Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

ஆசாரக்கோவையின்100 பாடல்கள்மற்றும்விளக்கஉரை:

உள்ளே ...
 1. 1.ஆசார வித்து
 2. 2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
 3. 3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
 4. 4. முந்தையோர் கண்ட நெறி
 5. 5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
 6. 6. எச்சிலுடன் காணக் கூடாதவை
 7. 7. எச்சில்கள்
 8. 8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
 9. 9. காலையில் கடவுளை வணங்குக
 10. 10. நீராட வேண்டிய சமயங்கள்
 11. 11. பழைமையோர் கண்ட முறைமை
 12. 12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
 13. 13. செய்யத் தகாதவை
 14. 14. நீராடும் முறை
 15. 15. உடலைப்போல் போற்றத் தக்கவை
 16. 16. யாவரும் கூறிய நெறி
 17. 37. நரகத்துக்குச் செலுத்துவன
 18. 38. எண்ணக்கூடாதவை
 19. 39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
 20. 46. வீட்டைப் பேணும் முறைமை
 21. 47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
 22. 49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
 23. 50. கேள்வியுடையவர் செயல்
 24. 51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
 25. 52. தளராத உள்ளத்தவர் செயல்
 26. 53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
 27. 54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
 28. 55. அறிஞர் விரும்பாத இடங்கள்
 29. 56. தவிர்வன சில
 30. 57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
 31. 58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
 32.  
 33. 59. சில தீய ஒழுக்கங்கள்
 34. 60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
 35. 61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
 36. 62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
 37. 63. கற்றவர் கண்ட நெறி
 38.  
 39. 64, வாழக்கடவர் எனப்படுவர்
 40. 65. தனித்திருக்கக் கூடாதவர்
 41. 66. மன்னருடன் பழகும் முறை
 42. 67. குற்றம் ஆவன
 43. 68. நல்ல நெறி
 44. 69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
 45.  
 46. 70. மன்னன் முன் செய்யத் தகாதவை
 47. 71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
 48. 72. வணங்கக்கூடாத இடங்கள்
 49. 73. மன்னர் முன் செய்யத் தகாதவை
 50. 74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
 51. 75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
 52. 76. சொல்லும் முறைமை
 53. 77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
 54. 78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
 55. 79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
 56.  
 57. 80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
 58. 81. ஆன்றோர் செய்யாதவை
 59. 82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
 60. 83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
 61. 84. பழகியவை என இகழத் தகாதவை
 62. 85. செல்வம் கெடும் வழி
 63. 86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
 64. 87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
 65. 88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
 66.  
 67. 89. கிடைக்காதவற்றை விரும்பாமை
 68. 90. தலையில் சூடிய மோத்தல்
 69. 91. பழியாவன
 70. 92. அறிவுடையார் சொல்லைக் கேட்க
 71. 94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
 72. 95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
 73. 96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
 74.  
 75. 97, சான்றோர் முன் சொல்லும் முறை
 76.  
 77. 98. புகக் கூடாத இடங்கள்
 78. 99. அறிவினர் செய்யாதவை
 79. 100. ஒழுக்கத்தினின்று விலகியவர்

1.ஆசார வித்து

(பஃறொடை வெண்பா)

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

 

பொருள் விளக்கம்

ஒருவன் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருத்தல், பொறுமையுடன் இருத்தல், இனிய சொல் பேசுதல், எந்த ஒரு உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல், கல்வி அறிவு, பலனை எதிர்பார்க்காமல் இந்த சமுதாயதிர்க்கு செய்யும் சேவை (அடுத்தவருக்கு உதவும் ஒப்புரவு குணம்), காலம் கருதி ஆற்ற வேண்டிய விஷயத்தை ஆற்றும் திறன், அறிவுடைமை, நல்ல குணம் உடையவருடன் சேர்தல் ஆகிய எட்டும் ஒழுக்கங்களின் வித்து என்று கூறும் விதை ஆகும். இந்த குணங்களில் இருந்து தான் நல்லொழுக்கம் அனைத்தும் ஆரம்பமாகிறது.

 

2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

(இன்னிசை வெண்பா)

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.

 

பொருள் விளக்கம்

நல்ல குடியில் பிறக்கும் பிறப்பு, நீண்ட ஆயுள் , செல்வம், அழகானத் தோற்றம், நிலங்களை ஆளும் உரிமை, சொல்வன்மை, யாராலும் அழிக்க முடியாத கல்வி, நோய்யற்ற வாழ்வு ஆகிய எட்டும் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருந்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்

(இன்னிசை சிந்தியல் வெண்பா)

தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

 

பொருள் விளக்கம்

ஒரு விடயத்தை சொல்லிக் கொடுப்பவருக்கு உரிய குரு தட்சணை, கடவுளைதொழல், தவம் செய்தல், கல்வி கற்றல் ஆகிய நான்கும் ஒருவன் தவறாமல் மனம், வாக்கு, மெய் ஆகிய மூன்றும் ஒன்று பட செய்ய வேண்டும். செய்யா விட்டால் எந்த உலகத்திற்கும் (இந்த உலகம், மேல் உலகம்) பயன் படாது.

4. முந்தையோர் கண்ட நெறி

(இன்னிசை வெண்பா)

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

 

பொருள் விளக்கம்:

விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது வாழ்விற்கு சிறந்தது என்பதே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை

(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)

எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.

 

பொருள் விளக்கம்:

விலங்க்கு, சான்றோர், நெருப்பு, கடவுள், உச்சந்தலை ஆகியவற்றை ஒருவன் எச்சிலுடன் இருக்கும் போது தீண்டக்கூடாதவை ஆகும்.

 

6. எச்சிலுடன் காணக் கூடாதவை

(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)

எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.

 

பொருள் விளக்கம்:

நன்கு விஷயம் அறிந்தவர்கள் ஒரு நாளும் எச்சிலுடன் இருக்கும் போது புலையன், நிலா, சூரியன், நாய், எரி நட்சத்திரம் ஆகியவற்றை பார்க்க மாட்டார்கள்.

புலை:அசுத்தம், தீயநெறி

 

7. எச்சில்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.

 

பொருள் விளக்கம்:

எச்சில்கள் நான்கு வகைப்படும், அவை மலம், ஜலம் என்று உடலில் இருந்து வரும் கழிவுகளால் ஏற்படுபவை இரண்டு, உடலுறவால், வாயால் ஏற்படுபவை இரண்டு ஆக மொத்தம் நான்கு ஆகும்.

8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.

 

பொருள் விளக்கம்:

நான்கு வகை எச்சிலில் ஒருவகை இருப்பினும் நன்கு விஷயம் தெரிந்த மேதைகள் எப்போதும் எச்சிலை விலக்காமல் புத்தகம் படிக்கமாட்டார், யாருடம் பேச மாட்டார், தூங்க மாட்டார்.

9. காலையில் கடவுளை வணங்குக

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

 

பொருள் விளக்கம்:

காலையில் விழித்தவுடன், குச்சியால் பல் துலக்கி, கண் துடைத்து,குளித்து இறைவனை நின்று தொழுது எழுக, மாலையில் நின்று தொழுவது தவறு, அமர்ந்து இறைவனை வணங்குக.

10. நீராட வேண்டிய சமயங்கள்

(பஃறொடை வெண்பா)

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.

 

பொருள் விளக்கம்:
இறைவனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும், தூய்மை குன்றிய காலத்திலும், உண்ட உணவை வாந்தி எடுத்தாலும், முடி வெட்டிய பிறகும், உணவு உண்ணும் முன்னர், காலையில் எழுந்த பிறகும், உடலுறவுக்குப் பிறகும், சுத்தமில்லாதவரைதொடநேர்ந்தபின்னரும், மல ஜலம் கழித்த பிறகும்,

ஆகிய பத்து விடயங்களில் நாம் சந்தேகம் கொள்ளாமல் குளிக்க வேண்டும்.


11.
பழைமையோர் கண்ட முறைமை

(இன்னிசை வெண்பா)

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.

 

பொருள் விளக்கம் 
உடலில் ஒரு துணியும் இல்லாமல்நீர்நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு உடையவர் ஒரே ஒரு உடை உடுத்தி பலர் இருக்கும் சபைக்கு செல்ல மாட்டார்கள். இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.

 

பொருள் விளக்கம்
தலையில் தடவிய எண்ணையை எடுத்து உடலில் தடவக்கூடாது. பிறர் உடுத்திய உடையை உடுத்தக்கூடாது. அடுத்தவர் அணிந்த செருப்பு அணியக்கூடாது, பிறரிடம் இருந்து இரந்து எதையும் பெறக்கூடாது.

