Description
எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead,சாபங்கள் மற்றும் பல
நவீனா அலெக்சாண்டர்
முன்னுரை
இந்தப் புத்தகத்தை எழுத (மன்னிக்கவும் தட்சு செய்ய, இப்பலாம் யாருங்க எழுதிகிட்டு) உட்கார்ந்த போது எகிப்திய நாகரீகத்தின் சுவாரசியமான சில விசயங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்களின் வேண்டுகோள் விரிவாக எழுதவேண்டும் என்பது. அதுவும் சரிதான் எனப் பட்டதால் எழுதுவதுதான் எழுதுகிறோம் கொஞ்சம் விரிவாக இந்தப் புத்தகத்தை எழுதலாம் என்று மனம் மாறியது. மனம் மாறிவிட்டாலும் கடலின் அலையில் காலை நனைப்பதற்கும் ஆழ் கடலில் நீந்துவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறதுதானே.
வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு. எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கும் எகிப்திய நாகரீகம் ஒரு கடல் போன்றது. அதில் முடிந்தவரை நீந்திக் கரை சேரப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்குக் குழந்தைகள் கூடக் கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவாரசியமான விசயங்களைப் பிய்துப்போட்டு அவைகளைப் பின்பற்றி ஒரு முழுமையான எகிப்திய நாகரீகம் குறித்த அறிமுகத்தை எழுத முயற்சி செய்கிறேன்.
எகிப்திய வரலாறு குறித்துத் தமிழில் அவ்வளவாகப் புத்தகங்கள் இல்லை என்று சொன்னால் அது வரலாற்றுப் பிழையாகிவிடப் போவதில்லை. அதை மனதில் கொண்டு முகநூலில் எகிப்து குறித்துக் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதலாம் என்று முடிவு செய்து எழுதத் தொடங்கினேன். முதல் தொடரிலிருந்தே மிகுந்த வரவேற்பு. அடுத்தடுத்த தொடர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தொடக்கத்திலேயே இதைப் புத்தகமாகக் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று படித்தவர்களும் நண்பர்களும் அன்புக் கட்டளை இடத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 30 தொடர்களைக் கடந்த பிறகு அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கினேன். இந்த முயற்சியில் எனக்கு மிகவும் உதவியாக இருந்த நண்பர் அன்சாரி முகம்மது அவர்கள்.
இது புத்தகமாக வந்தால் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சி அடையக் கூடிய நண்பர்கள் கார்த்திக்கும். ஜமால் முகமதும். அவர்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சியும்.
நவீனா அலெக்சாண்டர் (David J Praveen)
naveenaalexander@gmail.com
புதையல்களும் சாபங்களும்
பொதுவெளியில் எகிப்தின் அதி சுவாரசியமான விசயங்களாகப் பார்க்கப்படுவது பிரமிடுகள் மற்றும் மம்மிகள். எகிப்து நாகரீகத்தின் மன்னர்களைப் பாரோ என அழைக்கவேண்டும் என்று தெரியாதவர்கள் கூடப் பாரோ துத்தன்காமூன் குறித்து அறிந்துவைத்திருப்பார்கள். எகிப்திய பாரோக்களிலேயே 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டு மக்களால் பரவலாக அறியப்பட்டவர் துத்தன்காமூன். தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களைவிடப் பழம்பொருட்களைக் கடத்தும் மேற்கத்திய பெரும் பணக்காரர்களால் அதிகமாகத் தேடப்பட்டது துத்தன்காமூனுடைய கல்லறை. அதில் இருப்பதாக நம்பப்பட்ட தங்க, பழங்காலப் பொருட்கள் அடங்கிய புதையலே அதற்குக் காரணம். புதையல் என்றால் துணி மூட்டையாகக் கட்டும் அளவிற்கு இருக்கலாம் இல்லை ஒரு பெட்டியில் அள்ளும் அளவிற்கு இருக்கலாம் என்று அவசரப்பட்டுவிடாதீர்கள். எகிப்திய பாரோக்களின் அரசவையில் அதிகாரியாக இருந்தவர்களின் கல்லறைப் புதையல் என்றாலே பல அறைகள் முழுவதும் போட்டு அடைக்கும் அளவிற்கு இருக்கும். அப்படியானால் பாரோக்களின் கல்லறை புதையலை வண்டி வண்டியாகத்தான் நீங்கள் வீட்டிற்கு எடுத்துவரவேண்டும். இவ்வளவிற்கும் பாரோக்களைப் பிரமிடுகளில் அடக்கம் செய்துவிட்டு அரச பரிவாரம் நகர்ந்த மறு நிமிடமே கல்லறை திருடர்கள் பிரமிடுகளுக்குள் நுழைந்துவிடுவார்கள். வண்டி வண்டியாக உள்ளே தங்கம் இருந்தால் யார்தான் விட்டுவைப்பார்கள்.
