புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு

இராவண காவியம் என்னும் ஒப்பிலாத தனித் தமிழ்ப் பெருங் காவியத்தை இயற்றித் தமிழ் மக்களிடையே புத்துணர்ச்சி யினையும், இனவெழுச்சியினையும், தன்மானப் பண்பினையும் கிளர்ந்தெழச் செய்தவர்  புலவர் குழந்தை. 

பிறப்பும் இளமையும்

 • பிறப்பு : சூலை 1, 1906 – ஈரோடு
 • இறப்பு செப்டம்பர் 22, 1972 (அகவை 66)

புலவர் குழந்தை அவர்களின் சொந்த ஊர், கொங்குநாட்டுக் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓலவலசு என்னும் சிற்றூராகும்.

1-7-1906இல் கோவை மாவட்டத்து, ஈரோடு வட்டத்தில், ஈரோடு – பழைய கோட்டை வழியில், ஈரோட்டிற்குத் தெற்கே பதினாறாவது கல்லில் (26 கி.மீ) ஓலவலசு என்னும் சிற்றூரில் இவர் பிறந்தார். இவர்தம் தந்தையார் – முத்துச்சாமிக்கவுண்டர்; தாயார் – சின்னம்மையார். இவர் தம் பெற்றோர்க்கு ஒரே மைந்தராவர்.

கல்வி

நான்கைந்து திண்ணைப் பள்ளியில் நான்கைந்தாண்டுகள் இடையிடையே விட்டுவிட்டுப் படித்த இவர்தம் பள்ளிப் படிப்புக் காலம் ஆகக்கூடி எட்டு மாதங்களேயாம். இவர் பத்தாண்டுப் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலை இயற்கையாகப் பெற்றிருந்தார். அவ்விளம் பருவத்திலேயே, ஒரு பாட்டைப் பிறர் பாடக் கேட்டால் உடனே இவர் அப் பாட்டின் ஓசையில் புதுப் பாட்டொன்றினைப் பாடிவிடுவர். எந்நேரமும் ஏதேனும் ஒரு பாட்டை எழுதிக்கொண்டிருப்பதே இவருடைய பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் இருந்தது.

இவர் முதன் முதலாகப் பாடியவை இசைப்பாடல்களேயாம். இவர்தம் கல்லாக் கவித்திறத்தினையும், கவிகளின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர் பெருமக்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக் கணங்களைப் படிக்குமாறு தூண்டி இவரை ஊக்குவித்தனர். அக் காலத்தில் ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர் எவருமின்மையால், இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே முயன்று படித்துத் தமிழில் சிறந்த புலமையுடைய வரானார். மேலும், தாமாகவே படித்து, 1934ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் பட்டம் பெற்றுச் சிறந்தார்.

தமிழாசிரியராகப் பணி

இவர் 1924 முதல் 1962 முடிய 39 ஆண்டுக் காலம் ஆசிரியத் தொண்டாற்றியுள்ளார். 1941 முதல் 1962 முடிய, பவானி கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

ஓலவலசில் இவருக்கு முன் படித்தவர் எவருமில்லை அவ்வூரார் எவருக்கும் கையொப்பமிடவும் தெரியாது.

இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் பேரார்வங் கொண்டிருந்த இவர், தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்தபொழுது, தம் ஊரிலிருந்த தம்மை யொத்த இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்து, அவர்களைக் கொண்டு வயதாற் பெரியவர்களுக்குக் கையெழுத்துப் போடப் பழக்கி, அதன்மூலம் அவ்வூரின் தற்குறித்தனத்தைப் போக்கினார். அதுபோழ்து, இவரைவிட இரண்டு மூன்று மடங்கு வயதில் மூத்த பலர் இவரிடம் கல்வி கற்றுக்கொண்டனர்.

