இராவண காவியம் கதை

இராவண காவியம் கதை சுருக்கம்

இராவண காவியம் (Ravana Kaviyam) 20-ம் நூற்றாண்டில் புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட தமிழ்  காவியம் ஆகும். இந்த நூலை 1946இல் குழந்தை இயற்றினார். இந்த பதிவில் இராவண காவியம் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.

இராவண காவியம் eBook இணைப்புகள் இந்த பதிவின் இறுதியில் உள்ளது. 

இராவண காவியம் 5 காண்டங்களைக் கொண்டது

  1. தமிழ்க் காண்டம்,
  2. இலங்கைக் காண்டம்,
  3. விந்தக் காண்டம்,
  4. பழிபுரி காண்டம்,
  5. போர்க் காண்டம்

மேலும் இது 57 படங்களும் 3100 பாடல்களும் உடைய மிகப்பெரிய காவியமாகும். அதை முடிந்தவரை சுருக்கமாக பார்க்கலாம்.

இராவண காவியம் கதை PDF Read Online

 

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

இராவண காவியம் கதை

மிகப் பழங்காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட் பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலைகாறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக் கெல்லையாகக் கொண்டது. தென்கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்குமேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாயிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை, பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்ந்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் பஃறுளியாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன.

குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட நிலம் பெருவளநாடு எனவும், பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தென்பாலிநாடு எனவும் வழங்கின்; பஃறுளியாற்றங் கரையில் இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை இருந்தது. குமரிக்கும் விந்தத்திற்கும் இடைப்பட்ட நிலம் திராவிடம் என வழங்கிற்று. அது வேளிர் என்னும் சிற்றரசர் பலரால் ஆளப்பட்டு வந்தது. திராவிடத்தின் மேற்கில் சேரநாடு இருந்தது. திராவிடத்தின் கிழக்கில் சோழநாடு இருந்தது.

இவ்வைவகைப்பட்ட தமிழகம் – குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் என நானிலமாக மக்கட்கு வேண்டிய எல்லாச் செல்வமும் பொருந்தியிருந்தது.

பாண்டிய சோழ சேரர்

நானில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு அவன் ஆணைக்குட்பட்டு வாழ்ந்து வந்தனர். பின்னர்த் தமிழக முழுமைக்கும் ஒரு மாபெருந் தலைவனை ஏற்படுத்தினர். அவன் தமிழகத்தின் நடுவில் – இன்றுள்ள இலங்கையின் தென்மேற்கில் இருந்த ஒரு தென்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தனன். அப்பண்டையோன் மரபில் வந்தவரே பாண்டி யராவர். அம்மாபெருந் தலைவன் வழிவந்த ஒருவன் தன் மகனைத் தென்னாட்டுக்கும், மற்றிரு தமிழ்த் தலைமக்களைச் சோழநாடு சேரநாடுகட்கும் தலைவராக்கினான். அம்மூவர் வழிவந்தோரே பாண்டிய சோழ சேரராவர்.

கி.மு. 31 திருவள்ளுவர் ஆண்டாகும். தி.மு. 3000 ஆண்டு களுக்கு முன் தென்கடல் பொங்கித் தென்பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் வாய்க்கொண்டது; பின், தி.மு. 2500இல் ஒருமுறை கடல் பொங்கிப் பெருவளத்தின் பெரும் பகுதியையும், கிழக்கு நாட்டையும் விழுங்கிற்று. பின் தி.மு. 700இல் ஒருமுறை கடல் பெருகித் திராவிடத்தின் ஒரு பகுதியை யும் உண்டேப்பமிட்டது.

இராவணன்

இரண்டாங் கடல்கோளின் பின்னர் இலங்கை உண்டானது. இலங்கை நாட்டின் நடுவில் இந்த முக்கூடல் மலைமீது இலங்கை நகர் இருந்தது. மூன்றாங் கடல்கோளுக்கு முன் இலங்கையி லிருந்து தமிழகத்தை யாண்டுவந்த தமிழரின் மாபெருந் தலைவர் வழிவந்த வச்சிரவாவுவின் மனைவியான கேகசி என்பாள் இராவணன், கும்பகன்னன், பீடணன் என்னும் மூன்று ஆண்மக்களையும், காமவல்லி என்னும் ஒரு பெண் மகளையும் பெற்றனள்.

