Description
அறிவியல் அதிசயங்கள்
(பாகம் 2)
சூரியனிலிருந்து பூமியை நகர்த்தப் போகிறார்களா?
சூரிய உஷ்ணம் அதிகமாகி பூமிவாழ் மனித இனமாகிய நாம் வறுபட்டு அழிந்து விடக்கூடாது இல்லையா? இந்தக் கவலையில் விஞ்ஞானிகள் குழு இதைத்தடுக்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறது.
‘எப்போது சூரியன் நாம் வறுபடும் அளவுக்கு உஷ்ணத்தைக் கக்கப்போகிறான்? இன்னும் குறைந்த பட்சம் ஒரு கோடி ஆண்டுகளுக்கு இல்லை என்றாலும் இப்போதே யோசித்து ஒரு பிளான் போடுவது நல்லதுதானே என்கிறார்கள்’ அமெரிக்க ‘நாசா’ விஞ்ஞானிகள்.
கலிபோர்னியோ பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ‘கிராவிடேஷனல் ஸ்லிங்ஷாட்’ என்ற உத்தியில் ஒரு விண்கல் உதவியுடன் பூமியை நகர்த்த யோசித்து வருகிறது.
ஆஸ்ட்ராய்ட் எனப்படும் விண் கல்லை வானில் ஏவி, அதன் புவிஈர்ப்பு விசை மூலம் பூமியை நகர்த்தி புதிய இடத்தில் அமர்த்திவிட்டால் ‘கூலாக மனித குலம் இருக்கமுடியுமாம்.
ஒரு பெரிய விண்கல்லைக் கண்டுபிடித்து அது பூமியைக் கவர்ந்து இழுக்கும் வல்லமை உடையதுதானா? என்று பரிசோதித்து நமது திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த விண்கல் பிறகு வியாழகிரகத்தை நோக்கிச்சென்று இன்னும் அதிக வலிமை பெற்ற, இன்னும் பூமியை சூரியனிடமிருந்து தள்ளி இருக்க வைக்குமாம்.
பூமியின் சுற்றுப் பாதையைச் சீரமைக்க ஆறாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆஸ்ட்ராய்ட் நமது பூமிக்கு அருகே செல்லவேண்டும். இதன் மூலம் அதிகமாகும் சூரிய உஷ்ணம் நம்மை ஒன்றும் செய்யாது.
கடைசியாக ஒரு வார்த்தை. இந்தத் திட்டத்தில் ஒரு சிறு கோளாறும் இருக்கிறது. நாம் போட்ட கணக்கு தப்பாகி விண்கலம் பூமியைச் சற்றே நகர்த்துவதற்குப் பதிலாக பூமியுடன் மோதிவிட்டால், உயிரினமே இருக்காது… அவ்வளவுதான்… பூமி நகர்த்தலில் ஆபத்தும் வரலாம்….. ‘குளு குளு’ பூமியாகவும் மாறலாம்.
சூரியனில் வெடிப்பு -பூமியைப் பாதிக்குமா?
இரண்டாயிரமாவது வருடம் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை சூரியனில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. பத்து வருடங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்பு இதுதான். பல கோடி டன் எடையுள்ள அதிஉஷ்ண ரேடியோ ஆக்டிவ் வாயுவை இது சூரியனிலிருந்து வெளியேற்றியது. 3000 வருடம் அமெரிக்காவில் உள்ள எல்லா மின் நிலையங்களும் தொடர்ந்து இயங்கி உற்பத்தி செய்யும் மின்சக்தியை, இருபதே நிமிடங்களில் சூரியன் அன்று வெளிப்படுத்திவிட்டது.
கலிபோர்னியாவில் உள்ள சூரிய மற்றும் ஹீலியோ ஸ்பெரிக் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த சூரிய சக்தி, பூமியை நோக்கி வரவில்லை என்கின்றனர். ஆனால் சூரிய வெடிப்பு தகவல் தொடர்பைக் குலைத்து, மின் உற்பத்தியைத் தடை செய்யும் என்று எச்சரித்துள்ளனர்.
