இவ்வடியார் செருவிலிபுத்தூரில் வாழ்ந்த பக்தி மிகுந்த ஆதிசைவர். அவர் ஆர்வம் மிகுந்த சிவ பக்தர்.
அவர் கோயிலில் அர்ச்சகராக இருந்தார். சைவ ஆகமங்களின் படி இறைவன் திருவுருவத்தைப் புனித நீராட்டி மந்திரங்களை உச்சரித்துப் பூசை செய்வது அவர் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு சமயம் அந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிய தால், உணவு சமைக்கவும் அவரிடம் பொருள் இல்லாது போயிற்று. இறைவன் திருவுருவத்தையும் நாட் கடமையையும் அவர் மிகுதியும் நேசித்தபடியால், பட்டினி கிடக்க நேர்ந்தும் அவர் அவ்வூரை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர் அங்கேயே நிலையாகத் தங்கியிருந்து தம்முடைய பூசையைத் தொடர்ந்து செய்து வந்தார். அவருடைய உடல் மிகவும் பலவீன மடைந்தது. ஒருநாள் அவர் தம் உடம்பில் சக்தி யில்லாமல் அசதியாக இருந்தும். இறைவனின் புனித நீராட்டுக்காக அவர் தண்ணீரைக் கொண்டுவந்தார் அவர் இலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தபோது தண்ணீர்க் குடம் அவருடைய கையிலிருந்து நழுவி இலிங்கத்தின் மீது விழுந்தது. மிகுந்த களைப்பு ஏற்பட்டமையால் நாயனார் மெய்மறந்து நினைவிழந்து கீழே விழுந்து விட்டார். இறைவன அவருடைய கனவில் தோன்றி, பஞ்சம் தீரும் வரை நாள்தோறும் கோயிலில் ஒரு பொற்காசு வைப்பதாக வும் அதைக்கொண்டு தேவைப்படும் உணவுப் பொருள் களை வாங்கித் தம் பசியைத் தணித்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார். நாயனார் விழித்தெழுந்து தாம் கண்ட கனவு நனவானதைக் கண்கூடாகக் கண்டார். தம் பக்தர் பஞ்சத்தைச் சமாளித்துக் கொள்ளுமாறு இறைவன் இவ்வாறு உதவினார். நாயனார் தம் நாள் வழிபாட்டைக் கோயிலில் தொடர்ந்து செய்து வந்தார்! முடிவில் சிவபுரத்தை அடைந்தார்..