இன்னா நாற்பது மூலமும் உரையும்

(2 customer reviews)

இன்னா-நாற்பது eBook Download

  • இன்னாநாற்பது மூலமும் உரையும்

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

இன்னா நாற்பது

கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். 41 பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது.

உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு பாடல்

அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும் என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

இன்னா நாற்பது குறிப்பு

நாற்பது என்னும் எண்தொகையால் குறிக்கப்பெறும் நான்கு நூல்கள் கீழ்க்கணக்கில் உள்ளன. அவற்றுள் கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் என்னும் பொருள் பற்றிப் பாடப்பெற்றவை. எஞ்சிய இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ் இரண்டும் முறையேதுன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலுங்கூட, ‘இன்னா’, ‘இனிதே’என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

நானாற்பது குறித்து இலக்கண விளக்கப்பாட்டியலில்,

காலம் இடம் பொருள் கருதி நாற்பான்
சால உரைத்தல் நானாற்பதுவே (91)

என்னும் ஒரு சூத்திரம் உளது. இதன் உரையில், ‘காலம்பற்றி வருவது கார் நாற்பது ; இடம் பற்றி வருவது களவழி நாற்பது ; பொருள் பற்றி வருவன இன்னா நாற்பது இனியநாற்பதாம். இன்னலாக்குதலை இன்னா என்றும், இனிமையாக்குதலை இனிய என்றும் கூறினார்’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. தண்டியலங்கார உரையிலும் (5) இடம் பற்றியும் காலம்பற்றியும் தொகுத்த நூல்களுக்குக் களவழிநாற்பதும், கார் நாற்பதும் உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளன.

வீர சோழிய உரைகாரர்நால் – நாற்பது நூல்களைப் ‘பின் மொழி எண் தொகை’ என்பர். அவர் உரைப் பகுதி வருமாறு:

‘இன்னா என்னும் சொல்லினையுடைய நாற்பது கவியாதொரு நூலின் உண்டு, அந்நூல் இன்னாநாற்பது எனவும், இவ்வண்ணம் இனிய நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது எனவும் வருவன பின் மொழிகள்எண் மொழிகள் ஆதலால், பின்மொழி எண்தொகை.’ இவ்உரைகாரர் இன்னா நாற்பதை முதலில் கூறி, அதன்பெயர்க்கு விளக்கம் கூறுதலின், இது இனியவை நாற்பதிற்கு முன்னர்த் தோன்றியது என்று கருதலாம். ஏட்டுப் பிரதிகளில் இன்னா நாற்பதின் பின்னரே இனியவை நாற்பது எழுதப்பெற்றிருத்தலும் இக் கருத்தை ஒரு வகையில் வலியுறுத்துகின்றது.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. நூல்அமைப்பில் இனியவை நாற்பதினும் இது செவ்வியமுறையை மேற்கொண்டுள்ளது எனலாம். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளைக்கொண்டு நான்மணிக்கடிகையைப் போன்று இந் நூல் அமைந்த போதிலும், ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின், இது ‘இன்னா நாற்பது’ என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. சிற்சில பொருள்களை இவ்வாசிரியர் மீண்டும் எடுத்துக் கூறுதல் அந்தஅறங்களை வற்புறுத்தி உணர்த்துதற் பொருட்டேயாதல் வேண்டும்.

இந் நூலை இயற்றியவர் கபில தேவர். தமிழுலகில் கபிலர் என்ற பெயருடையார் பலர் உள்ளனர். இவர்களில் முக்கியமாக ஐவரைக் குறிப்பிடலாம். முதலாமவராகக் கூறத்தக்கவர் சங்க காலத்தில் பாரிக்கு உற்ற நண்பராய் விளங்கிய அந்தணராகியகபிலர். இவருக்குப்பின் கூறத்தக்கவர் இன்னாநாற்பது செய்த பிற்சான்றோராகிய கபிலர். அடுத்து, பதினோராந் திருமுறையில் வரும் கபிலதேவ நாயனார் என்பவரைக் குறிக்கலாம். பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூலில் கபிலர் பெயரால் அமைந்த சூத்திரங்கள் உள்ளன. ‘கபிலர் அகவல்’ என்னும் நூலை இயற்றிய கபிலர் ஒருவரும் உள்ளனர். இவர்களுள் பன்னிருபாட்டியலில் குறிக்கப் பெறுபவரையும் இன்னா நாற்பது செய்தவரையும், மொழியின் இயல்பைக் கொண்டு, ஒருவராகத் துணியலாம் என்பர் சிலர். மேற் குறித்த ஒவ்வொருவரும் புகுந்துள்ள துறை வேறுவேறாக இருத்தலையும், அந் நூல்களின் காலம் குறித்து வெவ்வேறு கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுவதையும் நோக்கின், ஐவரும் கபிலர் என்றபெயரில் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த புலவர் எனக்கொள்ளுதலே தகும்.

இன்னா நாற்பதின் ஆசிரியர் தமதுகடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால், இவர் சமயப் பொது நோக்கு உடையார் என்று எண்ண இடமுண்டு. புறநானூறு 56-ஆம் பாடலில் இந் நால்வரும் இம்முறையே கூறப்பட்டுள்ளனர். சிலப்பதிகாரத்திலும் நால்வரும் அடுத்தடுத்துக் குறிக்கப் பெற்றாலும், சிவபெருமானைத் தவிர ஏனையோரைச் சுட்டும் வரிசையில் சிறிது மாறுபாடுள்ளது (5,169-172; 14, 7-10). இவற்றால் இந்நாற் பெருந் தெய்வங்களையும் ஒரு சேரப் போற்றும் வழக்கம் அக்காலத்து இருந்தது போலும்!

இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. முன் நூல்களையும் மரபுகளையும் நன்கு துருவி உணர்ந்து யாத்த சிறந்ததோர் உரையாய் இது அமைந்துள்ளது.

Additional information

Authors Name

2 reviews for இன்னா நாற்பது மூலமும் உரையும்

  1. Anusuya V

    அருமையான பணி, வாழ்த்துகள்

  2. Sudhakar

    Super

Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன