Description
அடிமைகளும் தீண்டாதோரும்
பாபாசாகேப் அம்பேத்கர்
இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது.
இந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முரையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி விரிவாகக் கூறி முறைப்படுத்தியிருக்கிறார்கள். அடிமை முறை, இந்துக்களிடையே ஏதோ ஒரு பண்டைக் காலத்தில் இருந்த அமைப்பு அல்ல. இந்திய வரலாறு நெடுகிலும் 1843 வரை அடிமை முறை செயலில் இருந்து வந்தது. அந்த ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, சட்டத்தின் மூலம் அடிமை முறையை ஒழித்திராவிட்டால் இன்று வரையும் கூட அது நீடித்திருக்கும்.
அடுத்து, அடிமை முறை, தீண்டாமை ஆகியவற்றின் தன்மை பற்றிய எதிர்க்குற்றச் சாட்டுக்குப் பதில் கூருவதற்குத் தீண்டாமையையும், பண்டைக் கால ரோமிலும், நவீன கால அமெரிக்காவிலும் வழக்கத்திலிருந்த அடிமை முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை நடைமுறையில் எப்படி இருந்தது? இதைப்பற்றி நான் அறிந்த மிகச் சிறப்பான வர்ணனை திரு.பாரோ எழுதிய ‘ரோமப் பேரரசில் அடிமைமுறை’ என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. திரு.பாரோ கூறுகிறார் (ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 47-49.):
“இதுவரை, வீடுகளில் அடிமைகளை வைத்திருக்கும் முறையின் கொடூரமான அம்சங்கள் விவரிக்கப்பட்டன. மற்றுமொரு அம்சமும் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்ட வீடுகள் சாதாரணமாகக் காணப்படுபவை என்று இலக்கியம் காட்டுகிறது. ஆனால், இது விதிவிலக்கானது தான். பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; இவர்கள் பொதுவாக ரோம் நகரில் காணப்பட்டார்கள். இத்தாலியிலும் மாகாணங்களிலும் பெருமைக்காகக் காட்சி காட்டுவதற்கு அதிகத் தேவை இருக்கவில்லை.
மாளிகையின் பணியாளர்களில் பலர், நிலமும் விளைபொருள்களும் தொடர்பான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மேற்பார்வையாளருக்கும் அடிமைக்கும் இடையிலான பழமையான உறவுமுறை அங்கும் இருந்தது. ஆனால் பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பிளினி, தமது பணியாளர்களிடம் காட்டிய அன்பு பற்றி நாம் நன்றாக அறிவோம். தமது சொந்த நேர்மை உண்ர்ச்சியைக் காட்டுவதற்காகவோ, வருங்காலத் தலை முறையினர் தமது கடிதங்களைப் படிப்பார்கள் என்று நம்பி அவர்களிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர் தமது அடிமைகளின் உடல் நலக்குறைவு பற்றியும் அவர்களின் மரணம் பற்றியும் தமது மனவேதனையை வெளிப்படுத்தவில்லை.
(பிளினியின்) குடும்ப வீடு அடிமைகளின் குடியரசு. பிளினி தமது அடிமைகளை நடத்திய விதம் பற்றிக் கூறியிருப்பது சில சமயங்களில் பொதுவான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறியதாக உள்ளதால் அதைச் சான்றாக மதிக்க முடியாது என்று கருதப்படுகிறது. இவ்வாறு கருதுவது சரியல்ல.
பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும் உண்மையான இலக்கிய ஆர்வத்தினாலும் செல்வம் மிக்க குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இலக்கியத்திலும் கலைகளிலும் பயிற்சி பெற்ற அடிமைகளை வைத்திருந்தார்கள். கிளாவிஸிஸெஸ் சேபினஸ், தம்மிடம் ஹோமர், ஹெஸியாயிட், மற்றும் ஒன்பது கவிஞர்களின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கப் பயிற்சி பெற்ற பதினொரு அடிமைகளை வைத்திருந்ததாக ஸெனெடா கூறுகிறார். ‘புத்தக அலமாரி வைத்துக் கொள்வது செலவு குறைவாயிருக்கும்’ என்று முரட்டுத்தனமாகப் பேசும் நண்பர் ஒருவர் கூறினார்.
“அப்படியில்லை” என்று அவருக்குப் பதில் கூறப்பட்டது. இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், அச்சுக்கலை தோன்றாத அந்தக் காலத்தில் கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும்…. வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். இருபது வயதில் இறந்து போகும் ஒரு ‘புத்தக மனிதன்’ தாம் கிரேக்கமும் லத்தீனும் அறிந்தவர் ‘என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார், சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர்….பேரரசில் சுருக்கெழுத்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். வாக்கு வன்மை பெற்ற பேச்சாளர்கள், இலக்கண அறிஞர்கள் ஆகியோரின் உரைகள் பலவற்றை ஸ்னெட்டோனியஸ் ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். வெரியஸ் ஃப்ளாக்கஸ் என்பவர் ஆஸ்டஸின் பேரர்களுக்கு ஆசிரியராயிருந்தார். அவர் இறந்தபின் அவருக்குச் சிலை வைத்துக் கௌரவித்தார்கள்.
ஸெரிபோனியஸ் அபியொடிசியஸ் என்பவர் ஆர்பிலியஸின் அடிமையாகவும் மாணவராகவும் இருந்தார்; பின்பு அவர் ஸெரிபேனியாவால் விடுதலை செய்யப்பட்டார், ஹைகின்ஸ் என்பவர் அவருக்குப்பின், அவரிடம் அடிமையாயிருந்து விடுதலைபெற்ற ஜுலியஸ் மாடெஸ்டஸ் அந்தப் பதவிக்கு வந்தார். அடிமையான தத்துவ அறிஞர் ஒருவரின் வரலாற்றை எழுதிய சுதந்திர மனிதர்கள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். இந்த அடிமை அறிஞர், தமது எஜமானருடனும் அடிமைகளின் நண்பர்களுடனும் வாதங்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற அடிமைகள் மருத்துவர்களாகப் பணிபுரிந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் உள்ளன. இவர்களில் சிலர் குறிப்பிட்ட மருத்துவத் துறைகளில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள்.
இத்தகையவர்கள் பெரிய வீடுகளில் அடிமைகளாக இருந்தபோது பயிற்சி பெற்றவர்கள் என்று சில உதாரணங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் விடுதலை பெற்றபின் தங்கள் துறைகளில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, மிக அதிகமாகக் கட்டணம் வாங்குபவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.”
Reviews
There are no reviews yet.