13. செய்யத் தகாதவை

(இன்னிசை வெண்பா)

நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.

பொருள் விளக்கம் 
நீருள் மூழ்கி குளிக்கும் போது கண்ணைதிறந்து பார்க்கக்கூடாது, நிலத்தை காலால் கீறக்கூடாது, இரவில் எந்த மரத்தின் கீழும் தூங்கக்கூடாது, (இரவில் மரங்கள் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் எடுத்து கரிமல வாயுவை வெளியிடும். இது தூங்குபவரை மூச்சு முட்டச் செய்யும்.)

நோய்யால் துன்பப்பட்டாலும் தண்ணீரில் கை வைக்காமல் (தூய்மை செய்யாமல்) உணவைத் தொடக் கூடாது. எண்ணையை தொட்டு தடவிய பிறகு குடிநீரை தொடக்கூடாது. புலையரைப் (தீயநெறிஉடையவரை) பார்க்கக்கூடாது. இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

 

14. நீராடும் முறை

(இன்னிசை வெண்பா)

நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.

 

பொருள் விளக்கம்
புனித நதிகளில் நீராடும் போது, ஆய்ந்த அறிவுடைய நல்ல நெறியில் உள்ளவர்கள் ஒருநாளும் நீந்த மாட்டார்கள், , நீரை குடைந்து சேறாக்காமாட்டார்கள், அதில் விளையாட மாட்டார்கள். அதே போல் அந்த நீரில் எச்சில் உமிய மாட்டார்கள், தலையில் எண்ணை இல்லாமல் தலை காய்ந்து இருந்தாலும் தலை மூழ்காமல் உடல் மட்டும் நனையுமாறு குளிக்கமாட்டார்கள்.

15. உடலைப்போல் போற்றத் தக்கவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.

 

பொருள் விளக்கம்
நிலம் , நெருப்பு, காற்று, ஆகாயம், நீர் ஆகிய ஐந்து பூதங்களையும், அந்தணனையும், பசு, நிலா, சூரியன் ஆகியவற்றையும் தன் உடம்பு போல் என்னாது இகழ்ந்திருந்தால், நம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களின் தெய்வங்கள் விலகி துன்பத்தை கொடுக்கும்.

16. யாவரும் கூறிய நெறி

(சவலை வெண்பா)

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.

 

பொருள் விளக்கம்
அரசன் , பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், தாய், தந்தை, நமக்கு நிகரில்லாத நம்மை விட வயதில், திறமையில், குணத்தில் மூத்தவர், இவர்களை தெய்வம் போல் தொழவேண்டும். இதுவே சிறந்த நெறி.

 1. நல்லறிவாளர் செயல்
  (இன்னிசை வெண்பா)

குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு.

 

பொருள் விளக்கம்:
சான்றோற்கள் கூறிய நெறிப்படி கடவுளைவழிபடுவர், விரதம் முடிக்காமல் உணவு உண்ணமாட்டார்கள், மரங்களை வெட்ட மாட்டார்கள். இதுவே நல் அறிவாளர் செய்யும் செயல்.

 

 1. உணவு உண்ணும் முறைமை
  (இன்னிசை வெண்பா)

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.

 

பொருள் விளக்கம்

நாள்தோறும் குளித்து, உணவு உண்ணபதற்கு முன் கைகால், வாய் சுத்தம் செய்து, உணவு இலையை சுற்றி நீரை சிறிது தெளிக்க செய்து உணவு உண்பதே சிறந்தது. இவ்வாறு செய்யாமல் உணவு உண்ணபது வெறும் பேச்சுக்கு உணவு உண்பது போல் இருக்கும், அப்படி உணவு உண்டவர்களின் உடலை அரக்கர்கள் (வியாதிகள்) வந்து எடுத்துச் செல்லும்.

பண்டைய காலத்தில் வீட்டுத் தரை மண்ணால் செய்யப்பட்டு இருந்தது. இதில் எறும்பு, பூச்சி வர வாய்ப்பு அதிகம். இவ்வாறு இருக்கும் சிறு பூச்சிகள் உணவு உண்ணும் போது வராமல் இருப்பதற்காக நீரத் தெளித்து உண்ணும் பழக்கமும், நீர் இன்றி அமையாது உலகு, ஆதலால் உண்ணும் முன் நீருக்கு இந்த உணவை அளித்த நன்றியை தெரிக்கவிக்கவும் இந்த வழக்கம் ஏற்பட்டது.

 1. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

 

பொருள் விளக்கம்:

கை கால்கள் கழுவி அதன் ஈரம் காயாமல் இருக்கும் போதே உணவு உண்ண வேண்டும், (அதாவது கைகால் சுத்தம் செய்து உடனே உணவு உண்ண வேண்டும், நேரம் கடத்தும் போது தூசு, அழுக்கு மீண்டும் கைகளில் வரும் வாய்ப்பு உள்ளது).

கைகால்கள் ஈரமாக இருக்கும் போது படுக்கைக்குள் இறக்கக்கூடாது. (அதாவது இரவு படுக்கும் முன், கடன்களை முடித்து, உடல் அங்கங்களை சுத்தம் செய்து, ஈரம் உலர்ந்த பின்னர் படுக்கைக்குள் நுழைய வேண்டும்.) இது சிறந்த அறிவாளர்கள் செய்யும் செயலாகும்.

 1. உண்ணும் விதம்
  (இன்னிசை வெண்பா)

உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு.

 

பொருள் விளக்கம்:

உண்ணும் போது கிழக்கு திசை அமர்ந்து, தூங்கி வழியாமல், அங்கும் இங்கும் ஆடி அசையாமல், நன்கு அசைபோட்டு, பிற விசங்களைப் பார்க்காமல், புற கதைகள் பேசாமல் உணவை ரசித்து, ருசித்து, இறைவனை வணங்கி உண்ண வேண்டும்.

இப்படி செய்யாமல் இருப்பதற்கு உண்ணாமல் இருக்கலாம்.

கிழக்கு திசை சூரியன் உதிக்கும் திசை, வாஸ்து சாஸ்திரத்தில் இது இந்திரன் உடைய திசை. இந்திரன் ஒருவனின் ஆயுள், அந்தஸ்து, செல்வம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அள்ளிப்பவன். இதனால் கிழக்கு திசை அமர்ந்து உண்பது சிறந்தது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

 1. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

 

பொருள் விளக்கம்:
ஒழுக்கம் பிழையாதவர் தாங்கள் உண்ணும் முன் தங்களின் மூத்தோர் பறவை (காகம்), விலங்கு (பசு, நாய்) பசியை பொறுக்க முடியாத வயது முதிர்ந்தோர், குழந்தைகள், மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிய அனைவருக்கும் உணவு அளித்த பின்னர் தான் உணவு உண்பர்.

 1. பிற திசையும் நல்ல
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு.

 

பொருள் விளக்கம்:
முன் சொன்ன கிழக்கு திசை நோக்கி உண்ண இயலாவிட்டால் மற்ற திசை நோக்கி உண்ணலாம், வாசற்படிக்கு நேராக கட்டில் இட்டு தூங்குவது கூடாது.

 1. உண்ணக்கூடாத முறைகள்
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று.

 

பொருள் விளக்கம்
படுத்துக்கொண்டோ, சாய்ந்துகொண்டோ உணவு உண்ணக்கூடாது, அறிமுகம் இல்லாத வெளியிடத்தில் உணவு உண்ணக்கூடாது. சுவையாக இருப்பதால் அதிக உணவு உண்ணக்கூடாது, கட்டில் மேல் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது.

பாடல் 18 கூறிய முறை தவறி உண்ணக்கூடாது. இப்படி தவறி உண்பதற்க்கு உண்ணாமல் இருப்பது நலம்.

 

 1. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

 

பொருள் விளக்கம்:
நம்மைவிட பெரியவர்கள் உடன் உண்ணும் போது, பந்திக்கு முந்தக்கூடாது, அவர்கள் உணவு உண்ணும் முன் நாம் ஆரம்பிக்கக்கூடாது, அவர் சாப்பிட்டு முடித்து எழும் முன் நாம் எழக்கூடாது, அவர்கள் அருகில் அமர்ந்து உண்ணக்கூடாது. எத்தனை செல்வம் பெறினும் அவர்களின் வலம் இருந்து உணவு உண்ணக்கூடாது.

 1. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை
  உண்ணும் முறைமை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்.

 

பொருள் விளக்கம்
நாம் உண்ணும் உணவு இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு ஆகிய அறுசுவை உள்ளது.

உணவு நன்கு ஜீரணம் ஆக எச்சில் நன்கு ஊற முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். கசப்பு சுவை உண்ட பிறகு மற்ற சுவை நன்கு சுவைப்பதில்லை, பிடிப்பதில்லை.

ஆதலால் கசப்பு சுவையை கடைசியில் உண்ண வேண்டும். மற்ற சுவைகள் நடுவில் உண்ண வேண்டும்.

 1. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
  (இன்னிசை வெண்பா)

முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.

 

பொருள் விளக்கம்:

நம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு, வயதில் பெரியவருடன் பக்கத்தில் அமர்ந்து உண்ணக்கூடாது. (அதாவது அவருக்கு தேவையானதை உண்ட பிறகு நாம் உண்ண வேண்டும்).

அவர்களுக்கு சிறிய பாத்திரம், சிறிய இலை கொடுத்து நாம் பெரிய பாத்திரத்தில், பெரிய இலையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. அன்புடன் பரிமாறி, ஆசாரம் மாறாமல் அமர்ந்து உண்டு,

அவருண்ட பாத்திரத்தை நாம் எடுத்து அவருக்கு தக்க மரியாதை செய்து உபசரிப்பதே சிறந்த முறை ஆகும்.

 1. உண்டபின் செய்ய வேண்டியவை
  (பஃறொடை வெண்பா)

இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

 

பொருள் விளக்கம்

உணவு உண்டபின் உணவை துப்பக்கூடாது, வாயை நன்றாக் நீர் விட்டு கொப்பளித்து, எச்சில் நீங்க சுத்தம் செய்ய வேண்டும். இது போல் மூன்று முறை செய்ய வேண்டும். பிறகு வாய் வெளியில் துடைத்து, முகத்தில் இருந்ததையும் துடைத்து முகம் வடிவம் பெற செய்து,

முகத்தில் உள்ள மற்ற உறுப்புகளான மூக்கு, கண் கழுவி, விரலால் துடைத்து வாய் துடைப்பதே அறிவு நிறைந்தவர்கள் கண்ட ஆரோக்கியமான வழக்கம் ஆகும்.

 1. நீர் குடிக்கும் முறை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து.

 

பொருள் விளக்கம்:
இரண்டு கையால் முகர்ந்து எடுத்த நீரை பருகக்கூடாது, பெரியவர் கொடுக்கும் பொருளை ஒரு கையால் வாங்கக்கூடாது, அவருக்கு ஒரு கையால் எந்த ஒரு பொருளையும் கொடுக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் உடம்பை சொறியக்கூடாது.

 1. மாலையில் செய்யக் கூடியவை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி.

 

பொருள் விளக்கம் 

மாலைப்பொழுதில் தூங்கக்கூடாது, வெளி இடங்களுக்கு நடந்து செல்லக்கூடாது (இருட்டு நேரம் ஆதலால் விஷப்பூச்சிகள், பாம்பு போன்றவரை தாக்காமல் இருப்பதற்காக நடந்து செல்லக்கூடாது), பகலும் இரவும் சந்திக்கும் சந்தி வேளையில் உணவு உண்ணக்கூடாது,

யாரிடமும் கோபப்படக்கூடாது. முன் அந்தியில் அதாவது முதல் சாமத்தில் 6 -9 மணி வரை விளக்கு ஏற்றி, இரவு உணவு உண்டு, வெளிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் அடங்கி இருப்பது மூத்தோர் சொன்ன நல் வழியாகும்.

 1. உறங்கும் முறை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

 

பொருள் விளக்கம்

தூங்கும் முன் கைகூப்பி இறைவனை தொழுது, வடக்கு திசை தலை வைக்காமல், வெறும் உடம்போடு படுக்காமல் உடல் மீது போர்வை போர்த்தி படுப்பது மூத்தோர் சொன்ன நல் வழியாகும்.

 1. இடையில் செல்லாமை முதலியன
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.

 

பொருள் விளக்கம்

இரண்டு தெய்வங்களுக்கு இடையில், இரண்டு அறிவுடையசான்றோரற்கு இடையில் போகக்கூடாது, தும்பும் போது இறைவனை நினைக்கவேண்டும், பெரிய மனிதர்கள் வாழ்த்தும் போது அவர்களையும் வணங்க வேண்டும். நம்முடன் ஒத்த குணம் உள்ள நண்பர்கள் உடன் மனம் உவந்து செல்ல வேன்டும்.

 1. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
  (இன்னிசை வெண்பா)

புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

 

பொருள் விளக்கம்

கால்நடைகள் மேயும் பசும்புற்கள் நிறைந்த பகுதிகளிலும், உண்ணும் பொருள் விளையும் விளை நிலத்திலும், நல்ல காரியங்களுக்கு பயன்படும் பசும் சாணத்தில் மேலும் , சுடுகாட்டிலும், பலர் செல்லும் வழியிலும், பலர் பயன்படுத்தும் நீர் நிலைகளிலும், வழிபாடு செய்யும் இடங்களிலும், ஒருவர் இளைப்பாற நிழல் தரும் மரத்தின் கீழும்,

ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் இடங்களிலும், உரமாக, வீட்டு பொருள்கள் தூய்மை செய்ய பயன்படும் சாம்பலின் மேல் ஆகிய பத்து இடங்களில்நல்லஉணர்வுடையவர்கள் எச்சில் உமிழ்தல் , மலம், சிறுநீர் கழித்தல் செய்ய மாட்டார்கள்.

 1. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
  (குறள் வெண்பா)

பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

பொருள் விளக்கம்:
மலம், சிறுநீர் கழிக்கும் போது பகலில் தெற்கு நோக்கி அமர கூடாது. இரவில் வடக்கு நோக்கி அமரக்கூடாது. புணித தீயில் பகல் பொழுதில் நீர் ஊற்றி அணைக்கக்கூடாது.

 

 1. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
  (இன்னிசை வெண்பா)

பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.

 

பொருள் விளக்கம்

எட்டு திசையும், ஆகாயம், பூமி ஆகிய பத்து திசைகளும் மறைத்த பின், அந்தரத்தில் இருப்பதாக நினைத்து, உமிழ் நீர், மலம், சிறுநீர் ஆகியவை கழிக்க வேண்டும்.

கழிக்கும் பொது இந்திர பதவியே கிடைப்பதாய் இருந்தாலும் அடுத்தவருக்கு தெரியும் வண்ணம் வெளிப்படையாக செய்யக்கூடாது. அதில் இருந்து விலகாமல் கழிப்பது நூலோர் கண்ட வாழ்வு முறை என்பர் பெரியோர்.

 1. வாய் அலம்பாத இடங்கள்
  (இன்னிசை வெண்பா)

நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.

 

பொருள் விளக்கம்

நடந்து கொண்டே இருக்கும் போது வாய் அலம்பக்கூடாது, ஓடாமல் ஒரு இடத்தில் தேங்கிஉள்ள பாசி படிந்த நீரிலும் வாய் அலம்பக்கூடாது.

 

நாம் செல்லும் வழியில் கண்ணில் பட்ட நீர் நிலைகளில் அந்த நீரின் தன்மை அறியாது அந்த நீரிலும் வாய் அலம்பக்கூடாது. (வேறு யாராவது உபயோகம் செய்கிறார்களா, ஆடு மாடு மற்ற விலங்குகள் அந்த நீரை அருந்துகிறதா என்று பார்த்து அதை பயன்படுத்த வேண்டும்).

 

கலத்தில் (பாத்திரத்தில்) முகர்ந்து வாய் அலம்பும் போது பிறர் மீது நீர் தெறிக்கும் படி வாய் அலம்பக்கூடாது.

 1. ஒழுக்க மற்றவை
  (பஃறொடை வெண்பா)

சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.

 

பொருள் விளக்கம்

ஒரு மனிதனுக்கும் விளக்குக்கும் இடையே உள்ள இடைவெளியில் நடந்து செல்லக்கூடாது. சுவர் மேல் உமிழக்கூடாது.

குளிரால் துன்பப்பட்டாலும் அடுத்தவர் பயன்படுத்திய படுக்கை விரிப்பு, போர்வையை பயன்படுத்தக்கூடாது.

