ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

(2 customer reviews)

ஐந்திணை ஐம்பது eBook

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

ஐந்திணை ஐம்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது (ஐந்திணையைம்பது). இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.

ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.

எடுத்துக்காட்டு பாடல்

பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.

ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

இது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற அடைவில் ஐந்திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ள நூல் ஆதலின், இதனை ஐந்திணை ஐம்பது என்று குறிக்கின்றனர். இதில் உள்ள ஐந்திணை வரிசை முறை ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திர அமைப்பை (பொருள். அகத்.5) ஒத்துள்ளது. இச் சூத்திரத்துள் காணப்பெறாதபாலை, நால்வகை நிலங்களுக்கும் பொதுவாதலாலும், உரிப்பொருளில் பிரிதல் ஒழுக்கத்துக்கு உரித்தாதலாலும், அதனையும்உடன் கொண்டு ஐந்திணையாகக் கூறுதலே மரபு. பாலைத்திணையை ஈற்றயலாக வைத்து, இருத்தலுக்குரிய முல்லையில் தொடங்கி, இரங்கலுக்கு உரிய நெய்தலை ஈற்றில் அமைத்துவைத்துள்ள வரிசை முறை சிந்தித்தற்குரியது.

இந் நூற் பாடல்கள் சிறந்த நடையுடையனவாயும், கருத்து வளம் செறிந்தனவாயும் உள்ளன. இந் நூலுக்கு உரிய பாயிரம், ‘ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்’ என்று கூறுகின்றது. எனவே, செந்தமிழ்ப் புலமைக்கு இந் நூற் பயிற்சி மிகவும் அவசியம் என்பது போதரும்.

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கருதுமாறு இத் தொடர் அமைந்துள்ளது. எனவே, இவரை மாறன் மகனாராகிய பொறையனார் என்றும் கொள்ளலாம். இந் நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதலாம். பாயிரப் பாடலில் வரும் ‘வண்புள்ளி மாறன் பொறையன்’ என்ற தொடரைக் கொண்டு, இவர் அரசாங்க வரவு செலவுத் தொடர்புடைய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என்பர் சிலர். இவர் கருத்துப்படி புள்ளி என்பதைக் ‘கணக்கு’ என்று கொள்ளவேண்டும். இது பழமையான பொருளாகத் தோன்றவில்லை. ‘வண் புள்ளி’ என்பதை வளப்பமானபுள்ளி என்னும் ஊர் என்றும் கொள்ள இடமுண்டு. எனவே, இது குறித்து உறுதியாக ஒன்றும் சொல்லக் கூடவில்லை.

திருக்குறள் முதலிய சில கீழ்க்கணக்கு நூல்களில் பயின்றுள்ள சொற் பொருள் மரபுகள் சிலஇந் நூலகத்தும் உள்ளன.

கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக்கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின்

என்ற பாடலில் (21) கூறிய கருத்து,

‘கொற்சேரித் துன்னூசி விற்பவர்இல்’

என்ற பழமொழியை (50) மேற்கொண்டுள்ளது. இக்கருத்தை,

வைகொண்ட ஊசி கொற்சேரியின் விற்று எம் இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற்றோ புலை ஆத் தின்னி போந்ததுவே?

என்ற திருக்கோவையாரிலும் (386) காணலாம்.

இந் நூற் செய்யுட்கள் 50. பாயிரச்செய்யுள் ஒன்று. பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், அகப் பொருள் விளக்கஉரைகாரர் முதலியோர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இந் நூல் முழுமைக்கும் பழைய உரையும் துறைக்குறிப்புகளும் உள்ளன.

Additional information

Authors Name

2 reviews for ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

  1. jayaraman k reddy

    தமிழ் நூல்களால் பயன் பெற்றிட பெருந்துணையாய் உள்ளது

  2. jayaraman k reddy

    நூலின் நுட்பம் உணராற்றல் வளர பெருந்துணையாகிறது

Add a review

Your email address will not be published. Required fields are marked *