட்சி ஏற்பட்டதனால், அத்தமிழக அரசினால், தமிழ்வாழ், தமிழினம் வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் டாக்டர், கலைஞர் கருணாநிதி அவர்களால் 17-5-1971இல் விடுதலை செய்யப்பெற்று, 23 ஆண்டுகள் சிறையிலடைபட்டுக் கிடந்த அச்செந்தமிழ்க் காவியச் செல்வி

பழையபடி புதிய எழிலோடும் பொலிவோடும் (புதிதாக 272 செய்யுட்கள் செய்யப்பட்டு ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன. முன் 2828 செய்யுட்களாக இருந்தது. இப்போது 3100 செய்யுட் களாக வளம் பெற்றுள்ளது.) உங்களை மகிழ்விக்க வருகிறாள். அவளை அன்புடன் வரவேற்றுப் போற்றுதல் தமிழ் மக்களாகிய உங்களின் நீங்காக் கடமையாகும்.

தமிழர் இழிவு நீக்கச் செய்யப்பெற்ற, தமிழர் சிறப்புக் கூறும் இத்தனித் தமிழ்க் காவியத்தைத் தமிழர் படிக்கக் கூடாதெனத் தடை விதித்த அன்றைய ஆட்சியாளரின் அடக்குமுறை ஆட்சி யைக் கண்டித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலிய பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள் அவற்றுள் ஒரு சில வருமாறு;

இராவண காவியம் eBook

அறிஞர் அண்ணா அவர்கள் இராவண காவியம் பற்றி

புலவர் குழந்தை அவர்களால் ஆக்கப்பெற்ற “இராவண காவியம்” என்ற இலக்கிய நூலுக்குச் சென்னை அரசு தடைவிதித் துள்ளது. இராமாயணம் பாடிய வால்மீகியும் கம்பரும் அக்காலத்து ஆசிரியர்கள். இராவண காவியம் பாடிய குழந்தை இக்காலத்து ஆசிரியர். வால்மீகிக்கும் கம்பருக்கும் அக்காலத்தில் இராமன் நல்லவனாகக் காணப்பட்டான். குழந்தைக்கு இராவணன் இக் காலத்தில் நல்லவனாகக் காணப்படுகிறான். இராவணன் நல்லவன் என்ற கருத்தைப் புலவர் குழந்தை அவர்களுக்கு ஊட்டியது இராமனை நல்லவனாகக் கூறும் இராமாயணந்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இராமனை நல்லவனாகக் கூறிய வால்மீகி, எந்த ஆதாரத்தின் மீது இராமன் நல்லவன் என்ற கருத்தை வெளியிட்டார் என்பது தெரியவில்லை.

இராம – இராவ ணப் போர் நிகழுவதற்கு முன்னமேயே வால்மீகி இராமாயணம் பாடிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. எனவே, வால்மீகி பாடிய இராமாயணத்துக்கு வால்மீகியேதான் ஆதாரம். இராமாயண ஆசிரியரான வால்மீகி, இராம – இராவணப் போர் நிகழு வதற்கு முன்பே இராமனை நல்லவனாகக் கூறும் உரிமையைப் பெற்றிருந்தார் என்றால், இராம – இராவணப்போர் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இராமாயணத்தை அறிவின் துணைக்கொண்டு ஆராய்ந்த இராவண காவிய ஆசிரியர், இராவணனை நல்லவனாகக் கருதும் உரிமையை ஏன் பெறக்கூடாது?

ஒருவனை அறியாமுன் – அவனோடு பழகாமுன் – அவ னுடைய நடவடிக்கைகளை அறியாமுன் அவனை நல்லவன் என்று கூறும் உரிமை வால்மீகிக்கு இருந்தது.

ஆனால், ஒருவனை அவன் இப்படிப்பட்டவன் – அவனுடைய நடவடிக்கைகள் இப் படிப்பட்டவை என்பதை நன்கு அறிந்தபின் அவனை நல்லவன் என்று கூறும் உரிமை புலவர் குழந்தைக்கு இல்லை.

இது எந்த வகையில் நியாயம் என்பது எமக்குப் புரியவில்லை . இராம பிரானை நல்லவன் என்று கூறும் உரிமை சிலருக்கு இருக்கும் போது, இராவணேசுவரனை நல்லவன் என்று கூறும் உரிமை சிலருக்கு ஏன் இருக்கக்கூடாது?

அயோத்தி மன்னனான இராமனை வால்மீகி நல்லவனாகக் கூறியதால், இன்று இராமன் கடவுளாகக் கருதப்படுகிறான். இலங்கை மன்னனான இராவணனை வால்மீகி கெட்டவனாகக் கூறியதால், இன்று இராவணன் இராட்சதனாகக் கருதப்படு கிறான். இருவரும் நாட்டையாண்ட மன்னர்கள்தாம். இவர்களில் ஒருவன் கடவுள், மற்றவன் இராட்சதன்! சண்டையிட்டவர்களில் வென்றவன் நல்லவன் மட்டுமல்ல, கடவுளுமாகிறான்.

தோற்றவன் கெட்டவன் மட்டுமல்ல, இராட்சதனுமாகிறான். இவை எந்த வகையில் நியாயம் என்று புலவர் குழந்தை அவர்கள் தம்முடைய நூலான இராவண காவியத்தின் வாயிலாகக் கேட்கிறார். இப்படிக் கேட்பதைத் தவறென்றும், சட்டவிரோதமென்றும் சென்னை அரசினர் கருதி அந்நூலுக்குத் தடைவிதித்துள்ளனர்.

மக்களின் உரிமைகளைப் பறித்த ஏகாதிபத்திய அரசை விரட்டிய ‘ஜனநாய்க’ அரசே இன்று மக்களின் உரிமைகளைப் பறிக்கும் பணியைத் தங்களுடைய முதல் வேலையாகக் கொண்டுள்ளது. இது உண்மையிலேயே வருந்தக்கூடியதும் வெட்கப்படக்கூடியதுமான ஒரு முறை தவறிய செயலாகும்.

இராவண காவியம் என்ற அறிவியல் இலக்கிய நூலுக்குத் தடை விதித்த சென்னை அரசினரின் இந்தப் போக்கைக் கண்டித்து, தமிழ் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர் தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள், 15-6-48இல் வெளிவந்த ‘பிரசண்ட விகடனில்’ எழுதியிருக்கிறார்.

