Description
புத்தரின் பொன் மொழிகள்
மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது.
எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. மனமே முதன்மையானது. மனமே அவைகளை வழி நடத்துகிறது. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும், செயற்பட்டாலும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடரும்.
ஒருவன் எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ வெறுக்கவோ கூடாது. கோபத்தினாலோ போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்.
எப்படி இந்த மாபெருங் கடல் ஒரே சுவையான உப்புச் சுவையை உடையதாக இருக்கிறதோ, அதே போல் இந்தத் தம்மமும் ஒரே சுவையை, விடுதலை என்னும் சுவையை உடையதாக இருக்கிறது.
பிறருடைய குற்றத்தை எளிதில் காண முடிகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களை உமியைத் தூற்றுவது போன்று தூற்றுகிறவர், மிருகங்களின் தோலைக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ளும் வேட்டைக்காரனைப் போலத் தன் சொந்தக் குற்றத்தை மறைத்துக் கொள்கிறார். எப்போதும் பிறருடைய குற்றத்தையே தேடிக் கொண்டிருப்பவர்கள் எளிதில் கோபத்தின் வசம் ஆட்படுகிறார்கள். தங்களுடைய குற்றங்களை அழிக்க முடியாத அளவுக்கு வளர விட்டு விடுகிறார்கள்.
பூக்களைக் கொண்டு பலவிதமான மாலைகள் தொடுக்கப்படுவது போல, பூக்களைப் போலவே தோன்றி மறையும் மனிதனாகப் பிறந்தவனும் பல நன்மைகளைச் செய்ய முடியும்.
நீங்கள் மற்றவர்களிடம் பேசும்பொழுது, சரியான நேரத்திலோ அல்லது தவறான நேரத்திலோ, காரணத்துடனோ அல்லது காரணமின்றியோ, அமைதியாகவோ அல்லது கடுமையாகவோ, ஒரு குறிக்கோள் பற்றியோ அல்லது குறிக்கோள் இன்றியோ, மனம் நிறைந்த அன்புடனோ அல்லது மனம் நிறைந்த வெறுப்புடனோ பேசலாம். அப்பொழுது கீழ்க்கண்டவாறு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும்:
‘நம் மனம் தவறான வழியில் செல்லாது, தீயவைகளைப் பேசாது, இரக்கத்துடனும் கருணையுடனும் மனம் நிறைந்த அன்புடனும் வெறுப்பின்றியும் வாழலாம். நாம் நிறைந்த அன்புடன் ஒருவரிடம் தொடங்கி, விசாலமான, நிறைந்த, அளவிட முடியாத, பகைமை இல்லாத கேடற்ற இந்த அன்பை இவ்வுலகெலாம் பரப்பி அனைவரிடமும் அன்பு காட்டி வாழலாம்.’ இவ்வாறு உன்னை நீ பயிற்று வித்துக் கொள்ள வேண்டும்.
சில சமயம் கட்டாயம் நடக்கும் என்று நினைப்பது நடப்பதில்லை. நிச்சயமாக நடக்காது என்று நினைப்பது நடந்துவிடும். ஆண், பெண்களின் மகிழ்ச்சி அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சார்ந்திருப்பதில்லை.
மெய்யறிவுடையவனை மூன்று விதத்தில் தெரிந்து கொள்ளலாம். எந்த மூன்று? அவன் தன் குற்றங்களை உள்ளபடியே தெரிந்து கொள்கிறான். தெரிந்தகொண்ட பின் அதனைத் திருத்திக் கொள்ள முற்படுகிறான். மற்றவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டால் அவர்களை மன்னித்து விடுகிறான்.
தீமையைத் தவிர், நன்மை செய்யப் பழகு, மனத்தைத் தூய்மையாக்கு. இவையே புத்தர்களின் போதனையாம்.
நீரில் இருந்து அறிந்து கொள்வீர்:
மலையில் பிளவுகளிலும் வெடிப்புகளிலும் மோதுண்டு
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ அமைதியாகவே தவழ்ந்து செல்லும்.
வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறவிலி அரை நிறை குடம்
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.
கேவலமான குற்றவாளி இரட்டைப் பிடியுள்ள இரம்பத்தால் உங்கள் கை கால்களைத் துண்டிக்கும் போது
உங்கள் உள்ளத்தைப் பகைமையால் நிரப்பிக் கொண்டால்
உங்களை என் போதனைகளைப் பின் பற்றுபவராகக் கூறமுடியாது.
அன்பின் காரணமாக உருவாகும் மனச் சுதந்திரத்தினைப் பேணி வளர்த்து, எப்போதும் பயின்று, தனது வாகனமாகவும் அத்திவாரமாகவும் அமைத்து, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி ஒன்று சேர்த்தால் ஒருவர் இந்தப் பதினொரு விதங்களில் ஆசீர்வதிக்கப்படுவார். எப்போதுமே மகிழ்வோடு தூங்குவார், மகிழ்வோடு விழிப்பார், தீய கனவுகள் காணார், மனிதர்களின் அன்புக்குரியவராவார், மற்ற உயிர்களின் அன்புக்குரியவராவார், கடவுளர் ஆதரிப்பர், தீயிலிருந்தும், விஷங்களிலிருந்தும், ஆயுதங்களிடமிருந்தும் காப்பாற்றப்படுவார், மன ஒருமைப்பாடு எளிதாக அடைவார், பொலிவுடன் காணப்படுவார், அமைதியாக மரணம் அடைவார், மரணத்தின் பின் சொர்க்கத்தில் மறுபிறப்பெடுப்பார்.
நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் விரைவில் சமாதானத்தை நாடி நீண்ட நாள் நிலைக்கக் கூடிய ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்கும் உதவாத உடைந்த விரிசலுடைய பானைகளைப் போல முட்டாள்கள் சமாதானத்தை நாடுவதில்லை. இதைப் புரிந்த கொண்ட ஒருவன், இந்தப் போதனையைச் சிந்தித்துப் பார்ப்பவன் எது கடினமானதோ அதைச் செய்ய முற்படுகிறான். அவன் போற்றத்தக்கவன். யார் ஒருவன் மற்றவரின் தூற்றுதல்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சமரசம் செய்வதற்குத் தகுதியானவன்.
Reviews
There are no reviews yet.