திணைமொழி ஐம்பது மூலமும் உரையும்

திணைமொழி ஐம்பது eBook

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகன் ஆவர்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு பாடல்

புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும்என் நெஞ்சு.

திணைமொழி ஐம்பது

ஐந்திணை ஐம்பதைப் போன்று ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளது இந் நூல். அந் நூலோடு வேறுபாடு தெரியத் திணைமொழி ஐம்பது என்று பெயர் குறித்தனர் போலும்! இரண்டும் ஒரே வகையான அமைப்பு உடைமையினாலே, இவற்றுள் ஏதேனும் ஒன்று ஒன்றற்கு வழிகாட்டியாய் இருந்திருக்கலாம். எது எதற்கு முன் மாதிரியாய் அமைந்தது என்பது உறுதியாகச் சொல்லக்கூடவில்லை.

இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் அடைவில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இம்முறை அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்ததாகும்.

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல், இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே

என ஆசிரியர் தொல்காப்பியர் (தொல். பொருள்.14)உரிப் பொருளை வகுத்துள்ள முறையை இது பெரிதும் பின்பற்றியுள்ளது. தொல்காப்பியர் இரங்கல், ஊடல், என்று கூற, இந் நூல் ஊடல், இரங்கல், என்று கொள்கிறது. இது ஒன்று தவிர, மற்றைய திணைகளின் அமைப்பு பொருளின் போக்கிற்கு ஒத்த முறைவைப்பு ஆகும்.

இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக்கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று கருதலாம். புறநானூற்றில் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைப் பாடிய சாத்தந்தையார் (புறம்.80-82, 287) என்னும் புலவரே கண்ணன் சேந்தனாரின் தந்தையார் என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் அந்நூலின் பாடினோர் வரலாற்றில் குறித்துள்ளார். இங்ஙனம் கொள்ளுதற்குப் பெயர் ஒற்றுமை தவிர வேறு ஒன்றும் இல்லை. இது கொண்டு இருவரும் ஒருவரே என்று துணிதல் இயலாது. கண்ணஞ் சேந்தனார் சங்கச்சான்றோர்க்குப் பின் வாழ்ந்த பிற்சான்றோர் ஆதலின், புறநானுற்றில் காணும் சாத்தந்தையார் இவர் தந்தையார் ஆகார். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலின், சேந்தனாரும் கூத்தனாரும் ஒருகால் உடன் பிறந்தோராயிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடம் உண்டு.

இந்நூலில் உள்ள பாடல்கள் 50. இவை ஏனைய திணை நூல்களைப் போலவே பொருள் வளம் மிக்கவை.

யாழும் குழலும் முழவும் இயைந்தென
வீழும் அருவி விறல் மலை நல் நாட!
மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இரவரின்,
ஊர் அறி கௌவை தரும்

என்ற பாடலின் (7) ஈற்றடியை ஒப்ப, ‘குடத்து விளக்கேபோல்’ என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப்பாடலின் ஈற்றடியும், ‘நாடு அறி கௌவை தரும்’ என்று உள்ளது. நச்சினார்க்கினியர் முதலியோர் இந் நூற்பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

இந் நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உள்ளது. வேறு சில உரைகளிற்போலப் பதசாரம், உள்ளுறைப் பொருள், இலக்கண விளக்கங்கள் என்னும் இன்னோரன்னவற்றை எடுத்துக் காட்டாவிடினும், பாடலின்பொருளைத் தெளிவாக இவ் உரை உணர்த்துகின்றது. பாடல்களுக்குப் பழைய துறைக் குறிப்புகளும் அமைந்துள்ளன.

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “திணைமொழி ஐம்பது மூலமும் உரையும்”

Your email address will not be published. Required fields are marked *