தோழர் நாரண துரைக் கண்ணன் அவர்கள் வெறும் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர் மட்டுமல்லர்; எழுத்தாளர் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட வர்; எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து வாயிலாக நாட்டுக்குச் செய்யக்கூடிய சேவைகள் இன்னின்ன என்பதை நன்கு உணர்ந் தவர். அதனாலேயே அவர் எழுத்தாளர் மாநாட்டின் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எழுத்தாளர்களிற் பலர் இத்தகைய நடுநிலையைக் கொள் வதில்லை. தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள், எழுத்தாளர் களுக்கு ஒரு விழிப்பையும், உண்மையை உரைப்பதில் தயக்கம் காட்டக்கூடாதென்பதையும், இராவண காவியத்துக்குச் சென்னை அரசினர் தடைவிதித்ததைக் கண்டிப்பதன் வாயிலாக எடுத்துக்

காட்டியது உண்மையாகவே பாராட்டக்கூடியதாகும். நம் நாட்டிலுள்ள ஏனை எழுத்தாளர்களும், பத்திரிகை ஆசிரியர் களும் இந்த முறையைக் கையாள்வார்களானால், அரசு இத் தகைய தேவையற்ற காரியங்களில் கண்ணை மூடிக்கொண்டு இறங்கத் துணியாது.

எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட இராவண காவியம் என்ற நூலை நன்றாகப் படித்த பின்னரே, அரசினர் அந்நூலுக்குத் தடைவிதித்ததைக் கண்டித்து எழுதியுள்ளார் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர். அவருடைய கண்டன உரையை அரசினர் கவனித்துத் தங்களுடைய தவறு தலைத் திருத்திக் கொள்வாராக. (அக்கண்டன உரை மூன்றா வதாக உள்ளது.)

இராமாயணத்தைப் பொறுத்தவரையில் ஏதாவது தடை உத்தரவு பிறப்பிப்பதானால், அது இராவண காவியத்துக்கல்ல; கம்பராமாயணத்துக்குத்தான் தடை விதித்திருக்க வேண்டும். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர், வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத பல நிகழ்ச்சிகளைப் புதிதாகச் சேர்த்தும், அதில் சொல்லப்பட்ட பல நிகழ்ச்சிகளை மறைத்தும் கம்ப இராமாயணத்தைப் பாடியிருக் கிறார் என்ற உண்மை, கம்பராமாயணத்தையும் வால்மீகி இராமா யணத்தையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பவர்க்கு நன்கு தெரியும்.

எனவே, இல்லாததைப் புகுத்தியும் இருப்பதை மறைத்தும் எழுதப்பட்ட கம்பராமாயணத்தையன்றோ அரசு தடை செய் திருக்க வேண்டும்?

கம்பராமாயணத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆள்வோர்க்கு இதுவரை ஏற்படவில்லையென்றாலும், இராவண காவியத்துக்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற துடிதுடிப்பு ஏற்பட்ட பின்னராவது கம்பராமாயணத்தை ஒருமுறை படித்துப் பார்த்திருக்க வேண்டும். கம்பராமாயணத்தை மட்டுமல்ல, அதன் முதல் நூலான வால்மீகி இராமாயணத்தையும் படித்துப் பார்த்திருக்க வேண்டும். இராவண காவியம் எழுதியவர் ஏன் தம்முடைய நூலில் இராவணனை நல்லவனென்றும், இராமனைக் கெட்டவனென்றும் குறிப்பிடுகிறார் என்ற உண்மை அப்போது தெரியும்.

இராவண காவிய ஆசிரியருக்கு இராவ ணனை நல்லவனாக்கும் வித்துக்கள் கம்பராமாயணத்திலும் வால்மீகி இராமாயணத்திலும் ஆங்காங்கு புதைந்து கிடப்பதைக் காணவும் முடியும். இதுமட்டுமல்ல, வால்மீகியால் கடவுளாக்கப் படாத இராமன், கம்பரால் ஏன் கடவுளாக்கப்பட்டான்? கம்பர் ஒரு நாட்டு மன்னனைக் கடவுளாக்கித் தருமளவுக்கு நமக்கு என்ன கடவுட்பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா?

இராமன் கம்பரால் கடவுளாக்கப்படுவதற்கு முன், நமக்குக் கடவுளே கிடையாதா? நமக்கு ஒரு கடவுள் இருந்ததென்றால், புதிதாகக் கம்பர் எதற்காக ஒருவனைக் கடவுளாக்க வேண்டும்? அதிலும், சமய நூல்களில் கூறுகின்றபடி ஒரு முனிவரையோ, தபசியையோ கடவுளாக்காமல், ஒரு நாட்டை ஆண்ட அரசனை ஏன் கம்பர் கடவுளாக்கினார்? அதே சமயத்தில், இராமனைப் போலவே ஒரு நாட்டை ஆண்ட இராவணனை, மக்கள் வெறுத்து இகழும் முறையில் ஏன் இராட்சதனாக்கினார்? இராமன் கடவுளாக ஆக்கப்படுவதற்கு அவன்பால் காணப்பட்ட நற்குணங்குள் யாவை? இராவணன் இராட்சதனாக்கப்படுவதற்கு இவன்பால் காணப்பட்ட தீயகுணங்கள் யாவை? என இன்னபிற உண்மைகளையெல்லாம், இராவண காவியத்திற்குத் தடை விதிக்க ஏற்பட்ட காரணங் களுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும் ஆள்வோர்.

இராவண காவியம் என்ற ஒரு நூல் உண்டாவதற்கு ஏற் பட்ட காரணங்கள் என்னென்ன என்பதையன்றோ முதலில் ஆள் வோர் அறிந்துகொள்ள முயற்சித்திருக்க வேண்டும்? இராமனைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் அறிந்து கொள்ள நமக்கு ஒரு நூல் (இராமாயணம்) இருக்கும்போது, புதிதாக இராவண காவியம் என்ற ஒரு நூல் ஏன் தோன்ற வேண்டும்? அதில் இராமனைக் குறைவாகவும் இராவணனை உயர்வாகவும் ஏன் எழுதப்பட்டிருக்கிறது? இராமனை நல்லவனாக எழுதும் உரிமை ஓர் ஆசிரியருக்கு இருக்கும் போது, இராவணனை நல்லவனாக எழுதும் உரிமை ஏன் இன்னொரு ஆசிரியருக்கு இருக்கக்கூடாது? என்பன போன்றவைகளையும் ஆள்வோர் யோசித்திருக்க வேண்டும்.

https://tamilebooks.org/ebooks/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-ebook/