மிகப் பெரிய ஜனநெரிசலிலும் நம் ஆடை (வேட்டி சேலை தலைப்பு, முந்தாணி ) அடுத்தவர் மேல் படும் வண்ணம் நடக்கக்கூடாது. பலர் முன் நம் ஆடையை உதரக்கூடாது.

இதுவே நற்கடமைகள் அறிந்த அறிவாளிகளின் செயல் ஆகும்.

37. நரகத்துக்குச் செலுத்துவன

(நேரிசை வெண்பா)

 

பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.

 

பொருள் விளக்கம்

அறிவு நிறைந்த பெரியோர்கள்,

 • மாற்றான் மனைவி,
 • போதை தரும் மது,
 • உள்ளதை இழக்கச்செய்யும் சூது,
 • அடுத்தவர் பொருளை கொள்ளை அடித்தல்
 • கொலை

ஆகிய ஐந்தும் தவறியும் செய்ய மாட்டார். இதை செய்தால் நல்ல குணம்/ ஒழுக்கம் இல்லாத ஆண்மைத் திறன் இல்லாதவர்கள் என்று பிறரால் எள்ளப்படுவது மட்டுமல்லாமல் அதுவே நரகத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும் வழியாகும்.

38. எண்ணக்கூடாதவை

(இன்னிசை வெண்பா)

பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்.

 

பொருள் விளக்கம்

சந்தேகம் இல்லாத அறிவுடைய பெரியோர்கள் ஒருநாளும் பொய், அடுத்தவர் மீது கோள் சொல்லுதல், பிறர் பொருளை அபகரிக்க திட்டம் இடல், பொறாமை ஆகியவற்றை மனத்தால் சிந்திக்க மாட்டார்கள்.

அப்படி சிந்தித்தால் அவர்களை வறுமை சூழ்ந்து, இம்மை மறுமைக்கும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆழ்த்திவிடும், நரகத்திற்கும் வழிவகுக்கும், தெய்வமும் அழிந்து விடும்

39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.

 

பொருள் விளக்கம் 

நல்ல குணம் உடைய பெரியவர்கள் தங்களுக்கு என்று தனியாக சமையல் செய்ய மாட்டார்கள். விருந்தினர், உறவினர் என்று அனைவருக்கும் சேர்த்துத் தான் சமையல் செய்வார்கள். தனக்கு என்று தனியாக செய்து உண்ண மாட்டார்கள். சமையல் அறையில் உணவு தயாராகும் போதும், அதை இறைவனுக்கு படைக்காமல் இருக்கும் போதும் எச்சில் செய்ய மாட்டார்கள். இறைவனுக்கு படைத்து விட்டு பின்பு உண்பார்.

 1. சான்றோர் இயல்பு
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.

 

பொருள் விளக்கம்

புதிய உறவினர்கள் மத்தியில் உணவு அருந்தும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களுக்கு என்று உயர்ந்த ஆசனம் போட்டு அமர மாட்டார்கள்.

இளைஞர்கள் விளையாட்டாக தவறு செய்தாலும் அதை பெரிது படுத்த மாட்டார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்.

 1. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்.

 

பொருள் விளக்கம் 

ஒருவர் கண்களுக்கு மை தீட்டிய கோலைக் கொண்டு அடுத்தவருக்கு மை தீட்டக்கூடாது.

ஒருவர் கால்கள் மற்றொருவர் கால் மேல் படும் வண்ணம் அமரக்கூடாது, படுக்கக்கூடாது.

கோவில் பிரசாதம், புணிதநீர் போன்ற புண்ணியமான பொருள்கள் கிடைத்தால் கண்களிலும் , தலையிலும் ஒற்றிக்கொண்டு அதன் பிறகு உபயோகிக்க வேண்டும். இதுவே பல நூல்கள் கற்று அறிந்தவர் செய்யும் செயலாகும்.

 1. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

 

பொருள் விளக்கம்

மாதவிடாய் தொடங்கி அது முடிந்து நீராடும் வரை மனைவியை தீண்டக்கூடாது. நீராடி முடிந்தபின் அடுத்து வரும் 12 நாட்களும் மனைவியை நீங்காமல் இருக்க வேண்டும்.

இந்த நாட்கள் தான் கரு
உருவாவதற்கு உகந்த நாள், பெண்ணுக்கும் ஆணின் துணை வேண்டிய அவசியமான நாட்கள் ஆகும்.

 1. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
  (இன்னிசை வெண்பா)

உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.

 

பொருள் விளக்கம்

 • உச்சி பகல் பொழுது,
 • பொழுது விடியும் விடியற்காலை,
 • பொழுது சாயும் மாலை வேளை ,
 • சிவனுக்கு உரிய திருவாதிரை ,
 • திருமாலுக்கு உரிய திருவோண நட்சத்திரம்,
 • அமாவாசை, பௌர்ணமி, அட்டமி அன்றும்,
 • ஒருவரின் பிறந்த நட்சத்திரம்

இந்தநாட்களிள் உடலுறவு கூடாது.

 1. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
  (இன்னிசை வெண்பா)

நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.

 

பொருள் விளக்கம்

அரிசி, உணவு பொருள்கள் அளக்கும் நாழியை உட்காரும் மணையின் மேல் வைக்கக்கூடாது. அது போல் உட்காரும் மணையை கவிழ்த்து வைக்கக்கூடாது.

புதிதாக வாங்கும் புடவையை, உடையை தலைக்கு கீழே வைக்கக்கூடாது. பலர் சென்று புழங்கும் வழியில், அறையில் கட்டில் போட்டு தூங்கக்கூடாது.

தனக்கு பரிச்சயம் ஆகாதவர் முன் அதிக நேரம் நிற்கக்கூடாது.

 1. பந்தலில் வைக்கத் தகாதவை
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.

 

பொருள் விளக்கம் 

 • துடைப்பம், உடைந்த மரத்துண்டுகள்,
 • உதிர்ந்த பூ இதழ்கள்,
 • கரி ஏறிய பாத்திரம்,
 • உடைந்த கட்டில்,
 • குப்பை கிழிந்த துணிகள்

ஆகிய ஐந்து பொருள்களை கீழே விரித்து அதன் மேல் மணப்பந்தல் அமைக்கக்கூடாது.

46. வீட்டைப் பேணும் முறைமை

(பஃறொடை வெண்பா)

காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்.

 

பொருள் விளக்கம்

வீட்டில் நல்லது வேண்டும் என்று நினைப்பவர்கள், இலக்குமி அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள்,

அதிகாலை எழுந்து, வீட்டில் உள்ள குப்பைகளை கலைந்து, நீர் தெளித்து, பசுஞ்சானம் மொழுகி, சமையல் செய்யும் பாத்திரத்திற்கு மலர் வைத்து அடுப்புக்கு தீ மூட்ட வேண்டும் .

47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்

(இன்னிசை வெண்பா)

அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.

 

பொருள் விளக்கம்

அட்டமி, அமாவாசை, பௌர்ணமி ,பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி ஆகிய நாட்களும், நாட்டை ஆளும் மன்னனுக்கு உடல் நலம் இல்லாத நாளும், பூமி அதிர்ச்சி, இடியுடன் மின்னல் மின்னும் நாளும் தூய்மை இல்லாத நாட்கள் ஆகும்.

இந்த நாட்கள் அந்தணர்கள் நூல் ஓத ஆகாத நாட்கள் ஆகும்.

 1. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
  (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்.

 

பொருள் விளக்கம்

ஒருவருக்கு திருமணம் நடக்கும் நாளும், குடும்பத்தில் விசேச தெய்வ வழிபாடு செய்யும் நாளும், நம் முன்னோர் இறந்த தினத்தில் செய்யும் பிதிர் வருடத் சிராத்த திதி அன்றும், திருவிழா நாட்களிலும் தவறாமல் தருமம், அன்னதானம் செய்ய வேண்டும்.

கூழ் குடித்தாலும் தனியே உண்ணாமல் விருந்தினருக்கு கொடுத்து உண்ண வேண்டும். இதுவே மேலோர் சொன்ன முறையாகும்.

49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.

 

பொருள் விளக்கம்

 • நாம் உடுத்தும் உடை,
 • நடக்கும் விதம்,
 • நாலு பேர் உள்ள சபையில் பேசும் பேச்சு,
 • தவறு செய்தவரை கண்டிக்கும் சொல்

ஆகிய நான்கும் நம் நிலைமை அறிந்து, நம் தகுதி அறிந்து, நம் கல்வி அறிந்து, நம்குடியின் பெருமை அறிந்து செயல் பட வேண்டும்.

