முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும்

முதுமொழிக்காஞ்சி eBook

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

முதுமொழிக்காஞ்சி

மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. ‘மூதுரை, முதுசொல்‘ என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குப் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது.

இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் “ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்” என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன.

முதுமொழிக்காஞ்சி வேறு பெயர்கள்

  • அறவுரைக்கோவை
  • ஆத்திச்சூடியின் முன்னோடி

18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

  1. சிறந்த பத்து
  2. அறிவுப் பத்து
  3. பழியாப் பத்து
  4. துவ்வாப் பத்து
  5. அல்ல பத்து
  6. இல்லைப் பத்து
  7. பொய்ப் பத்து
  8. எளிய பத்து
  9. நல்கூர்ந்த பத்து
  10. தண்டாப் பத்து

முதுமொழிக் காஞ்சி குறிப்பு

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. ‘மூதுரை, முதுசொல்‘ என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறித்தது என்பர் தொல்காப்பியர்.

மேலும்,

  • முதுசொல் (தொல். பொருள். 385),
  • முதுமொழி (தொல். பொருள். 467, 468, 480),
  • முதுமை (தொல்.பொருள். 77)

என்பவற்றிற்கு அவர்தரும் விளக்கத்திற்கும் ‘முதுமொழிக் காஞ்சி’ நூற் பொருளுக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. ஆயினும், தொல்காப்பியரது சூத்திரக் கருத்தையும் முதுகாஞ்சிபற்றி நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் எழுதியஉரைக் கருத்துகளையும் ஒட்டியே திவாகர நிகண்டில் முதுமொழிக் காஞ்சிக்கு விளக்கம் தரப்படுகிறது.

கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முதுமை ஆகும் முதுமொழிக்காஞ்சி

என்பது திவாகரம். இவ் விளக்கம் முதுமொழிக்காஞ்சி நூலுள் பொதிந்த பொருளைத் தெளிவாக உணர்த்தவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலையில் ‘முதுமொழிக் காஞ்சி’ என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, ‘மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி‘ என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,

பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று

என்று விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர்பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் ‘முதுமொழிக்காஞ்சி’ என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும்.

முதுமொழிக் காஞ்சித் துறை பற்றிப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன (18, 27, 28, 29,74). இந்நூலின் உரைகாரர் புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்பற்றியே துறைக்குறிப்பும் விளக்கமும் (18, 74,உரை) தந்துள்ளார். இவர் தரும் விளக்கமும் முதுமொழிக் காஞ்சியின் இயல்போடு பொருந்தும்.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்தநூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக் காஞ்சி என்பது அறிவுரைக் கோவை என்னும் பொருள் பயந்து நிற்கும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பாவில் ‘காஞ்சி’ என்னும் பெயரே காண்கிறது . இதில் குறித்த காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பதே சான்றோர் கொள்கை. ‘இன்னிலையகாஞ்சி’ என்று அடைமொழி கொடுத்து இப்பாடல் உரைப்பது, நூலின் தெளிவு முதலியன கருதிப் போலும்!

முதுமொழிக் காஞ்சி ஆசிரியர்

இந் நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்தஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். தொல்காப்பிய மரபியலில்,

ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.

என்ற சூத்திர உரையில் ‘அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன’ என வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்’ என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம். அரிசில் கிழார், ஆவூர் கிழார், காரி கிழார், கோவூர் கிழார், என்று இவ்வாறு கிழார் என்னும் சிறப்புடன் புலவர் பலர்சங்க நூல்களிலும் காணப்படுகின்றனர்.

சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்’ என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் புறநானூற்றில் தாம் எழுதிய பாடினோர் வரலாற்றில், ‘முதுமொழிக் காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் வேறு; இவர் வேறு’ என்று குறித்துள்ளார்.

தொண்டை மண்டல சதகமுடையார்.’….முதுமொழிக் காஞ்சி சொற்ற, வார் ஆர் புரிசைக் கிழவோனும் வாழ் தொண்டை மண்டலமே’ (66) என்று தொண்டைநாட்டுப் புரிசை என்னும் ஊரினராக இவரைக் கூறிக்கொள்ளுதல் உண்மையொடு பட்டதன்று.

இந் நூலுள் பத்துப் பத்துகளும் ஒவ்வொரு பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொருசெய்யுளின் முதல் அடியும், ‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்’ என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது. ஒரு பிரதியில் ‘முதுமொழிக் காஞ்சிப் பத்து’ என்றே பெயர் குறிக்கப் பெற்றிருந்தது. பத்துப் பத்துகளைக் கொண்டமையால், இவ்வாறுபெயர் குறித்தார் போலும்.

நூறதாம் சிறுபஞ்ச மூலம்; நூறு
சேர் முதுமொழிக் காஞ்சி.

எனவரும் பிரபந்த தீபிகைக் குறிப்பினால் முதுமொழிக் காஞ்சிநூறு எண்ணிக்கை உடையதாகக் கருதப் பெறுதலும் விளங்கும்.

முதுமொழிக்காஞ்சி மேற்கோள்

  • ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  • ஓதலிற் சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை
  • வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
  • மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
  • ஈரம் உடைமை ஈகையின் அறிப

இந் நூலை நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூல் முழுமைக்கும் தெளிவான பழைய பொழிப்புரை உள்ளது.

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும்”

Your email address will not be published. Required fields are marked *