வால்மீகி இராமாயணத்தில் இல்லாததும், புதிதாகச் சேர்க்கப்பட்டதுமான பல கருத்துக்கொவ்வா நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கம்பராமாயணம் நாட்டில் நடமாடும்போது, அறிவுக்கு அணிகலமாக விளங்கும் ஆராய்ச்சி நூலான இராவண காவியம் மட்டும் நாட்டில் இருக்கக்கூடாதா? இராவண காவியத்திற்குத் தடைவிதித்த அரசு, அதற்குத் தடைவிதிப்பதற்கு முன் ஒன்றை யோசித்திருக்க வேண்டும். அதாவது, மக்களிடையே கருத்து வேற்றுமைகளை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள் பல

கம்பராமாயணத்தில் இருக்கின்றன. அதனால்தான், கம்பராமா யணக் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை உண்டாக்கும் இராவண காவியம் போன்ற நூல்கள் உண்டாக வழி ஏற்படு கிறது; கம்பராமாயணம் இல்லை என்றால் இராவண காவியமும் எழுந்திருக்காது; இராவண காவியத்தை உண்டாக்கியது கம்ப ராமாயணந்தான்; என்பவற்றை யோசித்துப் பார்க்கும் அளவுக்கு ஆள்வோர்க்கு ஆற்றல் இருந்திருக்குமானால், கம்பராமாயணத் துக்கே முதலில் தடைவிதிக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் ஏற் பட்டிருக்கும்.

அங்ஙனமன்றி, எய்தவனை விட்டு அம்பை நோவது போல், இராவண காவியம் என்ற ஒரு நூல் உண்டாவதற்குக் கருவியாய் நின்ற கம்பராமாயணத்தைத் தடைசெய்யாமல், இராவண காவியத்தைத் தடைசெய்வது எந்த வகையிலும் நியாயமான செயலாகாது. இதுபற்றி ஆள்வோர் இதுவரை யோசிக்கவில்லையென்றால், இனியாவது அன்னார்க்கு இந்த எண்ணம் ஏற்பட வேண்டும்.

இனி, கம்பராமாயணத்திலுள்ள கதைப்போக்கு எப்படியிருந் தாலும், அது அறிவுக்குப் புறம்பானதாக இருந்தாலும், அதி லுள்ள கவிநயத்தை நினைக்கும்போது, அதனைப் போற்றி வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகுமேயன்றி, அதனை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி உண்டாகும்? என்ற சில காவிய ரசிகர்களின் கருத்தை ஆள்வோர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அதற்குத் தடைவிதிக்காமல் இருக்கலாம். அதனையும் நாம் தவறென்று கூறவில்லை. கம்பராமாயணத்தி லுள்ள காவியச் சுவையைக் கற்கண்டெனச் சுவைக்கட்டும். அதுபோலவே, இராவண காவியத்திலுள்ள கருத்துக்களை விட்டுவிட்டு, அதன்பாலுள்ள காவிய நயத்தையாவது மக்கள் சுவைத்தின்புறட்டும் என்று விட்டுவிடலாமே! அதற்கு ஏன் தடைவிதிக்க வேண்டும்? கம்பராமாயணத்திலுள்ள குறைகளை ஒப்புக்கொண்டு அதன் காவிய நயத்தை நுகரும்போது, இராவண காவியத்திலுள்ள குறைகளையும் (இருந்தால்) ஒப்புக்கொண்டு அதன் கவிநயத்தையும் மக்கள் நுகரும்படி விட்டுவிடலாமே! கம்பராமாயணத்தைப் பார்க்கிலும் இராவண காவியம் கவிநயத்திலோ, இலக்கியப் பண்பிலோ குறைவுடையது – தாழ்ந்தது என்று எவராவது கூறமுடியுமா?

 “தமிழ் இலக்கியத்தின் அணிகலமாய் இருக்கத் தகுந்த அருமையான காவிய நூல்” 

என்று எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர் தோழர் நாரண துரைக் கண்ணன் அவர்களே கூறியுள்ளார். எனவே, இராவண காவியம் கவிநயம் அற்றதென்றோ , கவிநயத்துக்காக மக்கள் அதனைப் படிக்கக் கூடாதென்றோ எவரும் கூறமாட்டார்கள். ஆகையால், கம்பராமாயணம் இந்நாட்டில் இருக்கத் தகுதியுடைய நூல் என்றால், அதைப் பார்க்கிலும் பலவகையிலும் சிறந்த இலக்கிய நூலான இராவண காவியமும் இந்நாட்டில் இருக்கலாம்.

கம்பர், இராமனைக் கடவுளாகக்கியது போல், புலவர் குழந்தை இராவணனைக் கடவுளாக்கவில்லை.

வால்மீகியும் கம்பரும் பிறரும் இராவணனைக் கெட்டவன் என்று கூறியதைத் தக்க ஆதாரங்களோடு மறுத்து, இராமனே கெட்டவன், இராவணன் நல்லவன் என்பதையே இந்நூலாசிரியர் விளக்கிக் காட்டியுள்ளார். இதனைக் குற்றமென்றும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதென்றும் அரசு கருதுமேயானால், குற்றவாளி யார்? என்பதை அன்னாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டும். யார் குற்றவாளி? கம்பரும் வால்மீகியுமா? அல்லது தோழர் குழந்தையா? பொதுமக்களே தீர்ப்புக் கூறுங்கள்!

– 20-6-48: திராவிடநாடு’ இதழில் 

 

கலைஞர் கருணாநிதி அவர்கள் இராவண காவியம் பற்றி

குன்றெடுக்கும் பெருந்தோளான் – கொடை கொடுக்கும் தடக்கையான் – குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம் – என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான் ! வஞ்சக வீட ணனின் அண்ணன் என்று தன்னை வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும் நெஞ்சகன், நல்யாழின் நரம்புதனைத் தடவிச் செவி நிரம்ப இசையமுது தரும் இசைப் புலவன், வெஞ்சமரில் சாதல் வர நேரிடினும் சூழ்ச்சி விரும்பாத பெருந்தகை, தென்னிலங்கை வேந்தன் இராவணன்.

அவன் சிறப்பைப் பற்றிப் புலவர் குழந்தை ஒரு காவியம் புனைந்தார்; இராவண காவியம்! ஆம் அஃதொரு புதுமைச் சோலை. அச்சோலைக்குத் தீயிட்டனர் செங்கோலேந்திகள். இராவண காவியத்திற்குத் தடை போட்ட னர்; “விற்காதே – வாங்காதே” என முழக்கமிட்டது அரசினரின் சட்ட ம்.

இராவண காவியம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்? ஏன் பறிமுதல் செய்யப்பட வேண்டும்? என்று நாங்கள் நினைக்காம லிருக்க முடியுமா? நினைக்கிற நேரத்தில் எங்கள் நெஞ்சு நெருப் பாகத்தான் மாறாமலிருக்க முடியுமா?