50. கேள்வியுடையவர் செயல்

(இன்னிசை வெண்பா)

பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.

 

பொருள் விளக்கம்

 • நல்ல பல நூல்கள் கற்று, பல விடயங்களை கேள்வி உற்று, நன்கு விடயம் அறிந்த அறிவு உடையவர்கள்; ஒருவரை பலர் முன் பழிக்க மாட்டார்கள், இகழ மாட்டார்கள்.
 • பலர் உள்ள அறையில் உறங்க மாட்டார்கள்.
 • தன்னால் இயலாத காரியத்தை செய்து முடித்து தருவதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
 • தன்னை விட வசதி குறைந்தவர்களை, தன் கீழ் பணி புரிபவர்களை எள்ளி நகையாடல், இகழ்ச்சி செய்தல் ஆகிய காரியங்களை செய்ய மாட்டார்கள்.

 

51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று.

 

பொருள் விளக்கம் 

தன் கண் பார்வை நிலை பெற, உடல் ஒளியை வேண்டுவோர் மின்னல் மின்னும் போதும், எரி நட்சத்திரம் விழும் போதும்,உச்சிப் பொழுதும் அதற்கு முன் /பின் உள்ள சூரியனையும் பார்க்க மாட்டார்கள்.

தன் குண நலன் என்று கூறும் ஒளி குன்றாமல் இருக்க வேசிகளின் அழகினை ரசிக்க மாட்டார்கள்.

52. தளராத உள்ளத்தவர் செயல்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்.

 

பொருள் விளக்கம்

நல் ஒழுக்கத்தில் இருந்து விலகாத உள்ளத்தவர் ஒரு பொழுதும்,

 • அடுத்தவரை கெடுக்கும் வஞ்சனை உரையும்,
 • ஒருவருக்கு பயனில்லாத சொல்லையும்,
 • வாய்க்கு வந்த உரையும்,
 • அடுத்தவரை திட்டும் வார்தையையும்,
 • ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை சொல்லும் சொல்லையும் சொல்ல மாட்டார்கள்.

53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை

(இன்னிசை வெண்பா)

தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.

 

பொருள் விளக்கம் 

நல்ல நெறியில் உள்ளவர்கள் அடுத்தவரை ஏலனம் செய்யும் வகையில் துப்புதல்,

 • கல் எறிதல் ,
 • குதிரை மாதிரி கனைத்தல்,
 • மரியாதை இல்லாமல் கூப்பிடுதல்,
 • ஒருவன் செய்வது போல் அவன் கோபப்படும் வகையில் அதே மாதிரி செய்தல்,
 • கத்துதல், கை தட்டல்,
 • உடல் உறுப்புகளை தேய்ப்பது போல் அடுத்தவரை வெருப்படையச் செய்தல்
 • ஆகியவை செய்ய மாட்டார்கள்.

 

54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.

பொருள் விளக்கம்

நல்ல குணம் உடைய மனிதர்கள் தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு,

 • இன்முகத்துடன் கூடிய இனிமையான வரவேற்பு,
 • அவர் மனம் கோனாதபடி இனிமையான சொற்கள்,
 • கால் கழுவ நீர், அதன் பிறகு தாகம் தீர்க்க குளிர்ந்த நீர்,
 • அவர் அமர இருக்கை,
 • உண்ண உணவும்,
 • இளைப்பாற பாய், படுக்கை அளிப்பார்கள்.

இதுவே விருந்தினருக்கு நாம் செய்யும் சிறப்பான செயல் ஆகும்.

55. அறிஞர் விரும்பாத இடங்கள்

(பஃறொடை வெண்பா)

கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை.

பொருள் விளக்கம்

நிகர் இல்லாத ஒப்பற்ற அறிவுடையவர்கள்,

 • கோபம் கொண்டு பகை கொண்டவர் முன்னும்,
 • மது குடித்து ஆடும் நபர் முன்னும்,
 • மனதில் ஆசையில்லாமல் போலியாக ஆசை வார்த்தை பேசும் வேசியின் இல்லத்தின் முன்னும்,
 • நன்றாக நட்பு கொண்டு கொள்கை மாறுபாடு காரணமாக பிரிந்து பின்கோள்சொல்லும் நண்பர் முன்னும்,
 • பலர் குளித்து புழங்கி சுத்தம் இல்லாத நீர் நிலையின் முன்னும் நிற்க மாட்டார்கள்.

 

56. தவிர்வன சில

(பஃறொடை வெண்பா)

முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.

 

பொருள் விளக்கம் 

 • அறிவு நிறைந்தவர்கள் முற்றிய புல் நிறைந்த இடத்திலும் , காட்டிலும் சேர மாட்டார்கள் (பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ள விலங்குகள் இருக்கும் புதர்கள்).
 • இவற்றை தீக்கு இரையாக்க மாட்டார்கள்.
 • மழை பெய்யும் போது கால் அகல வைத்து ஓட மாட்டார்கள்.
 • தனக்கு பரிச்சயம் இல்லாத, பாதை தெரியாத காட்டில் தனியான செல்ல மாட்டார்கள்.
 • தம்மிடம் உள்ள பணம் இழந்து வறுமை வந்த நிலையிலும் தகாத தொழில் செய்ய மாட்டார்கள்.

57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை

(இன்னிசை வெண்பா)

பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்.

 

பொருள் விளக்கம் 

நோய் வேண்டாம் என்று விரும்புபவர்கள்.

 • வெளிச்சம், காற்று வராத பயன்பாட்டில் இல்லாத பழைய வீட்டிலும், கோவில்களிலும், சுடுகாட்டிலும், புக மாட்டார்கள்,
 • ஊர் இல்லாத வழியில் இருக்கும் ஒற்றை மரத்தில்தனியாகவும்,
 • மேலும், பகலிலும் துங்க மாட்டார்கள்.

58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை

(இன்னிசை வெண்பா)

எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்.

பொருள் விளக்கம்

ஒருவர் வீட்டில் இருந்து புறப்படும் போது,

 • அவர் பின் இருந்து கூவக்கூடாது,
 • அப்போது தும்மக்கூடாது,
 • எங்கு செல்கிறீர்கள் என்று வினவக்கூடாது,
 • முன்னால் இருந்து வழிமறித்து உரையாடக்கூடாது.
 • வீட்டில் உள்ளவர்கள் அவசரமாக உரையாட வேண்டின் புறப்படுபவரின் இரு புறமும் இருந்து உரையாட வேண்டும்,
 • வீட்டில் உள்ள பெரியவரை வலம் வந்து ஆசீர்வாதம் பெற்ற பிறகு வெளியில் செல்ல வேண்டும்.

 

59. சில தீய ஒழுக்கங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து.

பொருள் விளக்கம்

 • ஒருவரை பார்த்து உடம்பு நன்றாக இருக்கிறது என்று கூறக்கூடாது.
 • விளக்கை வாயால் ஊதி அணைக்கக்கூடாது..
 • அடுப்பில் ஒரு பொருள் வெந்து கொண்டு இருக்கும் போது தீடிரென நெருப்பை அடுப்பினில் இருந்து எடுக்கக்கூடாது.

குளிர் காயும் போது நெருப்புப்பொறி நம் மேல் படும் வண்ணம் அமரக்கூடாது.

60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு செல்லுமிடத்து.

பொருள் விளக்கம்

நன்கு கற்று அறிந்து அடங்கிய, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெரியவர்கள்,

செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் போது அவர் உடன் செல்லும் நபர் செருப்பு அணிந்து செல்லார்,

 • அவர் குடை இல்லாமல் நடந்து செல்லும் போது, அவருக்கு குடை அளிக்காமல் தமக்கு வெயில் மறைக்க குடை பிடித்து செல்வது மரபாகாது.

61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.

 

பொருள் விளக்கம் 

தூய ஒழுக்கத்தால் வந்த, நான்கு வேதங்களையும் கற்று உணர்ந்து குணங்களால் மேல் முறையில் இருப்பவரை நம் பெரியவராகப் பாவித்து அவரை வணங்குதல், நூல் பல கற்றவர்களின் செயலாகும்.

62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று.

பொருள் விளக்கம் 

 • பெரியவரை கண்டவுடன் அவரின் கால்களில் தொழுது வணங்குதல்,
 • அவர் அமரும் போது நின்று இருத்தலும்,
 • அமர்ந்து இருக்கும் போது பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்தால்

ஆகிய மூன்றும் பெரியவர்களுக்கு நாம் செய்யும் ஆசாரங்களாகும்.

