Sale!

பழந்தமிழரின் உளவியல் சிந்தனை

0.009.00

Description

பழந்தமிழரின் உளவியல் சிந்தனை

றோ.பெ.றொஷான்

ஆய்வுச் சுருக்கம்:

‘உளவியல்’ என்பது இன்று காணப்படும் பல்வேறு துறைகளுக்குள்ளும் அகலக்கால் பதித்துள்ளது. உளவியல் சாராத துறைகள் இல்லை என்று கூறும் அளவிற்கு உளவியலின் தேவை நன்கு உணரப்பட்டிருக்கின்றது. கல்வி உளவியல், மருத்துவ உளவியல், வணிக உளவியல், அரசியலுக்கான உளவியல் என அதன் பன்முகத்தன்மையை அவதானிக்க முடிகின்றது. உளவியல் என்பதன் ஆங்கிலப்பதம் ‘psychology’ ஆகும். மனிதனின் ஆழ்மனத்தோடும், அதன் இயங்கு நிலையோடும் தொடர்புடைய ஒன்றாக உளவியல் காணப்படுகின்றது. உளவியலும் இலக்கியமும் என இன்று பல்வேறு ஆய்வு முயற்சிகள் இடம்பெற்றாலும் அவை பிராய்ட், யுங், லக்கான் போன்ற உளவியலாளர்கள் கலை இலக்கியம் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்தியல்களுக்கும், வரன்முறைகளுக்கும் ஏற்ப இன்னமும் முழுமை பெறவில்லை என்றே கூறலாம். அந்தவகையில் சங்க இலக்கியங்களை உளவியல்சார் கருத்துக்களின் அடிப்படையிலே ஆராய வேண்டியது காலத்தின் தேவை எனலாம். பழந்தமிழரிடத்தே நிலவிய உளவியல் பற்றிய சிந்தனைகளை ஆராய்ந்து அறிவதே இந்த ஆய்வின் பிரதானமான நோக்கமாக அமைந்துள்ளது. மேலும், இந்த ஆய்வானது பழந்தமிழரின் வாழ்வைப் பிரதிபலித்துக்காட்டும் சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையை ஆய்வு மூலமாகக் கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலைத் தரவுகளாக நற்றிணையோடு தொடர்புடைய கட்டுரைகளும், ஆய்வுநூல்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது விபரண ஆய்வு, பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நற்றிணைப் பாடல்களில் மறைந்து கிடக்கும் உளவியல்சார் வெளிப்பாட்டை வெளிக்கொணர்வதற்கு பகுப்பாய்வு முறையியல் பயன்பட்டுள்ளது. இத்துடன் நற்றிணைச் செய்யுளிட்களில் உள்ள உளவியல் சிந்தனையை விபரிப்பதற்கு விபரண ஆய்வு முறையியலும் பயன்பட்டுள்ளது. இவ்வாறான ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் நற்றிணைப் பாடல்களில் மறைந்து கிடக்கும் உளவியல்சார் சிந்தனைகள் வெளிக்கொணரப்படுவதோடு இத்தகைய ஆய்வுகள் பழந்தமிழரிடையே காணப்பட்ட ‘மனவெழுச்சி’ குறித்த எண்ணப்பாங்கினையும், மனநிலையினையும் பட்டியற்படுத்த உதவும். இத்தகைய ஆய்வுகள் ஊடாகவே உலகப்பொதுமையாகக் கருதப்படும் ‘ஆழ்மன உணர்வோட்டம்’ என்பது சங்க இலக்கியங்களுக்கும் பொருந்திவரும் உண்மை வெளிக்கொணரப்படும் எனலாம். அத்தோடு சங்க இலக்கியங்களிலே பொதிந்து கிடக்கும் இன்னோரன்ன அறிவியல்சார் சிந்தனைகளையும் வெளிக்கொணர முடியும்.

பிரதான சொற்பதங்கள்: இலக்கியம், உளவியல், நற்றிணை

1.0 ஆய்வறிமுகம்.

