Description
தமிழ்ப் பண்பாடு
பதிப்பாசிரியர் முனைவர் க.த. திருநாவுக்கரசு
அணிந்துரை
தமிழ்ப் பண்பாடு குறித்து முனைவர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள இந்நூல் மூன்றாம் பதிப்புநிலை பெறுவதிலிருந்து இந்நூலுக்கும் நூலாசிரியருக்கும் உள்ள சிறப்பு எண்ணிப் பார்க்கத் தக்கதாகும். பல்துறை அறிஞரான பேராசிரியர் அவர்கள் எமது நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார்.
பிராகிருத மொழியில் த்ரமிளம் என்றும், திரமிள தேச சங்காதம் என்றும், கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழி நூல்களில் திரமிளர், தமிளர் என்னும் சொல்லாட்சி களிலும், லலிதாவிஸ்தாரம் என்னும் பௌத்த சமயநூல் திராவிடி என்னும் எழுத்து முறையைச் சுட்டுகிறது (பக். 3-4) என்றும் பல நூல்களை ஆதாரங்கள் காட்டித் தமிழின் தொன்மைச் சிறப்பினை விளக்குகிறார்.
வாழ்வியல், பழக்கவழக்கங்கள், அழகுக்கலைகள், ஆன்மிக நெறி, மெய்யறிவு எனப் பல தலைப்புகளில் தமிழ்ப் பண்பாடு குறித்த தேடலை முன்வைத்து இந்நூலை மக்களுக்குக் கூடுதலாகச் சிந்திக்கத் தந்துள்ளார் நூலாசிரியர்.
முல்லை சான்ற சுற்பு என்பது முல்லை மலர் கற்பு நெறி மாறாக் காதல் வாழ்க்கைக்குரியதாகத் தமிழர் வாழ்ந்தனர் என்றும், பூப்பலி செய்து இறைவழிபாடு செய்யும் பூசெய் (பூசை) முறை சங்க காலத்திலேயே தோன்றிவிட்டது (u. 40) என்றும் இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வியல் குறித்த அரிய தகவல்கள் நூலாசிரியரால் விளக்கப்பட்டுள்ளன.
இசைக்கலை,சிற்பக்கலை, கட்டடக்கலை போன்ற தனித் தன்மைகளைச் சுட்டி, திராவிடக் கலைப்பாணி எனத் தனித்த இடம் வரலாற்றில் இடம்பெற்றிருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் நினைவுபடுத்துகின்றார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க்கு உதவுதல் (புறம்.195)
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்
எனும் தமிழ் அறநெறிகளை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நூலாசிரியர் பழந்தமிழ் நூல்களிலிருந்து ஆதாரங்கள் காட்டி, தமிழ்ப் பண்பாட்டின் பல கூறுகளைப் பல நிலைகளில் இந்நூலில் விளக்கியுள்ளார். தமிழர் பண்பாடு குறித்து அறியவுள்ளோருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும்.
தமிழ்ப் பண்பாடு பல நிலைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. சான்றாக:
இல்வாழ்க்கையில் முதன்மை இடத்தைத் தலைமை இடத்தைப் பெண்ணே பெற்றாள். அவள் அடக்குமுறைக்கு ஆளாகி அல்லற்பட வில்லை. தனி உரிமையோடு தற்சிந்தனை உடைய வளாக இவ்வாழ்க்கையளவில் விளங்கினாள். குடும்ப வாழ்க்கையில் ஆண்களோடு ஒத்த உரிமை உடையவர்களாக மகளிர் விளங்கினர். இல்லத்தரசியரைக் குடும்ப வாழ்க்கையின் சுமையாக அக்காலத் தமிழர்கள் கருதவில்லை. இல்வாழ்க்கைக்கு இன்றியமையாதவராக ஆண்களுடைய உயிர்நாடியாக இல்வாழ்க்கையில் ஈடுபட்ட மகளிர் பாராட்டப்பட்டனர். சங்க காலத்தில் குடும்பப் பெண்கள் மதிப்பு வாய்ந்தவர்களாகவும் சிறப்புமிக்கவர்களாகவும் போற்றப்பட்டனர். என இல்வாழ்க்கை பற்றியும்
திருமணத்திற்குரிய நல்ல நாளையும், நல்ல வேளையையும் பார்த்துத் திருமண நாளை நம் முன்னோர் உறுதி செய்தனர். பெரிதும் வளர் பிறையில் திங்களும் உரோகிணியும் ஒன்றாகச் சேர்ந்து விளங்கும் நன்னாளையே தேர்ந்து எடுத்தனர். விடியற்காவையில் திருமணத்தை நடத்தினர். திருமண நாளிற்கு முன்பு வீட்டின் முற்றத்தில் வெண்மணல் பரப்பி, பந்தல் அமைத்து, அழகிய தோரணங்கள் கட்டினர். முரசுகள் முழங்கின. திருவிளக்கு சுடருடன் ஒளிர்ந்தது. கடவுளைப் போற்றி வழிபட்டனர். சுற்றத்தார்க்கும் மற்றவர்க்கும் உணவு அளித்தனர். மணமகளை ஒப்பனை செய்து மணப்பந்தருக்கு அழைத்துவந்தனர். பூவும் நெல்லும் கலந்த நீர்
றைந்த குடங்களைச் செம்மை நலமிக்க முதுபெண்டிர் தலைமீது சுமந்து வந்தனர். குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் திருமணப் பந்தருக்குள் நுழைந்தனர்; முறை முறையாகக் குடங்களைப் பெற்ற மணமகள்மீது பூவும் நெல்லும் விளங்குமாறு நீரையூற்றி முழுக்காட்டினர்; முழுக்காட்டும்போது “கணவனால் என்றும் விரும்பப்படும் மனைவியாக இருப்பாயாக” என்று வாழ்த்தினர் பெற்றோரும் உடன்பிறந்தோரும் “பெருமை மிகு வீட்டிற்குரிய தலைவியாய் வாழ்க” என்று வாழ்த்தித் தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து வாழ்த்தொலி எழுப்பினர். பிறகு அன்றிரவே மணமகனும் மணமகளும் மணவறையில் கூடி மகிழுமாறு தனியே விடப்பட்டனர். எனத் திருமண முறை பற்றியும்
Reviews
There are no reviews yet.