ஓமந்தூராரை அழைத்துக் கொண்டு கம்பராமாயணச் சோலையிலே உலவி வந்தோம். அங்கே பூத்துக் குலுங்கியிருந்த மலர்களில் பூநாகங்கள் நெளிவதை அவருக்குக் காட்டினோம். நாமம் போட்டிருப்பது ராமனல்ல…… நம் மினத்தைக் கடிக்க வந்த நல்ல பாம்பு என எச்சரித்தோம். அதோ சலசலவென ஓடுவது நீரோடை யல்ல…. நம் கலைவளத்தை நாசமாக்கும் நச்சுவாய்க்கால் என விளக்கந் தந்தோம். அத்தோடு விட்டோமா? மிதிலாபுரியைக் காட்டினோம். மிதிலையின் மாளிகையில் சனகன் மகள் சானகி யைக் காட்டினோம்.

வில்லொடித்துச் சீதையை விவாகம் செய்ய விசுவாமித்திரருடன் வரும் இராமனைக் காட்டினோம். சீதையின் கண்களும் இராமன் கண்களும் கவ்விக் கொண்ட காட்சியைக்காட்டினோம்.

இராமனின் காட்சியால் புளகாங்கித முற்று . பூரிப்புத் தாங்க முடியாமல் – பொங்கி நின்ற பூமாதா சீதா தேவியைப் பற்றிக் கம்பர் பாடிய பாடலைக் காட்டினோம். அந்தப் பாடலிலே, மகிழ்ச்சி தாங்க முடியாமல் சீதையின் மறைவிடம் திடீரென விம்மியதையும், அதனால் மேகலாபரணம் அறுந்து விழுந்ததையும் கம்பர் வருணித்திருக்கிற பாங்கைப் படித்துக் காட்டினோம்.

மகாலட்சுமி அவதாரத்திற்கு “வாம மேகலையினுள் வளர்ந்த தல்குலே” என்று மட்டரகமாக வருணனை தந்த கம்பனின் இழிதன்மையைக் காட்டினோம்.

இந்த ஆபாச இராமாயணத்துக்குத் தடைவிதிக்கத் தைரிய மற்ற சர்க்காரே! நீ எங்கள் இராவண காவியத்திற்குத் தடை போட்டது நியாயமா? நேர்மையா? நாணயமா? என்று கேட் டோம். கண்களிலே ரத்தம் தெறிக்க – அந்த ரத்தத்திலே (ரோஷம்) மானங் கொப்புளிக்கக் கர்ச்சனை புரிந்த நாங்கள் ஈரோடு நோக்கினோம். பொறு மனமே…. பொறு என்றார் பெரியார். போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

– 1948 இல் அறப்போர்’ என்னும் நூலில் 

https://tamilebooks.org/ebooks/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-ebook/

நாரண துரைக்கண்ணன் அவர்கள் இராவண காவியம் பற்றி

(தமிழ் எழுத்தாளர், மாநாட்டுத் தலைவரும், ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர்)

இராவண காவியத்துக்குத் தடை:

தமிழ் இலக்கியத்தின் அணிகலமாய் இருக்கத் தகுந்த அருமையான காவிய நூலொன் றைச் சென்னை அரசாங்கம் பறிமுதல் செய்திருக்கிறது. இந்நூல் ‘இராவண காவியம்’ எனப் பெயர் பெறும். இதனைப் புலவர் குழந்தை எழுதியிருக்கிறார். இந்நூலில் இராவணன் இராமனை விட உயர்ந்தவன் என்ற கருத்து மையப் பொருளாக இருக்கிறது.

இராமாயணத்தை இயற்றிய ஆசிரியர்களுக்கு இராமனைப்பற்றி உயர்வாகச் சொல்ல எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை இராவணனைப் பற்றியும் சொல்வதற்கு ஓர் ஆசிரியனுக்கு உண்டு. இராமாயணத்தைக் கற்பனைக் கதை என்று சொல் வோரும் உண்டு. இதன் வாதப் பிரதிவாதங்களில் இப்பொழுது நாம் இறங்க விரும்பவில்லை.

ஆனால், சென்னை அரசாங்கம் இந்நூலுக்கு விதித்த தடை தமிழ் இலக்கிய வளர்ச்சிமீது போட்ட தடை என்றுதான் நாம் எண்ணுகிறோம்.

தேவகுமாரன் எனப் போற்றப்படும் கிறித்துவின் பிறப்பைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் எத்தனையோ விதவிதமான ஆராய்ச்சி நூல்களை மேனாட்டில் சிறந்த பேரறிஞர்கள் எழுதி யுள்ளார்கள்.

கிறித்து என்றொருவர் பிறக்கவே இல்லை என்றும், அப்படிப் பிறந்திருந்தாலும் கன்னி மேரியின் முகத்தில் உதித் திருக்க முடியாதென்றெல்லாம் அவர்கள் கண்டனந் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோலவே, இவ்வுலகத்தைக் காத்து நிற்பதாகச் சொல்லும் ஒரு கடவுள் இல்லை என்றும் சிறந்த ஆராய்ச்சி நூல் களை விஞ்ஞானப் பேரறிஞர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உதாரணமாக, கிறித்துவினிடத்திலும், அவரது சமயத்தினிடத்தி லும் நம்பிக்கை கொண்டு அரசாட்சி நடத்திவரும் ஐரோப்பிய நாடுகளில் மேற்கண்ட நூல்கள் தடுக்கப்படவில்லை. காரணம், அறிவுக்குத் தடைவிதிக்கக் கூடாதென்பதும், மக்களின் அடிப்படை உரிமையான பேச்சு, எழுத்துக்குச் சுதந்தரம் இருக்க வேண்டும் என்பதுமே யாகும்.

இப்படிச் செய்வதன் வழியாக ஐரோப்பிய மக்கள் பல துறைகளிலும் தங்கள் சிந்தனையைச் செலுத்தி, சரி, தப்புப் பார்த்துக் கொள்ளவும், அதே சமயத்தில் பலதிறப்பட்ட வகைகளிலும் தங்கள் இலக்கியங்கள் சிறப்புற்றோங்குவதற்கும் உரிமை வழங்கியுள்ளார்கள்.

இதன் காரணமாய் ஐரோப்பிய மக்கள் உலகில் ஒரு தனி மதிப்புப் பெற்றுள்ளதும் கண்கூடு.

