மதராஸின் ஆரம்ப காலத்தில் ஆளுனர் முதல் கடைநிலை ஊழியர் வரை மற்றும் பயிற்சி எழுத்தர்கள் என்று அனைவரும் ஒரே இடத்தில் தங்கியிருந்தனர். ஒரே கூரையின் கீழ் அனைவருக்கும் ஒரே படுக்கை அறைதான் இருந்தது. அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில்தான் உணவு உண்ண வேண்டியிருந்தது. கோட்டைக்கு நடுவே இருந்த பண்டகசாலை என அறியப்பட்ட அலுவலக நிர்வாக கட்டிடமே ஊழியர்கள் அனைவரும் தங்கும் இடமாகவும் இருந்தது. அன்னன்டேலின் (Annandale) அகராதிப்படி ஒரு வியாபார அமைப்பு வெளிநாடுகளில் துவங்கப்படும்போது இத்தகைய அமைப்பே நடைமுறையில் சாத்தியமாய் இருந்தது. இந்தக் கூற்றுப்படி மதராஸ் செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் 'பண்டகசாலை'' என அழைக்கப்பட்ட கட்டிடம் வியாபாரத்தலமாகவும் அலுவலர்கள் தங்கும் இடமாகவும் அமைந்திருந்தது.
இந்த நடைமுறை வெகு காலம் நீடித்தது. காலப்போக்கில் கும்பனி ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் மற்றும் சில மூத்த ஊழியர்கள் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் இருந்ததாலும் அவர்கள் தங்குவதற்காக தனித்தனி வீடுகளை கட்ட நேர்ந்தது. நாளடைவில் அவர்கள் அனைவரும் ஒருங்கே அமர்ந்து உணவு அருந்தும் "கிங் ஆர்தர்'' எனப்படும் பொது சாப்பாட்டு மேஜையும் சிறுக சிறுக மறைந்தது.
ஆனாலும் 19வது நூற்றாண்டு தொடங்கும் வரை கும்பனியின் இளைய ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான உணவு விடுதி இருந்து வந்தது. அவர்கள் அனைவரும் ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுடன் வசித்து வந்தனர். கோட்டைக்குள் இருந்த அனைத்து வீடுகளுக்கும், மற்றும் வெள்ளையர்நகரத்தில் இருந்த வீடுகளுக்கும் கோட்டையின் மையத்தில் அமைந்த பண்டகசாலை என அழைக்கப்பட்ட வியாபாரத்தலக் கட்டிடத்திற்கும் (சில நேரங்களில் ஆளுனர் இல்லம் எனவும் அழைக்கப்பட்டது) தனித்தனியே தோட்டங்கள் ஏதும் இருக்கவில்லை.
அதுபோலவே கும்பனியின் இளைய தலைமுறையினர் தங்களது ஓய்வு நேரத்தில் விளையாடவும் பொழுது போக்கவும் தேவையான இடம் ஏதும் இல்லை
சில பணம் படைத்த தனியார்கள் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் சுவற்றையொட்டி இருந்த நிலத்தை வாங்கி அதற்கு தக்க வேலியிட்டு, தங்களுக்கென ஒரு தோட்டம் போன்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டனர். அந்த தோட்ட அமைப்பின் மத்தியில் ஒரு சிறிய வீடை அமைத்து அதில் நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்பொழுதோ வசித்து வந்தனர். இத்தகைய வீடுகளில் வசிக்கும் போது அதன் சொந்தக்காரர்களுக்கு, விரைவாக வளர்ந்து வரும் சந்தடிமிக்க நகரத் தெருக்களிலிருந்து விடுபட்ட ஒரு சுகமான அமைதி கிடைத்து வந்தது. சில ஆவணங்களில் அத்தகைய வீடுகள் தோட்ட வீடுகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்தகைய வீடுகள் மதராஸில் ஆங்காங்கே (சுற்றுச்சுவருக்குள் தோட்டமும் வீடும் அமைந்த அமைப்புகள்) பல இருந்தன. இத்தகைய வீடுகள் தெருவீடுகளைப்போல் இல்லாமல் ஒரு தனித்தன்மையான அழகுடன் இருந்தன.