63. கற்றவர் கண்ட நெறி

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி.

 

பொருள் விளக்கம் 

 • வாழ்க்கையை துறந்து பிறர் வாழ துறவியாக வாழும் துறவியைப் காப்பதும்,
 • தவறு செய்ய வெட்கப்படுதலும்,
 • நாம் கற்று அறிந்ததை தற்பெருமையுடன் நன்கு கற்று அறிந்து உணர்ந்து அடங்கிய பெரியவர் முன் மறந்தும் பேசாதிருத்தலும்

ஆகியவைஒழுக்கம் உடையவர் செய்யும் செயலாகும்.

 

64, வாழக்கடவர் எனப்படுவர்

(இன்னிசை வெண்பா)

பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்.

 

பொருள் விளக்கம் 

ஒரு இடத்தில் நடக்கும் போதும், ஒரு வாகனத்தில் பயணிக்கும் போதும்:

 • கல்விபோதிக்கும்குருமார்கள்,
 • தலையில், வயிற்றில் சுமை சுமப்பவர்கள்,
 • நோயாளிகள்,
 • வயது முதிர்ந்த பெரியோர்,
 • இளம் குழந்தைகள்,
 • பெண்கள்
 • விலங்குகள்

இவர்களுக்கு வழி அளித்து நடக்க வேண்டும், இவர்களுக்கு இடம் அளித்து பின்பு நாம் அமர வேண்டும்.

65. தனித்திருக்கக் கூடாதவர்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.

 

பொருள் விளக்கம் 

ஆண் பெண் என்றபேதத்தை தாண்டி ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்வது அரிது, ஆகையால் இதை உணர்ந்த சான்றோர்

 • தன்னைப் பெற்ற தாய்,
 • தன் மகள்,
 • உடன் பிறந்த சகோதரி

ஆகியவருடன் தனியே உறங்க மாட்டார்கள்.

66. மன்னருடன் பழகும் முறை

(இன்னிசை வெண்பா)

 

கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.

 

பொருள் விளக்கம்

மன்னர், மேலதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்களை சந்திக்கும் போது,

 • அவர்களின் வாயில் (வீட்டில்) உள்ளே நம்மை செல்ல மறுத்தால் கோபம் கொள்ளக்கூடாது,
 • மிகுந்த உரிமையை எடுத்துப் பேசக் கூடாது.
 • அவருக்கு கொடுக்க எடுத்துச் சென்ற பொருளை கொடுக்காமல் மறைக்கக்கூடாது.
 • அவர் போல் ஆடம்பரமாக உடை உடுத்தக்கூடாது.
 • பெரிய சபையில் அவரைத் தவிர்த்து பிறருக்கு மரியாதை செய்யும் படி பிறர் உடன் செல்ல மாட்டார்.

வாழ்க்கையின் இறுதி வரை நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை தவறாமல் செய்வார்கள்.

67. குற்றம் ஆவன

(இன்னிசை வெண்பா)

தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்.

பொருள் விளக்கம் 

 • நமக்கு கொடுக்கும் உறுதி மொழியையும்,
 • உயர்பதவியில் இருப்பவர்களால் போற்றப்படும் நிலையில் இருக்கும் பெரியவர்கள் கூறும் உறுதி மொழியும்,
 • அது மட்டுமல்லாமல் நம் முன் ஒருவர் பிறருக்குச் சொல்லும் உறுதி மொழியும் வேறு ஒருவரிடம் சொல்லக்கூடாது.

சொல்லுவதால் தேவையற்ற துன்பங்கள் விளையலாம்.

68. நல்ல நெறி

(இன்னிசை வெண்பா)

பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து.

 

பொருள் விளக்கம் 

நல்ல நெறியில் உள்ளவர்கள்செயல்.

 • பெரியவர் உடன் செல்லும் போது அவர் விரும்புபவை எல்லாம் நமக்கு வேண்டும் என்று விரும்ப மாட்டார்.
 • நம்முடன் இணையாகாத சிற்றறிவு உடையவரை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வர மாட்டார்.
 • தம் பிள்ளைகளே ஆனாலும் அவர்கள் அறிவு இல்லா செயலைத் செய்தாலும் அவர்களை இகழ்ந்து பேச மாட்டார்கள்.
 • அதே போல் தம் கருத்துடன் ஒத்து வராத, நண்பர்கள் அல்லாத நபர்கள் ஆனாலும் அவர்களையும் இகழ்ந்து பேச மாட்டார்கள்

 

69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன

(இன்னிசை வெண்பா)

முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்.

 

பொருள் விளக்கம்

வாழத் தெரிந்தவர்கள்:

 • தம்முடைய உயர் அதிகாரி, மேல் நிலையில் இருப்பவர்கள், மன்னன் ஆகியோருடன் கோபப்பட மாட்டார்,
 • துணிந்து அவருக்கு எதிரான செயல்களைச் செய்ய மாட்டார்,
 • அவர் முகத்துக்கு எதிரே எதிர்த்து நிற்க் மாட்டார்.
 • அவர் தனிமையில் இருக்கும் போது தன் குறையை கூறார்,
 • எனக்கு இது, அது தெரியும் என்று பெருமையாகக் கூற மாட்டார்கள்.
 • காக்கா வெள்ளை என்று அதிகாரி சொன்னாலும் அன்பின்றி அவர் கோபப்படும்படி அதை மறுத்து பேசாமல் அமைதியாக இருப்பார்.

 

70. மன்னன் முன் செய்யத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து.

பொருள் விளக்கம்

நம்மை விட பெரியவர், உயர் அதிகாரி, மன்னன் ஆகியோர் முன்:

 • எச்சில் துப்புதல்,
 • அவரை விட உயர்வான ஆசனத்தில் அமருதல்,
 • வெற்றிலை பாக்கு (புகை, மது) போடுதல்,
 • தேவையற்ற தவறான வார்த்தை பேசுதல்,
 • தூங்குதல் ஆகியவை செய்யுதல் கூடாது.

 

71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று.

 

பொருள் விளக்கம் 

நல்ல குடியில் பிறந்தவர்கள்:

மன்னனிடம் (தம்முடைய மேலதிகாரி /உயர் பதவியில் இருப்பவர்கள்) தம்முடைய கல்வி, செல்வம், புகழ் /பெருமை, குணநலம் ஆகியவற்றை விளக்கி கூறி, வெகு மேலாக பரப்பி தற்பெருமையாகக் கூறி மன்னனின் கோவத்துக்கு ஆளாகி தமக்கு தாமே பகையை தேட மாட்டார்கள்.

72. வணங்கக்கூடாத இடங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து.

 

பொருள் விளக்கம்

 • அரசன் இருக்கும் அரண்மனையிலும் ,
 • இறைவன் வாழும் கோவிலிலும் பெரியவரை கண்டால் வணங்கக்கூடாது.

அது போல் அவர்கள் வீதி உலா செல்லும் போது அவர்களைத் தவிர்த்து மற்றவர்களை வணங்கக்கூடாது.

73. மன்னர் முன் செய்யத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி.

 

பொருள் விளக்கம்

 • கேலியாகச் சிரிப்பு
 • கொட்டாவி விடுதல்
 • எச்சில் உமிழ்தல்
 • பெரியவர் மீது படும் படி தும்மல் செய்தல்

இவை யாவும் பெரியவர்கள் முன்பு செய்யக்கூடாது. செய்தால் தீராத பழி வந்து நிற்கும்.

74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை

(இன்னிசை வெண்பா)

நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்.

பொருள் விளக்கம்

சிறந்த குணமுள்ள மாணவர்கள்:

 • அடக்கத்தால் ஆசிரியர் பாடம் சொல்லாமல் சும்மா இருக்கும் போது அமைதியுடன் இருப்பர்.
 • என்றும் இருந்து அமரும் இருக்கும் போது அவர் சொல்லாமல் எழுந்து செல்ல மாட்டார்.
 • அவர் பாடம் சொல்லும் போது செவி கொடுத்து கவனமாக கேட்பர்.
 • கவனிக்காமல் பாடம் சொல்லி முடித்தவுடன் அது குறித்து வினவமாட்டர்.

75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து.