சென்னை அரசாங்கம் இராவண காவியத்துக்குத் தடைவிதித்து விட்டதன் மூலம், இராவண காவியத்துக்குச் செல்வாக்கும் சிறப்பும் ஏற்படும்படி செய்திருக்கிறார்கள். இதுவரை இந்நூலைப் படிக்காதவர்கள் கூட, இனி இரகசியமாகவேனும் படித்துப் பார்க்க விரும்புவர். அத்துடன் ஓர் இராவண காவியத்துக்குப் பதிலாகப் பல இராவண காவியங்கள் புதுப்புது வழிகளில் உண்டாக வழி ஏற்படவும் முடியும்.

முன்னாள் இருந்த சென்னை அரசாங்கம் பாரதியார் பாட்டுக்குத் தடை விதித்ததன் மூலம், பாரதியார் பாடல்களை நாட்டுமக்கள் அதிகமான விருப்பத் தோடும் ஆசையோடும் படிக்கலானார்கள். அதுபோலவே, முன்பு இந்திய ஆட்சிப் பொறுப்பை நடத்திவந்த பிரிட்டிஷார், மார்க்சீய நூல்களை வெளிநாடுகளிலிருந்து வராதபடி தடுத்துவிட்டால், பொதுவுடமைக் கொள்கையை இந்தியாவில் பரவவிடாதபடி தடுத்துவிடலாம் என்றும் கருதினார்கள். ஆனால், அவர்கள் எண்

ணியபடி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாகப் பொதுவுடை மைக் கொள்கை நாட்டிலே காட்டுத்தீ போல் பரவி வருகிறதையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் நினைத்தபடி மார்க்சீய நூல்களைத் தடுக்கவும் முடியாமல் போயிற்று. சென்னை அரசாங்கம் சென்றகால அனுபவங்களை நினைவு கொள்ளாமல் இத்தடை விதித்தது, அவர்கள் ஆட்சிக்குக் கெட்ட பெயரைத்தான் கொண்டு வந்து தரும் என்று நாம் கவலையடைகிறோம்.

அறிவின்மீது தடை விதிக்கும் சென்னை அரசினரின் இச்செயலை நாம் வன்மை யாகக் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. உடனே சென்னை அரசாங்கம் தவற்றை உணர்ந்து இத்தடை உத்தரவை எடுக்க வேண்டியது அவசரமும் அவசியமுமாகும். அப்படிச் செய்ய அரசாங்கம் மறுக்குமானால் அதன் எண்ணம் பூர்த்தியாகாமல் போவதோடு, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாகத்தான் வந்து முடியும் என்று நாம் எச்சரிக்கிறோம்.

– 15-6-48: பிரசண்ட விகடன் இதழில் 

 

குத்தூசிகுருசாமி அவர்கள் இராவண காவியம் பற்றி

”நம் புலவர் வந்தார். அவர் உதட்டில் பெருங்காயம். இப்போது தான் அது ஏற்பட்டிருக்க வேண்டும். இரத்தம் கசிந்து கொண்டிருந்தது”

“என்னய்யா, புலவரே, உதட்டில்? எங்கேயாவது விழுந்து விட்டீரோ?” என்று கேட்டேன்.

“விழவில்லை; விழுந்து கிடப்பவர்களைத் தூக்கிவிடும் தொண்டினால் ஏற்பட்ட வினை இது.”

“விளக்கமாய்ச் சொல்லுமய்யா! காவியம் பாடியவராதலால் கற்பனைரசத்தில் தோய்த்துப் பேசாதேயும்? பச்சையாகக் கூறுமே! எந்தக் காலியின் வேலை இது?”

”காலியா! அவனே தேவலாமே! மூளைக் கோளாறைவிட காலித் தனம் ஆபத்தல்லவே! மதிகலங்கிய மங்கை ஒருத்தி ஊரில் திரிகி றாளே! அவள் வேலைதான் இது! அவள்தான் ஆகஸ்ட் 15 சுந்தரி!”

“அடேடே அவளா! உம்மீது அவளுக்கென்ன கோபம்?”

“என் மீதா? என்மீது அவளுக்கு ஒரு கோபமும் இல்லை. என் குழந்தை “இராவண காவியம்” அவள் கண்ணை உறுத்திய தாம்! அவளுக்குப் பைத்தியம் தீர்ந்தால் கல்யாணமாகும். கல்யாண மானால் பைத்தியம் தீருமாம். பிள்ளை யாசையால் சில நேரங் களில் யார் யார் பிள்ளைகளையோ தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் என் குழந் தையைக் கண்டாள். பொறாமை பீறிட்டுக் கிளம்பியது. தன் கல் மூட்டையை அவிழ்த்து, கல் ஒன்றை எடுத்து வீசினாள். அது என் உதட்டில் பட்டது. இரத்தம் சொட்டுகிறது. ஆனால் நான் அதைத் துடைப்பதாகக்கூட எண்ணமில்லை. ஆகஸ்ட் சு(தந்தரிக்கு அசல்

வெறியே பிடித்துவிட்டது. திடீர் திடீர் எனக் கற்களை வாரி வீசுகிறாள்! என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“என்னய்யா செய்வது? இந்த மாதிரி கிறுக்குப் பெண் பிறந்ததைவிட, அவள் தாயார் மலடியாகவே இருந்திருந்தால் கூடத் தேவலாம். இந்தப் பைத்தியத்தினால் அவள் பெயரும் கெட்டுவிட்டது. ஊம்! அனுபவிக்கட்டும். அவளுக்கும் புத்தி வரட்டும்; ஊராருக்கும் புத்தி வரட்டும்.”

– 11-6-48: ‘விடுதலை ‘யில் 

 

காஞ்சி மணிமொழியார் அவர்கள் இராவண காவியம் பற்றி

“அலையே அடங்கு!” “கடல் அலையே அடங்கு!” என ஆணை யிட்டான், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இங்கி லாந்தை ஆண்ட ‘கான்யூட்’ என்னும் மன்னன். அலை அடங் கிற்றா? இல்லை. அலையின் இயல்பு ஓயாது விளையாடிக்கொண்டு இருப்பது என்பதை அவன் அறியான். மன்னன் கான்யூட் மடை மையின் உருவம்! எனவேதான் அலையை அடக்க முடியுமென நம்பினான்; பிறர் முன்னிலையில் சபதமும் கூறினான்; இறுதியில் பிறர் கேலிக்கு ஆளானான். அதுமட்டுமா, வரலாற்றுச் சுவடி யிலே என்றும் அழியாததோர் இடம் பெற்றுவிட்டான் மர மண்டை படைத்த மன்னன் என்ற முறையில்.

கான்யூட்டுக்கள் அந்தக் காலத்தில் மட்டுந்தான் உண்டு என்பதில்லை. இந்தக் காலத்திலும் உண்டு.

