பழமொழி நானூறு மூலமும் உரையும்

பழமொழி நானூறு eBook

  • பழமொழி நானூறு (புலியூர்க் கேசிகன் உரை) PDF Download

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

பழமொழி நானூறு

நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல்பழமொழி. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப்பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம். இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் இதற்கு அமைவதாயிற்று. பாடல் தொகையைக் கொண்டு, ‘பழமொழி நானூறு’ என்றும் இது குறிக்கப் பெறும். இந்நூலகத்துப் பண்டைப் பழமொழிகளைத் தேர்ந்து எடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும்-கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை

என வரும் தற்சிறப்புப் பாயிரத்தால் அறிகின்றோம்.

பழமொழிகள் எனப்படுபவை புதியனவாக அமைக்கப்படாது, வழிவழியாக மக்களிடையே வழங்கிவரும் உலக வசனங்களாகும். இவை ஒரு கருத்தைத் தெளிவாகவும், சுருக்கமாகவும், கேட்போர் உளம் கொளும் வகையிலும் தெரிவிக்கின்றன. இவை பொது மக்களின் அனுபவம் வாயிலாக, அவர்களது உள்ளுணர்ச்சியினின்று வெளிப்படுவன ஆகும். எனவே, இவை கருதிய பயனை விளைக்கும் ஆற்றல்வாய்ந்து விளங்குகின்றன. ‘சுருக்கம், தெளிவு முதலியன விளங்க அமைந்து, கருதின பொருளை முடித்தற்கு வரும், ஏதுவைக் குறித்த தொடர்கள் முதுமொழி எனப்படும்’ என்பது தொல்காப்பியத்தில் காண்கிறது. தொல்காப்பியர்கூறிய,

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
ஒண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்,
ஏது நுதலிய முதுமொழி என்ப

என வரும் முதுமொழி விளக்கம் பற்றிய இச் சூத்திரஉரையில், நச்சினார்க்கினியர், ‘பழமொழி இவ்விலக்கணம்பற்றிச் செய்தது’ என்று குறித்துள்ளார்.

சங்கப் பாடல்களிலும் பிற்காலப்பாடல்களிலும் புலவர்கள் சிற்சில இடங்களில், அக்காலத்துவழங்கிய பழமொழிகளை ஆற்றலுடன் சந்தர்ப்பத்திற்கு இயைய எடுத்தாண்டிருக்கிறார்கள்.

அம்ம வாழி தோழி! ‘இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்’என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

(அகம். 101)

என வரும் அகப்பாடலில் பழமொழிஒன்றை எடுத்துக் காட்டியதுடன், ‘தொன்றுபடு பழமொழி’ என, வழிவழியாக வழங்கிவருகின்ற இயல்பையும் ஆசிரியர் புலப்படுத்தியிருத்தல் காணலாம். ஆனால், இப்பழமொழிகளின் அருமை பெருமைகளை உணர்ந்து தனிப்பட நூல் செய்தபெருமை புலவர் முன்றுறை அரையனார்க்கு உரியதாகும்.

முன்றுறை அரையனார்

முன்றுறை அரையனார் என்ற பெயர் இயற்பெயர் என்று எண்ணுதற்கு இடமில்லை. முன்றுறை என்னும் இடத்தில் அரசு புரிந்த அரசர் என்பதே இதன் பொருளாகும்.’முன்றுறை மன்னவன்’ என்பது தற்சிறப்புப் பாயிரத்துள் காண்கிறது. ஒருகால், முன்றுறையில் வாழ்ந்த ‘அரையர்’என்னும் சிறப்புப் பெயர் பெற்ற ஒரு தலைவராக இவர்இருத்தலும் கூடும். அன்றியும், அரையர் என்பது சேனாவரையர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர் பெயரிலும் காணப்பெறுதல் இங்குச் சிந்திக்கத் தக்கது.மேலும், ‘அரையர்’ என்பது ஒரு மரபுப் பெயராகவோகுடிப் பெயராகவோ இருத்தலும் கூடும். அரையர் குடியில்புலமையில் சிறந்து விளங்கிய இவரது இயற்பெயரைவிடுத்து, அக்குடிப்பெயரால் வழங்கிவந்தனரோ என்று ஐயுறவு கொள்ளவும் இடமுண்டு. ‘முன்றுறை, எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழகத்தில் கொற்கைமுன்றுறை, காவிரி முன்றுறை திருமருத முன்றுறை, கழார்முன்றுறை என்னும் இடங்கள் இருந்தனவாகப் பண்டைஇலக்கியம் வாயிலாக அறிகிறோம். இவற்றைப்போலவே பழமொழி ஆசிரியர் வாழ்ந்த ஊரும் நீர்த்துறைச்சிறப்பு வாய்ந்த ஓர் இடமாக இருத்தல் கூடும்.அடைமொழி இன்றி ‘முன்றுறை’ என இவ்வூர் வழங்கப்பெறுதலினால் இது அக் காலத்தில் மிக்க பெருஞ் சிறப்புடன் விளங்கியிருத்தல் வேண்டும். இவர் சமண சமயத்தினர் என்பது தற் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும்.