கல்லறைத் திருடர்களால் பல ஆயிரம் ஆண்டுகள் சூறையாடப்பட்டும் பிரமிடுகளில் புதையல் பொருட்கள் எஞ்சியிருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் புதையல் பொருட்களைத் திருடத்தான் மேற்கத்திய பெரும் பணக்காரர்களும் 19-ஆம் நூற்றாண்டுத் தொடங்கி இரண்டாம் உலகப்போர் காலம் வரை துடியாய்த் துடித்தது. அந்தப் புதையல் பொருட்களைத் திருடி பணம் பண்ணுவதற்கு அல்ல அந்தப் புதையல் பொருட்களைத் தங்களுடைய வீடுகளில் சேமித்துத் தங்களுடைய செல்வத்தை மற்றவர்களுக்குப் படம் காட்டத்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எகிப்து நாகரீக பழமைப் பொருட்களைச் சேகரிப்பது என்பது சாதாரணப்பட்டகாரியமல்ல. வரலாற்று அறிவும் தொல் பொருள்தேடல் அறிவும் கொண்ட ஒரு நபரைப் பிடிக்கவேண்டும். அவருக்கு உண்மையிலேயே அத்தகைய அறிவு இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டும். பிறகு அவரை எகிப்திற்கு அனுப்பித் தொல் பொருட்களைத் தேட வைக்கவேண்டும். எகிப்திற்குச் சென்ற நபர் எவ்வளவு நாட்களில் விலை உயர்ந்த தொல் பொருட்களைக் கண்டுபிடிப்பார் என்று நிச்சயமாக ஒரு காலவரையறை எல்லாம் சொல்ல முடியாது. வாரங்களாகலாம், மாதங்களாகலாம் ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம்.
அவ்வளவு நாட்களுக்கும் எகிப்தில் இருக்கும் நபருக்கான தனிப் பட்ட செலவு மற்றும் மாத சம்பளம், விலை உயர்ந்த பழங்காலப் பொருட்களை அடையாளம் காட்ட அழ வேண்டிய இலஞ்சப் பணச் செலவு, இறுதியில் எகிப்திற்கு அனுப்பப்பட்ட நபருக்கான போக்குவரத்துச் செலவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய இலஞ்சப் பணச் செலவையும் சேர்த்தால் யானையைக் கட்டித் தீனிபோடும் காரியம் போன்றது இது. இப்படி ஒருவர் இருவர் அல்ல மேற்கத்திய நாடுகளில் பல பணக்காரர்கள் எகிப்திற்கு ஆட்களை அனுப்பி எகிப்தின் பழங்காலப் பொருட்களைத் திருடியிருக்கிறார்கள். பல ஆயிரமாண்டுகாலக் கல்லறைத் திருடர்களையும் கடந்து 19-ஆம் நூற்றாண்டு பணக்காரத் திருடர்களுக்கும் எகிப்திய பாரோ மன்னர்களின் செல்வ செழிப்பு ஈடுகொடுத்திருக்கிறது என்றால் அத்தகைய செல்வ செழிப்பை கட்டியாண்ட பாரோக்களைக் குறித்து நாம் தெரிந்துகொள்ள ஆர்வமாகத்தானே இருக்கும்.
பிரமிடு புதையல் ஒருபுறம் என்றால் பிரமிடிற்குள் இருந்த மம்மிக்களும் மேற்கத்தியர்களின் கண்களை உறுத்தோ உறுத்துயென்று உறுத்தியிருக்கிறது. மம்மி செய்யப்பட்ட உடலின் பாகங்களில் மிகுந்த மருத்துவக் குணம் இருக்கிறது என்று யாரோ எப்போதோ கிளப்பிவிட்டுவிட்டார்கள். மேற்கத்தியர்களால் மம்மிகளும் வேட்டையாடப்பட்டன. இப்படி எந்த எந்தப் பாரோக்களின் மம்மிகள் எல்லாம் கள்ளத் தனமாக மேற்குலகத்திற்குக் கடத்தப்பட்டன என்பது குறித்தெல்லாம் கடத்தப்பட்ட மம்மிகளுக்கும் கடத்தியவர்களுக்குமே வெளிச்சம் பிரமிடின்புதையல் மற்றும் மம்மியோடு சேர்த்து பிரமிடு மற்றும் கல்லறை கோயில்களில் இருக்கும் சாபங்கள் குறித்தும் மேற்குலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட காலமெல்லாம் உண்டு. இதற்கும் முக்கியக் காரணம் பாரோ துத்தன்காமூனே. இந்தச் சாபங்களைக் குறித்து உலகம் இப்படித்தான் அறிந்திருந்தது அதாவது ‘பாரோக்களின் சாபம்’. பெரும் இயற்கை பேரிடர் தொடங்கி வயிற்று வலி நோய் வரை இந்தச் சாபங்கள் செய்யும் வேலைகளில் அடங்கும்.
இன்றைக்கும் எகிப்திர்கு சுற்றுலாவிற்குச் செல்பவர்களில் சிலர் வயிற்று வலி சாபத்தால் பாதிக்கப்படுவதுண்டு. பாரோக்களின் சாபங்களிலேயே உலகப் புகழ்பெற்றது துதன்காமூனுடைய சாபம்தான் அதன் பெயர் ‘தூத அரசனின் சாபம்’ எகிப்தியர்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே இத்தகைய சாபங்கள் குறித்த கதைகளுக்குப் பழகிப்போனவர்கள் ஆனால் இருபதாம் நூற்றாண்டு உலகத்திற்கு இந்தச் சாபங்கள் குறித்த விசயங்கள் மிகப் புதுமையான விசயம். இந்தப் புதுமையான அதே சமயத்தில் சுவாரசியமான சங்கதி தொடங்கியதே பாரோ துதன்காமூனிடமிருந்துதான். துதன்காமூனுடைய கல்லறையில் மிக அதிக அளவில் தங்கம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் மலைப் போலக் குவிந்திருக்கிறது என்பது செவி வழி செய்திகளில் ஒன்று பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டு மேற்குலகத்தினருக்கும் இந்தச் செவி வழி செய்தியில் அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு. நம்பிக்கை இருந்தால் மட்டும் போதுமா பாரோ துதன்காமூனுடைய கல்லறை எகிப்தில் எங்கே ஒளிந்திருக்கிறது என்பது தெரியவேண்டாமா.
Reviews
There are no reviews yet.