Description
அந்த நாய்க்குட்டி எங்கே PDF Online Read
அந்த நாய்க்குட்டி எங்கே ? (சிறுகதை)
என்னுடைய பிறந்த நாள்!…..
இன்று புதிதாய் பிறந்திருக்கின்றேன். நான்! – ஆமாம், உண்மை இது! ஆகவேதான், உடலும் உள்ளமும் புத்துயிர் பெற்றிருக்கின்றன! – இடைப்பட்ட சோதனைப் பொழுதுகள் பொய்யாகட்டும்!
என்னிடம் மெய்யான பாசமும் அன்பும் பாராட்டு நண்பர்கள், “பூவை என்றால், சோதனை என்று பொருள்” என்பார்கள். அந்நாட்களிலே அமரர் டாக்டர் ஜி. உமாபதி அவர்களின் ‘உமா’ இலக்கிய மாத இதழிலே நான் செய்து பார்த்த – செய்து காண்பித்த இலக்கியச் சோதனைகளை எண்ணித்தான் அவர்கள் அவ்வாறு கூறுவது வழக்கம் – பழக்கம்!
தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பெரும்பாலான துறைகளையும் என்னுடைய எழுத்துகள் தொட்டுப் பாத்திருக்கின்றன! இவ்வகையில், இதுவரை வெளிப்படுத்தப்பபட்ட நூல்களின் எண்ணிக்கை நூற்று எழுபத்தொன்பதைத் தாண்டி விட்டன! – மெய்தான்! எண்ணிப்பார்த்தால், என் மெய் சிலிர்க்கிறது!
இடைவெளியைக் கடந்து, இப்பொழுது என்னுடைய புதிய கதைத் தொகுதி ஒன்றை அண்மையில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அமரர் தமிழ்வாணன் என்பால் கொண்டிருந்த உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் ஓர் அடையாளச் சின்னமாகவே இந்நூல் திகழும். கதைக்கொத்தின் பெயர்: ‘மகாத்மா காந்திக்கு ஜே!’– நவரசங்கள் சிந்துபாடும் அருமையான சிறு கதைகள். கதைகளை வெளியிட்ட இதழாசிரியர்கள் என் அன்பிற்கு உரியவர்கள் அல்லவா?
இப்போது, அடுத்ததாக, இந்தச் சிறுவர் – சிறுமியர் நூலும் வெளிவருகிறது. ‘அந்த நாய்க்குட்டி எங்கே?, மற்றும் இளவரசி வாழ்க என்னும் முத்தான மூன்று நாவல்களைக் கொண்டது இந்நூல்: இதுவும் கட்டாயம் பேர் சொல்லும். மணிமேகலைப் பிரசுரத்தின் உடைமையாளச் சகோதரர்கள் திருவாளர்கள் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நான் நிரம்பவும் கடமைப்பட்டவன்!
என்னுடைய எழுபத்தோராவது பிறந்த நாளை நினைவுகூரச் செய்யும் வகையில், என்னுடைய இவ்விரு நூல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன! – நான் பாக்கியவான்தான்!
இடையில் நான் நோய்வாய்ப்பட்டுத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருந்த நாட்களில் என்னுடைய இவ்விரு நூல்களின் கைப்பிரதிகளை என் சார்பில் பதிப்பகத்தில் சேர்ப்பித்து உதவிய மெய்யன்பர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களை நான் நாளும் பொழுதும் நன்றியுடன் நினைப்பேன்.
உங்கள் அன்பிற்குகந்த ‘பூவையைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்ற இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் மறந்துவிட மாட்டேன். நன்றி!
சென்னை – 600 045
அன்புடன்,
25–6–1966.
பூவை எஸ். ஆறுமுகம்
Reviews
There are no reviews yet.