மூத்தவனான இராவணன் முடிபுனைந்து, தமிழகத்தை ஆண்டு வந்தனன்.

மலைவளங்காணச் சென்ற இராவணனும், திராவிடத்தைச் சார்ந்த முதிரை நகரிலிருந்து முல்லைநாட்டை யாண்டுவந்த மாயோன் மகள் வண்டார்குழலியும் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு மணம் புரிந்து இல்லறம் நடத்தி வந்தனர். வண்டார்குழலி சேயோன் என்னும் செம்மலைப் பெற்றனள்.

ஆரியர்

தமிழகத்தின் வடக்கெல்லையான விந்தச்சாரல் பல சிறு நாடு களாகப் பாகுபட்டிருந்தது. வடநாட்டில் ஆரியர் என்னும் ஓரினத் தினர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் கல்வியறிவுள்ள முதியோர் சிலர், இராவணன் தோன்றுவதற்கு நெடுநாள் முன்னரே துறவுக் கோலத்துடன் தமிழகம் போந்தனர். தமிழ்மக்கள் அன்னாரை அன்புடன் வரவேற்று ஊணுடை யுதவிப் போற்றி வந்தனர். அவர் தமிழ் கற்றும், தமிழரிடம் நெருங்கிப் பழகியும் வந்தனர்.

இவ்வாறே பின்னரும் பின்னரும் பலர் வந்தனர். நாளடைவில் அவர் தமிழகம் முழுதும் போந்து, தமிழந்தணருடனும், புலவருடனும் நெருங்கிப் பழகி அரசர் உறவையும் பெற்றனர். நாளாகவாக ஆரிய இளைஞரும் வந்து, தமிழ்ச் செல்வ இளைஞரிடம் தோழமை செய்யும் பார்ப்பன வேலையும் சிலர் பார்த்து வந்தனர்.

நாளடைவில் பலர் பெண்டு பிள்ளைகளுடன் குடியேறி விந்தக் காடுகளில் இலைக்குடில்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர் வேள்வி மூலம் உயிர்களைக் கொன்றுண்ணத் தொடங்கினர். தமிழ் மக்கள் அதனைத் தடுத்தனர். அவர் கேட்கவில்லை .

இருபாலார்க்கும் போருண்டானது. அம்மக்கட்போர் தமிழாரிய மன்னர் போரானது. முடிவில் வடவரசர் தோற்றனர். ஆரிய முனி வர்கள் அஞ்சினவர் போல நடித்துப் பல தமிழரசர்களை வன் சித்துக் கொன்றனர். நூற்றுக்கணக்கான தமிழர் கோட்டைகளைக் தீயிட்டெரித்தனர்.

தாடகை

விந்தச்சாரலி லிருந்த இடைவள நாட்டை யாண்டு வந்த தாடகை யென்னும் தமிழரசி இராவணனது துணையை வேண்டினள். அவன் சுவாகு என்னும் படைத்தலைவனைப் பெரும் படையுடன் அனுப்பினான். சுவாகு இடைவளஞ் சென்று ஆரியப் புலைவேள்வியை யகற்றிக் காத்துவந்தான். அதனால், கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள்வி செய்ய முடியாது மன முடைந்து சென்றனன்.

தசரதன்

வடநாட்டில் சரயுவாற்றங் கரையில் உள்ள அயோத்தியில் தசரதன் என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் கோசலை, சுமத்திரை என்னும் இரு மனைவியருடனும், பல காதல் மகளிருடனும் களித்து வந்தான்; தனது தோள்வலியால் பல நாடுகளை வென்று கோசலம் என்னும் நாட்டை நிறுவிப் பேரரசனானான். பின் தன் தகுதிக்கேற்பப் பேரரசனான கேகயன் மகள் கைகேசியைக் கேட்டான். அவன் மறுக்கவே, தனது நாட்டைக் கைகேசிக்குப் பரிசமாகக் கொடுத்து அவளை மணந்தனன்.

குதிரை வேள்வி

கிழப்பருவமுற்றும் பிள்ளையில்லாது வருந்திய தசரதன், குலகுரு வசிட்டர் சொற்படி கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு குதிரை வேள்வி செய்தனன்; ஓர் ஆண் குதிரை படையுடன் ஓராண்டில் நாடு சுற்றி மீண்டது. முனிவர் வேள்வி தொடங்கினர்.