யாப்பிலக்கணம் படிக்கத் தொடங்கு முன்னரே 1918இல், இவர் பாடிய ‘கன்னியம்மன் சிந்து‘ என்னும் சிறு நூல் அச்சாகி யுள்ளது. இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல. அவற்றுள் ஆடிவேட்டை’, ‘நல்லதம்பிச் சர்க்கரை தாலாட்டு’ என்பன, அறிஞர்களால் பாராட்டப் பெற்றவை.

1926-27 இல், வெள்ள கோவில், ‘வீரக்குமாரசாமி இரதோற்சவச்சிந்து’ ‘வீரக் குமாரசாமி காவடிச்சிந்து’ ‘வெள்ள கோவில் வழி நடைச்சிந்து’ ஆகிய நூல்கள் அச்சாயின. யாப்பிலக்கணம் அறியா முன்னர் இவர் பாடிய அப் பாடல்கள் யாப்பமைதி யுடையனவாய் உள்ளன

காட்டு:

செங்கரும்பை வாங்கித் 
திருக்கையிலே தாங்கி அங்கசவே ளோட 
அவன் செயலைப் பாட மங்கையர்கள் கூடி 
மணாளருட னாடித் தெங்கிள நீ ருண்பாரடி 
என் தங்கமே தெருவில் திரிவாரடி. 

கன்னியம்மன் சிந்து

இவர் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்று கொண்டிருந்த போழ்தும் பாக்கள் இயற்றுவதைக் கைவிட வில்லை . அதனையும் ஒருங்கு செய்தே வந்தார். அதாவது, படிக கும் செய்யுட்களைப் போன்ற புதுச் செய்யுட்கள் செய்துவருவார்.

1935 முதலாக இவர் பள்ளிப் பாட நூல்கள் எழுதிவந்துள்ளார். இவர் எழுதிய பள்ளி இலக்கண நூல்கள் (3-11 வகுப்பு) தனிச் சிறப்புடையவை.

புலவர் குழந்தை படைப்புகள்

செய்யுள் நூல்கள்:

 1. இராவண காவியம்,
 2. அரசியலரங்கம்,
 3. நெருஞ்சிப்பழம்,
 4. காமஞ்சரி,
 5. உலகப் பெரியோன் கென்னடி,
 6. திருநணாச் சிலேடை வெண்பா ,
 7. புலவர் குழந்தை பாடல்.

உரை நூல்கள்:

 1. திருக்குறள் – குழந்தையுரை,
 2. தொல் காப்பியப் பொருளதிகாரம் – குழந்தையுரை,
 3. நீதிக்களஞ்சியம் உரை.

இலக்கண நூல்கள்:

 1. யாப்பதிகாரம்,
 2. தொடையதிகாரம்,
 3. இன்னூல் (சூத்திரம்)

உரைநடை நூல்கள்:

 1. தொல்காப்பியர் காலத் தமிழர்,
 2. திருக்குறளும் பரிமேலழகரும்,
 3. பூவாமுல்லை, (இம்மூன்றும் ஆராய்ச்சி நூல்கள்)
 4. கொங்கு நாடு,
 5. தமிழக வரலாறு,
 6. தமிழ்வாழ்க (நாடகம்),
 7. தீரன் சின்னமலை (விடுதலை வீரன் வரலாறு),
 8. கொங்கு நாடும் தமிழும்,
 9. கொங்குக் குலமணிகள்,
 10. அருந்தமிழ் விருந்து,
 11. அருந்தமிழ் அமிழ்து,
 12. சங்கத் தமிழ்ச் செல்வம்,
 13. ஒன்றே குலம்,
 14. அண்ண ல் காந்தி,
 15. தமிழெழுத்துச் சீர்திருத்தம்,
 16. தீரன் சின்னமலை நாடகம் (இன்னும் அச்சாகவில்லை)

சுயமரியாதை இயக்கம்

1925-இல், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கினதும் இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்து, பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல், சுயமரியாதை இயக் கம், அதன் மறுபதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சி யான திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தொடர்ந்து அதே கட்சியில் – ஒரே கட்சியில் – இருந்து வருகிறார்.

