Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

ஆசாரக்கோவைபற்றிசுருக்கமாக.

நான்கு வகை எச்சில்கள்

 

எச்சில் என்பது கழிவு என்ற பொருளைக் குறித்து இந்நூலில் விளக்கப்படுகிறது. பல்வகைப்பட்ட எச்சில்கள் உள ஆயினும் நான்கு எச்சில்கள் இன்றியமையாதவை என ஆசாரக்கோவை(பாடல் 7) குறிப்பிடுகிறது. அவை,

இருவகை இயக்கம் ஆகிய மல மூத்திரங்கள் ,

இணை விழைச்சு ஆகிய புணர்ச்சி, வாயில் விழைச்சு ஆகிய நான்கும் ஆகும்.

இவற்றை நன்கு கடைபிடித்து ஒழுகி இவ் எச்சிலுடன்படித்தல், கண் துயிலுதல், உரையாடுதல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது என இந்நூல் குறிப்பிடுகிறது.

மேலும்,புலை, ஞாயிறு, திங்கள், நாய், மீன் ஆகியவற்றை எச்சிலோடு காண கூடாது.

விலங்கு, அறிவுடையசான்றோர், தீ, கடவுள், உச்சந்தலை ஆகிய இவற்றை எச்சிலுடன் தீண்டலும் கூடாதுஎன ஆசாரக்கோவைகூறுகின்றது.(பாடல்கள் 5,6,8)

நீராடுதல்

 

கடவுள் வழிபாடு மேற்கொள்வதற்கு முன்னும், தீக்கனா கண்ட பின்னரும், தூய்மை குன்றிய காலத்தும், மயிர்களைந்த பின்னரும், உண்டதை வாந்தி எடுக்க நேரும் காலத்தும், உண்ணுதற்கு முன்னரும், தூங்கி எழுந்த பின்னரும், புணர்ச்சி மேற்கொண்ட பின்னரும்,ஏனை எச்சிலான காலத்தும் நீராடுதல் வேண்டும் என்பது ஆசாரக்கோவை தரும் செய்தியாகும்.

  • உடையின்றி நீராடுதல் குற்றம்
  • நீராடும் போது நீரில் நீந்தல் ஆகாது;
  • நீருள் உமிழக் கூடாது;
  • நீருள் அமிழ்ந்திருக்கக் கூடாது;
  • நீரில் விளையாடக் கூடாது;
  • காய்ச்சல் உள்ள காலமாயினும் தலையை நனைத்தல்லாமல் குளிக்கக் கூடாது.

இவ்வாறு நீராடும் இயல்பு விளக்கப்படுகிறது.

நீரில் முகம் பார்க்கக் கூடாது; நீரைத் தொடாது தலையில் எண்ணெய் தேய்த்தல் ஆகாது, தலையின் கண் எண்ணெய் தேயத்த கையால் எவ்வுறுப்பையும் தீண்டக்கூடாது என்பனவும் மேலும் கூறப்படுகின்றன.

உடையணிதல்

 

நீராடும் போது ஒரு உடை உடுத்தல்லால் நீராடக் கூடாது என்பதால் உடையின்றி நீராடுதல் குற்றம் என விளக்கப்படுகிறது. மேலும் இரு உடை உடுத்தல்லால் ஓராடையுடன் உணவுண்ணக் கூடாது. உடுத்த ஆடையை நீருள் பிழியக்கூடாது. ஒரு உடையுடன் அவையின் கண் செல்லக்கூடாது. பிறர் அணிந்த மாசுடையைத் தீண்டக்கூடாது என்பன உடையணிதல் குறித்த ஆசாரக்கோவையின் கருத்தாகும்.

வழிபாடு

 

வைகறை யாமம் துயிலெழுந்து அன்றை நாள் தாம் செய்யக் கருதும் நல்லறமும் செயலையும் சிந்தித்து தாயும் தந்தையும்தொழுது எழுவது முந்தையோர் கண்ட நெறியாகும் என்கிறது ஆசாரக்கோவை.

மேலும் அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தம் முன் பிறந்தோர், நிகரில்லாக் குரவர் ஆகியோரைத் கடவுள் போலவே தொழுதல் வேண்டும் என்றும் ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது.

 

உணவுண்ணும் முறைமை

 

உணவுண்ணும் முறைமை குறித்து பல பாடல்களின் வழியே ஆசாரக்கோவைபேசுகிறது.

நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து

உண்டாரே உண்டார் எனப்படுவர்

 

என்கிறது ஆசாரக்கோவை. மண்டலம் செய்தல் என்றால் உண்கலத்தைச் சுற்றி நீர் இறைத்தலைக் குறிக்கும். கால் கழுவி நீர் காயும் முன் உண்ணல் வேண்டும்; நீர் காய்ந்த பின்னரே பள்ளியறை செல்ல வேண்டும் என மற்றொரு பாடலால் அறிகிறோம்.

உண்ணும் போது கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும்; உண்ணும் போது தூங்காமல் அசைந்தாடாமல் பேசாமல் நன்கு அமர்ந்து வேறொன்றினையும் நோக்காமல் உணவையோ அல்லது வழிபடு தெய்வத்தையோ தொழுது, சிந்தாமல் கையால் எடுத்து உண்ணுக என மற்றொரு பாடல் குறிக்கிறது. (பாடல்20)

கிழக்கு மங்கலமான திசை என்பதால் அது நோக்கி அமர்தல் வலியுறுத்தப்பட்டது என்பர். நீதிநெறிச்சாரம் நூலும் இதையே வலியுறுத்துவது அறியத்தக்கது.

பிற திசைகளும் ஏற்கத்தக்கதே

 

கிழக்குத்திசைக்கு இடையூறு ஏற்படுமாயின் பிற திசைகளும் ஏற்கத்தக்கதே என விதிவிலக்கையும் ஆசாரக்கோவை எடுத்து இயம்புகிறது.

