Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய முருகன். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.

உயிர் வருக்கம்

1  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

விளக்கம் 

தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்

English Translation

Mother and Father are the first known Gods

2  ஆலயம் தொழுவது சாலவும் நன்று

விளக்கம் 

கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது

English Translation

It is good to visit the temple for worship.

3  இல்லறம் அல்லது நல்லறம் அன்று

விளக்கம் 

இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது

English Translation

Domestic life is virtuous, Anything else is not.

4  ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

விளக்கம் 

பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்

English Translation

The miser’s wealth will be taken by the wicked.

5  உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

விளக்கம் 

குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்

English Translation

The smaller the meals, the prettier the woman.

6  ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

விளக்கம் 

ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்

English Translation

Animosity towards the community uproots the whole family.

7  எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

விளக்கம் 

அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை

English Translation

Numbers and letterss are as worthy as the two eyes.

8  ஏவா மக்கள் மூவா மருந்து

விளக்கம் 

செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்

English Translation

Anticipation by children is panacea for parent’s ills

9  ஐயம் புகினும் செய்வன செய்

விளக்கம் 

பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்

English Translation

Do what is right, even if reduced to begging.

10  ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு

விளக்கம் 

ஒருவரை மணந்த பிறகு அவருக்கு உண்மையாக இரு.

English Translation

Marry one and be faithful to him

11  ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

விளக்கம்

ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது

English Translation

For priests morality is more important than chanting.

12  ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு

விளக்கம் 

பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்

English Translation

Jealous words destroy one’s prosperity.

13  அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

விளக்கம் 

சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.

English Translation

Land and wealth should be accumulated quickly.

ககர வருக்கம்

14  கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

விளக்கம் 

நல்லோருக்கு கொடுத்த வாக்கிற்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு

English Translation

Chastity is being true to one’s word

15  காவல்தானே பாவையர்க்கு அழகு

விளக்கம் 

காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு

English Translation

Protecting her chastity is woman’s beauty.

16  கிட்டாதாயின் வெட்டென மற

விளக்கம் 

நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு

English Translation

Forget it, if not attainable

17  கீழோர் ஆயினும் தாழ உரை

விளக்கம்

உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு

English Translation

Speak with humility even to the lowly born

18  குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

விளக்கம் 

பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்

English Translation

Finding fault results in loss of relationships.

19  கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

விளக்கம் 

பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே

English Translation

However sharp, do not brag

20  கெடுவது செய்யின் விடுவது கருமம்

விளக்கம் 

நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்

English Translation

Abandon your actions, if it causes harm

21  கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

விளக்கம் 

தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்

English Translation

Determination in adversity increases one’s wealth.

22  கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

விளக்கம் 

கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்

English Translation

Education is the real wealth than the one in your hands.

23  கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

விளக்கம் 

தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது

English Translation

Acquaintance with the ruler helps in times of need.

24  கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

விளக்கம் 

கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது

English Translation

Rumour in the ear of a gossipper is like fire fanned by wind.

25  கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

விளக்கம் 

எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்

English Translation

Speaking ill of others brings enmity from all.

சகர வருக்கம்

26  சந்ததிக்கு அழகு உவந்து இசையாமை

விளக்கம் 

மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு

English Translation

Children flourish when parents do not easily give in

27  சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு

விளக்கம் 

பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே

English Translation

Duty of parents is to raise noble children

28  சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

விளக்கம் 

தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே

English Translation

Controlling anger is a mark of penance

29  சீரைத் தேடின் ஏரைத் தேடு

விளக்கம் 

புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்

English Translation

Seek your wealth by tilling the land

30  சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

விளக்கம் 

எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.

English Translation

Beauty of the relatives is to be around, in times of need

31  சூதும் வாதும் வேதனை செய்யும்

விளக்கம் 

சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்

English Translation

Gambling and arguments can only bring distress

32  செய்தவம் மறந்தால் கைதவம் மாளும்

விளக்கம் 

தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்

English Translation

Forgetting past skills will cause present endavours to fail.

33  சேமம் புகினும் யாமத்து உறங்கு

விளக்கம்

காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்

English Translation

Even a watchmen should sleep for a short while

34  சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

விளக்கம் 

பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்

English Translation

If you can afford, first feed the hungry then yourself

35  சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

விளக்கம் 

பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.

English Translation

Those who are wealthy, will fulfill their needs

36  சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

விளக்கம் 

சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்

English Translation

Those who are lazy will wallow in misery.

தகர வருக்கம்

37  தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

விளக்கம் 

தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும்

English Translation

No advice is greater than a father’s words.

38  தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

விளக்கம் 

தாயே சிறந்த தெய்வமாகும்

English Translation

There is no greater God than one’s own mother.

39  திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

விளக்கம் 

கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்

English Translation

Seek wealth, even by riding the waves

40  தீராக் கோபம் போராய் முடியும்

விளக்கம் 

கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும்.இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்

English Translation

Uncontrolled anger will result in a fight

41  துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

விளக்கம் 

கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.

English Translation

An unsympathetic wife is like fire in one’s lap

42  தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்

விளக்கம் 

எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.

English Translation

Wives who speak ill of their husbands are like the Lord of death.

43  தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்

விளக்கம் 

தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.

English Translation

God’s wrath will take away one’s fortunes.

44  தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

விளக்கம் 

பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்

English Translation

Spending without any earning will result in penury.

45  தையும் மாசியும் வை அகத்து உறங்கு

விளக்கம் 

தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு

English Translation

Sleep in a warm house during cold months.

46  தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது

விளக்கம் 

பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.

English Translation

Food earned by one’s toil is tastier than food from servitude.