கும்பனியின் முகவர்கள், அதன் ஊழியர்கள் பொழுது போக்கவும், விளையாடவும் தகுந்த ஒரு தோட்டத்தை உருவாக்கத் தீர்மானித்தனர். வெள்ளையர்நகரத்து மதில் சுவரையொட்டி சுமார் 8 ஏக்கர் நில பரப்பளவில், தற்போது சட்டக் கல்லூரி அமைந்துள்ள வளாகத்தை, ஒரு தோட்டமாக உருவாக்கி வேலி யிட்டனர். அதற்கு "கும்பனி தோட்டம்'' என பெயரிட்டனர். அதனுள்ளே சிறிய அளவிலான 'பெவிலியன்' என்று அழைக்கப்படும் ஒரு கட்டிடத்தையும் விளையாட்டுத் திடலுக்கு அருகே அமைத்தனர். வெயில் தாழ்ந்து குளிர்ந்த மாலை நேரங்களில் கும்பனியின் பெரும்பாலான ஊழியர்கள் கோட்டையில் இருந்த தங்கள் வீடுகளை விட்டு அதன் அருகிலேயே அமைந்த இந்த தோட்டத்தில் உலாவரும் போது ஒரு புத்துணர்ச்சியை அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை, இந்த தோட்டம் வங்கக் கடற்கரைக்கு அருகாமையில் இருந்ததால் இதன் அழகு மேலும் பொலிவுற்றது. இந்த இடத்தை காணும் பொழுது கும்பெனியின் எண்ணற்ற ஊழியர்கள் தங்கள் மாலைப் பொழுதினைக்கழிக்க, அதிக சக்தி தேவைப்படும் விளையாட்டுக்கள் முதல் சொற்ப சக்தியில் விளையாடும் பந்தாட்டம் வரை, சக்திக்கும் திறமைக்கும் ஏற்ப விளையாடிய காட்சிகள் திரைப்படம் போல் நம் கண் முன் நிழலாடுகிறது. லண்டனிலிருந்த கம்பனி நிர்வாகத்தினர் தங்கள் ஊழியர்கள் இது போன்ற இடங்களில் சூதாடுவதை அனுமதிக்காததால் இளைஞர்கள் மற்ற விளையாட்டுகளிலேயே தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனாலும் சில நேரங்களில் பெவிலியன் கட்டிட நிழலில் மறைந்து கொண்டு சிலர் சூதாட்டங்களிலும் ஈடுபட்டதை நம்மால் உணர முடிகிறது. இரவு நெருங்க நெருங்க சூரியன் அஸ்தமித்து பெவிலியனின் கட்டிட நிழல்கள் நீளமாக தரையில் விழும் தருவாயில் கோட்டையில் இருந்து குழல் ஒலி (Bugle) அழைக்கும். அப்போது இந்த இளைஞர்கள் மெதுவாக உணவு கூடத்தை நாடிச் செல்வார்கள். அங்கே அவர்களுக்கு சோறு, உப்பிடப்பட்ட மீன், மற்றும் பால் போன்ற உணவுகள் காத்திருக்கும். சில ஊழியர்கள் அவரவர்கள் தகுதி மற்றும் சக்திக்கு ஏற்ப சாராயம் மற்றும் இதர உணவுவகைகளை வாங்கி உண்பார்கள். சில வருடங்களில் பல்வேறு காரணங்களால் இந்த தோட்டம் அழியத் துவங்கியது.
