அகநானூறு மூலமும் உரையும்

அகநானூறு மூலமும் உரையும் PDF

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

 

Description

அகநானூறு

அகநானூறு (agananooru) சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல.

இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, ‘நெடுந்தொகை’ என்றும் கூறுவர்.

அகநானூறு நூலமைப்பு

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை

  • களிற்றியானை நிரை(1-120)
  • மணி மிடை பவளம் (121-300)
  • நித்திலக் கோவை (301-400)

என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

பாடியோர்

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர்[சான்று தேவை] எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

அகநானூற்றின் மூன்று பகுப்பு

அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை ‘நெடுந்தொகை அகவல்’ என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்.

பழம்பாடல்

நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5)

ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
களித்த மும்மதக் ‘களிற்றியானை நிரை’ (10)

மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு மரபின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15)

அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக்
கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையால்
கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20)

வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூருள்ளும்
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொப்மை சான்ற நன்மையோனே.

இது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.

களிற்றியானைநிரை

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை

301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றுத் தொகுப்பு

அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன

பாடல் 1 – பஃறொடை வெண்பா

வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.

இரண்டாம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்திதான் இந்தப் பாடலிலும் கூறப்பட்டுள்ளன. எனினும், இதில் திணையின் விளக்கங்கள் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன.
வெண்தேர் என்னும் கானல்காற்று ஓடுவது பாலை
தாமரை என்பது ஆகுபெயராய் அது பூத்திருக்கும் மருத நிலத்தைக் குறிக்கும்.

காமம் உண்டாக்கக் கூடிய முல்லைப்பூ பூத்திருக்கும் நிலம் முல்லை. இதுவும் ஆகுபெயர்.
வெறி என்பது மணத்தையும், வெறியாட்டத்தையும் குறிக்கும். இந்த இரண்டும் உள்ளது குறிஞ்சி.
குட்டத்தில்(உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல்

பாடல் 2 – வெண்பா

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) – பாலைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) – முல்லைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) – மருதத் திணை
பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) – நெய்தல் திணை
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) – குறிஞ்சித் திணை

பாடல் 3 – வெண்பா

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால் – மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்.

பாட்டு 2-ல் கூறப்பட்டுள்ள செய்தியே இந்தப் பாட்டிலும் வேறு வகையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றையெல்லாம் ‘செந்தமிழின் ஆறு(நெறி)‘ என்று குறிப்பிடுவது பிற மொழிகளில் இல்லாத தமிழ்நெறி இந்தத் திணைப் பாகுபாடு என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நெறி என்பது தமிழிலக்கிய நெறியாகும்.

அகப்பொருள்

பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். “உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்” எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலை பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தை கைக்கிளை என்றும் கூறுகின்றன.

அகநானூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்

அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.

அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும்

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க “குடவோலை முறை” பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை

“யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்”

என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. “மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்”- என்று விளக்கப்படுகிறது.

அகநானூறு சிறப்பு

பல புலவர்கள் பல திணைகளில் பாடிய பாடல்கள் ஒன்றோ பலவோ கொண்ட அகநூல்கள் மூன்று ஆகும். அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பனவாகும்.

இவற்றுள் அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.

  • 1. 3, 5, …………399 எனவரும் பாடல்கள் பாலைத்திணை -200
    (ஒற்றைப்படை எண்கள் அனைத்தும்)
  • 2. 8, 12, ………398 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணை– 80
    (பின்வருவன தவிர்த்த இரட்டைப்படை எண்கள் அனைத்தும்)
  • 4, 14, ……………..394 எனவரும் பாடல்கள் முல்லைத்திணை– 40
    (4இல் முடிவன)
  • 6, 16, ……………..396 எனவரும் பாடல்கள் மருதத்திணை – 40
    (6இல் முடிவன)
  • 10, 20,……………..400 எனவரும் பாடல்கள் நெய்தல்திணை – 40
    (0இல் முடிவன)

இதுவே அகநானூற்றில் காணப்படும் முறைவைப்பாகும். இச்சிறப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. இம்முறைவைப்பை,

ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறுதலைக் குறிஞ்சிக் கூற்று

என்ற பழம்பாடல் குறிப்பிடும்.

பதிப்பு வரலாறு

இந் நூல் உரையுடன் முதற் பகுதி ‘மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர்‘ என்றவர்களால் 1918ல் முதலில் பதிப்பிக்க பட்டது.ஆனால்,இப்பதிப்பின் முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் பார்க்கக் கிடைக்கவில்லை.

அகநானூற்றின் இரண்டாம் பகுதி 1920இல் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலைத் தவிர இப்பதிப்பும் பார்க்க கிடைக்கவில்லை.

இந்நூலின் முழு பதிப்பானது 1923இல் ‘அகநானூறு மூலமும் பழைய உரையும்” என்னும் பெயரில் ரா.இராகவையங்கார் பதிப்பிக்க, கம்பர் விலாசம் இராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடபட்டது.

Additional information

Authors Name

,

Reviews

There are no reviews yet.

Be the first to review “அகநானூறு மூலமும் உரையும்”

Your email address will not be published. Required fields are marked *