Description
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 2
ஜான் பெர்கின்ஸ்
மொழிபெயர்ப்பாளர் முன்னுரை
தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைக்கு இடம்கொடுத்த அனைத்து உலக நாடுகளின் சமூகப் பொருளாதார நிலை பற்றியும், அவர்களது உழைப்பும், வளங்களும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களால் சுரண்டப்படுவது குறித்தும், அதற்குத் துணையாக இருந்து தரகு வேலை பார்த்த பொருளாதார அடியாட்கள் பற்றியுமான ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணமாகத்தான் ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் முதல் பாகத்தைப் பார்க்கிறோம். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 2015 இல் நவீன பொருளாதார அடியாட்கள் பற்றியும், அமெரிக்கா பற்றியும், அதே மரணப் பொருளாதாரக் கொள்கையைக் கையிலெடுத்திருக்கும் சீனா பற்றியும் அவர்களது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் பற்றியுமான பதிவுதான் இந்த இரண்டாம் பாகம்.
முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்பது ஒரு சுழற்சி முறையில் அமைந்தது. ஒருபுறம் முதலாளி வர்க்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மிகுதியாக இருக்க மறுபுறம் பற்றாக்குறையும், வறுமையும் வளர்ந்து வருவது இதன்மூலம் தொடர்ந்து தேவைகளை அதிகரிக்கச் செய்து மீண்டும் முதலாளித்துவம் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பல நிதி நிறுவனங்களின் உதவியில் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கி சாதிய, வர்க்கப் பாகுபாட்டை நிலைத்திருக்கச் செய்து அதிகாரத்தின் துணையோடு சந்தையை ஆக்கிரமிப்பதுதான் முதலாளித்துவத்தின் முதல் இலக்கு. அதற்கான முக்கியக் கருவி தனிமனிதனை முற்றிலும் கண்காணிப்பதும், அவனது தேவைகள் என்னவென அவனைத் தீர்மானிக்க விடாமல் வழிநடத்தி, அவனுக்குள் போட்டியையும், ‘பொறாமையையும் தூண்டி விட்டு சக மனிதனின் வாய்ப்பை அடித்துப் பிடுங்கித்தான் அவன் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையை அவனுள் வளர்த்துவதும், போலி ஜனநாயகத்தை முன்னிறுத்தி உழைப்புச் சுரண்டலோடு, இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதுமே ஆகும்.
இதற்காக அது நுழைகின்ற எந்தவொரு நாட்டிலும் முதலில் அதிகார அமைப்பைத் தனது அடிமையாக்க வேண்டியது அவசியமாகிறது. கையூட்டுகள் கொடுப்பது, அச்சுறுத்துவது, படுகொலை செய்வது என அனைத்துவிதமான முயற்சிகளும் செய்து எப்படியேனும் அதிகார மையத்தைத் தனக்கு அடிபணியச் செய்து விடுவது பெருநிறுவன முதலைகளின் தரகர்களான பொருளாதார அடியாட்கள் எனும் ஓநாய்கள் செய்கின்ற வேலை. ஆகவே அரசை வழிநடத்துகின்ற, அமைப்புகளை வழிநடத்துகின்ற தலைவர்கள் அனைவரும் எப்படியேனும் இந்தப் பெருநிறுவனங்களின் விசுவாசி களாக மாறிவிடுகின்றனர்.
இதில் பெரிதும் வருத்தப்படவேண்டியது என்னவென்றால் இந்த வகையான அடிமைச் சிந்தனையை மக்களே ஏற்றுக் கொள்வதுதான். “ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும்போது அது பௌதீக சக்தியாகிவிடும்” என்பார் கார்ல் மார்க்ஸ். அந்த வகையிலே உலகம் முழுவதுமே முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் அனைத்திலும் இந்த அடிமைத்தனமும் மக்களைக் கவ்விப் பிடித்துவிட்டது. இதற்கும் அந்த பெருநிறுவனங்கள்தான்
மீள்வதற்கு மாணவர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், நடுத்தர வயதினர், ஓய்வு பெற்றோர் என அனைவருக்குமான சமூக நடைமுறை முன்வைக்கப்படுகிறது.
ச.பிரபு தமிழன்
அத்தியாயம் 1 – சதி செய்து எனது உணவில் நஞ்சு கலக்கப்பட்டதா?
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” முதல் பதிப்பு வெளியான நாளிலிருந்து நிலைமை மேலும் மோசமடைந்து விட்டது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன், என்னுடைய அந்தப்புத்தகம் மக்களை விழிப்படையச் செய்யும் என்றும் அவர்களை ஊக்கமடையச் செய்து நிலைமையை அப்படியே மாற்றிவிடும் என்றும் எதிர்பார்த்தேன். அதில் கூறப்பட்ட உண்மைகள் அனைத்தும் வெளிப்படையானது. நானும், என் போன்றவர்களும் இணைந்து பெருநிறுவனத்துவத்தை ஆதரிக்கும் பொருளாதார அடியாட்கள் கூட்டத்தை உருவாக்கினோம். பொருளாதார அடியாட்கள், பெருநிறுவன அதிபர்கள், வால்ஸ்ட்ரீ ட்டிலுள்ள திருட்டு முதலாளிகள், அரசுகள், குள்ள நரிகள் மற்றும் உலகம் முழுவதும் அவர்களது பிணையத்தில் உள்ளவர்கள் என இணைந்து அனைத்து மக்களையும் தோல்வியடையச் செய்யும் ஒரு உலகப் பொரு ளாதாரக் கொள்கையை உருவாக்கினார்கள். இந்தப் பொருளாதாரக் கொள்கை போர் அல்லது போர் குறித்த அச்சம், கடன், பூமியின் வளங்களைக் கொள்ளையடிக்கின்ற பொருள்முதல் வாதத்தின் உச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து தன்னைத் தானே அழித்துக்கொண்டிருக்கும். இறுதியில் இத்தகைய மரணப் பொருளாதாரக் கொள்கைக்கு பெரும் பணக்காரர்களும் பலியாவார்கள்.
நம்மில் பெரும்பாலானோர் பெரியளவில் இதற்குள் அகப்பட்டு விட்டோம். நாம் பெரும்பாலும் சுயநினைவற்று விளங்கும் கூட்டுப் பணியாளர்கள். இது மாற்றத்திற்கான நேரம். இத்தகைய நிலவரங்களை வெளிப்படுத்தியதன் மூலம் மக்களை விழிப்படையச் செய்து, 2016 இல் ஒரு இயக்கத்தை ஊக்குவித்து அதன்படி ஒரு புதிய பார்வையைத் தோற்றுவித்து அது ஒரு புதிய சூழ்நிலையையே உருவாக்கும் என்று நம்பினேன்.
உண்மையில் மக்களும் விழித்து எழுந்தார்கள். குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு இயக்கங்கள், ஐஸ்லாந்து, ஈக்குவேடார், கிரீஸ் போன்ற பல்வேறு இடங்களில் தேசிய அளவில் நடைபெற்ற நடவடிக்கைகள், பிராந்திய அளவில் நடைபெற்ற ஆரேபிய புரட்சி அலை, இலத்தீன் அமெரிக்காவில் ‘ஆல்பா’ என்றழைக்கப்படும் பொலீவிய அமெரிக்கக் கூட்டமைப்பு ஆகியவை நம் உலகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து விட்டோம் என்பதைக் காட்டுகிறது.
Reviews
There are no reviews yet.