வெள்ளையர்நகரத்தை ஒட்டிய கருப்பர்நகரம் மெல்ல வளரத் தொடங்கியபோது அதன் மதில்சுவர்களுக்குள் இந்தத் தோட்டம் அமைந்துவிட்டதே இதன் அழிவிற்கு ஒரு முக்கிய காரணமாகும். கருப்பர்நகரத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்த இடத்தை ஐரோப்பியர்கள் தங்களது கல்லறையாகவும் பயன்படுத்தத் தொடங்கியபோது ஒரு விதமான மரண பயமும் திகிலும் மிகுந்த இடமாக அது மாறியது. இதன் காரணமாக ஒரு புதிய பொழுதுபோக்குத் திடலை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் கும்பனியின் முகவர்கள் தள்ளப்பட்டனர். ஒரு புதிய தோட்டம் அமைத்து அதற்குள் ஒரு சொகுசு வீட்டையும் உருவாக்க நினைத்தனர். அதனால் முகவர்கள் மதராஸுக்கு வருகை தரும் கோல்கொண்டா சுல்தான் போன்ற சிற்றரசர்களையும் மற்றும் பல முக்கியஸ்தர்களையும் உபசரிக்கத் தேவையான இடமோ அல்லது கட்டிடமோ இல்லாததுக் குறித்து லண்டனிலிருந்த நிர்வாகிகளிடம் முறையிட்டனர். கோட்டைக்குள் கௌன் சிலர்கள் கூடி விவாதிக்கும் கட்டிடமும் அதையொட்டி மற்ற கட்டிடங்களும் இருந்தன. ஆனாலும் அவையாவும் வியாபார வளர்ச்சி பற்றி விவாதிக்கும் இடங்களாகவே இருந்ததால் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தத் தகுந்த இடமாக அதை அவர்கள் கருதவில்லை . மேலும் வியாபாரம் சம்பந்தப்படாத ஒரு தோட்டஇல்லத்தை உருவாக்கவே அவர்கள் விரும்பினர்.
நிர்வாகம் இவர்களது மனுவுக்கு ஒப்புதல் அளித்தாலும் கூடவே கும்பனி இத்திட்டத்தை நிறைவேற்ற அதிகப்படியான பணச்செலவு செய்யக்கூடாது என எச்சரிக்கையையும் விடுத்தது. அதனால் மதராஸில் இருந்த நிர்வாகிகள் ஒரு அழகான கட்டிடத்தை குறைந்த செலவிலேயே உருவாக்கினர். இதை செய்து முடிக்க, கம்பனியின் தயவில் வாழ்ந்த நாடிய சிலர் வெவ்வேறு வழிகளில் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய தோட்டம் அமைந்த இடத்தில்தான் தற்போது மருத்துவக்கல்லூரியும், பொதுமருத்துவமனையும் அமைந்துள்ளன. நதிக்கரையை ஒட்டி அமைந்த இந்த தோட்டம் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
1686ஆம் ஆண்டு மாஸ்டர் வில்லியம் கைஃபோர்டு (Master William Gyfford) என்ற ஆளுனர், இந்த தோட்ட வீட்டை தான்வசிக்கும் இடமாக மாற்ற விரும்பி, அதை நிறைவேற்றவும் செய்தார். வில்லியம் கைஃபோர்டு 27 வருடங்களுக்கு மேலாக கிழக்கத்திய நாடுகளிலும், சுமார் 27 வருடங்கள் மதராஸிலும் வசித்தவர். இத்தகைய நெடுநாள் பணியினால் அவரது உடல் நிலை நலிவுற்றது. இதன் காரணமாகவே இந்த தோட்டவீட்டில் வசிக்க அவர் தீர்மானித்தார். தோட்டங்கள் எதுவுமில்லாமல் கோட்டையின் மையத்தில் அமைந்த அலுவலகக் கட்டிடம் ஆளுனர் வசிக்க உகந்ததாக இல்லாததாலும் மற்றும் அங்கு நடமாடும் ஊழியர்களின் கூட்டமும் இரைச்சலும் அவரது உடல்நிலைக்கு ஊறு விளைவிப்பதாக கருதியதாலும் இந்தப் புதிய தோட்ட வீட்டில் அவர் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த இடமாற்றம் அவரது உடல் நிலையில் சில முன்னேற்றங்களைக் கொடுத்தது. கைஃபோர்ட் சில வருடங்கள் அங்கு தங்கியிருந்து ஒரு வழியாய் இங்கிலாந்து போய்ச் சேர்ந்தார்.
