Description
திரு.வி.க. வாழ்வும் தொண்டும்
சக்திதாசன் சுப்பிரமணியன்
முன்னுரை
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்திரண்டாம் ஆண்டு. திருவையாற்று அரசர் கல்லூரியிலே தமிழ் வித்து வான் படித்துக் கொண்டிருந்தேன் நான்.
எங்கள் கல்லூரி மாணவர் பலரும் சேர்ந்து ஒரு கழகம் அமைத்திருந்தனர். அக்கழகத்தின் பெயர் திருவள்ளுவர் கழகம் என்பது. அதன் அமைச்சராக விளங்கியவர் சிவகுரு நாதன் என்பவர்.
திருவள்ளுவர் கழகத்திலே தமிழ் நூல்கள் பல இருந்தன. அந்நூல்கள், மாணவர்க்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. ஓய்வு நேரங்களிலே அந்நூல்களைப் படிக்கலாம். படித்துப்பயன் பெறலாம். இக்கருத்துக் கொண்டே அந் நூல்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.
ஒருநாள் திருவள்ளுவர் கழகத்திலே இருந்த நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். என்னைக் கவர்ந்தது ஒருநூல். அந்நூலின் பெயர் “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்பது. அந்நூலை எழுதியவர் யார் என்று நோக்கிளேன். திருவாரூர் வி. கலியாண சுந்தரன்’ என்றிருக்கக் கண்டேன்.
நூலை எடுத்தேன்; பக்கங்களைப் புரட்டினேன். அதில் தோய்ந்தேன்; மூழ்கினேன்; முங்கினேன்; ஆழ்ந்தேன்; அமிழ்ந்தேன். அந்நூல் என்னைக் கவர்ந்ததன் காரணம் என்ன? காரணம் சூழ்நிலை என்பேன். சூழ்நிலை எவ்வாறு இருந்தது?
விடுதலை வேகம் எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந் தது. உப்புப் போராட்டம் ஓய்ந்து விட்டது. கள்ளுக் கடை மறியல் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.
கோயில் நுழைவு வேண்டி உண்ணாவிரதம். தீண்டாமை ஒழிப்புப் போராட்டம். இவ்வாறு எங்கும் போராட்ட மேகங்கள் இடித்தன; குமுறின; முழங்கின.
மகாத்மா காந்தி தென்னாடு நோக்கினார். காந்தீய மின் சக்தி எங்கும் பாய்ந்தது. எழுச்சி! எழுச்சி! எழுச்சி. வேகம்! வேகம்! வேகம். எழுச்சியும் வேகமும் என் செய்தன? இளைஞர் உலகை ஆட்கொண்டன. இளைஞர் உலகை ஆட்கொண்ட அவை என்னை மட்டும் சும்மா விடுமோ? வேகம் என்னையும் ஆட்கொண்டது. எழுச்சி என்னையும் பற்றியது.
விளைவு என்ன? மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலைக் கண்ட உடனே சிக்கெனப் பிடித்தேன்,
அந்நூல் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நூல் மட்டுமா கவர்ந்தது? நூலாசிரியரும் கவர்ந்தார். அவரைப்பற்றி அறிய விரும்பினேன்.
நண்பர் சிவகுருநாதன் பெண்ணாகடத்தைச் சேர்ந்தவர். பெண்ணாகடம் தென் ஆர்க்காடு ஜில்லாவில் உள்ளது. பெண்ணாகடத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்று நடத்தி வந்தார். சிவகுருநாதன். கடந்தைத் தமிழ்ச்சங்கம் என்பது அச்
சங்கத்தின் பெயர்.
சங்கத்தின் வாயிலாக அவர் திரு.வி.க வுடன் தொடர்பு கொண்டிருந்தார். எனவே திரு.வி.க.வைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தார். அவரிடம் திரு.வி.க.வைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டேன். திரு.வி.க.வைக் காணும் வேட்கை கொண்டேன்.
திரு.வி.க.வைக் காணல் வேண்டும், அவர் தம் பத்திரிகையில் எழுதல் வேண்டும். நானும் பத்திரிகை ஆசிரியனாதல் வேண்டும். நூல்கள் எழுதல் வேண்டும்,’ என்று எண்ணியது என் மனம்.
மாலை நேரத்திலே காவிரி ஆற்றின் படிக்கட்டுகளிவே அமர்ந்து கொள்வேன். நீரில் கால்களைத் தொங்கவிடுவேன். சுழித்துச் சுழித்து ஓடும் காவிரிநீர், அந்த ஓட்டத்துக்கு. ஏற்ப எனது மனக்கோட்டையும் பறக்கும்.
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தி ஐந்தாம் ஆண்டு. சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகையிலே உதவி ஆசிரியனாகப் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றேன்.
சுதந்திரச் சங்கு’ என்ற பெயர் இப்போது பலருக்குப் புதிதாகத் தோன்றும். ஆனால் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த உப்புப் போரின் போது சுதந்திரச் சங்கு’ பெருத்த தொண்டாற்றியது. விடுதலைப் போர் முரசாக முழங்கியது; போர்ச் சங்காக முழங்கியது. வாரம் மும்முறை. சிறிய அளவு. பக்கங்கள் சிலவே. விலை காலணா. அந்தக் காலத் திலே அறுபதாயிரம் பிரதிகள் செலவாயின.
அப்பத்திரிகையை வெளியிட்டவர் சங்கு கணேசன் எனும் பெயர் கொண்ட பரமதியாகி. அடக்குமுறைச் சட்டத்துக்கு அஞ்சாது பல முறை சிறை சென்ற சீரியர். அவர் தமது ஆசிரியர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்.
அப்பத்திரிகையின் செயலகம் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் இருந்தது. மாலை நேரத்தில் தேசத் தியாகிகள் பலர் அங்கு வருவர். தமது அநுபவங் களைக் கூறுவர். கேட்போருக்கு விருந்தாகும்.
ஒருநாள் பெரியவர் ஒருவர் வந்தார். பத்திரிகைத் றையில் பழகியவர். திரு.வி.க.வை நன்கு அறிந்தவர்.
“இளைஞர் ஒருவரைத் திரு.வி.க.தேடுகிறார். அவ் விளைஞர் ஆங்கிலம் அறிந்தவராயிருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் திறமை பெற்றிருத்தல் வேண்டும். பிழையின்றித் தமிழ் எழுத அறிந்திருக்க வேண்டும். தேசிய உள்ளம் படைத்திருக்க வேண்டும். இத்தகை ஒருவரைத் தம் பத்திரிகைக்குத் தேடுகிறார்” என்றார் அவர்.
அப்பெரியவர் எனக்குப் புதியரல்லர். என்னை நன்கு அறிந்தவரே. பலமுறை நான் அவரைக் கண்டிருக் கிறேன். பேசியுமிருக்கிறேன்.
என்னைத் திரு.வி.க.விடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று அவரிடம் விண்ணப்பம் செய்தேன்.
உள்னைப்பற்றி அவரிடம் சொல்லி விட்டேன். நாளையே நீ சென்று அவரைப் பார்” என்றார் பெரியவர்.
Reviews
There are no reviews yet.