Description
இந்தியாவில் சாதிகள்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
உள்ளூர் மற்றும் உலகளாவிய அளவில் மாந்தரின் நாகரிக வளர்ச்சியின் தொகுப்பாக விளங்கும் காட்சிப் பொருட்களை நாம் கண் கூடாகப் பார்த்திருப்போம் எனத் துணிந்துரைப்பேன். ஆயின், மாந்தரின் நிறுவனங்கள் (Human Institutions) என்பவற்றை வெளிப்படுத்தக் கூடியனவும் உள்ளன என்னும் கருத்தைச் சிலரே ஏற்கக்கூடும். மாந்தரின் நிறுவனங்களை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது விநோதமானதொரு கருத்தே; சிலர் இதனை
முரட்டுத்தனமான கருத்தென்றும் கூறலாம். எனினும், மானுடவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்ற வகையில் உங்களுக்கு இந்தக் கருத்து புதுமையானதாக இருக்காது, இருக்கலாகாது எனக் கருதுகின்றேன். எப்படியும் இந்தக் கருத்து புதியதாக இருக்கலாகாது.
நீங்கள் யாவரும் பாம்ப்பியின் (Pompii) சிதைவுகள் போன்ற சில வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்திருப்பீர்கள். இவற்றின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றையும் விளக்கியுரைப்பதற்கென்று பணியாற்றும் வழிகாட்டிகளின் வருணனைகளை வியந்து கேட்டிருப்பீர்கள். என் கருத்துப்படி மானுடவியல் மாணவர்களும் ஒரு வகையில் இந்த வழிகாட்டிகளைப் போன்றவர்களே என்பேன். அவர்களைப் போன்றே சமூக நிறுவனங்களை விளக்கியுரைப்பதற்குத் தம்மால் முடிந்த அளவு தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து அதே வேளையில் மிகுந்த ஆர்வத்தோடும் பொறுப்போடும் அவற்றின் தோற்றத்தையும் செயற்பாடுகளையும் இவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தொன்மைக்காலச் சமுதாயத்தையும் தற்காலச் சமுதாயத்தையும் ஒப்பிட்டு நோக்குவதில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களான இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள நம் மாணவ நண்பர்களில் பெரும்பாலோர் தம்மைக்
கவர்ந்துள்ள தற்கால மற்றும் பண்டைய கால நிறுவனங்களைத் தெரிந்து திறம்பட எடுத்துரைக்க வல்லவர்களாவர். இந்த மாலைப் பொழுதில் நானும் என்னால் இயன்றவரை உங்களை மகிழ்விப்பதற்கு இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் – பிறப்பும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் என் கட்டுரையை படைக்க விரும்புகின்றேன்.
நான் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பின் சிக்கல்களை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். என்னைவிட அறிவாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கோர் பலர் சாதிகள் பற்றிய புதிர்களை விடுப்பதற்கு முயன்றுள்ளனர். எனினும் துரதிருஷ்டவசமாக இப்புதிர் விளக்கிக் கொள்ள முடியாதது என்று கூறுவதற்குரியதாக இல்லையாயினும் ‘விளக்கப்படாததாகவே’ இருந்து வருகின்றது. சாதி போன்ற மிகப் பழமை வாய்ந்த அமைப்பின் குழப்பமான சிக்கல்களை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். எனினும், இது தெரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று ஒதுக்கி விடும் நம்பிக்கையற்ற மனநிலை உடையவன் அல்ல; அதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே நான் நம்புகிறேன்.