மதராஸின் ஆளுனர் ஒருவர் முதன்முதலாய் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே அமைந்த ஒரு தனி வீட்டில் வசித்தது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். பின்னாளில் இந்த தோட்டத்தில் பல பொது நிகழ்ச்சிகள் நடந்து, இதை அமைத்ததின் நோக்கத்தை நிறைவு செய்தன. உதாரணமாக இரண்டாம் ஜேம்ஸ் இங்கிலாந்தில் அரச பதவியேற்றபோது அதை கொண்டாடும் விதத்தில் பல பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் இந்த தோட்டவீட்டில் நடந்தேறியது. அதேபோல் ஆன் இளவரசி பட்டத்திற்கு வந்தபோதும் அதைக் கொண்டாட நகரத்தின் அனைத்து முக்கிய ஐரோப்பிய நபர்களையும் இங்கு அழைத்து ஆன் அரசியின் உடல் நலத்திற்காகவும் இங்கிலாந்தின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனைகள் நடத்தி, கண்ணாடிக் கோப்பைகளில் செந்நிற மதுவை சுவைத்து மகிழ்ந்தனர். ஆற்காட்டின் இளைய நவாப் அவர் தந்தை கொலை செய்யப்பட்ட பின், பட்டமேற்ற பொழுது அவருக்கு ஒரு பிரம்மாண்டமான விருந்தை அரசு இந்தத் தோட்டத்தில்தான் நடத்தியது. இந்த தோட்டத்தை மிகவும் ரசித்து, நன்கு பராமரித்து அங்கேயே தங்க விரும்பிய மற்றொரு ஆளுனர் பிட் (Pit) என்பவர் ஆவார்.
1704இல் “பிட்'' ஆளுனராக இருந்த காலத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேயர் இந்த தோட்ட வீட்டைப் பற்றி ஒரு சுவையான தகவலைத் தந்துள்ளார்.
"கடும் அனல் காற்று வீசும் காலத்தில் ஆளுனர் இந்த தோட்ட வீட்டில் தங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்பினார். இதன் காரணமாகவே ஒரு வெற்றிடத்தை இப்படி ஒரு அழகான தோட்டமாக மாற்றியமைத்தார். தோட்டத்தில் பல்வேறு இடங்களில் அழகிய கலை நுட்பம் மிகுந்த வாசல்களை அமைத்து நீந்தும் மீன்களும் மிதக்கும் மலர்களும் உள்ள அழகிய தடாகங்களை உருவாக்கினார். பட்டு விரித்தாற்போல் காணப்படும் பச்சைப் புல்வெளிகளை உருவாக்கி, ஆங்காங்கே கலையழகு ததும்பும் பதுமைகளை வைத்து அழகுபடுத்தினார். மஞ்சள் எலுமிச்சையும் கருப்பு மற்றும் பச்சை நிற திராட்சைகளும் ஆங்காங்கே தோட் டத்திற்கு அழகை ஊட்டின. இதை படைத்து பராமரிக்க அவர்கள் செலவிட்ட தொகையை அரசு ஒரு பொருட் டாகவே நினைக்கவில்லை .''
இதற்குப் பிறகு வந்த ஆளுனர்கள் அவர்களது விருப்பதிற் கேற்ப செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலோ அல்லது தோட்ட வீட்டிலோ தங்கலாம் என்ற நடைமுறை உருவாயிற்று. ஆனாலும் ஒரு காலத்தில் ஆளுனர்கள் மீண்டும் கோட்டைக் குள்ளேயே வசிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. பிரெஞ்சுப் படைகள் மதராஸை முற்றுகையிட்டதே இதற்குக் காரணம். அவர்கள் இந்த தோட்டவீட்டை ஆயுதத் தள வாடமாக பயன்படுத்தினர். பிரெஞ்சுப்படைகள் முற்றுகையில் வெற்றி பெற்ற பின் இந்த தோட்டவீடு அழிக்கப்பட்டது. பின்னாளில் ஆங்கிலேயர்கள் தங்களைத் தாக்கும்பொழுது இந்த இடமே அவர்களுக்கு ஆயுதக் கிடங்காகப் பயன்படும் என்ற பயமே அதற்குக் காரணம்.