சென்னைத் தேசிய அரசினர் 2-6-48ஆம் நாள் ஓர் உத் தரவைப் பிறப்பித்துள்ளார்கள் – விபரீதமான உத்தரவு. மிக மிக விசித்திரமான உத்தரவுங்கூட, மன்னன் கான்யூட் பிறப்பித்த உத்த ரவுகூட அவ்வளவு வேடிக்கையானதன்று. ஆனால், சென்னை அரசின் 2-6-48ஆம் நாளிட்ட உத்தரவு உண்மையிலேயே வேடிக் கையானது. மறைந்த மன்னன் கான்யூட், இந்நாள், கல்லறை யிலிருந்து வெளியே வரமுடியுமானால், அவன்கூடக் கண்டு நகைக்கக்கூடிய அளவுக்குக் கோமாளித்தனம் நிரம்பிய உத்தரவு.

கான்யூட், கடல் அலையே அடங்கு என்று ஆணையிட் டான். சென்னை அரசினர் தங்களுடைய 2-6-48ஆம் நாள் உத்தரவில் “தென்றலே வீசாதே! யாழே நீ இன்னிசை பரப்பாதே! தமிழே உலவாதே! கட்டிக் கரும்பே நீ ஒழிந்துபோ! உண்ண உண்ணத் தெவிட்டாத மலைத்தேனே நீ கடைத்தெருவுக்கு வருவது குற்றம்! வாழ்வின் விளக்கம் எனத்தகும் கலையே! நீ இந் நாட்டுக்குத் தேவை இல்லை!” என்று ஆணை பிறப்பித்து விட்ட னர். ஆணைபிறப்பித்ததோடு நிற்கவில்லை சென்னை அரசியலார்;

கடைகளுக்கு அதிகாரிகளை அனுப்பி, ‘இத்துணைச் சுவையான கரும்பை விற்பது குற்றமய்யா! இதனைப் பறிமுதல் செய்யவேண் டும் என்பது அரசினர் ஆணை’ எனச் சொல்லி, அக்கரும்பக் குவியலைப் பறிமுதல் செய்துவரச் செய்திருக்கின்றனர். 2-6-48இல் உத்தரவு போட்டு, 9-6-48இல் அக்கரும்பு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.

கரும்பு என்றால் சாதாரணக் கரும்பு அல்ல அது. கிடைத் தற்கு அரியது; ஒவ்வொரு கணுவிலும் ஒரு கடல் இன்பம் செறிந்துள்ள பெற்றி வாய்ந்தது; தேனில் ஊறி எழும் இன்சுவை, தென்றலில் தவழ்ந்துவரும் ஆனந்தம், யாழில் தெறிக்கும் நல்லிசை, செந்தமிழில் ஒளிவீசும் கருத்துச் செதில்கள்.

இவ்வள வையும் கூட்டி எடுத்து வடித்து இறக்கிய சுவைமிகு பொருள் போன்றது அந்தக் கரும்பின் சாறு; அந்தக் கரும்புக்கு நாட்டிலே வழங்கும் பெயர் இராவண காவியம் என்பது; தமிழ் மக்கள் உள்ளத்திலே குடியேறிவிட்ட பெயர் திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னம் என்பது. உண்மையைச் சொல்வதானாலோ அது வருங்காலந் திராவிடத்தின் நுழைவு வாயில். அதைத்தான் சென்னை அரசு பறிமுதல் செய்திருக்கிறது.

இராவண காவியம் தமிழர் பண்பாட்டின் விளக்கம்; ஆரியச் சூழ்ச்சி அன்றோர் நாள் தமிழ் வீரத்தைச் சாய்த்த கொடுமையைச் சுவைபடக் கூறும் எழில்மிகு இலக்கியம்; அற்புதமான எண்ணங் கள், அழகான சொல்லோவியங்கள், உள்ளத்தைத் தொட்டிழுக் கும் உன்னதமான கதைப்போக்கு. இவை மூன்றையும் தமிழ்த் தேனிலே குழைத்துத் தந்திருக்கிறார் புலவர் குழந்தை.

அந்தக் காவியத்தைப் பிரித்துப் படித்தால், ஒருபால் வீரம் ததும்பும், மற்றோர்பால் அழகு தவழும், ஓரிடத்தில் இன்பம் கொஞ்சும், மற்றோரிடத்தில் சொல்லடுக்கு வந்து நின்று இன்பநடம் புரியும்; ஒரு புறத்தில் ஆரியர் கொடுமை அம்பலம் ஏறும்; மறுபுறத்தில் திராவிடத்தின் எழில் தன் நலம் காட்டும். வீரச்சுவை, இன்பச் சுவை, கருத்துச்சுவை என்னும் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு நூல் முழுதும் ஓடியோடி விளையாடும். உண்மையிலேயே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் இலக்கியம் இராவண காவியம்.

அது இணையற்ற தமிழ் இலக்கியம் என்பதுகூட அல்ல முக்கியம். அந்தப் பெரும்புலவன் கம்பனால் தமிழர் பண்பாட் டிற்கு உண்டாக்கப்பட்ட அழியாத பழி துடைக்கப்பட்டுள்ளது அக்காவியத்தால். ஆம், அதுதான் அதன் தனிச்சிறப்பு! கம்பன், தன் முன்னோனை, தென்னவனை, சொந்த இனத்தோனை, இனத்தலைவனை, தீரனை, மாவீரனை, இராவணனை இழித்தும் பழித்தும் பதினாயிரம் பாடல்கள் எழுதினான்;

அதன் மூலம் தமிழ் இனத்தின் தன்மானத்திற்கே மாசு தேடினான்; தமிழர் வீரத்திற்குக் கல்லறை தேடினான்; தமிழர் பண்பாட்டிற்கு இழிவு தேடினான்; உண்மைத் தமிழர் என்றென்றைக்கும் தலைகுனிந்து தீரவேண்டிய நிலையைத் தேடினான்.

அவன் சிறு புலவனாய் இருந்து இந்தச் சிறுமையைத் தேடி இருந்தாலும் பரவாயில்லை! பழியும் சிறிதாய் இருந்திருக்கும்; அவனோ இணையற்ற புலவன். ஆகவே, அவனால் தமிழர் குலத்திற்கு நேர்ந்த இழிவும் இணையற்றதாயிற்று. அந்த இழிவை ஒழித்தது இராவண காவியம்.

கம்பன், தமிழர் மானத்திற்குத் தளை பூட்டினான். அந்தத் தளையைத் தூள் தூளாய்த் தகர்த்தெறிந்தார் புலவர் குழந்தை. கம்பன் நம் தமிழை ஆரியச் சிறைக்குள் தள்ளினான்.