கோட்பாட்டு அளவிலும் நடைமுறையிலும் சாதிப் பிரச்சினை மிகப்பெரியதொன்றாகும். நடைமுறையில் சாதி என்பது மாபெரும் பின் விளைவுகளை முன் அறிகுறியாகக் காட்டும் ஒரு அமைப்பாகும். சாதி சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல்; ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில் “இந்தியாவில் சாதிமுறை உள்ள வரை இந்துக்கள் கலப்பு மணம் செய்யமாட்டார்கள்; அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள்; இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்.” கோட்பாட்டு அளவிலோவெனில், சொந்த ஆர்வத்தினால் சாதியின் மூலாதாரங்களைத் தோண்டித் துருவி அறிய முற்பட்ட எத்தனையோ வல்லுநர்களுக்கு இந்தச் சிக்கல் ஒரு சவாலாக இருந்திருக்கிறது. எனவே இந்தச் சிக்கலை நான் முழுமையாக விளக்கிவிட முடியாது. சாதி முறையின் தோற்றம், அமைப்பியக்கம் மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றை மட்டும்
விளக்கியுரைப்பதற்கு நான் வரையறை செய்து கொள்வேன். அல்லாமற் போனால் காலம், இடம், என் அறிவுத் திறன் ஆகிய அனைத்துமே என்னைக் கைவிட்டுவிடக் கூடும் என அஞ்சுகின்றேன். என் ஆய்வுரையின் குறிப்பிட்ட பகுதிகளைத் தெளிவுபடுத்துவதற்குரிய தேவை ஏற்பட்டாலான்றி மேற்கூறிய வரம்பிலிருந்து நான் விலகிச் செல்ல மாட்டேன்.
ஆய்வுப் பொருளுக்கு வருவோம். நாம் நன்கு அறிந்த மானுடவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பன்னெடுங்காலத்திற்கு முன்னர் பல்வேறு திசைகளிலிருந்தும் பலவகைப்பட்ட பண்பாடுகளோடும் இந்தியாவுக்கும் நுழைந்த பழங்குடிகளாவர்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்து வந்தோருடன் போரிட்டுத் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வந்த போராட்டங்களுக்குப் பின் நிலையாகத் தங்கிப் பிறருடன் அண்டை அயலாராகி அமைதியாக வாழத் தொடங்கினர். பின்னர் இவர்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்பின் மூலமாகவும் கலந்து பழகியதாலும் தத்தம் தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டினை இழந்து அவர்களுக்குள் ஒரு பொது பண்பாடு உருவானது.
எனினும் பலவகை இன மக்களின் தனித்தனி பண்பாடு மறைந்து ஒன்றுபட்ட ஒரே பண்பாடு ஏற்பட்டு விடவில்லை என்பதும் தெளிவு. இதனால் இந்திய நாட்டு எல்லைக்குள் பயணம் செய்யும் பயணி ஒருவர் இந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள மக்கள் உடலமைப்பிலும் நிறத்திலும் வேறுபட்டிருப்பதைக் காணலாம்; அவ்வாறே தெற்கிலும் வடக்கிலும் உள்ள மக்களிடையேயும் வேறுபாடு இருக்கக் காணலாம். இனங்களின் கலப்பு என்பது எப்போதும் ஒரே இயல்புள்ளதாக இருக்க வேண்டும் என்று ஆகாது. மானுடவியல் படி மக்கள் யாவரும் பலபடித்தான (Heterogeneous) தன்மை கொண்டவர்களே.
அந்த மக்களிடையே நிலவும் பண்பாட்டு ஒருமையே ஓரியல்பு தன்மைக்கு அடிப்படையாகும். பண்பாட்டு ஒருமைப்பாட்டினால் இணைந்துள்ள இந்திய தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு வேறு எந்த நாடும் இல்லை என்று துணிந்து கூறுவேன். இந்தியா நாடு புவியியல் ஒருமைப்பாட்டினை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அதினினும் ஆழமும் அடிப்படையாகவும் உள்ளதான – இந்திய நாடு முழுவதையும் தழுவிய ஐயத்திற்கு இடமற்ற பண்பாட்டு ஒருமைப்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த ஒத்த இயல்பின் காரணமாகவே சாதி என்பது விளக்கிவுரைக்க இயலாத சிக்கலாக உள்ளது. இந்து சமுதாயம் என்பது ஒன்றுக்கொன்று தனித்தனியே இயங்கும் பிரிவுகளின் ஒரே கூட்டமைப்பாக மட்டும் இருக்குமேயானால் இந்தச் சிக்கல் எளிதானதாக இருக்கும். ஆனால் சாதி ஏற்கனவே ஓரியல்பாய் உள்ள பிரிவுகளின் கூட்டமைப்பாக உள்ளதால் சாதியின் தோற்றத்தைப் பற்றி விளக்குவது கூட்டமைப்பாக அமைந்த முறையினை விளக்குவதாக ஆகின்றது.
Reviews
There are no reviews yet.