அவ்வேள்விக் குதிரையைக் கோசலை வாள் கொண்டு மூன்று வெட்டில் வெட்டி வீழ்த்தினாள். கோசலை தன் கணவனைத் தழுவுவது போல் வெட்டுண்ட அவ்வாண் குதிரையைத் தழுவி அவ்விரவைக் கழித்தனள்.

சடங்குகள் முடிந்த பின் பல பகல் குதிரை, ஆடு, மாடு, ஆமை, பாம்பு, பறவை முதலிய பன்னூற்றுக் கணக்கான உயிர்களைக் கொன்றுதின்று சோமக் கள்ளுண்டு இன்புற்றனர். தசரதன் கலைக்கோடர் முதலிய வேள்வி யாசிரியர் மூவர்க்குங் கோசலை முதலிய மூன்று மனைவியரையும் காணிக் கையாகக் கொடுத்தனன்.

அவர்களுடன் கனிமொழி பேசிக் கூடிக் கலந்தின் புற்று மூவரும் கருப்பமுறவே அவர்கள் அம்மூவருக் கீடான பொருள் பெற்றுக் கொண்டு அம்மூவரையும் தசரதனிடம் ஒப்பித்துச் சென்றனர். கருப்ப முதிர்ந்து கோசலை இராமனையும், கைகேசி பரதனையும், சுமத்திரை இலக்குவ சத்துருக்கரையும் பெற்றனர். மக்கள் வளர்ந்து மணப்பருவ முற்றனர்.

தாடகை மரணம்

மனமுடைந்து சென்ற கோசிகன் அயோத்தியை யடைந்து வேள்வித் துணையாக இராமலக்குவரை அழைத்துக் கொண்டு இடைவள நாட்டை யடைந்து ஒரு சோலையில் தங்கினர். அங்கே தனித்து வந்த தாடகையை முனிவன் சொற்படி இராமலக்குவர் கொன்றனர். அங்கிருந்து சென்று தன் குடிலையடைந்து முனிவன் வேள்வி தொடங்கினன்.

சுவாகு இளவரசனான மாரீசனோடு சென்று வேள்வியைத் தடுத்தான். இராமன் வாகுவைக் கொன்றான். தன்னிலைமை யுணர்ந்த மாரீசன் ஆங்கு நின்றும் மீண்டனன். மூவரும் வேள்வி முடித்துத் தமிழகத்தை நீங்கினர்.

தூதரால் இதனையறிந்த இராவணன், விந்த நாட்டையாண்டு வந்த தன் தங்கை காமவல்லிக்குத் துணையாகப் பெரும்படையை அனுப்பினான். கரன் என்னும் படைத்தலைவன் அப்பெரும் படையை ஆங்காங்கு அமைத்துக் காத்து வந்தனன். காமவல்லியின் காப்பில் விந்தநங்கை புலைவேள்வியற்றுப் பொலிந்தனள்.

இராமன் திருமானம்

வேள்வி முடித்துச் சென்ற மூவரும் மிதிலையை யடைந்து சனகன் விருந்தினராக இருந்தனர். முனிவர் கட்டளைப்படி இராமன் சீதையின் திருமணத்திற் கேதுவான வில்லை வளைத் தொடித்தனன். சனகன் மகிழ்ந்து, தசரதன் முதலியோரை வர வழைத்துச் சீதையை இராமனுக்கும், ஊர்மிளையை இலக்கு வனுக்கும், தன் தம்பி குசத்துவசன் மகளிரான மாளவியைப் பரதனுக்கும், சுதகீர்த்தியைச் சத்துருக்கனுக்கும் மணஞ்செய்து கொடுத்தனன். தசரதன் சனகனிடம் விடைபெற்று மக்கள் மருமக்களுடன் அயோத்தியை யடைந்தனன்.

தசரதன், இராமன் மீதுள்ள பற்றினால் பரதனுக்குரிய நாட்டை இராமனுக்காக வெண்ணித் தந்திரமாகப் பரதனைச் சத்துருக்கனுடன் அவன் பாட்டனூருக் கனுப்பிவிட்டு இராமனை நாட்டு மக்களிடம் பழகச் செய்தனன். இவ்வாறு பன்னிரண் டாண்டுகள் சென்ற தசரதன் அரசர்களையும் குடிமக்களையும் கலந்து இராமனுக்கு இளவரசுப் பட்டங் கட்ட முடிவு செய்தனன்.