விருந்தினர், மூத்தவர்கள், விலங்கு, பறவைகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவளித்துப் பின்னர் உண்ண வேண்டும்.

 

உண்ணக்கூடாத முறைகள்

 

  • கிடந்து உண்ணக் கூடாது.
  • நின்று உண்ணக்கூடாது.
  • கட்டில் மேலமர்ந்து உண்ணக்கூடாது.
  • வெளியில் நின்றவாறு உண்ணக்கூடாது.
  • மிக விரும்பி உண்ணக்கூடாது

என உண்ணக்கூடாத முறைகள் விளம்பப் படுகின்றன. அந்திப்பொழுதில் உண்ணல் ஆகாது என 29 ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • உணவுண்ணும் பந்தியில் தம்மினும் பெரியவர் / சான்றோர் அமர்ந்திருப்பாராயின்
  • அவருக்குவலப்புறம் அமரக்கூடாது;
  • அவருக்கு முன் உண்ணகூடாது.
  • அவருக்கு முன் எழக்கூடாது.
  • அவர்களை நெருக்கி அமரலாகாது

எனப் பெரியோர் பால் இருந்து அருந்தும் முறையை ஆசாரக்கோவை சுட்டுகிறது.

 

சுவைப்பொருட்களை உண்ணும் வரிசை

 

சுவைப்பொருட்களை உண்ணும் வரிசை முறைகளையும் பின் வருமாறு ஆசாரக்கோவை எடுத்தியம்புகிறது.

கைப்பன எல்லாம் கடை; தலை தித்திப்ப

மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்

துய்க்க முறைவகையால் ஊண்.

இனிப்புச்சுவை உடையனவற்றை முதலிலும் கைப்புச்சுவையினவற்றை இறுதியிலும் ஒழிந்த பிற சுவையுடையனவற்றை இடையிலும் உண்ணல் வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

உண்ணும் கலம் எப்படி இருத்தல் வேண்டுமென்பதையும் இந்நூல் கூறுகிறது. கலங்கள் எல்லாவற்றுள்ளும் மிகச்சிறியவற்றை உண்பதற்காக எடுத்துக்கொள்ளல் வேண்டும் என்பது இந்நூல் நுவலும் கருத்தாகும். நீர் அருந்தும் போது ஒரு கையால் மட்டுமே நீரை எடுத்து அருந்த வேண்டும் என்பதை,

இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்

கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு;

இருகைசொறியார் உடம்பு மடுத்து

வாய் துப்புரவு செய்தல்

 

உணவு உண்ட பின் வாயினை எவ்வாறு துப்புரவு செய்ய வேண்டும் என்பதையும் இந்நூல்வலியுறுத்துகிறது. வாயில் புக்க நீர் உள்புகாத படி நன்றாகக் கொப்புளித்து எச்சில் அறும்படி நன்றாகத் துடைத்து அழகுடன் மும்முறை நீர்குடித்து துடைத்துக்கொண்டு முக உறுப்புகளை அவ்வவற்றிற்கு உரிய முறைகளின் படி விரல்களைச் செலுத்தித் துப்புரவு செய்யவேண்டும் என்பது ஆசாரக் கோவையின் 27 ஆம் பாடலின் வழி கூறப்படுகிறது.

நீரிடத்து நின்றும் நடந்து கொண்டும் வாய் கழுவுதல் கூடாது. என 35 ஆம் பாடலில் வாய்கழுவும் கூறப்படுகிறது.

 

தூங்கும் முறைமை

 

தூங்கும் போது கைகூப்பித் தெய்வம் தொழுது, வடக்குப்புறம் தலைவைப்பதைத் தவிர்த்து, மேலே போர்த்துக்கொள்ளும் போர்வையை உடல் முழுமைக்கும் கொண்டு படுக்க வேண்டும். நீரில் நனைத்த கால் உலராமுன்னம் படுக்கைக்குச் செல்லக்கூடாது.

 

மனைவியைக் கூடக்கூடாத பொழுதுகள்

 

மூன்று நாட்களின் வரும் பன்னிரண்டு நாளும் மனைவியை பிரியவேகூடாது என்பதை,

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்

ஈராறு நாளும் இகவற்க என்பதே

பேரறிவாளர் துணிவு (42)

மனைவியைக் கூடக்கூடாத பொழுதுகளாக உச்சிப்பொழுது, இடையாமம், காலை, மாலை, இருகடவுளர்க்குமுரிய நாட்கள், அட்டமி,   பிறந்த நாள் ஆகிய நாட்களை ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது.

கழிப்பிடம்

 

இருவகை கழிவுகளையும் வெளியேற்றத் தக்க இடங்கள் இவையிவை என்பதையும் ஆசாரக்கோவை கூறுகிறது.  புல், பயிர் நிலம், பசுவின் சாணம், மயானம், வழி, கோயில், நீர்நிலை, நிழலிடம், விலங்குகள் தங்குமிடம் , சாம்பல் ஆகிய பத்து இடங்களிலும் மலசலம் கழித்தல் கூடாது என,

புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம்

தேவகுல நிழல் ஆனிலை வெண்பலியென்று

ஈரைந்தின் கண்ணும் இமிழ்வோடு இருபுலனும்

சேரார் உணர்வுடை யார் (32)

ஆசாரக்கோவை கூறுகிறது. பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்காமலும் இருந்து மலசலம் கழிக்க வேண்டும். பத்து திசையையும் மனத்தால் மறைத்து அதன் பின் அந்தரத்து அல்லால் உமிழ்தலும் மலசலம் கழித்தலும் நடைபெற வேண்டும் என்கிறது இந்நூல்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.