மதராஸ் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்த சமயம் தோட்டவீடு காணாமல் போயிருந்தது. எனவே பின்னாளில் சாண்டர்ஸ் (Saunders) ஆளுனராகப் பதவியேற்றபோது அவர் கோட்டைக்குள் இருந்த பழைய அலுவலக வீட்டிலேயே தங்க நேர்ந்தது. மதில்சுவர்களால் சூழப்பட்ட இந்த வீடு ஆளுனருக்கு திருப்தியளிக்கவில்லை. மேலும் முன்னாள் ஆளுனர்கள் அனுபவித்த சுதந்திரமான காற்றையும் ராஜசுகத்தையும் அவர் அடைய விரும்பினார். எனவே சேப்பாக்கத்தில் தனியார் வசமிருந்த ஒரு தோட்டவீட்டை அரசு ஆளுனர் சாண்டர்ஸ்காக வாடகைக்கு எடுத்தது. அந்த வீடு, வெள்ளையர் நகரத்தில் பிரபலமாயிருந்த ஒரு போர்ச்சுகீசிய வணிகரின் மறைவுக்குபின் அதில் வசித்த அவரது விதவை மனைவி திருமதி மெடீரோஸு (Mrs. Madeiros)க்கு சொந்தமானதாகும். ஆளுனர் சாண்டர்ஸ் வசிக்கத் தகுந்தவாறு அந்த வீட்டில் சில அதிரடி மாற்றங்களும் விரிவாக்கமும் செய்யப்பட்டன.
ஆளுனர் சாண்டர்ஸ் வசிக்கத் தொடங்கிய ஒரு வருட காலத்திற்குள், கணவனை இழந்த விதவை மெடிரோஸிடமிருந்து அந்த வீட்டை கும்பனி விலை கொடுத்து வாங்கியது. ஆளுனர் அந்த வீட்டில், தான் வசிக்க வேண்டி வந்த கட்டாயம் பற்றி மிகவும் ஜாக்கிரதையாக ஒரு ஆவணத்தில் கீழ் கண்டவாறு விளக்கி உள்ளார்.
"கும்பனியின் ஆளுனர்கள் கோட்டையைவிட்டு வெளியே வந்து ஓய்வு எடுக்க ஒரு மாளிகை தேவைப்பட்டதாலும், விதவையான மெடிரோஸ் சேப்பாக்கிலிருந்த அந்த வீட்டை கம்பனிக்கு விற்க ஒப்புக் கொண்டதாலும், மதராஸின் முக்கியமான பகுதியான சாந்தோம் சாலையில் அமைந்த இந்த வீட்டை 3500 பகோடாக்கு (சுமார் 12,250/ ரூபாய்) விற்கப்பட்டதாலும், பழைய தோட்டவீடு பிரெஞ்சுப் படைகளால் அழிக்கப்பட்டதாலும் திருமதி மெடிரோஸ் கூறிய விலை மிகவும் மலிவாக இருந்ததாலும் அது வாங்கப் பட்டது." அந்த வீடு தற்போது அரசு இல்லமாக செயல்பட்டு வருகிறது.
கும்பனி எந்தவிதமான வியாபாரமானாலும் அதில் ஒரு லாபத்தையே எதிர்பார்த்ததால் ஆளுனர் சாண்டர்ஸ் அந்தத் தோட்ட வீட்டை விலைகொடுத்து வாங்கியது சிறப்பான செயல் என்று நம்பினார். ஏனெனில் சில வருடங்களுக்குப் பிறகு விரிவாக்கமும் மாற்றங்களும் செய்யப்பட்ட அந்த வீட்டின் அன்றைய மதிப்பு வாங்கிய விலையை விட நான்கு மடங்காக உயர்ந்திருந்தது. அரசு வீடு வாங்கியவிதம் பற்றி பல தகவல்கள் இங்கு பரிமாறப்பட்டாலும் இனிவரும் பக்கங்களில் அங்கு நிகழ்ந்த அரசு சார்ந்த சரித்திர சம்பவங்களை சற்று ஆராய்வோம்.