சிறைச் சாலை என் செய்யும் என்று பண்பாடிய வண்ணம் புலவர் குழந்தை சிறை நோக்கிச் சென்றார்; இராவண காவியம் என்ற ‘டைனமிட்’டைக் கொண்டு சிறைமதில்களை இடித்துத் தள்ளினார்; உள்ளே புகுந்தார்; தமிழுக்கு விடுதலை தந்தார்; தமிழர் கம்பனால் இழந்த மானத்தை மீட்டுத் தந்தார்; தமிழர்க்கு இன்பந்தந்தார்; அவர்களுடைய குனிந்த தலை நிமிர வழிவகுத்துத் தந்தார்;

“ஏ! தமிழரே வாரீர்! உங்கள் கவியரசன் கம்பன் எங்கள் சூழ்ச்சிக்கு இரையானான் பாரீர்! என்று இறுமாப்புடன் கூறிவந்த ஆரியர்தம் ஆணவம் அடங்க, அவர்கள் தம் ஆர்ப்பாட்டம் குறைய, புத்தம் புதிய இலக்கியத்தைத் தந்தார். எனவேதான், இராவண காவியம் என்ற சொல் கேட்டதும் தமிழர் களிப்புக் கடலில் நீந்திடலாயினர்.

12ஆம் நூற்றாண்டில் கம்பன் பிறந்தான்; தான்பிறந்த இனத்திற்குத் துரோகம் புரிந்தான்; மாற்றானுக்கு மண்டியிட்டுப் பணிந்தான்; பகைவர் புகழ்பாடி, தென்னிலங்கைவேந்தன் – தமிழ்வீரன் இராவணனுக்கு இழிவு கூறி நின்றான்.

20ஆம் நூற்றாண்டில் தோழர் புலவர் குழந்தை வந்தார்; இன முன்னோன் இராவணனின் உண்மைப் புகழைக் காவியமாக்கித் தந்தார்; அழியாப் புகழ் கொண்டார்.

இரா மகாதை! இராவண காவியம்! இரண்டும் இரு சொற் களல்ல, இரண்டு காவியங்களின் பெயர்கள் மட்டுமல்ல, இருதுருவங்கள். இராமகாதை, ஆரியச் சூழ்ச்சி திராவிட வீரத்தை வென்றது என்பதன் அடையாளச் சின்னம்! இராவண காவியம், தமிழர் விழித்தெழுந்து விட்டனர், ஆரியர் சூழ்ச்சியை அழித்தொழிக்க முனைந்துவிட்டனர், இனி ஆரியர் சூழ்ச்சி நில்லாது நின்றாலும் வெல்லாது, வென்றாலும் இரண்டொரு விநாடிக்கு மேல் வாழாது என்பதற்குரிய அடையாளச் சின்னம் ! இராம காதை ஆரியர் வெற்றிக்கு “லாலி” பாடுவது.

இராவண காவியம் திராவிடர் எழுச்சியைச் சித்திரித்துக் காட்டுவது, இராவண காவியம் என்ற பெயரிலே மிகச் சிறந்ததோர் இலக்கியம் தோன் றும் அளவுக்குத் தமிழர் உள்ளத்திலே புரட்சிப் புயல் எழுந்து விட்டதைக் காணக் காண அவர்தம் மனப்புழுக்கம் அதிகரிக்கும். அந்த மனப்புழுக்கத்தின் விளைவுதான் ” இராவண காவியத்” தடை உத்தரவு.

தடை என்றதும் தமிழர் எழுச்சி என்ற கடல் தன் கொந்தளிப்பை நிறுத்திவிடுமா என்ன? நிறுத்தாது என்பதுதான் இயற்கை விதி ஆயிற்றே!

கான்யூட் அரசன் அலையே அடங்கு என்று ஆணையிட்டுத் தான் பார்த்தான் – ஆனால் அலை அடங்கவில்லை! நவீன கான்யூட்டுக்கள், தமிழகத்தில் அதைச் செய்து பார்க்கின்றனர், இங்குள்ள கடலிலேயும் அலை ஓயாது நிச்சயம்!

– 8-6-48 ‘போர்வாள்’ இதழில் 

https://tamilebooks.org/ebooks/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-ebook/

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இராவண காவியம் பற்றி

ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் கட்சி, தன் கட்சியல் லாத மற்றக் கட்சிகளும், தன் கட்சிக் கருத்தல்லாத மற்றக் கருத்து களும் நாட்டில் பரவவிடாமல் செய்யும் போக்கு பாசிசப் போக் காகும். அந்தப் போக்கில் விரைந்து சென்றுகொண்டிருக்கிறது சென்னை அரசாங்கம்.

இருவர் கதை எழுதினார்கள். ஒருவர் இராமகாதை எழுதி னார்; மற்றொருவர் இராவண காவியம் எழுதினார். இராம காதையில் காணப்படும் ஆபாசப் பகுதிகளை இராவணகாவியத் தில் காண முடியாது. இருந்தும், இராமகாதை சென்னை அரசி யலார்க்கு இனிக்கிறது; இராவணகாவியம் கசக்கிறது. இது ஏன்? இராமகாதை எழுதியவர் கம்பர்; இராவண காவியம் எழுதியவர் குழந்தை.

கம்பன் ஆரியனின் அடிகளைத் தாங்கத் தயங்கவில்லை; குழந்தை ஆரியனின் அடிகளைத் தாங்க மறுத்தார். இந்தக் குற்றத் திற்காக, ஆரியத்தின் தொண்டரடிப் பொடியாழ்வார்களாகத் தங்களை எண்ணிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளும் பண்பினர். இராவண காவியத்தின்மீது வேண்டாத குற்றஞ்சாட்டித் தடை விதித்துள்ளார்கள்.

நாம் கவலைப்படுவது இராவண காவியம் தடைப்பட்டுவிட்டது என்பதற்காக அல்ல; இன்றைய அரசிய லாரின் போக்குக் கண்டு, வரும் காலம் எள்ளி நகையாடுமே, அதையுணராமல் ஆட்சிப் பீடத்தில் அமைச்சர் குழு இறுமாந்து அமர்ந்துள்ளதே என்பதற்காகத்தான். நமது பரிதாபம் அவர்களுக்கு உரித்தாகுக!

உலகில் தடைப்படுத்தப்பட்ட நூல் எல்லாம் ஒரு காலத்தில் மக்களிடம் நடமாடியே தீரும் என்பதும், நடமாடும் பொழுது முன்னைய நிலையைக் காட்டிலும் சிறந்த நிலையில் திகழும் என்பதும் வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடமாதலால், இராவண காவியம் வீறுடன் நம்மிடம் கொஞ்சும் நாளை எதிர்நோக்கு வோம். வாழ்க இராவண காவியம்! வாழ்க புலவர் குழந்தை!