பொருள் விளக்கம்

பெரியவர்கள் இருக்கும் சபையில்:

 • உடையை கழட்ட மாட்டார்கள்.
 • காதை சொறிந்து நிற்கக் கூடாது.
 • கையை உயர்த்தி பேசக்கூடாது.
 • அங்குள்ள பெண்கள் மேல் கண்கள் செல்லக்கூடாது.
 • அங்கு அவர்கள் பிறர் காதில் சொல்லும் ரகசியத்தை நாம்காது கொடுத்துக் கேட்கக்கூடாது.

76. சொல்லும் முறைமை

(இன்னிசை வெண்பா)

விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.

 

பொருள் விளக்கம்

ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது,

 • விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது.
 • சொன்னதை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது.
 • பொய்யாக உரைக்கக் கூடாது.
 • பலவாறு விவரித்து உரைக்கக் கூடாது.
 • மொத்த கருத்தின் விஷயத்தை சுருக்கமாக சிறிய சொற்றொடர்களால் பொருள் அடங்குமாறு காலம் அறிந்து சொல்ல வேண்டும்.

77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற.

பொருள் விளக்கம் 

நல்ல குலத்தில் பிறந்த, கற்பு நெறி தவறாத மங்கையர்:

 • தங்கள் உடல் பிறருக்கு அழகாக தெரிய வேண்டும் என்று தங்கள் உடலை பார்த்து அலங்காரம் செய்ய மாட்டார்கள்.
 • பிறர் முன்னிலையில் தலைமுடியை உலர மாட்டார்கள்,
 • கையை நொடிக்க மாட்டார்கள்.
 • தங்கள் கணவனைத் தவிர எத்துணை அழகனாய் இருந்தாலும் பிற ஆடவனைப் பார்க்க மாட்டார்கள்.

78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.

பொருள் விளக்கம்

 • அரசன், உயர் அதிகாரிகள் இருக்கும் இடங்களில் இருக்கும் சபையில் பிறருடன் ரகசியம் பேசக்கூடாது,

அரசன் ஒருவருக்கு கூறும் ரகசியத்தை காது கொடுத்து கேட்கக் கூடாது. கேட்கும் படி நிற்க் நேர்ந்தால் அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல், அதிலிருந்து விலகி வேறு ஒன்றை கவனிப்பது போல் மாறி நிற்க வேண்டும்.

79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்

(நேரிசை வெண்பா)

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.

பொருள் விளக்கம் 

நன்கு கற்று உணர்ந்து அடங்கிய திறம் நிறைந்த பெரியவர்களிடம்

 • தங்களுக்கு துன்பம் ஏற்படும் வேளையில் துன்பத்தை கண்டு துவளாமல் வாழ்வதும்,
 • இன்பம் வரும் வேளையில் இன்பத்தை கண்டு பெரு மகிழ்ச்சி அடையாமல் அமைதியாக இருப்பதும்,
 • அன்பில்லாத மனிதர்கள் வீட்டில் நுழையாமல் இருப்பதும்

ஆகிய மூன்றும் குணங்களும் நிறைந்து இருக்கும்.

 

80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை

(நேரிசை வெண்பா)

தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை.

பொருள் விளக்கம்

 • கோபம் வந்த போதும் பெரியவர்களை பேர் சொல்லி அழைக்கக்கூடாது.
 • இல்லத்தரசியிடம் கோபம் கொண்டு நீண்ட நேரம் பேசாமல் இருக்கக்கூடாது.
 • பெரியவர்களை முறை இல்லாமல் பேசக்கூடாது.
 • அது போல் நன்கு விஷயம் அறிந்தவர்கள்,“துன்பம் விளைவிக்கும் சிறிய குணத்தை உடையவரையும்” முறை இல்லாமல் பேச மாட்டார்.

இதுவே நல்ல நெறி என்று கூறப்படும் முறை ஆகும்.

81. ஆன்றோர் செய்யாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர் அல்லா தவர்.

பொருள் விளக்கம்

 • அந்தந்த தொழிலுக்கு உரியவர் அல்லாத பெரியவர்கள் ஒரு வீட்டின் பின் வாசல் வழியே நுழைய மாட்டார்.

அரசன் நாட்டியம், கூத்து என்று சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் அவரை சென்று சந்திக்க மாட்டார்.

 

82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்

(இன்னிசை வெண்பா)

வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்.

 

பொருள் விளக்கம்

தங்களை அழகு செய்து ஆண்களை கவரும் பெண்கள் இருக்கும் இடத்தில் நல்ல குணம் உள்ளவர் வீடு அமைக்க மாட்டார்கள்.

அந்த பெண்கள் தங்கும் இடம் தங்களுக்கு உரிமையானதாக இருக்கும் தருணத்திலும் அங்கு தங்கள் மனைவியின் மனம் கோணும் படி அங்கே வீடு அமைக்க மாட்டார், உரிமை கொண்டாட மாட்டார்.

83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை

(இன்னிசை வெண்பா)

 

நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்.

பொருள் விளக்கம் 

வாழ்க்கையில் இறுதி வரை நல்லமுறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்,

 • ஒருவர் செல்லும் பொது அவருடன் ஒரே வரிசையில் உரசும் படி செல்ல மாட்டார்.
 • ஒருவருடைய நிழலை மிதித்து நிற்க மாட்டார்.
 • ஊரார் வருத்தப்படும் செயலைச் செய்ய மாட்டார்.
 • அரசனின் பகைவரிடம் ஆதாயம் கருதி சேர மாட்டார்.

84. பழகியவை என இகழத் தகாதவை

(இன்னிசை வெண்பா)

அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்.

பொருள் விளக்கம் 

 • புற்றில் தங்கும் பாம்பும்,
 • அரசனும்
 • நெருப்பும்
 • குகையில் வசிக்கும் சிங்கம்

ஆகிய நான்கிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவை நமக்கு பழக்கமானவை, உருவத்தில்/வயதில் சிறியது, எளிமையானது என்று எண்ணக்கூடாது. அப்படி எண்ணி கவனம் இல்லாமல் இருந்தால் துன்பம் விளையும்.

 

85. செல்வம் கெடும் வழி

(நேரிசை வெண்பா)

அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வம் கெடும்.

பொருள் விளக்கம்

அறிவுத்திறம் நிறைந்த பெரியவர்கள் தங்களிடம் உள்ள செல்வம் நிலை பெற வேண்டுமானால்,

அரசனை விட அதிகமாக தர்ம காரியங்கள், கல்யாணம், ஆடம்பரம், வீடு ஆகியவற்றுக்கு செலவு செய்ய மாட்டார்கள். செய்தால் சேர்த்து வைத்த செல்வம் வீணாகி விடும்.

86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
உண்டது கேளார் விடல்.

பொருள் விளக்கம்

பெரியவர்களை காணும் பொழுது நீங்கள் சாப்பிட்டது என்ன என்று கேட்கக்கூடாது.

அதே போல் கீழ் குணம் உள்ள சிரியவரை கண்டவுடன் முகம் திரியக்கூடாது, அவர்களையும் சாப்பிட்டது என்ன என்று கேட்கக்கூடாது.

87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை.

 

பொருள் விளக்கம்

ஒருவர் தூங்கும் போது, அவர்களின் கால் கழுவக்கூடாது, அவர்கள் மேல் புப்பொழியக் கூடாது. மறந்தும் சந்தனம் பூசக்கூடாது. அவர்கள் உறங்கும் போது கட்டில் அருகில் நிற்கவும் கூடாது.

88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும்என் பார்.

 

பொருள் விளக்கம்

 

 • திறமை அறிந்து வாழ நினைப்பவர்கள் தங்கள் பிறருக்குச் செய்த உதவியை அடுத்தவரிடன் சொல்ல மாட்டார்.
 • உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்.
 • நாம் செய்த தர்மம், விரதம் ஆகியவற்றை பெருமையுடன் விவரித்து கூற மாட்டார்.

 

 

89. கிடைக்காதவற்றை விரும்பாமை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.

 

பொருள் விளக்கம்

 

உண்மையை உணர்ந்த அறிவு நிறைந்தவர்கள்:

 • தமக்கு கிடைக்காதவற்றை எண்ணி வருத்தப் பட மாட்டார்.
 • நடந்து முடிந்த நிகழ்ச்சியை நினைத்து கவலைப் பட மாட்டார்.
 • ஒன்றும் செய்ய இயலாத துன்பம் சூழும் சூழல் நிகழ்த்தாலும் கலங்கி நிற்க மாட்டார்.

90. தலையில் சூடிய மோத்தல்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.