மந்தரை

இதையறிந்த கைகேசியின் தோழியான மந்தரை என்பாள் அரசன் சூழ்ச்சியைக் கைகேசியிடம் கூறி முடிசூட்டுதலைத் தடுக்கும்படி வேண்டினாள். கைகேசி தசரதனிடம் முன்னர்ச் சம்பரனை வென்றதற்காகக் கொடுத்த இரு வரங்களில் ஒன்றால் பரதன் நாடாளவும் மற்றொன்றால் இராமன் பதினான்காண்டு காடாளவும் செய்ய வேண்டும் எனக் கேட்டாள். தசரதன் சூழ்ச்சி பலிக்கவில்லை . இராமன், சீதை, இலக்குவன் மூவரும் தேரேறிக் காடு சென்றனர். 

ராமன் காடு செல்லுதல்

சென்றவர், குகனென்னும் தோழனால் கங்கையைக் கடந்து வழி நெடுக ஆரிய முனிவர் வரவேற்று வழியனுப்பச் சென்று சித்திரகூட மலையை யடைந்திருந்தனர். தேரோட்டி வந்த சுமந்திரன் சென்று கூறவே தசரதன் இராமன் பிரிவால் உயிர் விட்டனன். பரதன் செய்தி கேட்டு வந்து தந்தையின் உடலை அடக்கம் செய்து சேனை சூழச் சித்திரகூடத்தை யடைந்து இராமனை நாடாள வரும்படி வேண்டினான். இராமன் நாடு பரதனுக்குரிய தென்பதைக் கூற, பரதன் நான் அதை உனக்குத் தந்தனன் ஏற்றருள்கவென, இராமன் நான் பெற்றோர் சொற்படி பதினான் காண்டு கழித்து வருகிறேன். அது மட்டும் எனக் கீடாக நீ ஆள் வாயெனப் பரதன் இராமன் மிதியடியைப் பெற்று மீண்டு, நந்தி யூர் என்னும் சிற்றூரில் தங்கி, மிதியடியை முடிபுனைந் தரியணை யிருத்தி அதை வணங்கி வந்தனன். சத்துருக்கன் ஆட்சி புரிந்து வந்தனன்.

சித்திர கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தையடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவ வேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர்.

இராமன் அதற் கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க் குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன். பின் அகத்தியன் நிலையை யடைந்து அவனால் ஒரு வில்லும், இரு அம்புக்கூடுந் தரப்பெற்றுச் சென்று பஞ்சவடி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர்.

காமவல்லி

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு காமுற்று, அவள் அறிவுரையைக் கொள்ளாது கையைப் பிடித் திழுத்து வற்புறுத்தினான். அவள் திமிறிக் கொண்டு விரைந்து சென்றனள். இராமன் தன் தம்பியால் அத் தமிழரசியை மூக்கையும் காதையும் முலைக்கண்களையும் அறுத்துக் கொன்று, முன்னேற்பாடில்லாத கரனையும் பொருதழித்தான்.

சீதையை அழைத்து வருதல்

தூதரால் செய்தி யுணர்ந்த இராவணன் கொதித்தெழுந்து தேரேறி விந்தஞ் சென்று, காமவல்லி வளர்த்த மானைவிட்டு இராம லக்குவரைப் பிரித்து அவரை வளைத்துக் கொள்ளும்படி வீரரை வைத்துச் சீதையை எடுத்து வந்தனன். சீதை புலம்ப, உன்னை உன் கணவன் வரின் நல்லறிவு புகட்டி அவனுடன் அனுப்புகிறேன். அஞ்சேல் எனத் தேற்றித் தன் தங்கையின் நிலையில் வைத்துப் போற்றி வந்தனன். 

மறவரால் வளைக்கப்பட்ட இராமலக்குவர் அவரை யோட்டிச் சென்று இலைக் குடியில் சீதையைக் காணாது வருந்தித் தேரடிப் பாதையைப் பின்பற்றிச் சென்று ஒரு முனிவன் குடிலை யடைந்தனர். அவன், சீதையை இராவணன் இலங்கை கொண்டு செல்வதையும், வாலியால் துரத்தப்பட்டு மதங்கரிடமுள்ள சுக்கிரீவன் வரலாறுங் கூறியனுப்பச் சென்று மதங்கரைக் கண்டு நிகழ்ந்தது கூறினர்.