இந்நூல், முக்கியமாக நாலடியாரிலும், திருக்குறள் முதலிய கீழ்க்கணக்கு நூல்களிலும் வந்துள்ளபல கருத்துகளைச் சிற்சில இடங்களில் அடியொற்றிச்செல்லுகிறது. தூங்கு எயில் எறிந்த சோழன், கரிகாலன், பாரி, பேகன், முதலியோரைப் பற்றிய முற்கால நிகழ்ச்சிகளை எடுத்தாளுதலோடு, பொற்கைப்பாண்டியன், மனுநீதிச்சோழன் முதலியோரைப் பற்றிய பிற்கால வரலாறுகளையும் பழமொழி ஆசிரியர் தம் நூலுள் சுட்டியுள்ளார். இவர்தமது பாடல் ஒன்றில் (143) குறித்துள்ள ‘பிரம்பூரி’என்னும் நெல்வகை அப்பர் பாடலிலும் (4, 20, 7) காணப்பெறுகிறது. மரிசாதி (118), மன்றிவிடல் (286) என்று சாஸனங்களில் வழங்கும் சொற்கள் பழமொழிப் பாடல்களில் பயின்றுள்ளன. இவற்றால் பழமொழி நானூறு நாலடி நானூற்றிற்குப்பின்னர்த் தோன்றியது என்று கருதலாம்.

பழமொழி நானூற்றுப் பாடல்கள் பலவற்றில் காணும் ஒரு பொது இயல்பு கவனிக்கத் தக்கது. பழமொழி பாடலின் இறுதியில் வருகின்றது. முன் இரண்டு அடிகளில் அதற்கு உரிய விளக்கத்தைக் காணலாம். மூன்றாம் அடியில் பெரும்பாலும் ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலைத்தொடர்களுள் ஒன்று இடம் பெறுகிறது. ஆசிரியர் எடுத்துக்கூறும் முறையில் பழமொழியின் பொருளும், பாடலில்அவர் சுட்டும் அறநெறியும் நமக்கு நன்கு புலனாகின்றன.

விளித் தொடர்களில் ஆடூஉ முன்னிலைமிகுந்தும், மகடூஉ முன்னிலை மிகக் குறைந்தும் காணப்படுகின்றன.

ஆசிரியர், தாம் அவ்வப்போது ஆய்ந்து உணர்ந்த பொருள்களைப் பழமொழியோடு பொருத்திப்பாடி வந்திருக்க வேண்டும். இதனாலேதான், இந்நூற்பாடல்கள் எல்லாம் தனித்தனியே பொருள் முடிந்து நிற்கும் முத்தகச்செய்யுட்களாய் அமைந்து, தனித்தனிக் கருத்தை வெளியிடுகின்றன அன்றி, ஒன்றற்கு ஒன்று பொருள் தொடர்பு உடையதாக அமையவில்லை போலும்! பழமொழியின் பழைய உரையாசிரியரும்,’இருகயல் உண்கண்’ எனத் தொடங்கும் பாடலின் உரையில்(338) ‘இந்த நானூறும் முத்தகச் செய்யுள் ஆதலால், தனியேநின்று ஒரு பொருள் பயந்து முற்றுப்பெற்றன என அறிக’என்று எழுதிய குறிப்பும் மேற்குறித்த கருத்தை அரண்செய்வதாகும்.

நூலின் முதற்பாடல் பழமொழி ஏடுகளில் காணப்பெறவில்லை. ஆயினும், அதற்கு உரிய பழையஉரைப்பகுதி காணப்பெறுகின்றது. ச. ஆறுமுக நயினார்வெளியிட்ட மூலப் பதிப்பில், முதற்பாடலுக்குப் பழைய உரையே அச்சிடப் பெற்றிருக்கிறது. இவ் உரைக்குரியமூலச் செய்யுளை நன்னூலின் பழைய உரைகாரராகிய மயிலைநாதர் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்கு மேற்கோள் காட்டியிருப்பது தெரிந்து, டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாக வெளியிட்டனர்.அதன் பின்னரே, பழமொழியின் முதற்பாடல் பழமொழி அச்சு நூல்களில் இடம் பெறலாயிற்று.

மேற்குறித்த ச. ஆறுமுக நயினார் தாம் பழமொழி நூலைப் பிரதிகளில் உள்ளபடி அச்சுஇயற்றியவர் (1904). முதல் இருநூறு பாடல்களைப் பழையஉரையுடனும், தமது விளக்கக் குறிப்புகளுடனும் வெளியிட்டதிரு. நாராயண ஐயங்காரும் (1918, 1922) பிரதிகளில் காணும் வரிசை முறையையே பின்பற்றியிருக்கிறார். பழமொழிப் பாடல்களின் வரிசை முறையை மாற்றி முதல்முதல் அச்சு இயற்றியவர் சோடசாவதானம் சுப்பராயச்செட்டியார் (1874). இவர் நாலடியாரைப் போலப் பத்துப்பாடல்கள் கொண்ட 39 அதிகாரமாகக் கொண்டு, அதற்குத்தக்கபடி பாடல்களின் வரிசை முறையை மாற்றி அமைத்து, பால், இயல் பாகுபாடுகளும் செய்திருக்கிறார். பத்துவெண்பாக்கள் இவர் பதிப்பில் விடுபட்டுப்போயின.

