Description
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.
இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.
1 | குறிஞ்சி | 1 | தொடக்கம் | 31 | வரை | 31 | பாடல்கள் |
2 | நெய்தல் | 32 | தொடக்கம் | 62 | வரை | 31 | பாடல்கள் |
3 | பாலை | 63 | தொடக்கம் | 92 | வரை | 30 | பாடல்கள் |
4 | முல்லை | 93 | தொடக்கம் | 123 | வரை | 31 | பாடல்கள் |
5 | மருதம் | 124 | தொடக்கம் | 153 | வரை | 30 | பாடல்கள் |
எடுத்துக்காட்டு பாடல்
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு.
திணைமாலை நூற்றைம்பது குறிப்பு
கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் 6 . அவற்றுள் இரண்டு நூல்கள் ‘திணை‘ என்றும், வேறு இரண்டு ‘ஐந்திணை‘ என்றும் பெயர் பெறுவன. இவற்றை ‘நால் ஐந்திணை’ என்றும் குறிப்பர். இந் நூல்கள் நற்றிணை நானூறு, அகநானூறு என வரும் சங்க நூல்களை ஒப்ப, பாடல்-தொகை அளவையும் உடன் கூட்டி வழங்கப் பெறுகின்றன.
திணை என்பது நிலம், ஒழுக்கம் முதலிய பலபொருள் படுவதோர் சொல். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் பற்றி, அவ்வந்நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன. எனவே, இவற்றைத் ‘திணை’ என்றும், ‘ஐந்திணை’ என்றும் குறித்துள்ளனர்.
ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் ‘திணைமாலை’ என்றும், பாடல் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும், இந் நூல்பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம், என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. நூற்றைம்பது என்னும் எண்வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறை. அங்ஙனமாகவும், குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. இதனால், இந் நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மிகுதியான மூன்று பாடல்களுக்கும் பழைய உரை உள்ளது. எனவே, உரைகாரர் காலத்திற்கு முன்பே இப் பாடல்கள் நூலகத்து உள்ளமை தெளிவு. ஏனைய திணைமொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது என்னும் நூல்கள் எல்லாம் குறித்தபாடல் அளவுக்கு விஞ்சாமல் அமைவுற்றிருக்க, இந் நூலில் மட்டும் மூன்று பாடல்கள் மிகுதியாகக் காணப்பெறுதல் ஐயுறத் தக்கது ஒன்றே.
இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரே. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பதும், பிறவும் ஏலாதி முகவுரையில் காணலாகும்.
‘கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாள்’ (4)என்று கூறுதலின், இவர் பாண்டியனிடத்தும், அவன் கோநகரமாகிய கூடலிடத்தும் ஈடுபாடுள்ளவர் என்று கருதலாம். கணிமேதாவியார் என்ற பெயருக்கு ஏற்ப, நல்ல நாள் நோக்கி வினைபுரிதலை இந் நூலுள் பல இடங்களில் (46, 52, 54) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.
இவர் கடலுக்கும் கானல் சேர் வெண் மணலுக்கும் மாயவனையும் பலராமனையும் உவமை கூறுவர்.
மாயவனும் தம்முனும் போலே, மறிகடலும்
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ? (58)
என இவர் கூறிய கருத்தை ஒத்த வருணனைகள் பிற நூல்களிலும் காணப்படுகின்றன. இருளுக்கும் நிலவுக்கும் மாயவனையும் பலராமனையும் இந் நூலகத்து வேறோர் இடத்தும் உவமைகாட்டுதல் (96, 97) காணலாம்.
இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்:
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் (123)
என்ற கருத்து, ‘செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே’ (7: 35 : 4) என்னும் சுந்தரர்தேவாரப் பகுதியோடு ஒத்துள்ளது.
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் ; கண்டாளாம்,
தண்சுடர் அன்னாளைத் தான் (89)
என்ற இந் நூற் கருத்தை அடியொற்றியே,
ஆண்டான் அரு வரை ஆளியன்னானைக் கண்டேன்: அயலே
தூண்டா விளக்கு அனையாய்! என்னையோ, அன்னை சொல்லியதே?
என்னும் திருக்கோவையார்ச் செய்யுட்பகுதி (244) அமைந்துள்ளது.
