Description
காளமேகப் புலவர்
தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள். ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. ‘கவிதை நயத்தையும், அக்கவிதைகள் காட்டும் பொருள் வளத்தையும் தெய்வீகச் சிந்தனைகளோடு சேர்த்தே நாம் அறிந்து உணர வேண்டும்’ என்ற உயரிய நினைவே இவற்றுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம்.
புலவர் வரலாறுகளைப் பற்றியவரை, நிலையானவொரு பகுதியாக இன்னொன்றும் விளங்கி வருகிறது. அது, அவர்கள் காலத்தையும் வரலாற்றையும் பற்றி அறிஞரிடையே நிகழும் வாதப் பிரதிவாதங்கள். இந்த இரு வகையான பொது அம்சங்களிலும் காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிட வில்லை. அதனை ஓரளவிற்குச் சுருக்கமாக நாம் முதற்கண் காண்போம்.
திருக்குடந்தைப் பகுயிலே, வடமரான பிராமணர் மரபிலே தோன்றியவர் இவர் என்பர். அவ்வூரிற் பிறந்த சோழியப் பிராமணர் என்றும் சிலர் உரைப்பர்.
நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழ்வது பாண்டி நாட்டுத் ‘திருமோகூர்’ என்னும் தலம் அந்தத் தலத்திலே கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குக் ‘காளமேகப் பெருமாள்’ என்று பெயர். அந்தக் கோயிற் பரிசாரகராயிருந்த ஒருவருடைய மகனார் இவர் எனவும் சிலர் உரைப்பர். இவர் மோகூர்ப் பெருமாளைப் பாடியிருப்பதனையும் அப்பெருமாளின் பெயரும் காளமேகமாக இருப்பதனையும் இக் கருத்திற்குச் சான்றாகவும் அவர்கள் காட்டுவர்.
இவர்களுடைய கருத்துப்படி ‘காளமேகம்’ என்பது இவருடைய இயற்பெயரே ஆகின்றது. மற்றையோர் இதனை ஏற்பதில்லை. தேவியின் அருளினாலே ஆக, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிதைகளையும் கார்மேகத்தைப் போலப் பொழிதலைத் தொடங்கிய பின்னரே இப்பெயர் இவருடைய சிறப்புப் பெயராக அமையலாயிற்று என்பார்கள் அவர்கள்.
வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே – பூசுரா
வீண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.
என்ற செய்யுளை அதிமதுரகவி செய்தனர். இதன் முதல் அடியில் குறிப்பிடப்பெறும் வரதா என்ற சொல்லைக் கொண்டு, அதுவே இவருடைய இயற்பெயராகலாம் என்பர் திரு.மு. இராகவய் யங்கார் அவர்கள்.
இவருடைய இளமைப் பருவம் எத்தகைய சிறப்பும் இன்றிக் கழிந்திருக்க வேண்டும் என்றே கொள்ளலாம். இவர், பிற்காலத்துப் பரிசாரகத் தொழிலில் அமர்ந்திருந்ததனை எண்ணினால், அவ்வாறு கருதுவதற்கு இடமும் உண்டாகின்றது.
பரிசாரகர் வரதன்
வரதன், தமக்கு வயது வந்ததும், தமக்கு ஏற்ற ஒரு பணியினை நாடித் தம் ஊரினின்றும் வெளியேறிவிட்டார். பலவிடங்கட்கும் சென்று வேலை தேடித் திரிந்தவர், இறுதியில் திருவரங்கத்துப் பெரியகோயிலை அடைந்தார். அங்கு, அவருக்குப் பரிசாரகர் வேலைதான் கிடைத்தது.
கோயில் மடைப்பள்ளி அலுவல்களில் இந்தப் பரிசாரகர் பணியும் ஒன்று. உணவு அங்கேயே கழிந்துவிடும் கிடைக்கிற சிறு ஊதியம் மிச்சம். அதனால் வரதன் நிம்மதியாக அவ்வேலையில் இருந்தார். இருந்தாலும், அவருடைய கட்டடிளமைப் பருவம், அப்படி நிம்மதியுடன் நிரந்தரமாக இருக்குமாறு அவரை விட்டுவிடவில்லை. விதி, அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கிற்று.
மோகனாங்கியின் தொடர்பு
திருவரங்கம் பெரியகோயில் ஒரு பிரசித்தி பெற்ற திருமால் திருப்பதி. அதனருகே, சிறிது தொலைவிலே திருவானைக்காத் திருக்கோயில் உள்ளது. இது பிரபலமான சிவன்கோயில் சம்புகேசு வரராகச் சிவபிரான் இங்கே கோயில் கொண்டிருக்கின்றார்.
சம்புகேசுவரர் கோயிலும் ஒரு பெரிய கோயில். இங்கேயும் பணியாட்கள் மிகுதியாக இருந்தனர். இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்து வருவதை மரபாகக் கொண்ட தேவதாசியர் பலரும் அந்நாளில் இந்தக் கோயிலில் இருந்தனர். அவர்களுள் மோகனாங்கி என்பவளும் ஒருத்தி. இவள் நல்ல அழகி; நடனத்திலும் வல்லவள்.
அழகு கொஞ்சிக் குடிகொள்ளும் இளமைப் பருவமும் மோகனாங்கிக்கு அப்போது அமைந்திருந்தது. இயல்பிலேயே அழகியான மோகனாங்கிக்கு, இளமைப் பருவத்தின் செழுமையான பூரிப்பு மேலும் அதிகமான கவர்ச்சியை அளித்தது.
அவளைக் கண்டதும் வரதன் அவள்பால் மையல் கொண்டனர். அவளை அடைவதற்கும் முற்பட்டனர். அவளும் அவருடைய அழகிலே மயக்கமுற்றாள். அவர் கருத்திற்கும் இசைந்தாள். இருவர் வாழ்வும் ஒன்றாகிக் கனிந்து, அளவற்ற இன்பநாதத்தை ஒலித்துக் கொண்டிருந்தது.
வரதன், ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கி, ஒரு சிவன் கோயில் தாசி. அவர்களின் உறவு சைவர், வைணவர் ஆகிய இருந்திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆனால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் உள்ளம் ஒன்று கலந்துவிட்டபின், உலக விவகாரங்களை நினைப்பதற்கு அங்கு இடமே இல்லை.
கேலியும் ஊடலும்
ஒரு சமயம், மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பாடலை அவர்கள் பாடத் தொடங்கினார்கள்.
‘எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’, என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாட முடியும்? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். ஆகவே, அவள் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள, அவள் செயலற்று நின்றுவிட்டாள்.
இயல்பாகவே அவள் கொண்டிருந்த பொருத்தமற்ற உறவினை வெறுத்து வந்த அந்தப் பெண்கள், மோகனாங்கியைச் சுட்டி, அப்போது வெளிப்படையாகவே பழிக்கத் தொடங்கி விட்டனர். ‘எப்படியடீ உன்னால் பாடமுடியும்?’ என்ற அவர் களின் ஏளனமான கேள்வி மோகனாங்கியை வாட்டி வதைத்தது.
மோகனாங்கி சிலையானாள். அவள் தோழியர் கும்மாள மிட்டனர்; கைகொட்டிச் சிரித்தனர். அவர்களின் குறும்புகளால் அவளது வேதனைத் தீ சுவாலையிட்டு எரியத் தொடங்கிற்று தூய சிவபக்தி அவளை அப்போது ஆட்கொள்ள, அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.
Reviews
There are no reviews yet.