Sale!

ஔவையார் தனிப்பாடல்கள்

0.009.00

Description

ஔவையார் தனிப்பாடல்கள்

அகர முதல எழுத்தெல்லாமாகி, சொல்லும் பொருளுமாக விரிந்து, இலக்கியங்களாகவும் இலக்கணங்களாகவும் மலர்ந்து என்றும் இளமையும் இனிமையும் செழுமையும் நிலைபேறாகப் பெற்று விளங்கும் உயர்தனிச் செம்மொழி, நம்முடைய அருமைச் செந்தமிழ் மொழியாகும்! என்று பிறந்ததென்று உணர முடியாததாய், காலத்தால் பழமையும் கருத்தின் ஆழத்தினாலே காலத்தையும் வென்று சிறந்த புதுமையும் உடையதாகத் திகழ்வதும், நம் கன்னித்தமிழ் மொழியாகும்.

மக்களிடத்தே. மக்களின் உள்ளத்து உணர்வுகளைப் புலப்படுத்தும் கருவியாகத் தோற்றம் பெற்று, மக்களின் உள்ள உணர்வும், அவர்களது சிந்தனையும், அவர்களது நாகரிகச் செவ்வியும் அவர்களது வாழ்க்கைச் செப்பமும், படிப்படியாக வளரவளரத் தானும் வளர்ந்து, ‘வளமார்வண்தமிழ்’ என்னும் புகழுடன் திகழ்வதும் நம் தமிழ்மொழி ஆகும்.

உலகத்துப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நாடோடி வாழ்வினராகவும், விலங்குகளோடு விலங்குகளாகவும், அறிவுத் தோற்றம் அற்றவராகவும் வாழ்ந்த அந்தப் பழைய நாளிலேயே பல்லாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட அந்தத் தொன்மைக் காலத்திலேயே, இலக்கண அமைதியுடையதாகவும், இலக்கியச் செறிவு உடையதாகவும், ஏற்றம் பெற்றிருந்ததும் நம் செந்தமிழ் மொழி ஆகும்.

முடியுடைய மன்னர்கள் போற்றிப் புரந்துவர, முத்தமிழ்ப் பாவலர்கள் பாடிப் பரவிப் பண்படுத்திவர, முத்தமிழ் நாட்டினரும் முழு ஆர்வத்துடன் ஏற்று இன்புற்று, பாசத்துடன் எழில்பெருக்கிக் காத்துவரக், காலப்போக்கிலே அழிந்தும் ஒழிந்தும் சிதைந்தும் சீர்கெட்டும் போன பற்பல தொன்மைக்கால மொழிகளைப்போல் அல்லாது, அன்றும் இன்றும் ஒன்றுபோல, உயரிய செல்வமாக, என்றும் தன் எழில்நலம் குன்றாது நிலைபெற்றிருப்பதும், இனநலம் காப்பதும் நம் தமிழ்மொழி ஆகும்.

இத்தகைய செழுந்தமிழ்த் தாயின் திருத்தொண்டிலே தம்மை ஈடுபடுத்திச் சிறந்தோர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், இந்திரனும், அகத்தியரும், நக்கீரரும், கபிலரும், பரணரும் மற்றும் பலருமாவர். இவர்களுள், தெய்வங்க ளாகத் திகழ்ந்த சிறப்பினரும், முனிவர்களாகி முற்றறிவுடையவராக உயர்ந்த நிலையினரும், குலத்தாலும் குடியாலும் தொழிலாலும் நிலையாலும் தம்முள் வேறுவேறாக இருந்தோரும் பலராவர். எனினும், ‘தமிழ்’ என்ற தாயின் திருப்பணியிலே, இவர்கள் எல்லாரும் ஒன்றாகி உயர்ந்து பணி செய்து போற்றியிருக்கின்றனர்; தாம் போற்றுதலைப் பெற்று இருக்கின்றனர்.

முதலிடைகடை என்ற முச் சங்கங்களால் ஆய்ந்து தெளிந்து பேணப்பட்ட செழுந்தமிழ், அந்தச் சங்கங்களின் மறைவுக்குப் பின்னரும், அவ்வப்போது தோன்றிய சான்றோர் பலரால் பேணப்பட்டு வளர்ந்திருக்கிறது. தமிழ் வளர்ச்சியின் இந்தத் தொடர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியச் செல்வங்களிலே ஊடாடி உணர்ந்து இன்புற நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழ் வளர்த்த புலமைச் செறிவுடன் திகழ்ந்தவர்களுள், ஆண்களைப் போலவே பெண்களும் பலராவர். கடைச்சங்க நூற்களில் ஔவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தியார், பூதப்பாண்டியன் தேவியார் போன்ற பலரைக் காணுகின்றோம். நா மகளைக் கல்வியின் தெய்வமாக ஏற்றிக்கூறும் பாரத நாட்டிலே, சிலர் ‘பெண்களுக்கு ஞானத்தை அறிவுறுத்தல் கூடாது; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்கள் அல்லர்; அவர்கள் பாவப் பிறவிகள்; ஆண்களை ஒட்டி வாழ்ந்து மடிய வேண்டியவர்கள்; ஆண்களின் இன்ப சுகத்துக்காகவே ஏற்பட்டவர்கள்’ என்றெல்லாம் கூறி, அவர்களைப் பெரிதும் புறக்கணித்திருக்கின்றனர். ஆனால், நம் அருமைத் தமிழகத்திலோ, அந்த நிலை என்றுமே இருந்ததில்லை. தாயான தமிழ், தாய்மார்களிடமிருந்து ஒதுங்கவுமில்லை; அவர்களால் ஒதுக்கப்படவுமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மூதாட்டியான ஒளவைப் பிராட்டியாரின் அழகுதமிழ்ச் செய்யுட்கள் விளங்குகின்றன. மக்கள் மனமுவந்து போற்றவும், மன்னர்கள் மனம் விரும்பிப் பேணவுமாக, எளிமையும் அஞ்சாமையும் கொண்டு, இணையற்ற பெரும் புலவராக, மக்கள் தலைவராக ஔவையார், அந் நாளிலேயே நம் தமிழகத்தில் விளங்கியிருக்கின்றார்.

வள்ளல் பாரியும், மலையமான் திருமுடிக்காரியும், மழவர் கோமான் அதியனும், காஞ்சித் தலைவன் தொண்டைமானும், சோழனும்,சேரனும், பாண்டியனும் ஔவையாரின் சொல்லுக்குக் காட்டி வந்த அளவற்ற பெருமதிப்பினை எண்ணும்பொழுது, பெண்மை அறிவொளியோடு ஒளிக்கதிர் பரப்புங்கால், அந்தப் பேரொளியின் முன்னர், ஆண்மையால் ஆற்றல் மிகுந்தோரும் எளியராகி, அதற்கு அன்பராகிவிடுகின்றனர் என்ற உண்மை புலனாகிறது. இப்படி நாடுபோற்ற வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வியரான ஒளவையார், சங்ககால ஒளவையார் என்று குறிப்பிடப் பெறுபவர் ஆவார்.

சங்ககாலத்திற்குப் பின்னால், தமிழகத்தின் அரசியலிலும் வாழ்வியலிலும் பல நூற்றாண்டுகள் பற்பல மாறுதல்களோடு கழிந்தன. அதன் பின்னர், ஏறக்குறையப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் அளவில், மீண்டும் ஓர் ஒளவையாரைப்பற்றி அறிகின்றோம். கம்பநாடரும், புகழேந்தியாரும், ஒட்டக்கூத்தரும், செயங்கொண்டாரும் மற்றும் புலவர் பெருமக்களும் நிலவிய நாளிலே, அவர்கள் அனைவரும் போற்றும் அறிவுத் திட்பத்துடன் இந்த ஒளவையார் விளங்கினர். இவர் பாடியவையாக நமக்குக் கிடைப்பனவெல்லாம் தனித்தனிச் செய்யுட்களேயாகும். ‘பந்தன் அந்தாதி’ என்ற ஒரு நூலும், ‘அசதிக்கோவை’ என்றொரு கோவையும் இவரால் இயற்றப்பட்டதாகக் கூறுகின்றார்கள். அவற்றுள் கிடைப்பன மிகச்சிலப் பாடல்களே. இந்த ஒளவையார் சிறந்த சிவபக்தராகவும் விநாயகப் பெருமானைப் போற்றி வழிப்பட்டவராகவும் கூறப்படுகின்றார். இவர் இரண்டாவது ஒளவையார் ஆவார்.

இந்த இரு ஔவையார்கள் அல்லாமலும், குழந்தை களுக்கென்று ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நீதி நூல்களையும், விநாயகர் அகவல் என்ற தோத்திர நூலினையும் ஒருவர் செய்துள்ளார். இவரும் ‘ஔவையார்’ என்ற பெயருடன் தமிழ்ப் பெருமாட்டியாகத் திகழ்ந்தவராவார். உயரிய ஒழுக்கங்களையும், சிறந்த நீதிகளையும், எளிதாகவும் இனிதாகவும் படிப்படியே பயிற்றும் ஒரு நல்ல குழந்தைக் கல்வித் திட்டத்தை, முதன்முதலில் உலகிலேயே வகுத்து உருவாக்கியவர் இவர் என்று கூறலாம். இவர் மூன்றாவது ஒளவையார் ஆவார்.

மற்றும், வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, ‘ஔவைக் குறள்’ என்னும் பெயரால் ஒரு நூலும் நம் நாட்டில் நிலவுகிறது. இதனை அமைத்தவர் மேலே குறிப்பிட்ட எந்த ஒளவையாரினும் சேர்ந்தவரல்லர் என்பதனை அந்நூலின் அமைப்பே நன்கு காட்டுகின்றது.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஔவையார் தனிப்பாடல்கள்”

Your email address will not be published. Required fields are marked *