ரேடியோ ஆக்டிவ் வாயுக்கள் பூமியைத் தாக்கும்போது எலெக்ட்ரோ மாக்னடிக் புயல் ஏற்பட்டு மின் உற்பத்தி சாலைகள், சாட்டிலைட்டுகள்,
சாட்டிலைட்டுகள், மொபைல் போன்கள், விமானங்கள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுமாம்.
1989ல் ஏற்பட்ட சூரிய வெடிப்பு 9 மணி நேர இருட்டடிப்பை கனடாவில் ஏற்படுத்தியது. இன்னொரு சூரிய வெடிப்பு 1997ல் 700 கோடி மதிப்புள்ள டெலிவிஷன் சாட்டிலைட்டைச் செயலிழக்கச் செய்தது.
நிலவில் குண்டு போட அமெரிக்கா திட்டம்
வியட்னாமிலும் ஈராக்கிலும் குண்டு போட்டு அலுத்துப் போய்விட்ட அமெரிக்கா, தனது அடுத்த குண்டை எங்கு போடப்போகிறது தெரியுமா? சந்திர கிரகத்தில்தான்.
சயிண்டிபிக் ஃபிக்ஷன் இல்லை. வேடிக்கை விளையாட்டில்லை, உண்மைதான். சதாமை எதிர்த்து அவர் பதுங்கி இருந்த பங்கர் எனப்படம் பாதாள அறைகளைத் தூள் தூளாக்க வீசிய அதே குண்டுகளைத்தான் நிலவிலும் அமெரிக்கா போடத் திட்டமிட்டு வருகிறது. ‘ஆபரேஷன் போலார் நைட்’ என்று இந்த திட்டத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் நிலவையே குண்டு போட்டு அமெரிக்கா அழித்து விடுமோ என்று நாம் பயப்படத் தேவையில்லை. சந்திரனில் துருவப்பகுதிகளில் உள்ள எரிமலை போன்ற பகுதிகளின் அடியில் உறைந்து இருப்பதாகக் கருதப்படும் ஐஸ் கட்டியை சோதனை செய்வதே திட்டத்தின் நோக்கம்.
இந்தக் குண்டின் மூலம் அதிநவீன கண்காணிப்புக் கருவிகளை சந்திரனின் இந்தப் பகுதிகளில், ஆபத்தில் இவை அழிந்து விடாதவாறு புதைத்து விடலாம். ஹவாய் பல்கலைக்கழகத்தின் இந்தத் திட்டம் ‘நாஸா’வின் ஒப்புதலுக்காகப் போயிருக்கிறது. இந்த ஏவுகணை (மிசைல் குண்டு) சந்திரனைச் சுற்றி வரும் விண்கலம் ஒன்றிலிருந்து 2007ஆம் ஆண்டு ஏவப்பட இருக்கிறது.
பல கோடி வருடங்களுக்கு முன்னர் சந்திரனில் மோதி உறைந்த விண்கற்களின் பகுதிகளில் ‘ஐஸ்’ இருப்பது முதன் முதலாக 1998ல் கண்டுபிடிக்கப்பட்டது. யாருமே போக முடியாத இருள் சூழ்ந்த சூரியனின் கிரணங்களால் கூட அண்டப்படாத இந்தப் பகுதிகளில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் சிக்கிய ஐஸை விஞ்ஞானிகளால் ஆராய முடிந்தால், அது நமது சூரிய மண்டலத்தில் இதர இடங்களில் உள்ள தண்ணீரின் ரசாயன தன்மை (மெமிக்கல் மேக் அப்) பற்றி அறிந்து கொள்ள உதவும். அதோடு இந்த நவீன உபகரணம் நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதையும் கண்டுபிடித்து விடும்.
Reviews
There are no reviews yet.