Sale!

அறிவுக்கும் அப்பால்

0.009.00

Description

அறிவுக்கும் அப்பால்

ச.நாகராஜன்

முன்னுரை

“மன ஏவ மனுஷ்யானாம்’

“மனதால் ஆக்கப்படுபவனே மனிதன்” இது உபநிடத வாக்கு! மனதைப் பற்றி பகவான் கிருஷ்ணனும், பதஞ்சலி மாமுனிவரும், வசிஷ்ட மாமுனிவரும் இன்னும் ஏராளமான முனிவர்களும் விவரித்துள்ளனர். மனதைப் பற்றிய அரிய மர்மங்களை நமது இதிஹாஸங்களும், பதினெட்டு புராணங்களும், யோக நூல்களும் மிகத் துல்லியமாக அக்குவேறு ஆணி வேறாக விளக்குகின்றன.

அனுபவத்தால் உணரப்பட வேண்டிய ஆச்சரியமே மனதின் மாண்பு! இதை மேலை நாட்டு விஞ்ஞானிகள் பல்வேறு நவீன உபகரணங்களால் ஆராயத் தலைப்பட்டுள்ளனர். சோதனைச்சாலைக்கே உரித்தான ஏராளமான விதி நியமங்களின் படி சோதனைகளை நடத்தி அவற்றை மிகுந்த கவனத்துடனும், பொறுமையுடனும், கடின உழைப்புடனும் அயராது குறித்து, ஒப்பு நோக்கி முடிவுகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.

மனம், எண்ணம் பற்றிய ஆராய்ச்சிகள் ரஷியா, செக்கோஸ்லேவேகியா, பல்கேரியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகின்றன!

இந்த நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த, கண்டுபிடித்து வரும் முடிவுகள் ஆச்சரியப்பட வைப்பவை! பிரமிக்க வைப்பவை!

இவர்களில் பெரும் பாலானோர் ஹிந்து யோகிகளின் சக்திகளை அறிந்தவர்கள்: சந்தித்தவர்கள்: ஆராய்ந்தவர்கள்!

இதில் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். எந்த நாடு எல்லா ரகசியங்களையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறதோ அந்த நாட்டில் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் அதிகமாக நடத்தப்படவில்லை என்பதே! பாரத தேசத்தையே நான் குறிப்பிடுகிறேன் என்பதை வாசகர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

விளம்பரம் தேடாதவர்களாக ரிஷிகளும் முனிவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் ஒருபுறம் இருந்தாலும் இன்றைய உலக இயலோடு ஒத்துப் போகும் வகையில் அறிவியல் பூர்வமாக மனதின் மர்மங்களையும் எண்ண சக்தியின் ஆற்றலையும், பிரக்ஞையின் விசித்திர மர்மங்களையும் இந்திய விஞ்ஞானிகள் ஆராய வேண்டும்.

நமக்கு இது சுலபம். ஏனெனில் வழிமுறைகளும், முடிவுகளும் நமது நூல்களிலேயே பொதிந்திருக்கின்றன. நவீன உபகரணங்களின் வழியே அவற்றை நாம் சரி பார்க்க வேண்டியது தான்! உலகிற்கு நம் தலைமை பீடத்தை உணர்த்த வேண்டியது தான்!!

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஷீலா ஆஷ்ட்ராண்டர் என்ற கனடிய பெண்மணியும் லின் ஷ்ரோடா என்ற அமெரிக்கப் பெண்மணியும் பல்வேறு இரும்புத்திரை நாடுகளுக்குச் சென்று அங்கு நடக்கும் பாராசைக்காலாஜி சோதனை விபரங்களை ‘Psychic Research behind the Iron curtain’ என்ற நூலில் எழுதி இருந்ததைப் படித்தேன்: பிரமித்தேன்!

பல ஆண்டுகளாக நம் புராண இதிஹாஸங்கள் மற்றும் யோக நூல்களில் உள்ள கருத்துகளையும் இவர்கள் குறிப்பிட்டிருந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகளையும் ஒப்பிட்டவாறே இருந்தேன்.

இந்த நிலையில் அலுவலக வேலை நிமித்தமாக அடிக்கடி பெங்களுருக்கு நான் செல்வதுண்டு. வேலை நேரம் போக மீதி நேரத்தில் கண்டிப்பாக புத்தகக் கடைகளுக்குச் செல்வது என் வழக்கம்.

அப்படி ஒரு நாள் சென்ற போது நடைபாதை (பழைய) புத்தகக் கடை ஒன்றில் அமெரிக்க விஞ்ஞானிகளான ரஸ்ஸல் டார்க் மற்றும கெய்த் ஹராரி எழுதிய ‘The Mind Race’ என்ற புத்தகைத்தை வாங்கினேன்.