எண்ணாது, சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார் (47)
என்னும் திணைமாலைக் கருத்தும்,
வண்டு அலர் கோதை வாட் கண் வனமுலை வளர்த்த தாயர்
கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறுரீஇக் காட்டியிட்டார்
என்னும் சீவகசிந்தாமணிக் (இலக்கணை. 80) கருத்தும் ஒப்புமையுடையன. இரு நூல்களிலும், ‘கயிறுரீஇவிடுதல்’ என்னும் மரபுத் தொடர் பயின்று வருதலும் நோக்கத்தக்கது. இங்ஙனமாக, இடைக்கால நூல்களோடு ஒத்த பகுதிகள் சிலசில காணப் பெறுதலின், இதுவும் இடைக்காலத்து எழுந்த நூல் என்றே கொள்ளலாம்.
திருக்குறளில் பயின்றுள்ள செம்பாகம் (குறள் 1092:திணைமாலை 9), ஒருவந்தம் (குறள் 563, 593 : திணைமாலை 103) என்ற சொல் வழக்குகள் இந் நூலிலும் உள்ளன.
நிரை திமில் களிறு ஆக, திரை ஒலி பறை ஆக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படை ஆக,
அரைசு கால்கிளர்ந்தன்ன உரவுநீர்ச் சேர்ப்ப! கேள்:
என்னும் கலித்தொகையின் (149) தரவுப் பகுதியை அடியொற்றி, இந் நூலின் 52,53-ஆம் பாடல்கள் அமைந்துள்ளன. அன்றியும், கலித்தொகையில் வரும் வயந்தகம் (கலி. 79: திணைமாலை 128), வந்தையா (கலி. 63: திணைமாலை 138) என்னும் சொற்கள் இரு நூல்களிலும் உள்ளன. இவற்றால் திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், கலித்தொகை நூல்களுக்குப் பின்னர்த் தோன்றியது என ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்றனர்.
மேலும், காம வேளின் ஐந்து அம்புகளைப் பற்றிய குறிப்பு ஒரு பாடலில் உள்ளது (8). இந் நூலிற் காணும் ‘தாரா’ (திணைமாலை 139: கைந்நிலை 40) என்னும் பறவை பழந் தமிழ் நூல்களில் காணப்பெறாதது. ‘விருத்தி’ என்னும் சொல் சாசனங்களில் வழங்கும் பொருளில் இந் நூலில் பயின்றுள்ளது (121). ‘ஆடா அடகு’ (4) ‘தீத் தீண்டு கையார்’ (5) என்னும் குறிப்பு மொழிகளும் இந் நூலுள் இடம் பெற்றுள்ளன. தவிரவும் அளகம் (2), வகுளம் (24), பாலிகை, சாலிகை (51), சுவர்க்கம் (62), அலங்காரம் (127) நாய்கர் (134), ஆட்டை (141), சிரம் (144) என வரும் பிற்காலச் சொற்களும் வடசொற்களும் இதில் பயின்று வந்துள்ளன. இவைகள் எல்லாம், இந் நூல் சங்க காலத்திற்குப் பிற்பட்டு, தேவாரம், சிந்தாமணி முதலிய இடைக் கால நூல்களின் காலத்தை ஒட்டித் தோன்றியதே என்பதைப் புலப்படுத்துவனவாம்.
இந் நூலைக் குறித்துப் பாடப்பெற்ற ‘முனிந்தார் முனிவு ஒழிய’ என்னும் சிறப்புப்பாயிரச் செய்யுளை நூல் இறுதியில் காணலாம். இப்பாடல் அகப்பொருளை வெறுத்த சிலர் விரும்பி ஏற்றுக் கற்றுப் புலமை எய்தும் வண்ணம் ஆசிரியர் இந் நூலை ஆக்கினார் என்பதைத் தெரிவிக்கிறது. பிற்காலத்து எழுந்த அகப்பொருள் நூல்களுள் இது சிறப்புவாய்ந்தது. சங்க நூல்களில் விரிவாகச் சிறப்பித்துப் பாடப் பெறுகின்ற அகப்பொருள் நிகழ்ச்சிகளை எல்லாம் சுருக்கமாய் எளிய வெண்பாக்களில் இந் நூல் அமைத்துள்ளது. ஐந்திணை இயற்கைக் காட்சிகளை எடுத்துக் கூறுவதில் இவ் ஆசிரியர் வல்லவர்.
இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தம் உரையுள் இந்நூற் பாடல்களை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந் நூலின் 127-ஆம் பாடல் வரையே பழைய உரை உள்ளது. அதற்கு மேலுள்ள பகுதிக்கு உரை கிடைக்கவில்லை. உரையுள்ள பகுதி வரையில் எல்லாப் பாடல்களுக்கும் பழைய துறைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
Reviews
There are no reviews yet.