அனுமன், சுக்கிரீவன், வாலி

அங்கே அனுமன் வர மதங்கர் அவர்களை அறிமுகப்படுத்தி அனுமனுடன் அனுப்பச் சென்று சுக்கிரீவனைக் கண்டு வரவுகூறி உதவி நாடினர். அவன் என் அண்ணனைக் கொன்று எனக்கு அரசீந்தால் உனது மனைவியை மீட்க உதவுவேன் என்றான். இராமன் அதற்கிசைந்து வாலியுடன் பொரச் சொல்லி இருவம் பொரும்போது மறைவிலிருந்து அம்பெய்து வாலியைக் கொன்று சுக்கிரீவனைக் கிட்கிந்தைக் கரசனாக்கி மதங்கர் நிலையை அடைந்திருந்தான். 

சீதையைப் பார்த்துவரத் தேவியோடு சென்ற இராவணன், இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவன் படையோடு இலங்கையை முற்ற வரப்போவதாகக் கூறிச் சென்றனன்.

சீதை, தன்னால் இலங்கை போர்க்களமாவதை எண்ணிப் புலம்பிக் கொண்டிருக்கையில் பீடணன் மகள் திரிசடை அங்கு வரவே சீதை அவளிடம் தன் கணவன் படையெடுத்து வர விருப்பதைக் கூறித் தன்னால் இலங்கை போர்க்களமாகுமே என வருந்த, திரிசடை இராவணன் திறமை கூறி, இராமனால் இலங்கையை முற்ற முடியாதெனத் தேற்ற, சீதை எனக்கு அச்சமாக இருக்கிறது, உன் தந்தையிடம் சொல்லி என்னை எப்படியாவது என் கணவனிடம் சேர்த்துப் போரில்லாமல் செய்வாயென வேண்டினாள்.

பீடணன் துரோகம்

திரிசடை அவ்வாறே தன் தந்தையிடம் சென்று கூற, அவன் சரியெனக் கூறியனுப்பிவிட்டுத் தானும் இராமனை யடைந்து சுக்கிரீவன் போல் அரசனாக எண்ணி அதைத் தன் நண்பன் நீலனிடம் கூறி ஆவன செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தனன்.

இராமன் சீதையைப் பார்த்துவரும்படி சுக்கிரீவனது அமைச்சனான அனுமனை அனுப்பினன். அனுமன் இலங்கை சென்று ஓர் ஆரியனால் பீடணன் நிலைமை யறிந்து சென்று பீடணன் மனையை யடைந்தான், பீடணன் அனுமனை வர வேற்றுத் தனது எண்ணத்தைக் கூறவே, அனுமன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறித் திரிசடையுடன் சென்று சீதையைத் தனியாக அழைத்து வந்து இராமன் படையொடு வந்து இலங்கையை யழித்து உன்னை மீட்டுச் செல்வானெனவே, சீதை திடுக் கிட்டு இராவணன் பெருமை கூறித் தனியாக வரும்படி கூறு மெனக் கூறித் திரிசடையுடன் சென்றனள்.

அனுமன் வெளிச் செல்லும்போது வாயில் காவலர் பிடித்துக் கொண்டுபோய் இராவணனிடம் விட்டனர். இராவணன் அவன் வந்த வரலாற்றைக் கேட்டு, அயலானோடு கூடி அரசைச் கொன்ற இரண்டகச் செயலைக் கண்டித்துக் கூறி, இராமனைத் தனியாக வந்து மன்னிப்புக்கேட்டு மனைவியை யழைத்தேகும்படி கூறெனக் கூறியனுப்பினன்.

அனுமன் சென்று கூறவே, இராமன் பணிவை மறுத்துப் படையுடன் சென்று இலங்கைப்புறத்துத் தங்கினான். ஒற்றரால் இதனை அறிந்த இராவணன், இராமனிடம் அதிகாயனைத் தூது விட்டான். இராமன் பணிவை மறுத்துப் போருக்குத் தயாரெனக் கூறிவிட்டனன்.

