Description
பன்னிருதிருமுறை
சுந்தரர்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு சுந்தரர் அருளியது
1026 பாடல்கள் கொண்ட 100 பதிகங்கள் கிடைத்துள்ளது
தொகுப்பு: சங்கர்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர்,
பண் – இந்தளம்,
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.,
சுவாமிபெயர் : தடுத்தாட்கொண்டவீசுவரர்.
தேவியார்: வேற்கண்மங்கையம்மை.
பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே. #1 *****
பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, ‘அருட்டுறை’ என்னும் திருக்கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, ‘உனக்கு அடியவன் அல்லேன்’ என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
திருவெண்ணெய்நல்லூர்
நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே. #2
மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, ‘அடியவன் அல்லேன்’ என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
திருவெண்ணெய்நல்லூர்
மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே. #3
தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, ‘அடியவன் அல்லேன்’ என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.
திருவெண்ணெய்நல்லூர்
முடியேன்இனிப் பிறவேன்பெறின்
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே. #4
இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, ‘அடியவன் அல்லேன்’ என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தௌவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.
Reviews
There are no reviews yet.