– 1948 ஜூலை, தமது ‘மன்றம்’ இதழில் 

 

பேராசிரியர் திரு. . அன்பழகன் அவர்கள்

இராவண காவியம் பற்றி

நமது சென்னை மாநில அரசியலார் – தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்கட்குத் தம்மாலான கவுரவமளிக்கத் தவறுவதே இல்லை.

தமிழகத்தில் கம்பருக்குப் பின் எட்டு நூற்றாண்டுகளாகவே அவரைப்போல் ஒரு கவிஞர் தோன்றவில்லை என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தவர்களின் துயரம் தீர, இந்தக் காலத்தில் ஒரு காவியம் இயற்றித் தந்த ஒரு பெரும் புலவருக்கு நமது அரசாங்கம் பரிசளித்துள்ளது.

ஆனால், அப்புலவர் அந்தக் காவியத்தை வெளியிட்டு இரண்டாண்டுகள் கழித்துத்தான் அரசியலார் அதைக் கவனிப்பது என்பதை எண்ணும்போதுதான் ஆளவந்தாரின் மந்த நடை நம்மை வருந்தச் செய்கிறது.

இப்பொழுதுள்ள அமைச்சர் குழு ஏற்பட்ட நாளிலிருந்தே உலவிக் கொண்டு வரும் இந்த இலக்கியத்தைப் படித்துப் பார்க்க இவ்வளவு நாளா வேண்டும்? ஒருவேளை, அக்காவியத்தைப் படித்த பொழுதே அதன் அருமையை உணர்ந்து, படித்துப் படித்து அதன் சுவையில் ஈடுபட்டு இவ்வளவு காலத்தையும் செல விட்டிருப்பார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

என்றாலும், ஆளவந்தார் தமது கடமையை மறந்துவிட வில்லை. அவர்கள் செய்யவேண்டிய நற்றொண்டைச் செய்துவிட்டார்கள்.

பேச்சுரிமையும் எழுத்துரிமையும் எல்லோருக்கும் வேண்டும் என்று எழுத்தறிவற்ற பாமரர்களும் பேசும் இக்காலத்தில் படித்த மந்திரிகள், தமது கடமையை நிறைவேற்றத் தவறுவார்களா?

சென்னை அரசாங்கம் பல மாதங்களாகவே கஷ்டப்பட்டு ஆராய்ந்து , இ.பி.கோ. 153ஏ, 295 ஏ, ஆகிய பிரிவுகளின்படி ஆட் சேபகரமான அம்சங்கள் இருப்பதாகத் தேடிப்பிடித்து, குற்றஞ் சாட்டி – புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட “இராவண காவியம்” என்ற நூலைப் பறிமுதல் செய்துள்ளது. 

நமது வேலைக்காரச் சிறுவன் நம்மைப் பார்த்துச் சிரித்தான். “ஏண்டா சிரித்தாய்?” என்றேன். “இல்லை, இராவண காவியத்தைத் தடைசெய்துள்ளார்களே சார் இவர்கள், இவர்கள் இருக்கிற பீடத்திலே இனி என்றைக்குமே எதிர்க்கட்சிக்காரர்கள் இடம் பெற மாட்டார்களா?” என்றான். “ஏன்? இடம் பெறுவார்களே” என்றேன். “அவர்கள் ஒருவேளை, இராமாயணம், பெரிய புராணம், கந்தபுராணம் முதலிய எல்லா ஏடுகளுக்குமே தடையுத்தரவு பிறப்பித்துவிட்டால் என்ன சார் ஆகும் ?” என்றான் அவன்.

எனக்கும் சிரிப்புத்தான் வந்தது. இன்று இராவண காவியத் தில் என்னென்ன குற்றங்கள் சாட்டப்படக்கூடுமோ, அவை வேறு எந்தப் புராண இலக்கியத்திலும் இல்லாமல் இல்லை. இராமாயணமேகூட அத்தகைய குற்றச்சாட்டுகளினின்றும் தப்பமுடியாதென்றே தோன்றுகிறது.

இந்த நிலையில் இராவண காவியத்தைப் பறிமுதல் செய்து விட்டது இன்றைய அரசாங்கம். பாரதியார் பாடலுக்கு ஒரு காலத்தில் தடையிருந்தது. இன்று அப்பாடல்கள் – ஆளவந் தார்க்கே அரிய பிரச்சாரத் துணையாக உள்ள காரணத்தால் அரியணை ஏறி உள்ளன.

இன்னும் எவ்வளவோ ஏடுகள் எவ்வ ளவோ நாடுகளில் பறிமுதல் செய்யப்பட்டு, அவையெல்லாம் இன்று உரிமையோடு திகழ்வது மட்டுமல்ல, புகழ்பெற்றும் விளங்குகின்றன. அவ்வாறே புலவர் குழந்தையின் இலக்கியத்தின் புகழ் வளர இருப்பதால்தான் போலும் அரசாங்கம் அதனைப் பறிமுதல் செய்துள்ளது என்றே தோன்றுகிறது. வாழ்க பறிமுதல்! வீழ்க எழுத்துரிமை!

– 1948 ஜூன், தமது ‘புதுவாழ்வு’ இதழில் 

Related Post

இராவண காவியம் கதை

Posted by - October 1, 2020 0
இராவண காவியம் கதை சுருக்கம் இராவண காவியம் (Ravana Kaviyam) 20-ம் நூற்றாண்டில் புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட தமிழ்  காவியம் ஆகும். இந்த நூலை 1946இல்…

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

Posted by - September 30, 2020 0
இராவண காவியம் எதற்கு? கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைக் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிய காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளை யாடற்…

இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

Posted by - September 30, 2020 0
ஆராய்ச்சி முன்னுரை அறிஞர் அண்ணா அவர்கள் இராவண காவியம் – திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டு வந்த…

இராவண காவியம் சிறப்புப் பாயிரம்

Posted by - September 30, 2020 0
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய இராவண காவிய சிறப்புப் பாயிரம் பாவண மல்குமி ராவண காவியம் நாவண மல்கிய நல்லா சிரியனும் நலமலி ஓல வலசுவாழ் முத்துச் சாமிசின்…

இராவண காவியச் சிறப்பு

Posted by - September 30, 2020 0
இராவண காவியச் சிறப்பு இராவண காவியம் நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.” – மு கருணாநிதி   அறிஞர் அண்ணா…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்