பழைய உரையுடன் பழமொழி நூலை வெளியிட்டதுதி. செல்வக்கேசவராய முதலியாரும் (1916) வேறொருவகையாக இந்நூலைப் பாகுபாடு செய்து, சுப்பராயச் செட்டியாரைப் போன்றே பாடல்களின் வரிசை முறையையும் மாற்றிஅமைத்துள்ளார். நூலை ஐந்து பெரும்பிரிவுகளாகவும், 35சிறு பிரிவுகளாகவும் இவர் கொண்டுள்ளார். இச் சிறுபிரிவுகள் ஒரு வரையறை இன்றி, 4 பாடல்கள் முதல் 21பாடல்கள் வரையில் வெவ்வேறு அளவில் பாடல்களைப்பெற்றுள்ளன. முதலியார் அவர்கள் தமது பதிப்புரையில்,’ஓர் இனமான பொருள்களை ஒருவழி வைத்து வகைப்படுத்தாவிட்டால், இந்நூலைப் படிப்பது மாணாக்கர்க்கு இனிதுறாது என்றுகடவுள் வாழ்த்து நீங்கலாக முந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது செய்யுள்களையும் ஐந்து பெரும்பிரிவுகளாகவும், அவைகளில் ஒவ்வொன்றையும் ஏற்ற பெற்றி சிறியஉட்பிரிவுகளாகவும், பிரித்து வைத்தேன். இங்ஙனம் பிரிப்பதில் எல்லோரும் ஒருமனப்படார் என்பது உரைக்க வேண்டா’ என்று குறித்துள்ளார். இவர்கடவுள் வணக்கமாகக் குறிப்பிடும் செய்யுள் நூலின் முதற்செய்யுளாகப் பிரதிகளில் தெரிய வருகிறதேயன்றி, கடவுள் வணக்கம் என்று சுவடிகளில் குறிக்கப்பெறவில்லை.

நூலகத்துப் பயின்று வரும் பழமொழிகளில்பல, எதுகை மோனைகளுக்கு ஏற்ப மாறுதல்கள் பெற்றிருக்கின்றன. சிற்சில பழமொழிகளின் வடிவம் விளங்கவில்லை. இரண்டொரு பாடல்கள் பழமொழியைப் பெற்றுள்ளனவோ என்று ஐயுறும்படியாகவும் உள்ளன.

‘புறத்திரட்டு’ என்னும் தொகைநூலைத் திரட்டியவர், இந்நூலின் பொருட்சிறப்புக்கருதி, 319 பாடல்களைத் தம் நூலுள் தாம் வகுத்துக் கொண்டபொருளுக்கு இயைய அங்கங்கே கோத்திருக்கின்றார். இவர் காட்டிய செய்யுட்களில் மூன்று (புறத். 146, 1107,1139) பழமொழி நூற் பிரதிகளில் காணப்பெறவில்லை. இவற்றுள் ஒன்றின் அமைப்பு (146) சிறுபஞ்ச மூலச் செய்யுட்களை ஒத்துள்ளமையால், இது சிறுபஞ்ச மூலச் செய்யுளாகஇருத்தல் கூடும் என்று புறத்திரட்டு நூலின் பதிப்பாசிரியர் குறிப்பு எழுதியுள்ளார். இந்த மூன்று பாடல்களையும்,’மிகைப் பாடல்கள்’ என்னும் தலைப்பின் கீழ் நூல்இறுதியில் சேர்த்துள்ளோம்; அடுத்து, தற்சிறப்புப்பாயிரமாக உள்ள ஒரு செய்யுளையும் அமைத்துள்ளோம்.

இந் நூலுக்குச் சிறந்த முறையில் அமைந்த பழைய உரை ஒன்று உள்ளது. இது பொழிப்புரையாய் அமைந்துள்ளது. இதில் வரும் இரண்டொரு குறிப்புகளால், இதற்கு முற்பட்ட ஓர் உரையும் உண்டு என்பது தெரியவருகிறது. புறத்திரட்டில் காட்டப்பெற்றிருக்கும் பாடல்களின் மூலபாடத்திற்கும், பழமொழி நூற் பிரதிகளில் காணும் மூலபாடத்திற்கும் பற்பல இடங்களில் வேறுபாடு காணப்படுகிறது. புறத்திரட்டில் காணும் வேற்றுப் பாடங்கள் பல இடங்களில் பழைய உரைக்குப் பொருத்தமாயும், பொருட்சிறப்பு உள்ளனவாயும் காண்கின்றன.

Additional information

Authors Name

,

Reviews

There are no reviews yet.

Be the first to review “பழமொழி நானூறு மூலமும் உரையும்”

Your email address will not be published. Required fields are marked *