இந்த இரு புத்தகங்களோடு இன்னும் ஏராளமான மேலை நாட்டு நூல்களும் கட்டுரைகளும் நம் யோகிகளின் மேன்மைகளை என்னை உணரவைத்து பரவசப்படுத்தின. இந்த உணர்ச்சியை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்ட போது ‘ஜெம்மாலாஜியும் ஜோதிடமும்’ மாத இதழின் ஆசிரியரும் எனது சகோதரருமான திரு வி.எஸ்.மீனாட்சிசுந்தர் இந்தத் தொடரை ‘ஜெம்மாலாஜியும் ஜோதிடமும்’ இதழிலேயே வெளியிடலாமே என்று யோசனை கூறினார். ‘அறிவுக்கும் அப்பால்…’ என்ற தலைப்பில் தொடர்ந்து இந்த கட்டுரைத் தொடர் வெளிவந்தது.

நூலை நன்கு புரிந்து கொள்ள ஒரு முறைக்கு மேல் படிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

காலம் பற்றிய அபூர்வ விஷயங்கள், பிரார்த்தனை பலிப்பதன் மர்மம், எண்ண சக்தி பலிப்பது ஆகிய இவற்றைப் பல முறை படிப்பது நல்லது.

வாசகர்கள் அறிவுக்கும் அப்பால் உள்ள விஷயங்ளைப் படித்து மேன்மையுற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தத் தொடரை வெளியிட்ட திரு.வி.எஸ். மீனாட்சிசுந்தர் அவர்களுக்கும், இந்நூல் வெளிவரக் காரணமாக அமைந்த திரு.அண்ணல் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக. வாசகர்கள் தங்கள் அபிப்ராயங்களையும் அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் நன்றி.

சென்னை

1-1-2003

ச.நாகராஜன்

ஆசிரியர் பற்றி…

திரு ச. நாகராஜன் பாரம்பரியமிக்க தேசபக்த குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் திரு. வெ. சந்தானம் சுதந்தரப்போரிலே ஈடுபட்டு சிறை சென்றவர்: மணிக்கொடி பி. எஸ். ராமையாவுடன் இணைந்து தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புது சகாப்தத்தை ஏற்படுத்தியவர்.

தஞ்சை மாவட்டத்தில் கீவளுரில் 06-01-1947-ல் பிறந்த திரு. நாகராஜன் இது வரை சுமார் ஆயிரம் கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், மதிப்புரைகள் எழுதி உள்ளார். அறிவியல், விண்வெளி விஞ்ஞானம்,ஜோதிடம், நட்சத்திரங்கள், வரலாறு, இலக்கியம், சுற்றுலா இடங்கள், புலன் கடந்த உணர்வு, கடல் வளம், மிருக இயல், இசை, மந்திரம், யந்திரம், சாதனையாளர்கள், ஹாலிவுட் சினிமா போன்ற பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு.

திருச்சி வானொலி நிலையம் வாயிலாக இவரது ரேடியோ நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. ரேடியோ உரைகளும் சென்னை, மதுரை வானொலி மூலம் ஒலிபரப்பாகியுள்ளன. தொலைக்காட்சியில் இவரது நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான பிரமிடு மற்றும் ஸ்படிகம் பற்றிய நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.

சுயமுன்னேற்றம், படைப்பாற்றல் திறன், நிர்வாக இயல் பற்றிய புதிய உத்திகள் பற்றி இவர் சொற்பொழிவுகள் ஆற்றியும் பயிற்சி முகாம் நடத்தியும் வருகிறார். ஃபெங்சுயி வகுப்புகளோடு உள்முக ஆற்றலை வளர்க்கும் உள்முக ஃபெங்சுயி (Inner Fengsui) பயிற்சியும் நடத்தி வருகிறார்.

வாகன கட்டுமான பொறியியல் துறை நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக மதுரையில் பணியாற்றிய இவர் தற்சமயம் மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இலங்கை, பெல்ஜியம், இங்கிலாந்து உட்பட பல வெளிநாடுகளுக்கும் சென்று பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

இவரது படைப்புகள் தினமணி, கதிர், தினபூமி, கோகுலம் கதிர், கலைமகள், மஞ்சரி, பாக்யா, ஹிந்து, ஜெம்மாலாஜியும் ஜோதிடமும், சரவணா ஸ்டோர்ஸ் (இதயம் பேசுகிறது) போன்ற பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன.

இதுவரை வெளியான இவரது நூல்கள்:-

* வெற்றிக்கலை

* அறிவியலும் ஆன்மீகமும்

* நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

* அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா

* ஆங்கிலம் அறிவோமா

* நவகிரகங்கள்

* விந்தை மனிதர்கள், விந்தைப் பெண்மணிகள்

* பறக்கும் தட்டுகளும் அயல்கிரக வாசிகளும்

* சிறுவர்களுக்கான புராணக்கதைகள்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிவுக்கும் அப்பால்”

Your email address will not be published. Required fields are marked *