Description
நீங்களும் நோயில்லாமல் வாழலாம் Read Online
நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
உள்ளே…
முன்னுரை…….
- இனிப்பும் நினைப்பும்…
- நினைப்பும் தவிப்பும்…
- தவிப்பும் இழப்பும்…
- இழப்பும் பழிப்பும்…
- பழிப்பும் துடிப்பும்…
- நடிப்பும் முடிப்பும்…
- புண்ணாக்குப் பையன்….
- வதந்திக்கோர் வனிதாமணி…….
- இருப்பதும் சிரிப்பதும்…
- மெய்யும் நோயும்…
- எதிரும் புதிரும்…
- புதிரும் பதிலும்…
- பண்பும் பழக்கங்களும்…
- உலா வரும் உடலும் உலகமும்…
- உணவும் குணமும்…
- உணவும் நீரும்…
- உடலும் தூய்மையும்…
- ஓய்வும் உறக்கமும்…
- உடலும் பயிற்சியும்…
நீங்களும் நோயில்லாமல் வாழலாம்: முன்னுரை
வளைந்த தடியின் நிழல் வளைந்துதான் தெரியும். எந்தக் காலத்திலும் அது நிமிர்ந்து நேராக இருக்கவே இருக்காது.
நலிந்த உடலில் தோன்றும் எல்லாமே நலிந்துதான் கிளம்பும். வலிமையாக ஒரு போதும் வராது. வளராது.
உடைந்த மணியின் ஓசை ஒய்யாரமாகக் கேட்காது. கேட்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவது போல்தான் கிளம்பும்.
அது போலவே, நோயால் மெலிந்த உடலிலும், நோந்த மனத்தின் ஓலம்தான் கேட்குமே தவிர, வீராவேசமா வரும்.
ஆகவேதான் நலியாத உடலும், நோயால் மெலியாத தேகமும் ஒருவருக்கு வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர்.
வருவதற்கு முன்னர் காத்துக் கொள்கின்ற முன்னறிவுதான் மனிதகுலத்திற்கு மாபெரும் சக்தியாக விளங்குகிறது. அத்தகைய முன்னறிவுள்ள மக்கள் அந்த அற்புத சக்தியின் ஆற்றலால், நோய்கள் வராமல் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும்.
இந்த விருப்பத்திற்கு ஓர் உருவம் காண்கின்ற வகையில்தான். நீங்களும் நோயில்லாமல் வாழலாம் என்ற இந்த நூல் உருவாக்கப் பட்டிருக்கிறது.
எல்லாம் விதியின் செயல் என்று எல்லாவற்றிலுமே இருந்துவிட முடியாது. முடிந்தவரை முயற்சி செய்து உடலை நன்றாகக் காத்துக் கொண்டோமானால், வாழ்கின்ற காலம்வரை இன்பமாக வாழலாம்.
எத்தனை ஆண்டுகள் ஒருவர் உயிருடன் வாழ்ந்தார் என்பது பெருமையல்ல. எப்படி அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம்.
ஓடுகின்ற ஆறுதான் உதவி செய்தவாறு பயணம் செய்யும். ஓடி ஆடி பணியாற்றுகின்ற ஒருவரால்தான் பிறர்க்கும் நன்மை செய்து, தானும் நிம்மதியாக வாழ முடியும்.
அந்த அடிப்படையில்தான், இந்த நூலில் சில முக்கியமான கருத்துக்களைத் தொகுத்துக் கூறியிருக்கிறேன்.
இளமையிலே சோம்பேறியாக இருப்பவன். வயதானபின் பிச்சைக்காரனாகத் திரிவான் என்பது ஒரு பழமொழி.
இளமையிலேயே உடலை தூய்மையாக வைத்துக் காக்கத் தெரியாத ஒருவன். வயதான பின் நோயாளியாகத் தான் வாழ முடியும். அதற்காகத்தான், நோய் வராமல் காத்துக் கொள்பவர்களை புத்திசாலிகள் என்று அழைக்கிறோம்.
வருகிறது அபாயம் என்று உணர்ந்து கொள்வது பாதி அபாயத்தைத் தடுத்து நிறுத்தியதற்குச் சமம் என்பார்கள். நீங்கள் நோயில்லாமல் வாழலாம் என்று நினைத்து விட்டாலே, அது பாதி காரியத்தைத் தொடங்கியதாகவே அர்த்தமாகும்.
விரும்புகின்ற மனதுக்குப் பல வழிகளை, பல உபாயங்களை எளிதாகக் காட்டிவிடத் தெரியும். ஆராய்ச்சியுள்ளவனாக மாற்றுகின்ற அந்த மனம். பல அரிய சந்தர்ப்பங்களை உண்டு பண்ணவும் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளவும் கற்றுத் தந்து விடும்.
இன்று நீங்கள் விருப்பம் கொண்டிருக்கிறீர்கள், குறைவற்ற செல்வராக, நோயற்ற மனிதராக வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள்.
அதற்கான வழி வகைகளை மட்டும் கூறியிருக்கிறோம். நோய் வராததற்கு முன்னர் எப்படியிருந்தால் நல்லது என்பதை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறோம். நோய் வந்து விட்டால், அது வைத்தியரின் வேலையாகி விடுகிறது.
நல்ல வாழ்க்கையே சிறந்த மதம் என்கிறார் ஓர் அறிஞர். நல்ல வாழ்க்கை என்பது நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் கொண்டதாகும், ஆகவே, நல்ல வாழ்க்கையை வாழ, வழி காட்டும் முயற்சியில் இந்நூலை எழுதியிருக்கிறோம். படிப்பவர்கள் பயன் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
உடற்பயிற்சி செய்யத்தான் வேண்டுமா என்றால். உடல் உழைக்கத்தான் பிறந்தது. ஓய்ந்து கிடந்து உறங்கி மயங்கிக் கிடக்க அல்ல. உழைப்பும் ஓய்வுமே உல்லாசத்தைக் கொடுக்கும். உறங்கி ஓய்ந்து கிடப்பது உடலையே கெடுக்கும்.
உடலைக் கெடுப்பதும் கெடுத்துக் கொள்வதும் பண்புள்ளோர்க்கு அழகல்ல, இனி நீங்கள் படிக்கத் தொடங்கலாம், பழக்கத்திற்கும் கொண்டு வரலாம். நல்ல தொடக்கம் நன்மையையே இறுதிவரை அளிக்கும்.
உடல் நல நூல் வரிசையில் இதுவும் ஒரு நூலாகும். உடற்பயிற்சி என்று செய்ய விரும்பும் பொழுது, எனது உடற்பயிற்சி நூல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
ஏற்கனவே விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரை நூலாக ஆக்கித் தருமாறு பல அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது.
சிறந்த முறையில் அச்சிட்டிருக்கின்றார்கள் கிரேஸ் பிரிண்டர்ஸார். நல்ல முறையில் நூல் வெளிவர உதவிய R. ஆடம் சாக்ரட்டீசின் பணி பாராட்டுக்குரியது.
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, மேலும் ஒரு உடல் நலத்துறை நூலினைத் தந்திருக்கிறேன். அன்புடன் ஏற்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.