47  தோழனோடும் ஏழைமை பேசேல்

விளக்கம் 

நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது

English Translation

Do not divulge, about your poverty, even to your friend

நகர வருக்கம்

48  நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

விளக்கம் 

நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்

English Translation

Conflicting views can only cause distress

49  நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை

விளக்கம் 

நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.

English Translation

Prosperity of the citizens reduces misery in the land.

50  நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

விளக்கம் 

சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு

English Translation

Learned men do not deviate from their words.

51  நீரகம் பொருந்திய ஊரகத்து இரு

விளக்கம் 

நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்

English Translation

Live only in places with good water resources.

52  நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

விளக்கம் 

சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்

English Translation

Evaluate before attempting even the simplest task

53  நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

விளக்கம் 

நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்

English Translation

Learn good values and then follow accordingly

54  நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

விளக்கம் 

நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.

English Translation

Betrayal cannot be hidden from your conscience

55  நேரா நோன்பு சீராகாது

விளக்கம் 

மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது

English Translation

A job not done well is not a job to be proud of.

56  நைபவர் எனினும் நொய்ய உரையேல்

விளக்கம் 

சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது

English Translation

Do not insult even those at the bottom.

57  நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

விளக்கம் 

சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்

English Translation

Even the poor could one day rise above

58  நோன்பு என்பது கொன்று தின்னாமை

விளக்கம் 

உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்

English Translation

Penance to God is to avoid killing animals to eat.

பகர வருக்கம்

59  பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

விளக்கம் 

ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்

English Translation

One’s fortune is reflected from the yield of his toil

60  பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

விளக்கம் 

சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்

English Translation

Eat at the proper time, even food mixed with milk,.

61  பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்

விளக்கம் 

அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்

English Translation

Virtue is not lusting other man’s wife

62  பீரம் பேணி பாரம் தாங்கும்

விளக்கம் 

தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்

English Translation

Breast milk gives vitality.

63  புலையும் கொலையும் களவும் தவிர்

விளக்கம் 

புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே

English Translation

Avoid murder, robbery and eating flesh

64  பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

விளக்கம் 

கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது

English Translation

People of low moral character do not behave well.

65  பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

விளக்கம் 

ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது

English Translation

Spiritual liberation delivers one from worldly bondage

66  பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

விளக்கம் 

அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்

English Translation

A woman’s jewels are her pretence of ignorance.

67  பையச் சென்றால் வையம் தாங்கும்

விளக்கம் 

நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்

English Translation

A cautious approach is appreciated by all

68  பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்

விளக்கம் 

அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு

English Translation

Avoid everything that is degrading

69  போனகம் என்பது தான் உழந்து உண்டல்

விளக்கம் 

தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்

English Translation

Food by one’s own toil is good food.

மகர வருக்கம்

70  மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

விளக்கம் 

தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்

English Translation

Even if rare, share it with your guest.

71  மாரி அல்லது காரியம் இல்லை

விளக்கம் 

மழையின்றி ஒன்றும் இல்லை

English Translation

If not for the rain nothing will happen on this earth.

72  மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை

விளக்கம் 

மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்

English Translation

The more there is lightening, the more will it rain.

73  மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

விளக்கம் 

மாலுமி இல்லாத ஓடம் செல்லாது

English Translation

A ship will not sail if there is no sailor.

74  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

விளக்கம் 

பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்

English Translation

Every action in the morning bears fruit in the evening.

75  மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

விளக்கம் 

முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது

English Translation

Words of wise men bring sweet benefits.

76  மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

விளக்கம் 

மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்

English Translation

It is good to sleep on a soft mattress.

77  மேழிச் செல்வம் கோழை படாது

விளக்கம் 

கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது

English Translation

Wealth earned by tilling the land will not be wasted.

78  மை விழியார் தம் மனையகன்று ஒழுகு

விளக்கம் 

விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு

English Translation

Stay away from women of ill-repute.

79  மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

விளக்கம் 

பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்

English Translation

Ignoring wise words is sure to bring destruction.

80  மோனம் என்பது ஞான வரம்பு

விளக்கம் 

மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை

English Translation

Keeping quiet is prelude to gaining spiritual knowledge.

வகர வருக்கம்

81  வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்

விளக்கம் 

சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்

English Translation

Even the super-rich should spend within limits.

82  வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

விளக்கம் 

மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்

English Translation

If rain failed, charity will reduce.

83  விருந்து இலோர்க் கில்லை பொருந்திய ஒழுக்கம்

விளக்கம் 

விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது

English Translation

If guests are not fed one fails as a householder.

84  வீரன் கேண்மை கூரம்பு ஆகும்

விளக்கம் 

வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்

English Translation

Friendship with the brave gives protection like a sharpened arrow.

85  உரவோர் என்கை இரவாது இருத்தல்

விளக்கம் 

யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்

English Translation

A worthy man does not solicit aid.

86  ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

விளக்கம் 

உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு

English Translation

Motivation enhances a man’s possessions.

87  வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

விளக்கம் 

தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை

English Translation

A man of pure heart does not harbour destructive ideas.

88  வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை

விளக்கம் 

அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை

English Translation

The ruler’s anger makes one helpless.

89  வைகல் தோறும் தெய்வம் தொழு

விளக்கம் 

தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு

English Translation

Prey to God every morning.

90  ஒத்த இடத்து நித்திரை கொள்

விளக்கம் 

பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு

English Translation

Sleep in a suitable place.

91  ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்

விளக்கம் 

படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.

English Translation

The illiterates are bereft of good character and good behaviour.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.