 

பொருள் விளக்கம் 

 

 • ஒருவர் தலையில் சூடிய பூவை முகர்ந்து பார்க்கக்கூடாது.
 • ஒருவர் முகர்ந்து பார்த்ததை தலையில் சூடக்கூடாது.
 • போதியவசதிஇல்லாதஒருவரிடம்இருந்து, அவரேகொடுத்தாலும்பணமோபொருளொபெறகூடாது.
 • நம் கீழ் பணிபுரியும் மிகச் சிறிய ஒருவராய் இருந்தாலும் அவர்களுக்குக் கூட நாம் உண்ட உணவின் எச்சிலை கொடுக்கக்கூடாது.

 

91. பழியாவன

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளஆக லான்.

 

பொருள் விளக்கம்

 

காட்டிலும் நம்மை விட மூத்த வயதுடைய மரங்கள் (யோகிகள்) இருப்பதால் இறுமாப்புடன் இருத்தலும், தன்னடக்கம் இல்லாமல் போர்வை போர்த்தலும், இரு கரங்களை சேர்த்து தலைக்கு பின் வைத்து இருத்தலும் மிகுந்த பாவச் செயலாகும்.

 

92. அறிவுடையார் சொல்லைக் கேட்க

(நேரிசை வெண்பா)

 

தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப தில்லை.

பொருள் விளக்கம் 

 

வீட்டில் முதன்மையான வேலைகள்தொடங்கும் போது சிறிய அறிவுஉடையவரை நாள் குறிக்க சொல்லக் கூடாது.

காலம் கணிப்பதை நன்கு கற்று உணர்ந்த கல்வியாளர்கள் சொல் கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் சொல் பொய்ப்பதில்லை.

 

 1. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்று உழியும் செல்லார் விடல்.

 

பொருள் விளக்கம்

 

 • சான்றோர் இருக்கும் சபையில் குறும்பு செய்யக்கூடாது.
 • அழுக்குத் தோய்த்து அலையக் கூடாது.
 • எப்போதும் கடின சொல் பேசக்கூடாது.
 • இருவர் பேசும் போது இடையில் செல்லக்கூடாது. ஆதலால் இவற்றை விட்டொழிக்க வேண்டும்.

 

94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை

(இன்னிசை வெண்பா)

 

கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
ஐயமில் காட்சி யவர்.

 

பொருள் விளக்கம் 

 

 • சந்தேகம் இல்லாமல் நன்கு கற்றவர்கள், பெரியார் முன் அவரை சுட்டி, கை நீட்டி கடுமையாகப் பேச மாட்டார்.
 • கால் மேல் வைத்து எழுத மாட்டார்,.
 • கல்வி அறிவு இல்லாதவரை அறிவு உள்ளவரோடு ஒப்புமை செய்து சாதித்து பேச மாட்டார்.
 • பெரியவர் கொடுக்கும் போது அதை அமர்ந்து கொண்டு கையால் அலட்சியமாக வாங்க மாட்டார்,

 

95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை

(இன்னிசை வெண்பா)

 

தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.

 

பொருள் விளக்கம்

 • நம்முடைய உடம்பு,
 • கட்டிய மனைவி,
 • நம்மிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவர் அடைக்கலமாக கொடுத்த பொருள்,
 • ஆபத்து காலத்தில் நம் உயிரை காக்க உதவும் என்று வைத்த பொருள்

ஆகிய நான்கினையும் பொன் போல் பாவித்து காக்க வேண்டும். காக்கவில்லையெனில் நீங்காத துன்பத்தை தரும்.

 

96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்

(இன்னிசை வெண்பா)

 

நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.

 

பொருள் விளக்கம் 

 

மழைக்காலத்திருக்கு தேவையான உணவை கோடை காலத்தில் சோர்வில்லாமல் சேர்த்து வைக்கும் எறும்பு,

குளிர் ,வெயில், மழையில் தங்கள் குஞ்சுகளைக் காக்க தேவைக்கு தகுந்து கூடு கட்டி வாழும் தூக்கனாங்குருவி.

ஒரு உணவு கிடைத்தாலும் அதை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் காக்கை,

ஆகியவைப் போல் சோர்வில்லாமல்,

தேவையை நிறைவு செய்து, உற்றாருடன் உறவாடி தன் கடமை உணர்ந்து இல்வாழ்க்கை நடத்துபரின் வாழ்க்கை எல்லா வழியிலும் சிறப்புறும்.

 

97, சான்றோர் முன் சொல்லும் முறை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை.

 

பொருள் விளக்கம்

நன்கு கற்று உணர்ந்து அடங்கிய பெரியவர் முன்:

 • ஒரு விஷயத்தை கூறும் போது அவரை வணங்கி, துடுக்கான வார்த்தை பேசாமல் வாய் பொத்தி பேச வேண்டும் ,
 • அப்படி கூறும் வார்த்தையில் தவறு நேரா வண்ணம் பார்த்து பார்த்து பேச வேண்டும்.

 

 

98. புகக் கூடாத இடங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.

 

பொருள் விளக்கம் 

 

 • சூதாடுவதற்கு கூடும் சங்கம், இறைத்தன்மை உள்ளோர் செல்லக்கூடாது.
 • பாம்புகள் போல் நஞ்சுடன் நம்மை கட்டித் தழுவும் பெண்கள் உள்ள இடம்,
 • அறிவாளிகள் புகக்கூடாது என்று நினைக்கும் மூடர்கள் கூடும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடாது.

செல்ல நினைத்தால் தீராத துன்பம் விளையும்

99. அறிவினர் செய்யாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்.

 

பொருள் விளக்கம்

 

 • ஒருவர் பெண்ணுடன் மகிழுற்று, ஆனந்தமாக இருக்கும் இடத்தையும், உணவு தயாராகும் இடத்தையும்,
 • பெண்களின் அந்தரங்க அறைகளையும் பார்க்கக்கூடாது,
 • பார்க்க நேர்ந்தால் பார்த்தவைகளை வெளியில் சொல்லக்கூடாது,

இவையே குற்றம் இல்லாமல் கற்று உணர்ந்தவர் செய்யும் செயலாகும்.

100. ஒழுக்கத்தினின்று விலகியவர்

(பஃறொடை வெண்பா)

 

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.

 

பொருள் விளக்கம்

 • ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் அடுத்த நாட்டின் இருந்து வந்தவர்கள்,
 • மிகவும் வறுமை நிலை எய்தி உணவுக்கு கஷ்டபடுபவன்,
 • நன்கு வயது முதிர்ந்த தள்ளாத நிலையில் இருக்கும் பெரியவர்,
 • குழந்தைகள்,
 • உயிரை இழந்தவன்,
 • உயிர் அச்சத்தில் இருப்பவன்,
 • உணவு உண்பவன்,
 • அரசாங்க வேளையில் தலையில் சுமந்து இருப்பவர்கள் (தூதுவர்கள், ஒற்றர்கள் ),
 • திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள்

ஆகிய ஒன்பது பேருக்கு மேற் கூறிய அனைத்து ஆசாரங்களும் பொருந்தாது. இவர்கள் ஆசாரங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.

( ஒரு நாட்டின் விவரம் தெரியாதவர் ஒரு சில தவறு செய்யினும் அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மிகவும் வறுமை நிலையில் உள்ளவன் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது. ஆதலால் அவனுக்கு விலக்கு, அவனால் இயன்றவற்றை செய்ய வேண்டும்.

உயிரை இழந்து பிணமாக கிடப்பவன் ஒரு ஆசாரத்தையும் செய்ய முடியாது. ஒருவனால் அச்சப்படுத்தப்பட்டு உயிர் பயத்துடன் இருக்கும் ஒருவனால் ஆசாரம் செய்ய இயலாது. விவரம் அறியாத சிறுவர்கள், தள்ளாத வயதில் இருக்கும் முதியோர் ஆகியவர்களால் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது,

உணவு உண்ணுபவன் அரசனே வந்தாலும் எழுந்து இருக்க வேண்டிய அவசியமில்லை, உணவே முதல் மரியாதைக்குரியது.

தூது செல்பவர்கள், ரகசியங்களை உளவு பார்ப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைப் பொருத்தும், இடத்துக்கு தகுந்தது போல் நடக்க வேண்டும், சில நேரங்களில் போகாத இடங்களிலும் புக வேண்டும்.

மணமக்கள் கோலத்தில் இருப்பவர்கள் அரசனே வந்தாலும் அவர் முன் அமர்ந்து இருக்கலாம். இப்படி அவர் அவர் தன்னைக்கு தகுந்து ஆசாரங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. )

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.