இராவணன் பேரவை கூட்டிப் போரில் இராமனை முறியடிப்பதே ஏற்றதென முடிவு கண்டனன். அப்போது பீடணனெழுந்து இராமன் திறமை கூறி, “சீதையை விட்டு உறவு கொள்வோம். மீளானாயின் விந்த நாட்டை விட்டேனும் பகையின்றி வாழ்வோ’ மென்றனன். இராவணன் வெகுண்டு அவையை விட்டோடும்படி கூற, அவன் அவ்வாறே சென்றனன்.

அவையை விட்டுச் சென்ற பீடணன் – நீலன், வேலன், குயிலன், நேரி என்னும் படைத்தலைவருடன் சென்று அடைக்கலமென இராமன் காலில் விழுந்தான். அவன் புகல் தந்து அப்போதே இலங்கையரசனாக அவனுக்கு முடிசூட்டினன்.

பீடணன் இலங்கையை எளிதில் வெல்வதற்கான உளவையெல்லாம் இராமனுக்கு உரைத்தனன். 

இராவண – இராம போர்

இதையறிந்த இராவணன் கடுஞ்சினங்கொண்டு போர்க்குத் தயாராகும்படி படைத்தலைவருக்குக் கட்டளையிட்டான். தானைத் தலைவர் முரசறைவித்தனர். தமிழ் மறவர் போர்க் கோலம் பூண்டு திரண்டனர்.

பொழுது புலர்ந்ததும் பகைப்படை நகர்ப்புறத்து வந்து தங்கிற்று. இராவணன் கோட்டையைக் காப்பமைக்கும்படி கட்டளை யிட்டுப் பகைப்படை நிலைமையை அறிந்துவர ஒற்றரை ஏவினான். பீடணன் அவரைக் காட்டிக்கொடுத்தனன். இராமன் அவரைச் சிறையிட்டனன். இவ்வாறு பல முறை காட்டிக் கொடுத்தனன் அக்கடை மகன்.

ஆரியப்படை ஊரை முற்றியது. மதில் போரில் வடவர் படை தோற்றது. களங்கண்டு பொருதனர். பின் இரண்டு நாள் இரவும் பகலும் ஓயாது போர் நடந்தது. இருப்படையிலும் பலர் மாண்டனர்.

கும்பகன்னனுக்கும் இராமனுக்கும் கடும் போர் நடந்தது. இராமன் சமயம் பார்த்து முறையின்றிக் கைகால்களை யறுத்துக்கொன்றான். செய்தி கேட்ட இராவணன் கதறிப் புலம்பச் சேயோன் தேற்றிச் சென்று போர்க்களம் புக்கான்.

ஓரிடத்தில் கும்பலாக இருந்த ஆரியப்படையொடு தனி யாகப் பொருது கொண்டிருந்தான் சேயோன். பீடணன் இராமனிடம் கூறி இதுவே அவனைக் கொல்ல ஏற்ற கால மென்றான். இராமனேவ இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் பெரும் படையுடன் சென்று வளைத்துப் பொருதனர். ஒருவன் பின்னாலிருந்து தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான். முடிவில் சேயோன் அம்புக்கூடு வறிது பட்டது. வாள் முதலிய கொண்டு பொருதான்.

அந்தோ ! முடிவில் இலக்குவன் ஓரம்பை யேவித் தமிழர்குலக் கொழுந்தைத் தலையை யறுத்துக் கொன்றனன்.

அது கேட்ட இலங்கை ஓவென்றலறியது. இராவணன் பல வாறு புலம்பிச் சீறியெழுந்து களஞ் சென்றான். இராவணனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடந்தது. இலக்குவன் முதலிய அனைவரும் சூழ்ந்து பொருதனர். இராமன் தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான்.

இராவணன் வெகுண்டு அப்பாவி மேல் எறிய வாளை ஓங்கினான். இலக்குவன் குறுக்கே வந்து அம்பெய்யவே அவ்வாளை அவன் மேல் எறிந்தான். அப்போது, அதாவது இலக்குவன் பக்கம் வாளெறியத் திரும்பும் போது, மாதலி என்பான் ஒரு கூரிய அம்பை இராமனிடம் கொடுத்து, வாள் எறிந்து திரும்பு முன் கொல்க எனவே, முறை கெட்ட இராமன் அவ்வாறே தமிழகம் புலம்பத் தலையறுத்து வீழ்த்தினான்.