சங்கக் கவிதைகளை உளவியல் நோக்கில் பார்க்கும் அணுகுமுறை ஏற்கனவே தமிழில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் கூர்மையாக்கப்படவில்லை. உளவியலாளர்களான பிராய்ட்டு, யுங், லக்கான் போன்ற முன்னோடிகளால் கலை இலக்கியம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பல கோட்பாடுகளும், கருத்தியல்களும் இன்னமும் தமிழுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. எனவே இன்னும் இந்தப் பார்வையில் தமிழாய்வு பின்தங்கியே நிற்கின்றது.

‘உளவியல்’ (Psychology) என்பது இன்று ஒரு பெரம் அறிவத் துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிரசித்தம் பெற்றது. எனினும் உளவியல்சார் சிந்தனைகள்

சங்கத்தமிழரிடையே நிலைபெற்று இருந்துள்ளமையைப் பழந்தமிழ்ச் செய்யுட்களைப் பயில்வதன் மூலம் அறியலாம்.

இந்த ஆய்வின் மூலங்களில் முதல்நிலைத் தரவுகளாக நற்றிணை காணப்படுவதுடன், இவ் ஆய்வானது உணர்வு, சமூக மதிப்பீடுகள், மற்றும் அறிவு நிலை வெளிப்பாட்டில் எத்தகைய உளவியல் சிந்தனை பழந்தமிழரிடத்தே இருந்துள்ளது என்பதனை ஆராய்கின்றது.

1.1. உளவியல்

உளவியல் என்பது வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகும். இதனால் திட்டவட்டமான வரைவிலக்கணம் ஒன்றைக் கூறிவிட முடியாது. எனினும் உளவியலாளர்களான பிராய்ட், யுங், லக்கான் போன்றோர் கூறிய கருத்துக்களை உளவியலுக்கான வரையறைகளாகக்

கொள்ளலாம். அகராதிகளின் துணைக்கொண்டு ஆராயும் போது “மனிதமனம் செயல்படுவதைக் குறித்தும், மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் (அறிவியல்) துறை; Psychology.” எனவும் “The Science of the Mind மனதத்துவ சாஸ்திரம்” எனவும் பொருள் கூறப்படுகின்றது.

அந்தவகையில் ‘சிக்மண்ட் பிராய்ட்’ (Sigmund Freud) மனத்தின் இயல்பு, பாகுபாடு, செயற்பாடு என்னும் நிலைகளில் உளவியலை ஆராய்ந்து உளவியலுக்கு அறிவியல் அந்தஸ்து அளித்தார். இவரே இலக்கியப் படைப்பக்களை ஆராயப்பயன்படும் உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) பற்றி முதன் முதலில் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியுள்ளார்.

பிராய்டும், யுங்கும் மனித மனத்தின் செயற்பாடுகளுக்கு அடிமனம் எவ்வாறு காரணமாகிறது என்பதையும், கலை இலக்கியப் படைப்புக்களில் அடிமனத்தின் பங்கு என்ன என்பதையும் விளக்கியுள்ளனர். இதன் அடிப்படையில் இலக்கியப் படைப்புக்களில் இடம்பெறும் அடிக்கருத்து, பாத்திரப்படைப்பு, படைப்புக்களில் கையாளப்பெறும் குறியீடுகள் போன்றவற்றை ஆராயும் உளவியல் சிந்தனைகளுக்கு வித்திட்டவர்கள் மேற்கூறப்பட்டவர்களே ஆவர்.

முன்னைய இருவராலும் தெளிவு படுத்தப்பெற்ற அடிமனம், அறிமனம் என்னும் பாகுபாட்டில் லக்கான் அதிக ஆர்வங்கொள்ளவில்லை. மாறாக, அடிமனம் எவ்வாறு தொழிற்படுகின்றது, அடிமனச் செயற்பாட்டிற்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் குறித்தே ஆராய்ந்தார். இவ்வாறாக இலக்கியத்தில் உளவியலின் தாக்கம் உள்ளமையைக் காணலாம்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “பழந்தமிழரின் உளவியல் சிந்தனை”

Your email address will not be published. Required fields are marked *