சுயமரியாதைக் கொள்கையினின்றும் இவர் அணுவும் அசையாதவர்; முறுகிய கட்சிப் பற்றுடையவர்; பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டே அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறில்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கறுப்புச் சட்டைக்காரர்’ என்று ஊரார் கூறுமளவுக்குக் கட்சித் தொண் டாற்றி வந்தார்; இன்னும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் “முத்தாரம்” எனும் திங்கள் வெளியீட்டில் வெளிவந்த இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பான “பூவாமுல்லை” என்னும் நூலுக்குச் “சுதேசமித்திரன்’ நாளிதழில் மதிப்புரை எழுதிய ஓரன்பர்,

‘இந்நூலாசிரியரான புலவர் குழந்தை ஒரு சுயமரியாதைக்காரர்’ என்று குறித்திருப்பதே இவரது சுயமரியாதைத் தொண்டுக்குத் தக்க சான்றாகும். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் எனலாம்.

சுயமரியாதை இயக்கம்

இவர் சமய நம்பிக்கை இல்லாதவர், வெள்ளக் கோவில் தீத்தாம்பாளையத்தில், 1930இல், “ஞான சூரியன்” ஆசிரியரான சாமி சிவானந்த சரசுவதி என்பாருடன், ‘கடவுள் இல்லை ‘ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் இவர் வாகை சூடினர்.

இந்தி யெதிர்ப்பு

1938இலும், 1948இலும் நடைபெற்ற இந்தி யெதிர்ப்புப் போராட்டங்களில் பங்குகொண்டு, பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும் பெருந்தொண்டாற்றினார். இந்தி ஆட்சி மொழியானால் தமிழுக்கும் தமிழர்க்கும் உண்டாகும் கேட்டினை விளக்கி, ‘இந்தி ஆட்சி மொழி ஆனால்’ என்னும் ஆராய்ச்சி நூலினை எழுதி அச்சிட்டு, 1965இல் கோவையில் நடந்த காங் கிரசு மாநாட்டில் வழங்கினார்.

‘அரசியலரங்கம்’ என்னும் நூலில், ‘ஆட்சி மொழி’ என்னும் தலைப்பில், இந்தி தேவையில்லை என்பதை முடிவுகட்டியுள்ளார்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற இயக்கத்தின்போது, ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்ற அச்சுக்கட்டைகள் செய்து கொடுத்து, ஒரு துணி வணிகரைக் கொண்டு வேட்டி, துண்டு, சேலைக் கரைகளில் அச்சிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமை இவரையே சாரும்.

பகவத்சிங்கு முதலிய விடுதலை வீரர்கள் கொள்கையில் இவர் மிகுந்த பற்றுடையராய் இருந்தனர். 1931இல் ஆங்கில ஆட்சியாளர் அவர்களைத் தூக்கிக் கொன்றபோது, இவர் உணர்ச்சிமிக்க பாடல்கள் பாடி வருந்தினர். (அப் பாடல்கள், ‘புலவர் குழந்தை பாடல்’ என்னும் நூலில் உள்ளன.)

திருக்குறள் உரை

1948இல், சென்னையில் நடந்த திருக்குறள் மாநாட்டில், பகுத்தறிவுக் கேற்ப – தமிழ் மரபு பிறழாமல் – திருக்குறளுக்கு ஓர் உரை எழுதப் பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுவில் – நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய ஐவருள் புலவர் குழந்தையும் ஒருவராவர்.

திருக்குறள் – குழந்தையுரை

இவரே தனித்து அப்பணியை மேற்கொண்டு, திருக்குறளுக்குப் பகுத்தறிவுக் கேற்பச் சிறந்ததோர் உரையெழுதி வெளியிட்டனர். ‘திருக்குறள் – குழந்தையுரை’ என்னும் அவ்வுரையை இவர் இருபத்தைந்து நாட்களில் எழுதி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா மற்றும் கலைஞர் நட்பு

