Description
ஜென் கதைகள்
கவிஞர் புவியரசு
சீடன்: மலை உச்சிக்குச் செல்ல வேண்டும். எங்கிருந்து தொடங்குவது?
குரு: உச்சியிலிருந்து!
“இளவேனிற் காலத்தில்
நூறுநூறு மலர்கள்
இலையுதிர் காலத்தில்
அறுவடை நிலா
கோடை காலத்தில்
நறுமணத் தென்றல்
குளிர் காலத்தில்
வெண்பனி தொடரும்
உன் மனதில் உதவாக்கரை விஷயங்கள்
கொட்டிக் கிடக்கவில்லையெனில்
எல்லாப் பருவங்களும்
நல்ல பருவங்களே, உனக்கு !”
ஜென் என்ற…
‘ஜென்’ ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல. அது ஒரு தத்துவம்கூட அல்ல!
உலகத்தின் சகல தத்துவ ஞானச் சங்கிலிகளைத் தகர்த் தெறிந்து மனிதனுக்குப் பரிபூரண விடுதலையை அளிப்பது ஜென்!
சகல மதாசார அனுஷ்டானங்களையும் உடைத்து விடுகிறது ஜென்.
அது ஒரு வாழ்க்கை முறையா? இல்லை. அது ஒரு முறை அல்ல. அதற்குச் சட்ட திட்டங்கள் எதுவும் கிடையாது.
‘ஜென்’ முறையில் வாழ்வது என்று கூட ஜென் ஞானிகள் குறிப்பிடுவதில்லை.
‘ஜென்னில் வாழ்வது’ என்றால்கூட அது பிழையாகும் என்று சொல்கிறார்கள்!
‘ஜென்னாக இருப்பது’ என்பதுதான் சரியான விளக்கம்! இதற்குத் தன்னியல்பில் இருப்பது என்று பொருள்.
ஜென் நம்ப முடியாத அளவிற்கு இயல்பானது; இயற்கையானது.
அது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
‘ஜென்’னைப் புரிந்து கொள்ள, ஜென் குருக்களின் வாழ்க்கைதான் ஆதாரம்.
அவர்கள் வாழ்ந்த, அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த, அவர்கள் வெளிப்படுத்திய, அல்லது வெளிப்படுத்தாமல் மௌனம் சாதித்த சம்பவங்கள் மூலமே நாம் ஜென்னைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஜென்னில், வந்தனை, வழிபாடு, ஏதுமில்லை. பௌத்தத்தின், மேல் நிலைச் சிந்தனையாக ஜென் தோன்றினாலும், புத்தரைப் பற்றிக் கொண்டு ஜென் தொங்குவதில்லை.
புத்தர் சிலைகளையே கொண்டு வந்து போட்டுக் குளிர் காய்கிறார் ஒரு ஜென் ஞானி!
ஜென் என்பது தியானம். எதை நினைத்தும் தியானிப்பதல்ல. எல்லாவற்றிலும் தியானம் இருப்பதாகச் சொல்கிறது, ஜென்.
பேசுவது, இருப்பது, நடப்பது, உண்பது, சிரிப்பது, உறங்குவது, தொழில் செய்வது அல்லது சும்மா இருப்பது எல்லாமே தியானம். எல்லாவற்றையுமே தியானமாக்க முடிகிறது ஜென்னில்.
ஜென் ஒரு சுய தரிசனம்.
தன்னைத் தான் அடையாளம் கண்டு கொள்வது, ஜென். இல்லாத எதையும் தேடிக் காண்பதல்ல, அது.
‘காணாமல் போன தன் மூக்குக் கண்ணாடி, தன் மூக்கின் மேல் இருப்பதைக் கண்டு கொள்வது போன்றது ஜென்’ என்று அழகாகச் சொல்கிறார் ஓஷோ.
தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் சுடர் தெறிக்கும் அந்த ஒரு
கணத்தில், விழிப்புணர்ச்சி சித்திக்கிறது என்கிறது, ஜென்.
பெரும்பாலும், அதிர்ச்சியின் மூலமே ஞான தரிசனத்தை அருள்கிறார்கள் ஜென் குருமார்கள்.
ஜென் பிரபஞ்சத்தை முழுசாக ஏற்றுக் கொள்கிறது. நன்மை தீமைகளையும் கூடத்தான். மனிதனை மையப்படுத்தி, அவனுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தையும், சுய மரியாதையையும் தருகிறது, ஜென்.
ஜென்னில் வாழ்பவர், எத்தொழில் செய்பவராயினும், அதைத் தியானமாகச் செய்பவர். அதனால், செய்யும் தொழிலிலும் அவர் பரிபூரணத்தைக் கண்டுவிட முடியும்.
மனித குலத்தைப் பிளவு படுத்தும் மதக் குப்பைகளை வாரி எறிந்து விட்டு மானுடத்தை ஒன்றாக்கி விடுகிறது, ஜென்.
நமது ‘தியானம்’தான், ‘ஜென்’ ஆயிற்று. இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்று, சற்றே பெயர் மாறி, வளம் பெற்று, ஜப்பானில் ‘ஜென்’ ஆகி வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிந்தது, ஜென்.
ஓவியம், சிற்பம், கட்டடக் கலை, கராத்தே, குங்ஃபூ, சமையல், மலர் அலங்காரம், தேநீர் விருந்து, அன்றாடத் தொழில், கல்வி முதலிய எல்லாவற்றிலும், ஜப்பானில் ஜென் இரண்டறக் கலந்து நிற்கிறது. ஜப்பானின் தலைமைக்கும், திறமைக்கும் ஜென்தான் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.