Description
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிகடுகம் பாடல்கள்
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்
முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.
திரிகடுகம் குறிப்பு
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும், பெயர் அமைந்துள்ள வகையிலும், நீதிப் பொருள்களைப் பாடல்களில் வகுத்துள்ள முறையிலும், பெரிதும் ஒப்புமை உடையன. இம்மூன்றும் நோய் நீக்கி உடல் நலம் பேணும் மருந்துச்சரக்கின் பெயர்களாகும். இந் நூல்கள் செய்யுள்தோறும் முறையே மூன்றும், ஐந்தும், ஆறும் ஆகிய பொருள்களை அமைத்துக்கொண்டுள்ளன.
திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளையும் குறிக்கும்.
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி
என்பது திவாகரம். வடமொழியிலுள்ள சுச்ருதம், அஷ்டாங்கஹ்ருதயம் என்னும் மருத்துவ நூல்களிலும் திரிகடுகத்தின் தன்மை விளக்கப்பட்டுள்ளது. மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைஒத்து, இந் நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இந்த ஒப்புமைகருதியே இந் நூல் திரிகடுகம் என்னும் பெயர் பெற்றுள்ளது. இக்கருத்தை,
உலகில், கடுகம் உடலின் நோய்மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும்-நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.
என வரும் பாயிரச் செய்யுளும் உணர்த்துகின்றது.
இந் நூலில் ஒவ்வொரு பாடலிலும்மும் மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக்கூறும் முறை போற்றுதற்கு உரித்து. பொதுக் கருத்துகள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன. மூன்றாம் அடியின்ஈற்றில், இம் மூன்றும், இவை மூன்றும் (66, 67, 80, 86, 93,95), இம் மூவர், இவர் மூவர் (51, 79, 96) என மூவர் (13) என்னும் எண்ணுத்தொகைச் சொற்களில் ஒன்றை அமைத்துள்ளார். இவற்றுள் இம் மூன்றும், இம் மூவர் என்பனவே மிகுதியாகப் பயின்றுள்ளன. பெரும்பான்மையான பாடல்களில் மூன்று பொருள்களும் எண்ணும்மைகளால் இணைக்கப்பெற்றுள்ளன; ஒரு சிலவற்றில் உம்மை இன்றிக் கோக்கப்பட்டுள்ளன; இன்னும் சிலவற்றில் தனித்தனி வாக்கியங்களாக உம்மை இன்றி அமைந்துள்ளன. எவ்வகையில் மூன்று பொருள்களைக்கோத்த போதிலும், இறுதியில் தொகைச் சொல்லுடனேயேபொதுக் கருத்து சுட்டப் பெறுகிறது. இங்ஙனமாக இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது ஒருதனிச் சிறப்பாகும். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை என்னும் நூல்களின் கருத்துகளை இந் நூல் பின்பற்றியுள்ளது. இந் நூற்கருத்துகளை இனியவை நாற்பது பெரிதும் தழுவியுள்ளது. இதனால், இந்த இரு நூல்களுக்கும் ஒப்புமை மிகுதியாகக் காணப்படுகிறது. நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் பயின்ற பழமொழிகள் சிலவற்றையும் இந் நூல் எடுத்தாண்டுள்ளது.’உமிக் குற்றுக் கைவருந்துவார்’ (28), ‘தம் நெய்யில்தாம் பொரியுமாறு’ (65), ‘துஞ்சு ஊமன் கண்ட கனா’ (7), ‘தூண்டிலினுள்பொதிந்த தேரை’ (24), ‘தூற்றின்கண் தூவிய வித்து’ (80)என வருவன பழமொழிகளாகும். இந் நூலில் காணும் சொல்லாட்சிகளும் கருத்துக் கோவைகளும் நல்ல கட்டுக்கோப்புடையனவாய் உள்ளன.
திரிகடுகம் செய்தவர் நல்லாதனார்.’ஆதனார்’ என்பதுவே பெயர். ‘ஆதனும் பூதனும்’ என்ற சூத்திரத்தில் தொல்காப்பியரும் இப் பெயரைக் குறித்துள்ளார் (எழுத்.புள்ளி. 53). நல்லச்சுதனார், நல்லழிசியார், நல்லுருத்திரனார் என்னும் புலவர் பெயர்களிற்போல, ‘நல்’ என்பது அடைமொழியாகும். கடவுள் வாழ்த்துச் செய்யுள் இவர்வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதைப் புலப்படுத்துகின்றது. இவரைக் குறித்த சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றினால், இவர் ‘திருத்து’ என்னும் ஊரினர் என்பது தெரியவருகிறது.’திருத்து’ என்னும் ஊர் திருநெல்வேலித் தாலுக்காவில் உள்ளது. மேலும், இவரைச் ‘செரு அடுதோள் நல்லாதன்’ என்றும் பாயிரப் பாடல் குறிப்பதால், போர்த் திறமையிலும் இவர் சிறந்து விளங்கியவராதல் வேண்டும்.
இந் நூலுள் கடவுள் வாழ்த்து நீங்கலாகநூறு செய்யுட்கள் உள்ளன. ‘திரிகடுகம் ஐ-இருபது ஆகும்’என்று பிரபந்த தீபிகையும் தொன்றுதொட்டு வரும்செய்யுள் தொகையைக் குறிக்கின்றது. புறத்திரட்டில்வரும் ‘பொருள் இல் ஒருவற்கு இளமையும்’ (1228) என்ற பாடல்திரிகடுகப் பிரதிகளில் காணப்பெறவில்லை. ‘கரப்பவர்நீர்மைத்தாய்’ (1222) என்று புறத்திரட்டில் காணும்செய்யுள் பிரதிகள் சிலவற்றில் காணப்பெற்றாலும், நூறு என்னும் பேரெல்லையானும். உரைப் பிரதிகளில்இச் செய்யுள் இன்மையானும், இதனையும் நூலகத்துத்தரவில்லை. புறத்திரட்டில் கண்ட இந்த இரண்டு செய்யுட்களும்நூல் இறுதியில் மிகைப் பாடல்கள் என்னும் தலைப்பில் அமைக்கப் பெற்றுள்ளன. திரிகடுகத்தின் அமைப்பைஒத்து இந்நூற் பிரதிகள் ஒரு சிலவற்றில் சேர்த்துஎழுதப் பெற்ற வேறு இரண்டு பாடல்களும் மிகைப்பாடல் பகுதியில் உடன் இணைக்கப் பெற்றுள்ளன. இதனை அடுத்து,இந் நூலைப் பற்றிய பாயிரச் செய்யுட்கள் இரண்டு அமைக்கப் பெற்றுள்ளன.
இந் நூல் முழுமைக்கும் பழைய உரை அமைந்துள்ளது. இது நூற்பொருளைத் தெளிவாக விளக்கி எழுதப் பெற்ற பொழிப்புரை ஆகும்.
Varadarajan –
excellent if with meaning it will be good