அறிஞர் அண்ணா அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராக ஈரோட் டில் இருந்தபோது, அண்ணா அவர்களோடு இவர் நெருங்கிப் பழகி வந்தனர். அப்போதெல்லாம் அண்ணா அவர்கள் இவரைப் பேர் சொல்லாமல் ‘புலவர்’ என்றே அழைத்து வந்தனர். பிறரும் அவ்வாறே அழைத்து வந்தமையால், ‘புலவர்‘ என்பது இவரது இயற்பெயரே போலாகிவிட்டது. இறுதிவரை அண்ணா அவர்கள் இவரை அவ்வாறேதான் அழைத்து வந்தனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் இவர்பால் மிக்க அன்பும் மதிப்பும் உடையவராக இருந்துவந்தனர். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் அவ்வாறே இவர்பால் அன்பும் மதிப்பும் உடையவராக இருந்துவருகின்றனர். அவ்வாறே மற்றத் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தோழர்களும் இவர்பால் மிக்க அன்பும் மதிப்பும் உடையவர் களாக இருந்துவருகின்றனர். தமிழ் மக்கள் எல்லோருமே புலவர் குழந்தையைத் தங்கள் தமிழ்க் குழந்தை எனக் கொண்டுள்ளனர் என்பது மிகையாகாது.

புலவர் குழந்தை

புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; கேட்போர் வேட்கும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்தும் பேச்சும் உண்மையும் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் கக்கும் இயல்புடையவை எனல் மிகையாகாது. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனிச் செந் தமிழில் அமைந்தவையாகும். இவர் நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கந் தரும் வகையிலேயே அமைந்துள்ளன.

‘விருத்தம் எனும் ஒண்பாவில் உயர்கம்பன்’ என இதுகாறும் போற்றப்பட்டு வந்த புகழுரையைப் புலவர் குழந்தை அவர்களின் ‘இராவண காவியம்’ பொய்யாக்கிவிட்டது. சிந்துப் பாடல்களா லான ‘அரசியலரங்கம்’ என்னும் நூல், வரலாறு என அறியாமலே இலக்கியச் சுவைப்படத் தமிழக வரலாற்றினை அறிந்தின்புறும் வகையில் அமைந்துள்ளது. ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் ‘மனோன் மணியத்’திற்குப் பின், அத்தகைய நாடக நூல் இயற்றப்பட வில்லை என்னும் பெருங்குறையினைப் போக்கி, அதனைவிடச் சிறந்த நூல் என்னும் புகழுடன் இயன்றுள்ளது. ‘நெருஞ்சிப் பழம்’ எனும் நூல், தமிழில் இதுகாறும் வெளிவராத கற்பனைக் கருவூலமான காதற் பழமாகும்.

புலவர் குழந்தை அவர்களின் புலமைத்திறன், செய்யுளியற்று வதுடன் மட்டும் அமைந்துவிடவில்லை; சிறந்த உரை எழுது வதிலும் வல்லுநர் என்பதனை இவர்தம் ‘திருக்குறள் – குழந்தை யுரை‘, ‘தொல்காப்பியப் பொருளதிகார உரை‘, ‘நீதிக் களஞ்சியம் உரை முதலிய உரைகளைக் கண்ணுறுவோர் எளிதில் அறியலாம். இவரது வரலாற்றுப் புலமைக்குக் ‘கொங்குநாடு‘ என்னும் நூல் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இதற்குமுன் இத்தகைய நூல் வெளிவரவில்லை .

புலவர் குழந்தை அவர்கள் தம் தாய்மொழியிடத்துக் கொண்டுள்ள அளவுகடந்த பற்றுக்கும், தமிழ்மொழி யாதொரு குறை பாடுமின்றி வளமுற்றுத் திகழ வேண்டும் என்னும் பேரார் வத்திற்கும் பெருநோக்கிற்கும் சான்றாகத் திகழ்கிறது. ‘தமிழெ ழுத்துச் சீர்திருத்தம்’ என்னும் ஆராய்ச்சி நூல். ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’, ‘பூவா முல்லை ‘ ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ என்னும் நூல்கள் புலவரின் ஆராய்ச்சித் திறனுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

