பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார் கொள்கைகள்

பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார்.

பெருஞ்சித்திரனாரும் தனித்தமிழ்க்கொள்கையும்

பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கொடிவழியில் வந்த அறிஞர் ஆவார். அவரது இதழ்கள், உரைவீச்சு ஆகியவை முழுக்கவும் தனித்தமிழிலேயே அமைந்திருந்தன. மறைமலையடிகள் தொடங்கிப் பாவாணர் ஈறாக தனித்தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட பெருஞ்சித்திரனார் அரசியல் சார்ந்து அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்கினார். நேரடியாக மக்களிடம் தனித்தமிழ்க்கொள்கை வேர்கொள்ளவேண்டி அவர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும். இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணரின் மாணவரான பெருஞ்சித்திரனார் அவரது பல்வேறு தூய தமிழ்ப்பணிகளுக்குத் துணையாய் நின்றார்.

பெருஞ்சித்திரனாரும் சாதியும்

பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.

பள்ளென்போம்; பறையென்போம்;
நாட்டா ரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா
ளென்போம்! –
எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்! எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது
தொலையு மட்டும்
கூசுங்கள் நாணுங்கள்
தமிழ்நாட் டாரே!

– தென்மொழி, இயல்-1, இசை-13 (1960)

சாதியை ஒழிப்பது குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த பெருஞ்சித்திரனார் அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார்.

பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்நாட்டுக்கொள்கை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்ககாலத்திலிருந்து தனித்தமிழ்நாட்டுக்கொள்கையைக் கொண்டிருந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுரை வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்திவந்தார். தென்மொழி இதழின் முகப்பில் நம் மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில்

இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கு்ம்இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமை யிலினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல் களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். எனும் தன் கொள்கை அறிவிக்கையே இவரது கண்ணோட்டத்தை அறியப் பயன்படுகிறது.

பெருஞ்சித்திரனாரும் தமிழரசனும்

பெருஞ்சித்திரனார் தன்னுடைய கொள்கையுடைய எவருடனும் இணைந்து அரசியல் பணியாற்றினார். தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா இலெ) மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை ஆகிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்ட தோழர் தமிழரசன் பெருஞ்சித்திரனாருடன் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். பெருஞ்சித்திரனார் வெளிப்படையாகவும் தமிழரசன் தலைமறைவாகவும் இருந்த காலத்திலும் அரசு ஒடுக்குமுறை மிகுந்திருந்த காலத்திலும் பெருஞ்சித்திரனார் தன் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையில் பின்வாங்காமல் தொடர்ந்து ஈடுபட்டார். பெருஞ்சித்திரனாரின் ஆதரவாளர்கள் தமிழரசனுக்கு நெருக்கமாகிச் செயல்பட பெருஞ்சித்திரனார் உதவினார். தமிழரசன் கூட்டிய கூட்டங்களிலும் கூட்டமைப்புகளிலும் பெருஞ்சித்திரனார் பங்கேற்றார்.

பெருஞ்சித்திரனாரும் ஈழமும்

பெருஞ்சித்திரனார் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை ஆதரவாளராக இயங்கிவந்தார். தமிழீழ அரசியலில் ஆர்வமும் உண்மையான ஈடுபாடும் கொண்டவராக அவர் இருந்தார். அமர்தலிங்கம், வே.பிரபாகரன், முகுந்தன் அனைவரையும் வரவேற்பவராக அவர் செயல்பட்டார். தொடக்கத்தில் அனைத்து இயக்கத்தவரையும் ஒரே வகையில் ஆதரித்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக இறுதிவரை இருந்தார். புலிகள் மீதான இந்திய அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் இவர் கடுமையாக அதனை எதிர்த்துப் பரப்புரை செய்தார். அக்காலத்தில் இவர் எழுதிய

”இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்
எனைச்சிறை செய்யினும் செய்க!
ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்
என் தலை கொய்யினும் கொய்க”

எனும் வரிகள் புகழ்பெற்றவையாகும்.

பெருஞ்சித்திரனார் சிறைவாழ்க்கை

பெருஞ்சித்திரனார் தடா,மிசா போன்ற இந்தியச் சட்டங்களின்கீழ் பல்வேறுமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச்சென்றவர். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார். ஐயை , திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆகியவை புகழ்பெற்ற ஆக்கங்களாகும்.

வாழ்க்கை

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.

கல்வி

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கி தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். “குழந்தை’ என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் “மலர்க்காடு’ என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர், சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படுபவர்.

தென்மொழி இதழும் எழுத்துப் பணியும்

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்து கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் இதழை1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலகட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் “பாவலரேறு’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

“என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசியாவிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

சென்னை மேடவாக்கத்தில் “பாவலரேறு தமிழ்க்களம்’ என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சித்திரனாரின் அரசியல்

பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.

பெருஞ்சித்திரனாரின் குடும்பம்

பெருஞ்சித்திரனார் அவர்களின் குடும்பம் தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத குடும்பமாக திகழ்கிறது. முதுபெரும்புலவர்.இறைக்குருவனார், தமிழ்மொழியின் தொன்மையை ஆய்ந்து உலகுக்குணர்த்திய சொல்லாய்வறிஞர்.ப.அருளியார், தமிழ்வழிப்பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய திருவாட்டி.இறை.பொற்கொடி, பகுத்தறிவுக் குமுகாயம் ஆக்கம் செய்யும் பெண்ணியப்போராளி தழல்.தேன்மொழி, பேராசிரியர்.மா.பூங்குன்றன், முனைவர்.கி.குணத்தொகையன், அறிஞர்.ஆறிறைவன், தமிழ்த்தேசியப்போராளி மா.பொழிலன், வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி, வரலாற்றறிஞர் தெள்ளியன் உள்ளிட்ட குடும்பமே இனத்தையும் மொழியையும் வழிநடத்துகின்றது. தென்மொழிதழல், தமிழ்நிலம், மாணவர்களம் என்ற இதழ்களும் பல்வேறு இயக்கங்கள், கல்வி அறக்கட்டளைகளும் இக்குடும்பத்தால் நடத்தப்படுகின்றன.

நன்றி: விக்கிப்பீடியா

Related Post

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி)

Posted by - October 15, 2020 0
வல்லிக்கண்ணன் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 – நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க…

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Posted by - July 12, 2021 0
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு இந்த பதிவில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு (Erode Venkatappa Ramasamy) சுருக்கமாக வருடம் வாரியாக பார்க்கலாம். பெரியார் பிறப்பு…

சுப்பிரமணிய பாரதியார் வரலாறு

Posted by - October 26, 2020 0
பாரதியார் வரலாறு | இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். 

சுஜாதா எழுத்தாளர்

Posted by - January 12, 2021 0
சுஜாதா சுஜாதா (sujatha) (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின்…

காளமேகப் புலவர் 

Posted by - July 19, 2022 0
தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்