தமிழர் மாபெருந் தலைவன் உடல் மண்ணில் புரண்டது. அடுகளம் அழுகளமாயது. வண்டார்குழலி உடனுயிர் விட்டனள். யாவரையும் அடக்கம் செய்து காடு வாழ்த்திச் சென்றனர் தமிழர்.

சீதை

இராமன் பீடணனுடன் கோயில் புக்கிருந்து, பீடணனால் சீதை அழைத்துவரப்பட, அவள் இராவணன் பெருமை கூறி வருந்தினாள். இராமன் அதைப் பொருட்படுத்திலன்.

இராமன் பீடணனோடு, தமிழகத்தில் தமிழரைப் போல எல்லா உரிமையையும் எய்தி ஆரியர் நிலையாய் இருந்து வாழ்தற்கேற்ற ஒப்பந்தஞ் செய்துகொண்டு, பீடணனை இலங்கை யரசனாக்கிப் பெரும் படையைக் காப்பாக வைத்துவிட்டு அயோத்தி சென்றனன். சுக்கிரீவன் கிட்கிந்தை சென்றனன்.

சம்புகன் மரணம்

இராமன் அயோத்தி சென்று முடிபுனைந்து அரசு புரிந்து வருகையில், ஓர் ஆரியன் தனது மாண்ட பிள்ளையுடன் அரண் மனையை யடைந்து, “உனது நாட்டில் ஒரு சூத்திரன் – தமிழன் தவஞ் செய்கிறான். அதனால், எனது பிள்ளை இறந்தது” எனக் கூற,

அதைக் கேட்ட இராமன் ஆரியர் வழிகாட்ட அங்குச் சென்று, பீடணனது ஆரிய அடிமையாட்சியை வெறுத்து வாள் வடக்கிருந்த – உயிர் விடற்கு உண்ணா நோன்பிருந்த சம்புகன் என்னும் தமிழ் மகனை வெட்டி வீழ்த்தி நகருற்றான். ஆரியர் செத்த பிள்ளை பிழைத்த தெனக் கூறிவிட்டனர்.

சீதையைக் காட்டில் விடுதல்

சீதாயணம்

https://tamilebooks.org/ebooks/seethayanam-ebook/

ஒருநாள் ஓர் ஒற்றன் இராமனிடம் வந்து ‘அயலான் மனையில் பல மாதம் இருந்தவளை அழைத்து வந்து வைத்துக்கொண்டான்’ என ஊரார் பழிக்கின்றனர் எனக் கூறினான். இராமன் அதைச் சீதையிடம் கூறிவருந்தினான். சீதை ஊர் பழிப்பதற்கு அஞ்சக்கூடாது எனக் கணவனைத் தேற்றினாள். எனினும் இராமன் மனம் ஒப்பாது இலக்குவனால் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நாடாண்டு வந்தனன்.

தொடர்புடைய பதிவுகள்

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

இராவண காவியம்; கலைஞர் கருணாநிதி ஆராய்ச்சி முன்னுரை 

இராவண காவியச் சிறப்பு

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

இராவண காவியம் eBook

புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு

 

Related Post

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியம் பற்றி தலைவர்களின் பரிந்துரைகள் வடமொழியில் இராமகாவியம் செய்த வான்மீகியும், தமிழ்க் கம்பரும், இராமனை நல்லவன் எனவும், இராவணனை இரக்க மென்றொரு பொருளிலாக் கொடிய அரக்கன்…
இராவண காவியம் - அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

Posted by - செப்டம்பர் 30, 2020 0
ஆராய்ச்சி முன்னுரை அறிஞர் அண்ணா அவர்கள் இராவண காவியம் – திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டு வந்த…
இராவண காவியம் எதற்கு? 

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியம் எதற்கு? கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைக் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிய காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளை யாடற்…
இராவண காவியம் - கலைஞர் கருணாநிதி

இராவண காவியம் – கலைஞர் கருணாநிதி

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியம் – தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் காலத்திற்கும் கருத்துக்கும் ஒவ்வாதனவற்றை – முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கவழக்கங்களை – பழமையை அழித்துப்…
இராவண காவியச் சிறப்பு

இராவண காவியச் சிறப்பு

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியச் சிறப்பு இராவண காவியம் நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.” – மு கருணாநிதி   அறிஞர் அண்ணா…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்