நான்மணிக்கடிகை eBook

நான்மணிக்கடிகை eBook Download

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பிநாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் 101 பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் 4 அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது.

இதில் மொத்தம் 104 பாடல்கள் உள்ளன.இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.

கீழ்க்கணக்கு நூல்களுள் அடி அளவினால் நாலடியார் பெயர் பெற்றது போல, பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக்கடிகை பெயர் பெற்றுள்ளது. கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்னும் தொடர் நான்கு இரத்தினத்துண்டங்கள் என்னும் பொருளைத் தருவதாகும். ஒவ்வொருபாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத் தேர்ந்தெடுத்துப்பிணைத்து, அழகிய சொற் கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளனர். அதனோடு சொல்லும் முறைமையிலும்ஓர் ஒருமைப்பாடு அமைந்திருத்தலை நூல் முழுவதும் காணலாம். ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலை ஆகிய இடைப் பிறவரல்கள் இன்றி, நந்நான்கு பொருள்களைப் பாடல்தோறும் திறம்படஅமைத்துள்ள ஆசிரியரின் புலமைத் திறனும் கவித்திறனும் யக்கத்தக்கனவாம்.

விளம்பிநாகனார்

இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவராவர். நாகனார் என்பது இவரது இயற்பெயரையும் விளம்பி என்பது இவரது ஊர்ப் பெயரையும் குறிப்பதாகக்கொள்ளலாம். இள நாகனார், இனிசந்த நாகனார், வெள்ளைக்குடிநாகனார், என்று இவ்வாறு ‘நாகனார்’ என்ற பெயரைத்தாங்கிய புலவர் பலர் தொகைநூல்களில் காணப்படுகின்றனர். எனவே, நாகனார் என்பது நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் ஒரு பெயரே ஆகும். விளம்பி என்பது ஊர்ப்பெயர் அன்றி, வேறு காரணம் பற்றிய அடைமொழியாக இருத்தலும் கூடும்.

இவர் பெயர் சங்கத்துச்சான்றோர் பெயர் வரிசையில் காணப்பெறாமையினாலும், கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப்’பிற்சான்றோர்’ எனப் பேராசிரியர் குறித்துள்ளமையினாலும், இவர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதுதெளிவு. சங்க நூல் கருத்துகளையும், திருக்குறளின் கருத்துகளையும் இவரது நூல் சிற்சில இடங்களில் அடியொற்றிச்செல்லுகிறது. ‘நாக்கு’ (75) என்ற பிற்காலச் சொல்வடிவம் இதன்கண் எடுத்தாளப் பெறுதலும், அசனம் (79),ஆசாரம் (93), சேனாபதி (52) முதலிய வடசொல் ஆட்சிகளும்,’எஞ்சாமை’ (25) முதலிய எதிர்மறைத் தொழிற்பெயரை எதிர்மறை வியங்கோள் பொருளில் வழங்கியிருத்தலும், பிறவும், இவர் பிற்சான்றோர் என்பதை உறுதிப்படுத்துவனவாம். இந்நூலுள் வரும் ‘அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்'(82) என்னும் செய்யுள் அடியும், ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் பல்லவையோர் சொல்லும்பழுது அன்றே’ என்னும் சிலப்பதிகார வெண்பாப்பகுதியும் சொற்பொருள் ஒற்றுமையுடையன. ‘பல்லவையோர்சொல்’ என்று சிலப்பதிகாரம் சுட்டுவதால், இது அக்காலத்துப்பெருக வழங்கிய ஒரு பழமொழியாகலாம். இரண்டு நூல்களும் இதனை எடுத்தாளுதலினால், இந்நூல்கள் ஒரே காலப்பகுதியில் தோன்றியனபோலும்!

இந் நூலின் முதற்கண் உள்ள கடவுள்வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் மாயவனைப் பற்றியவை. எனவே, இந் நூலாசிரியரை வைணவ சமயத்தினர் என்றுகொள்ளலாம்.

கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டு நீங்கலாக இந்நூலுள் 101 செய்யுட்கள் உள்ளன.’மதிமன்னும் மாயவன்‘ என்ற கடவுள் வாழ்த்தும், நூலுள், ‘கற்ப, கழிமடம் அஃகும்(27)’, ‘இனிது உண்பான் என்பான்'(58), என்னும் இரு செய்யுட்களும் பஃறொடைவெண்பாக்கள். ஏனைய எல்லாம் நேரிசை, இன்னிசை, அளவியல் வெண்பாக்கள்.

மூன்று செய்யுட்கள் பா வகையால் வேறுபட்டபோதிலும், இவற்றிலும் நந்நான்கு பொருள்களே அமைந்துள்ளன.’நான்மணிக்கடிகை சதம்’ என்று பிரபந்த தீபிகை ஆசிரியர் அளவு குறித்த போதிலும், மேற்குறித்த 101 செய்யுட்களுக்கும் பழைய உரை காணப்பெறுதலின், அவ் உரைகாரர் காலத்திலேயே நான்மணிக்கடிகை இவ்வாறு அமைந்துள்ளமை தெளிவாம்.

சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் வெளியிட்ட யாழ்ப்பாணப் பதிப்பில், ‘கல்லில்பிறக்கும்’ (5), ‘நகை இனிது’ (36) ‘யானைஉடையார்’ (53),என்னும் மூன்று செய்யுட்களும் காணப்படவில்லை. 65,66-ஆம் செய்யுட்கள் முன்பின்னாக வரிசை மாறிஉள்ளன. ‘புகை வித்தாப்’ (30) என்ற செய்யுளின் பின்,’முனியார் அரிய’ எனத் தொடங்கும் ஒரு புதிய செய்யுள் தரப்பட்டுள்ளது. இது மிகைப் பாடலாக இப்பதிப்பில்நூல் இறுதியில் இணைக்கப்பெற்றுள்ளது.

நான்மணிக்கடிகை

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க. இப்பாடல் டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை நூலில் 85 வது பாடல்

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்

இவ்வெண்பாபில் முதல் மூன்று கருத்துக்களும் கூற்றம் (death) என்ற சொல்லில் முடியும் போது நான்காவது கருத்து கூற்றம் என்ற சொல்லுடன் தொடங்குகிறது. முதல் மூன்று கருத்துக்களும் ஒரு படிவத்தை (Pattern) கொண்டுள்ளபோது நான்காவது கருத்து படிவமாற்றம் (pattern variation) ஒன்றை பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்? கூர்ந்து மேற்கண்ட செய்யுள் அமைப்பை பார்ப்போமானால் ஒரே படிவத்தையே பயன் படுத்தியிருந்தால் செய்யுளுக்கு இப்பொழுது கிடைக்கும் இனிமை கிடைத்திருக்காது. மற்றும் கடைசிக் கருத்துக்கு படிவமாற்றம் இன்றி அளிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது அதற்கு கிடைத்திருக்கும் அழுத்தம் (emphasis) படிவ மாற்றம் இல்லாதபோது கிடைத்திருக்காது.

இந் நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உள்ளது. சிற்சில இடங்களில் பொருள் நயத்தைத்தனிப்பட எடுத்துக்காட்டுவதோடு, பாட வேறுபாடுகளையும் ஒரு சில இடங்களில் சுட்டிக் காட்டிக் கருத்தைப்புலப்படுத்தியும் இவ் உரை அமைந்துள்ளது. சுருக்கமும்தெளிவும் இவ் உரையின் தனி இயல்புகள்.

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “நான்மணிக்கடிகை eBook”

Your email address will not be published. Required fields are marked *