கண்ணன் பாட்டு பாரதியார்

கண்ணன் பாட்டு பாரதியார் eBook Free Download

[wpsm_member ]

[/wpsm_member]

Description

கண்ணன் பாட்டு பாரதியார்

கண்ணன் பாட்டு பாரதியார் பொருளடக்கம்

 1. கண்ணன் என் தோழன்
 2. கண்ணன் – என் தாய்
 3. கண்ணன் – என் தந்தை
 4. கண்ணன் – என் சேவகன்
 5. கண்ணன் – என் அரசன்
 6. கண்ணன் – என் சீடன்
 7. கண்ணன் – எனது சற்குரு
 8. கண்ணன் – என் குழந்தை
 9. கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
 10. கண்ணன் – என் காதலன்
 11. கண்ணன் – என் காதலன் – 2
 12. கண்ணன் – என் – காதலன் -3
 13. கண்ணன் – என் காதலன் -4
 14. கண்ணன் – என் காதலன் – 5
 15. கண்ணன் – என் காந்தன்
 16. கண்ணம்மா – என் காதலி – 1
 17. கண்ணம்மா – என் காதலி – 2
 18. கண்ணம்மா – என் காதலி – 3
 19. கண்ணம்மா – என் காதலி – 4
 20. கண்ணம்மா – என் காதலி – 5
 21. கண்ணம்மா – என் காதலி – 6
 22. கண்ணன் – என் ஆண்டான்
 23. கண்ணம்மா – எனது குலதெய்வம்

கண்ணன் என் தோழன்

புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம்
வத்ஸல ரசம்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவ தற்கே – இனி
என்ன வழியென்று கேட்கில், உபாயம்
இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்
கண்ணன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு
உன்னை யடைந்தேன் என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான். … 1

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்; – என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; – நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான். … 2

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினி லேசொல்லுவான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வருவான்;
மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன். … 3

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்; – எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; – என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ? … 4

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான்; – சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும் – பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான். … 5

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
சிரித்துக் களித்திடு வான்; – நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான்; – அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடு வான்; – கண்ணன்
தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்
சகத்தினில் வாழ்வதி லேன். … 6

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்; – சுடர்த்
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான். … 7

உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; – அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்; – நல்ல
பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான்; – மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
தழலின் குணமுடை யான். … 8

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிகத் தானுடை யான்; – கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு
சூதறி யாதுசொல் வான்; – என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடு வான்; – கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான். … 9

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத் தில் – பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண்; – உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்; – நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன். … 10

 

கண்ணன் – என் தாய்

(நொண்டிச் சிந்து)

உண்ண உண்ணத் தெவிட்டாதே – அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே – என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், – என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே – பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். … 1

இன்பமெனச் சிலகதைகள் – எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் – கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்

என்பருவம் என்றன் விருப்பம் – எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; – அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். … 2

விந்தைவிந்தை யாக எனக்கே – பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை – அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் – பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு – அதன்
முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. … 3

வானத்து மீன்க ளுண்டு – சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே – மன்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு – எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் – ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண். … 4

நல்லநல்ல நதிகளுண்டு – அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் – விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; – அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். … 5

சோலைகள் காவினங் கள் – அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் – அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற – அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். … 6

தின்றிடப் பண்டங்களும் – செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே – அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக்
கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே – இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். … 7

இறகுடைப் பறவைக ளும் – நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே – எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் – எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. … 8

சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே – நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் – மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் – இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; … 9

வேண்டிய கொடுத்திடு வாள்; – அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; – அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் – அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். … 10

சுப்பாராமணிய பாரதியார் வாழ்க்கை பற்றி இங்கு படிக்க..

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண்ணன் பாட்டு பாரதியார்”

Your email address will not be published. Required fields are marked *