இரண்டாம் முறையாக கேப்டன் லாலியின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் மதராஸின் தோட்டவீட்டை முற்றுகையிட்டு அது வெற்றி பெறாததால் ஆத்திரம் கொண்டு அந்த வீட்டை பலத்த சேதத்துக்கு உள்ளாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு பிரெஞ்சுப்படை களை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. போரில் பாண்டிச்சேரியை கைப்பற்றி கேப்டன் லாலியை கைது செய்தனர். அத்துடன் அவனை இங்கிலாந்திற்கு அனுப்ப தேவையான கப்பல் வரும்வரை மதராஸ் தோட்டவீட்டில் சிறை வைத்தனர். பிரெஞ்சுக்காரர்களால் பாழ்படுத்தப்பட்டு பழுது பார்க்கப்படாமலே இருந்த அந்த தோட்டவீட்டில் லாலியால் அழிக்கப்படாமல் விடுபட்டிருந்த ஒரு பாழடைந்த அறையில் அவன் அடைக்கப்பட்டான்.
சில வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறிய குதிரைப்படைக்குத் தலைமை தாங்கி மைசூரின் திப்பு சுல்தான் மதராஸின் மீது திடீரெனப் படையெடுத்த போது தோட்டவீட்டைச் சுற்றி யிருந்த பாதைகளையும், படைகள் வரும் வழியில் இருமருங்கிலுமிருந்த கிராமங்களையும் சூறையாடினான். அப்போதைய ஆளுனர் போர்ஷியரும், (Bourchier) அவரது கவுன்சில் உறுப்பினர்களும் அந்தப் படையெடுப்பின்போது தோட்டவீட்டில் வசித்து வந்தார்கள். மிக சாமர்த்தியமாக அந்த இடத்திலிருந்து கூவம் நதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு படகின் மூலம் அவர்கள் தப்பியிருக்காவிட்டால் அநேகமாக திப்புவின் படைகளால் கைது செய்யப்பட்டிருப்பார்கள், என்று ஒரு தகவல் கூறுகிறது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பதவியிலிருந்த பல ஆளுனர்கள் அரசு வீட்டிலேயே இறந்து போயிருக்கிறார்கள். ஆளுனர் பிகாட் (Pigot) அந்த இடத்தில்தான் இறந்தார். இது குறித்து இதற்கு முந்திய அத்தியாயத்தில் விவரித்தபடி தனது சக கவுன்சில் உறுப்பினர்களுடன் சண்டையிட்டதால் ஆளுனர் பிகாட் அவர்களாலேயே கைது செய்யப்பட்டு அந்த தோட்ட வீட்டிலேயே கைதியாய் அடைக்கப்பட்டு இறுதியில் இறந்தும் போனார்.
அந்த தோட்டவீடு இன்று நாம் காணும் அரசு இல்லாமாக மாறியது எப்படி என்பதை காண்போம்.
பிரசித்திபெற்ற ராபர்ட் க்ளைவின் (Robert Clive) மகனான க்ளைவ் பிரபு இந்தியாவில் மதராஸின் ஆளுனராக பதவி ஏற்க 1798இல் அனுப்பப்பட்டான். அவன் பதவி ஏற்ற 6 மாதத்திற்குள்ளாகவே மைசூரின் மீது படையெடுத்தான். அந்த போரில் மாவீரன் திப்புசுல்தான் மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்தான். அதன் பின் மதராஸில் அமைதி நிலவிய ஐந்து வருட க்ளைவ் பிரபுவின் ஆட்சி காலத்தில் பல சீர்திருத்தங்களை அவன் மேற்கொண்டான். முக்கியமாக தோட்டவீடு நன்கு பராமரிக்கப்படவேண்டும் எனத் தீர்மானித்தான். ஒரு அரசு ஆவணத்தில் தான் தோட்டவீட்டில் தங்கியிருந்த போது தானும் தன் குடும்பமும் சௌகரியமாக வாழ அது தகுதியற்ற தாக இருந்ததாலும், பல பொது நிகழ்ச்சிகளை அங்கு சிறப்பாக நடத்த முடியாததாலும் தன் விருப்பப்படி அதை விரி வாக்கமும் மாற்றமும் செய்ய வேண்டியதின் அவசியம் பற்றி குறிப்பிட்டிருந்தான்.
சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் 1801ல் தோட்டவீட்டை க்ளைவ் பிரபு புதிப்பித்து அரசு இல்லமாக மாற்றினான். மேலும் சுமார் 2.5 லட்ச ரூபாய் செலவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதில் ஒரு அழகு மிகுந்த பெரிய நிகழ்ச்சிக் கூடத்தைக் கட்டினான். அந்த கூடம் மதிப்புமிக்க முக்கியஸ்தர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவும், பல ஆடம்பர விழாக்களை நடத்தவும் தேவையான ஒரு அறையாய் (Banqueting Hall) உருவெடுத்தது. திப்புவின் தலை நகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வீழ்ச்சியைக் கொண்டாட க்ளைவ் பிரபு இந்த அறையைத் தான் தேர்ந்தெடுத்தான்.
தனது தந்தை ராபர்ட் க்ளைவின் புகழ் பெற்ற ப்ளாசி யுத்தத்தையும், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தான் அடைந்த வெற்றியையும் நினைவுகூறும் வகையில், அந்த பிரமாண்டமான அறையின் மேல் விதானத்தை அழகான கலை நயம் மிகுந்த நுட்பமான வேலைப்பாடுகளுடன் ஒரு நினைவுச் சின்னம் போல் அமைத்தான்.
இங்கிலாந்திலிருந்த நிர்வாகிகள் இந்த விரிவாக்கத்திற்கும் மாற்றங்களுக்கும் செய்யப்பட்ட செலவு தேவையற்றது என கண்டித்தபோது, அன்றைய சூழ்நிலையில் புதிதாய் இடம் வாங்கி ஒரு இல்லத்தைக் கட்டுவதைவிட இருக்கின்ற இடத்தை விரிவாக்கி புதிப்பிக்கும் செலவு நியாயமானதே என்று சமாதானம் கூறிய க்ளைவ் பிரபு, அரசு பணத்தை வாரி இறைக்கவும் தாராளமாக செலவு செய்யவும் ஒரு போதும் கூச்சம் காட்டியதில்லை .
ஆளுனர்கள் தங்குவதற்கு ஏதுவாக இரண்டாவது அரசு இல்லத்தை கிண்டியில் நிர்மாணித்தான். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 19ஆம் நூற்றாண்டின் இடை காலத்தில் இந்த கிண்டி மாளிகை ஆளுனர் எல்பின்ஸ்ட ன் பிரபுவால் மீண்டும் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. ஒரு பெரிய நிலப்பரப்பில் அமைந்த அழகுமிகு கிண்டி மாளிகையில்தான் இனி வரப் போகும் ஆளுனர்கள் தங்க வேண்டும் எனவும், பழய அரசு இல்லமான தோட்ட வீட்டில் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.
அரசு இல்லம் என்றவுடன், ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த பிரம்மாண்டமான விருந்துகளும், கேளிக்கைகளும், விழாக்களும், மேற்கத்திய இசைக்கேற்ப ஆணும் பெண்ணும் கூடி ஆடிய நடனங்களும், மதுபோதை தலைக்கேறிய நபர்களின் கூச்சல்களும்தான் பெரும்பாலோரின் நினைவுக்கு வரும். ஆனால் அதையே சரித்திர பார்வையுடன் நோக்கினால் அந்த இல்லத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த இடத்தில்தான் ஒரு காலத்தில் போர்ச்சுகீசியர்கள் வாழ்ந்தார்கள், வீழ்ந்தார்கள். இங்குதான் பிரெஞ்சுப் படைகளின் பயனற்ற முற்றுகையின் போது இடைவிடாத துப்பாக்கிச் சத்தம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சுவர்களில் எதிரொலித்தது. இங்குதான் பிரெஞ்சுப் படைத்தளபதி லாலி சகல சௌகரியங்களுடனும் வாழ்ந்து பின்னர் சிறைப்பிடிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டான். ஆனாலும் இறுதியில் அவன் சொந்த ஊரான பாரிஸில், மதராஸை கைப்பற்றத் தவறிய காரணத்திற்காக மரண தண்டனை பெற்றான். இங்குதான் செப்டம்பர் மாத குளிர்கால இரவு நேரத்தில் திப்பு சுல்தானின் குதிரைப்படை வீரர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் கலைப் பொருள்களைத் தேடித் தேடி அலைந்தார்கள். இங்குதான் ஆங்கிலேய ஆளுனர் ஒருவர் இறக்கும்வரை கைதியாய் சிறையிலிருந்தார்.