Description
அறிவியல் அதிசயங்கள்
(பாகம் 1)
ச.நாகராஜன்
1. செவ்வாயில் மனிதன் இறங்குவது நிச்சயம்
சந்திரனில் மனிதன் இறங்கப் போகிறான் என்றபோது ஏளனமாகச் சிரித்தவர்கள், மனிதன் நிஜமாகவே அங்கு இறங்கியபோது திகைத்தார்கள்!
அடுத்து செவ்வாயில் மனிதன் இறங்குவது நிச்சயம் என்று விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகிறார்கள். இதுவே விஞ்ஞானிகளின் இன்றைய லட்சியம்!
முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு 1976-ல் ரோபாட்டுகளை அனுப்பி வைகிங் விண்கலம் அதை ஆராயத் தொடங்கியபோது, ஆரம்ப அதிர்ஷ்டம் சீக்கிரமாகவே மனிதனை அங்கு இறக்கத் துணை புரியும் என்று உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் செவ்வாய்க்கு மனிதனின் பயணம் என்பது லேசான காரியம் இல்லை!
பீகிள் பயணம்
25 வருட காலத்தில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முறைகள் முயன்ற போதிலும், செவ்வாய் மண்ணில் வெற்றிகரமாக இறங்கிய ஒரே விண்கலம் மார்ஸ்-பாத் ஃபைண்டர்தான்! 1997ல் தான் இதைச் சாதிக்க முடிந்தது!
ஏகப்பட்ட தோல்விகள்; ஒரே ஒரு வெற்றி! இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதனை விண்கலத்தில் ஏற்றித் துணிந்து அனுப்ப முடியுமா?
நான்கு கலங்களின் பயணங்கள்
ஆனால் முயற்சியைச் சற்றும் தளர்த்துவதாயில்லை மனித குலம்! இப்போது நான்கு கலங்கள் செவ்வாயை ஆராய வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. யூரோபியன் ஸ்பேஸ் ஏஜன்ஸி எனப்படும் யு.எஸ்.ஏ.யின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் அல்லது பிரிட்டனின் பீகிள் 2 இப்போது செவ்வாயை ஆராய்கின்றன. இதைத் தவிர, நாஸா ஏவிய இரண்டு ரோவர்களும், ஜப்பான் ஏவிய சாட்லைட் ஒன்றும், ஆக மொத்தம் நான்கு கலங்கள் செவ்வாயைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றான.
2025ல் செவ்வாயில் மனிதன்!
முதலில் 1976ல் செவ்வாயில் மனிதனின் வைகிங் இறங்கியவுடன் 2000-க்குள் மனிதன் செவ்வாயில் இறங்கி விடுவான் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சந்திரனைப் போலன்றி, இந்தப் பயணத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் ஏராளம். முதலில் செலவு! கோடானு கோடி டாலர்கள் தேவை! இந்தப் பெரும் பணம் இடைவிடாது தொடர்ந்து இந்தப் பணிக்காக வெள்ளமெனப் பாய வேண்டும். ஒரு மாதிரியாக உலக நாடுகள் மனிதனின் சவாலாக இதை ஏற்றுக் கொண்டு விட்டதால் பணம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று இப்போது ஆகிவிட்டது!
அடுத்தது, விண்வெளியில் உள்ள எடையற்ற தன்மையும், செவ்வாயில் குறைந்த அளவே உள்ள ஈர்ப்பு விசையும் விண்வெளி வீரர்களின் விண்வெளிப் பயணத்திற்கான மாபெரும் தடைகளாக உள்ளன. செவ்வாயில் உள்ள ஈர்ப்பு விசை பூமியில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்குதான்! இது விண்வெளி வீரரின் உடல் தசைகளை அழிக்க ஆரம்பித்து விடும்! இதே ஈர்ப்பு விசையை இங்கே உருவாக்கி, அதில் விண்வெளி வீரரை பரிசோதனைக்கு உட்படுத்தி, தசைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்றால்தான் பயணம் சாத்தியமாகும். ஆனால் இந்த ஈர்ப்பு விசையின் மாதிரியே இன்னும் அமைத்தபாடில்லை!
செவ்வாயில் கதிர்வீச்சு
அடுத்து பிரபஞ்ச வெளியில் மனிதன் பயணம் செய்ய வேண்டிய சுற்றுப் பாதையில் உள்ள மைல்கள் எவ்வளவு தெரியுமா? ஐம்பது கோடி மைல்கள்!! இதைக் கடந்து செவ்வாய்க்குப் போனால் அங்கு உள்ள கதிர் வீச்சை மனிதன் சமாளிக்க வேண்டும். செவ்வாயில் பூமியில் உள்ளது போன்ற காந்த மண்டலம் இல்லை. காந்த மண்டலம்தான் பிரபஞ்ச வெளியிலிருந்து வரும் தீங்கு பயக்கும் கதிர்களைத் தடுத்து வேறு பக்கம் திருப்பி விடும். இப்போது விண்வெளி வீரருக்கு உள்ள ஒரே பாதுகாப்பு அதிக கனமுள்ள உலோகம்தான்! ஆனால் இது 50 கோடி மைல் பயணத்திற்குத் தாக்குப் பிடிக்குமா? விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
டேவிட் வில்லியம்சின் கருத்து
கிரகங்களைப் பற்றிய பிரபல ஆராய்ச்சியாளரான நாஸா விஞ்ஞானி டேவிட் வில்லியம்ஸ், “இன்னும் அடுத்த பத்து வருடங்களில் நாம் அனுப்பிய கலங்களிலிருந்து வரும் செய்தியை பொறுத்தே மனிதன் செவ்வாயில் இறங்குவதை நிர்ணயிக்க முடியும் என்று கூறுகிறார். 2025-ம் ஆண்டு என்பதுதான் மிகச் சீக்கிரம் இந்தப் பணி முடிய வேண்டுமென்றால் இலக்காகச் சொல்ல முடியக் கூடிய ஆண்டு” என்றும் அவர் கூறுகிறார்.
மாறுபட்ட கருத்து
ஆனால் லண்டன் யுனிவர்சிடி கல்லூரியைச் சேர்ந்த முல்லார்ட் விண்வெளி லாபரட்டரியில் பணிபுரியும் விண்வெளி விஞ்ஞானியான டாக்டர் ஆண்ட்ரூ கோட்ஸ், “நம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்தால், இப்படிப்பட்ட பயணத்திற்கு முயற்சி செய்வதே அபத்தம்” என்கிறார்.
“செவ்வாயில் மனிதன் காலடி பதிப்பது பதிப்பது முடியாத காரியம்” என்று கூறும் அவர், “ரோபாட்களை அனுப்பி முதலில் ஆராய்வோம். இண்டர்நேஷனல் ஸ்பெஸ் ஸ்டேஷனுக்கு ஆகும் செலவு ஐயாயிரம் கோடி ரூபாய் ஆகிறது. இதை வைத்து 600 மார்ஸ் எக்ஸ்பிரஸ் அனுப்பலாமே” என்கிறார்.
வானம் வசமாகும்!
ஆனால் நாஸா விடுவதாயில்லை. “மனித குலத்திற்குப் பெருமை சேர்க்கும் அடுத்த பணி செவ்வாயில் நமது முதல் மனிதன் இறங்குவதுதான்! அதைச் செய்யாமல் ஓயமாட்டோம்” என்கின்றனர் நாஸா விஞ்ஞானிகள்.
துணிவுள்ள மனிதனுக்கு வானம் வசமாகும்! செவ்வாயில் மனிதன் காலடி பதிப்பது நிச்சயம்!
Reviews
There are no reviews yet.