Description
இனியவை நாற்பது மூலமும் உரையும்
சங்க இலக்கியம்:
சங்க இலக்கியங்களை,
- பதினெண் மேற்கணக்கு
- பதினெண் கீழ்க் கணக்கு
இருவகையாகப் பிரித்துக் கூறுவது மரபு.
பதினெண் என்றால் பதினெட்டு: கணக்கு என்றால் நூல் (புத்தகம்). மேல்கணக்கு என்பது: – மிகவும் நீண்ட பெரிய பாடல்களைக் கொண்டுள்ள நூல்கள் மேல் என்னும் அடைமொழி பெற்றன – என்பதாகும். கீழ்க் கணக்கு என்பது: அடி அளவால் குறைந்த – அதாவது- ஐந்தடிகட்கு மேற்படாத சிறிய பாடல்களைக் கொண்ட நூல்கள் கீழ்’ என்னும் அடைமொழி பெற்றனஎன்பதாகும்.
கீழ்’ என்பது இங்கே மட்டமான தன்மை என்னும் பொருளில் இல்லை; அளவில் சிறியது என்னும் பொருளில் உள்ளது; மற்றபடி, கருத்தால் சிறந்தனவே யாகும்.
எடுத்துக்காட்டு பாடல்
சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.
இனியவை நாற்பது குறிப்பு
இனியவை நாற்பது இன்னா நாற்பதோடு பெயர் ஒற்றுமை உடையது. இந் நூலாசிரியரும் கடவுள் வாழ்த்தில் கபில தேவரைப் போன்றே சிவபெருமானை முற்படக் குறிக்கின்றார். கபில தேவர் இன்னா என்று சுட்டியதை ஒப்ப, இவரும் தாம்கூறும் அறங்களை இனிது என்னும் சொல்லால் குறிக்கின்றார். இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்துக் கூறியுள்ளமையால் இவரது நூல் ‘இனியவை நாற்பது’ எனவழங்கப் பெறுவதாயிற்று.
எனினும், இன்னா நாற்பது போன்ற கட்டுக்கோப்பு இந் நூலகத்து இல்லை. இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்குதான் உள்ளன(1,3,4,5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன ; இவற்றில்
எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின்இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனத்திற்கு உரியது.
மூன்று இனிய பொருள்களை மிகுதியும் எடுத்துக்கூறும் இந் நூல் திரிகடுகத்தோடு ஒத்த பண்புஉடையது என்று கொள்ளலாம். அன்றியும் திரிகடுகத்தில் எடுத்தாளப் பெறும் சொற்பொருளமைதிகளை இனியவை நாற்பதுபெரிதும் அடியொற்றிச் செல்லுகிறது. இவற்றை நோக்கினால், பொருளமைப்பில் திரிகடுகத்தையும், நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் இந்த ஆசிரியர் மேற்கொண்டனராதல் வேண்டும். திரிகடுகத்தை இளம்பூரணர் முதலிய பழைய உரைகாரர்கள் எடுத்தாளுதலினாலும், இந் நூலை எவரும் எடுத்தாளாமையினாலும், இந்நூல் திரிகடுகத்திற்குப் பிற்பட்டது என்று கருத இடமுண்டு.
இந் நூலின் பெயரை ‘இனியது நாற்பது’என்றும், ‘இனியவை நாற்பது’ என்றும், ‘இனிது நாற்பது’என்றும், ‘இனிய நாற்பது’ என்றும், பதிப்பாரிசியர்கள் முதலியோர் குறித்துள்ளனர். ‘இன்னா நாற்பது‘ என்பதைப் போல ‘இனியவை நாற்பது’ என இந்நூற் பெயரைக் கொள்ளுதல் நலம்.
சங்க கால காதல் வாழ்க்கை பற்றிய செய்திகளை அறிய இங்கு சொடுக்கவும்.
ஆசிரியர் வரலாறு
இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார். ஆதலால் இவரின் சமயம் வைதீகமாகும். இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.
இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராய்ச் சிறந்து விளங்கியமை குறித்து, மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றார். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பதினோராந் திருமுறையில் திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் என்பதும், திவாகரம் செய்வித்தவன் சேந்தன் என்னும் பெயர்பெற்றிருத்தலும் ஈண்டுச் சிந்தித்தற்குரியன.
பூதஞ் சேந்தனார் சிவனை முதலிலும், அடுத்துத் திருமாலையும், பின்னர்ப் பிரமதேவனையும் தமது கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகின்றார்.
பிரமதேவன் வணக்கம் பின் சளுக்கியர் காலத்திலேதான் பிரபலமாகக் காணப்படுகிறது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இவ் வணக்கம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். ‘பொலிசை’ என இவர் ஆளும் சொல் (39) இலக்கிய வழக்கிலோ சாசன வழக்கிலோ, இக் காலத்திற்கு முன்னர்க் காணப்பெறவில்லை. சீவக சிந்தாமணியிலேதான் (2546) இச் சொல் வழக்கு உள்ளது. எனவே, சீவக சிந்தாமணி தோன்றிய காலப் பகுதியில் இனியவைநாற்பதும் தோன்றியிருக்கலாம்.
கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்கள் இந் நூலில் உள்ளன. இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்றுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய எல்லாம் நாலடி கொண்ட அளவியல் வெண்பாக்கள். இந் நூல் முழுமைக்கும் செம்மையாய் அமைந்த பழைய உரை உள்ளது.
குறிப்பு: இனியவை நாற்பது மூலமும் உரையும் இலவசமாக தற்போது PDF வடிவில் மட்டும் உள்ளது விரைவில் ePub மற்றும் Mobi வடிவுகளிலும் கிடைக்கும்.
Saravanan –
Super