‘நாங்களும் கவி எழுதுகிறோம்’ என ஒரு சிலர், யாப்பமைதி யற்ற தப்புந் தவறுமான கவிகள் எழுதி அச்சிட்டு நூல்வடிவில் வெளியிட்டும், செய்தித்தாள்களில் வெளியிட்டும் தமிழ்ச் செய்யுள் மரபைச் சிதைத்து வருவது கண்டு இவர் பெரிதும் வருந்துவர். அத்தகைய கவிகள் தமிழ்மொழியைச் சீர்குலைக்கும் என்பதை அக் கவிஞர்களைக் காணும்போது எடுத்துக்கூறத் தயங்கார்; தப்புந்தவறுமான கவிகளை நன்கு திருத்தித் தருவர். மோனையும் எதுகையும் நன்கு அமையுமாறு உரிய ஓசை நயங்குன்றாமல் செய் யுள் செய்ய வேண்டும் என்பது இவரது உறுதியான கொள்கை யாகும், கவியரங்கங்கட்குத் தலைமை தாங்கும்போது இக்கருத்தை வற்புறுத்திக்கூற இவர் சிறிதும் பின்வாங்குவது கிடையாது. இவா

தம் “யாப்பதிகாரம்” என்னும் நூலிலுள்ள ‘கவியரங்கம்’ என்னும் பகுதியும், “தொடையதிகாரம்’ என்னும் நூலும் இவரது இவ்வுளக்கோளைத் தெள்ளிதின் விளக்கும் சான்றுகளாக மிளிர்கின்றன. ‘தொடையதிகாரம்’ என்னும் நூலில் – கும்மி, ஒப்பாரி, உடுக்கைப் பாட்டு முதலிய எல்லாவகையான சிந்துகளுக்கும் இலக்கணம் எழுதி, இளங்கவிஞர்களுக்கு இவர் சிறந்த வழி காட்டியாக விளங்குகின்றனர். இன்று தமிழகத்தில் செய்யுள் இலக்கணத்திற்குச் சீரிய சான்றாக விளங்குகின்றனர் புலவர் குழந்தை அவர்கள்.

தமிழ்த் தொண்டு

தமிழ்ச் செய்யுள் மரபு சிதையாமல் இருக்க வேண்டும் என்னும் நன்னோக்குடைய இவர், யார் எத்தகைய தப்புந் தவறு மான – பாட்டல்லாப் பாட்டுக்கள் எழுதிக் கொண்டு வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று, அக்கவிகளைத் திருத்தமுறத் திருத்தித் தருவதை இவர் தம் தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளார்.

திருவருட்பா

இராமலிங்க வள்ளலாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவ்வடிகளாரின் ‘திருவருட்பா’ என்னும் நூலின் புதிய பதிப்பொன்று வெளியிட முனைந்துள்ள, வடலூர் வள்ளலார் மடத்தைச் சார்ந்த ஒரு பெரியவர், அப்பாக்களுட் பல பெயர் தெரியாமலும், ஒழுங்காகச் சீர்பிரிக்கப்படாமலும், யாப்பமைதி யில்லாதவைபோலப் பதிக்கப்பட்டும் தவறாக எண்ணிடப்பட்டும் உள்ளமையால், அப் பாக்களைச் சீர்செய்து செல்ல 29-8-71 அன்று புலவர் குழந்தை அவர்களிடம் வந்தபோது,

இவர் அப் பெரியவரை அன்புடன் வரவேற்று, அப் பாக்களுக்குரிய பெயர் களைக் குறித்து, ஒழுங்கான முறையில் சீர்களைப் பிரித்து யாப் பமைதியுறத் திருத்தம் செய்து, சரியான எண்ணிட்டுக் கொடுத்தனர்.

இவ்வாறே, பலர் தாம் எழுதிய பாக்களை இவர்பால் கொண்டு வந்து காட்டித் திருத்திக்கொள்வதும், ஐயப்பாடுகளை நீக்கிக் கொள்வதும் எப்போதும் நடைபெறும் செயல்களாக உள்ளன.

தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதையும், தனித்தமிழெனத் தமிழின் இனிமைப் பண்புக்கு மாறாக மிகக் கடுஞ்சொல் ஆக்குவதையும் இவர் விரும்புவதில்லை.

இராவண காவியம் எதற்கு? 

இராவண காவியம் தடை !

காங்கிரசு ஆட்சியாளரால் தடை செய்யப்பட்ட இவர்தம் ‘இராவண காவியம்‘ தமிழக அரசினால், தமிழ்வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் டாக்டர், கலைஞர் தமிழவேள் கருணாநிதி அவர்களால் 17-5-71இல் தடை நீக்கப்பட்டது. அது கண்ட தமிழகமே அகமிக மகிழ்ந்து தமிழக அரசை, டாக்டர், கலைஞர் தமிழவேள் அவர்களை மனமார வாழ்த்தியது;

புலவர் குழந்தையை உவந்து பாராட்டியது. 23-5-71 அன்று, பவானிக் குமாரபாளையம் பகுத்தறிவுக் கழகத்தார், பொதுக்கூட்டம் போட்டுப் புலவரைப் பாராட்டினர். 6-6-71இல் புதுவையில் நடந்த ‘இராவணன் விழா’வில் புலவரைப் பாராட்டி, புதுவை முதல்வர் மாண்புமிகு, பரூக் மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்துப் பெருமைப்படுத்தினர். 4-9-71இல் விழுப்புரம் பகுத்தறிவாளர் கழகத்தார் பாராட்டுக் கூட்டம் நடத்திப் பாராட்டிதழ் படித்து வழங்கித் தந்தை பெரியார் அவர்களால் புலவர்க்குப் பொன்னாடை போர்த்துச் சிறப்பித்தனர்.

https://thamizhdna.org/thanthai-periyar-ponmozhigal/

பவானி கலைஞர் கருணாநிதி மக்கள் பணி மன்றத்தினர் 6-10-71 அன்று பவானியில் பாராட்டுக் கூட்டம் நடத்தி, தந்தை பெரியார் அவர்களால் புலவர் குழந்தை அவர்கட்குப் பொன்னாடை போர்த்துப் பெருமைப்படுத்தினர். தந்தை பெரியார் அவர்கள், தமிழ்ப் புலவர்களெல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் –புராணக் கருத்துக்களையே பாடி வந்தனர். அதற்கு மாறாக இராவண காவியத்தைச் செய்து தமிழரின் இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்.

அத்தகைய இராவண காவியத்தைத் தமிழ் மக்கள் படித்துப் பயன்பெற வேண்டும். இக்காவியத்தைப் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று பேசினார்.

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

புலவர் குழந்தை இப்போது பவானியையே தம் சொந்த ஊராகக் கொண்டுள்ளார். பவானியில் புலவர்க்குச் சொந்த வீடும் நிலபுலன்களும் உள்ளன. இவர் ஆசிரியப் பணியினின்றும் ஓய்வு பெற்றனரேயன்றித் தமிழ் வளர்ச்சித் தொண்டாற்றுவதினின்றும் – தமிழின உணர்ச்சித் தொண்டாற்றுவதினின்றும் ஓய்வு பெற்றாரிலர். எப்போதும் படித்துக்கொண்டும், பாட்டும் நூலும் கட்டுரையும் எழுதிக்கொண்டு மிருப்பதையே இவர் தம் பொழுது போக்காகக் கொண்டுள்ளார். கூடுதுறை போகும் வழியிலுள்ள புலவர் வீட்டு வழியே செல்வோர், இவர் எப்போதும் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்பர்.

தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்பன இவர்தம் முந்நாடி யாகும். தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழ் மரபுக்கு ஒவ்வாதவற்றை தகாதவற்றை – வன்மையாகக் கண்டிப்பதிலும், தக்கவற்றை ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூறுவதிலும் இவர் மிக்க நெஞ்சுமுடையவர்; எதையும் இனிய சொற்களால் வெளிப்படையாக எடுத்துரைக்கும் இயல்புடையவர்,

புலவர் குழந்தை ஒழுக்கம்

புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாக கொண்டவர். ஒழுக்கக் கேடான எதையும் செய்ய அஞ்சுபவர்.

இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும், அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையுடையவர்.

இவர் பழகுதற்கு மிகவும் இனியர்; கடமை தவறாதவர்; எதிர்க்கட்சியினராலும் மாற்றுக்கொள்கையினராலும் – நன்கு மதிக்கத்தக்க நேர்மையுடையவர். காங்கிரசுக் கட்சியாட்சியில், கறுப்புச் சட்டைக்காரராகிய இவர், இருபத்திரண்டு ஆண்டுகள் பவானி நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றதொன்றே இவர்தம் நேர்மைக்கும், கடமையுணர்ச்சிக்கும் போதிய சான்றாகும்.

புலவர் குழந்தை விக்கிப்பீடியா

குடும்ப வாழ்க்கை

புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார், கல்வியறிவு வாய்க்கப் பெறாதவரே யொழியப் பொது அறிவு நிரம்பப் பெற்ற தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக் கேற்ப இனிது இல்லறம் நடத்தும் கடப்பாடுடையவர். இங்ஙனம் மனைத்தக்க மாண்புடைய ஒருவரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றமையான் புலவர் குழந்தையின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாக மிளிர்கின்றது.

இங்ஙனம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவராகிய புலவர் குழந்தை அவர்கட்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண் மக்கள் உள்ளனர். இவர்களுள், சமத்துவம் B.Sc. (Ag.) பட்டம் பெற்றவர் ; பதினேழாண்டுக் காலம், கோவை வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார். இவர்தம் கணவர், திரு. அ. தங்கவேல், B.A. அவர்கள், கோவை பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்தார். இப்போது இருவரும் வேலையை விட்டுவிட்டுத் தம் சொந்த ஊரான சேலம் கருப்பூரில் இருந்து வருகிறார்கள். திரு. தங்கவேல், கருப்பூர் நகரத் தி.மு.க. தலை வராகத் தொண்டாற்றிவருகிறார். இவர்கட்குச் செல்வக்குமார், மோகன், ஆனந்து என்னும் ஆண்மக்கள் மூவர் உள்ளனர்.

இளைய மகள் சமரசம் B.A. B.T. அவர்கள், பவானி அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஆகப் பணி யாற்றி வருகிறார். இவர்தம் கணவர், திரு. சி. கந்தசாமி, B.A., B.T. அவர்கள், பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையினரால் நடத்தப்படும் சக்தி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்துவருகிறார். இவர்கட்கு அமுது என்னும் மகளும், எழில் என்னும் மகனும் உள்ளனர். இவர்கள் புலவருக்கு உதவியாகப் புலவர் வீட்டிலேயே இருந்துவருகிறார்கள். புலவர் குழந்தை அவர்கள், மக்கள், மருமக்கள், பேர்த்தி பேரர்களுடன் இன்புற்று அமைதியுடன் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.

மூலம் : இராவண காவியம் (குழந்தை வரலாறு)

Related Post

காளமேகப் புலவர் 

Posted by - July 19, 2022 0
தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக…

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Posted by - July 12, 2021 0
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு இந்த பதிவில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு (Erode Venkatappa Ramasamy) சுருக்கமாக வருடம் வாரியாக பார்க்கலாம். பெரியார் பிறப்பு…

சுஜாதா எழுத்தாளர்

Posted by - January 12, 2021 0
சுஜாதா சுஜாதா (sujatha) (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின்…

அறிஞர் ச.வே. சுப்பிரமணியன்

Posted by - March 11, 2021 0
அறிஞர் ச.வே. சுப்பிரமணியன் ச. வே. சுப்பிரமணியன் (திசம்பர் 31, 1929 – சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத்…

சுப்பிரமணிய பாரதியார் வரலாறு

Posted by - October 26, 2020 0
பாரதியார் வரலாறு | இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்