Description
பாலைக் கலி
கலித்தொகை தெளிவுரை
அருமைமிகுந்த நம் தமிழ்த்தாயின், அழகுமிகுந்த அணிவகைகள் பலவற்றுள்ளும், ஒளிமிகுந்த இரத்தினக் கற்களாலே இழைத்துச் செய்துள்ள, செம்பொன்னின் செய்வினைத் திறனெலாம் நிரம்பிய நல்லணிகளாகத் திகழ்வன கலித்தொகைச் செய்யுள்கள் ஆகும். ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என்ற பழங்காலச் சான்றோரின் மதிப்பீடு, மிக மிகப் பொருந்துவதே என்பதனைச், சொல்லுக்குச் சொல், கருத்துக்குக் கருத்துச் சுவைகனியும் தமிழ்த் தேறலாக அமைந்த இந்நூலின் செய்யுள்கள் அனைத்தும் காட்டுவன. அவை, கற்பவரின் உள்ளத்தே கலையிலாக் களிப்பையும் வியப்பையும் உயிர்ப்பையும் உணர்வையும் பெய்தும் வருகின்றன.
கலித்தொகை, பண்டைக் காலத்தே இசையோடு பாடும் இசைப்பாட்டாகவே விளங்கியது. இதனைத் தொல்காப்பியச் செய்யுளியலிலுள்ள, ‘ஒற்றொடு புணர்ந்த’ (நூ.பா. 242) என்னும் நூற்பாவின்கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, “அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை
மார்க்கத்தன என்பது” என்னும் உரைப்பகுதி விளக்கும்.
‘நெய்தற் கலியினைச் செய்தவரான ஆசிரியர் நல்லந்துவனாரே, இந்நூலின் பிற கலியினையும் சேர்த்துக் கலித்தொகையைத் தொகுத்துள்ளனர் என்பதும், நச்சினார்க்கினியரின் உரைப்பகுதிகள் காட்டும் உண்மையாகும்.
இது ‘கலி’ எனவும், ‘கலிப்பா’ எனவும், ‘கலிப் பாட்டு’ எனவும், ‘நூற்றைம்பது கலி’ எனவும் பண்டைய உரையாசிரியர்களால் குறிக்கப்படும். ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலியென்று சொல்லப்படும் நால்வகைப் பாவகையுள், இது ‘கலிப்பா’ வகையைச் சார்ந்தது ‘வெண்பா நடைத்தே கலியென மொழிப’ என்பதனால், இதனை வெண்பாவின் பகுதியாகவும் சான்றோர் குறித்துக் காட்டுவர்.
‘தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய (அக. 59) எனவரும் மருதனிள நாகனாரின் வாக்கினால், இந் நல்லந்துவனாரை அவர் காலத்தவர் எனவும், நெய்தற்கலியை இவர் பரங்குன்றத்தே சங்கப்பேரவையிற் பாடி அரங்கேற்றியிருக்கலாம் எனவும் கருதலாம்.
அகத்தையும் புறத்தையும் போன்று பல புலவர்கள் பல சமயங்களிற் செய்த செய்யுள்களின் தொகுப்பன்று இந்நூல். கலிப்பாவின் இனிமையைத் தமிழ்ச் சான்றோர்க்கு உணர்த்துதற் பொருட்டு, ஐம்பெரும் புலவர் மணிகள், ஐவகைத் திணைகளையும் தழுவிச் செம்மைபெறப் பாடியதாகவே இந்நூலின் அமைப்பால் நாம் கருதவேண்டியதிருக்கின்றது.
செய்யுள்களின் இனிதான துள்ளல் ஓசை நயமும், உவமைகளின் திறமும், உரைக்கப்படும் அறங்களின் செறிவும், எடுத்துக்காட்டும் பொருள்களும், இவர்கள் அவ்வத் திணைசார்ந்த விலங்குகளையும் நிலத்து மக்கள் வாழ்வையும் நன்கு பழகி அறிந்தவர்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன. கலித்தொகைச் செய்யுள்கள், முன்னிலைப் பேச்சாகவே அமைந்தன; பேசுவார் பேச்சோடு நம்மையும் இணைத்துப் பிணைப்பன; அவர் தம் உணர்வுகளோடு நம்மையும் ஒருங்கே இணைப்பன; ஓர் அருமையான கனிவையும் நிறைவையும் நம்பாலும் எழச் செய்வன; நிறைதமிழின் நீர்மையெல்லாம் தம்பாற் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையினாலே, கலித்தொகைச் செய்யுட்கள் தீட்டிக் காட்டும் காவிய நாடகங்களுள், நாமும் ஒருவராகவே கலந்து, நுகர்கின்ற இன்பமயக்கமும் நமக்கு மனத்திரையிலே உண்டாகின்றது.
மக்களின் இயல்பான வாழ்வியலை இலங்கச் செய்வனவே இக் கலியிலுள்ள செய்யுள்கள். அக்காலத்து ஐவேறு நிலத்தவர்களின் பல்வேறு வாழ்க்கை நிலைமைகளையும், சுவை குன்றாமல் அழகோடும் நயமாகவும் விளக்குகின்றன. இயல்பிறந்த கற்பனைகளாகப் பாடாமல், இயற்கையின்கண் தோன்றும் செவ்விகளையே அழகுறச் சொல்லோவியப் படுத்தி அமைத்துள்ளனர். அவ்வழகுகள் சொல்லோவியத்திறத்தால் அவை தாமும் மேலும் அழகுபெற்று, நம்மையும் களிப்பூட்டுகின்றன.
Reviews
There are no reviews yet.