Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

எல்லைக் காப்பகங்கள்

கும்பனிக்கு ஒன்றன்பின் ஒன்றாக மானியமாக கிடைத்த மதராஸின் அக்கம் பக்கம் இருந்த பல்வேறு கிராமங்கள் தக்க பாதுகாப்பின்றி இருந்தன. கோட்டையைச் சுற்றி இருந்த அகழி மற்றும் மதில் சுவர் போன்றும் வெள்ளையர் மற்றும் கருப்பர் நகரைச் சுற்றியிருந்த மதில் சுவர்கள் போன்றும் எந்த வித பாதுகாப்புமின்றி இந்த கிராமங்கள் இருந்ததால் கும்பனி சற்று அச்சத்துடன் இது குறித்து யோசிக்க வேண்டியிருந்தது. கும்பனியின் ராணுவப் பொறியாளர்கள் இத்தகைய கிராமங்களின் எல்லைகளில் சிறுசிறு கட்டடங்களை எழுப்பி அதன் அருகே புதிய பீரங்கிகளைப் பொருத்தியும் மற்றும் சிறு சிறு குழுக்கள் கொண்ட படை வீடுகளை அமைத்தும், பல புதிய எல்லைக் காப்பகங்களை உருவாக்கினார்கள்.

கருப்பர்நகரத்தின் வட எல்லையில் அம்மாதிரியான ஒரு எல்லைக்காப்பகத்தை அமைத்ததோடு அல்லாமல் அந்த இடத்திற்கும் கருப்பர்நகரத்துக்கும் இடையே முள்வேலி ஒன்றையும் அமைத்தனர். இந்த வேலி பனைமரம், மூங்கில், கள்ளிச்செடி மற்றும் முட்புதர்களைக் கொண்டமைக்கப்பட்டது. இந்த அமைப்பினால் எதிரிகளின் குதிரைப் படையோ அல்லது காலாட்படையோ எளிதில் எல்லைக்குள் நுழையாவண்ணம் செய்தனர். இதுபோன்ற பாதுகாப்பு வேலிகளை பின்னாளில் இடைவெளிகளே இல்லாமல் தொடர்ச்சியாக எல்லா கிராமங்களையும் சுற்றி அமைக்க திட்டமிட்ட ஆனாலும் இத்திட்டம் முழுமையாக நிறை வேற்றப்படவில்லை . அதனால் 1785இல் வசதி படைத்த ஐரோப்பியர்கள் கும்பனிக்கு ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில் தாங்கள் வசித்து வந்த கிராமங்களைச் சுற்றி பாதுகாப்பு முள்வேலி அமைக்கப்பட்டிருந்தால் அது தங்களை எதிரிகளிட மிருந்து காப்பாற்றியிருக்கும்; என்றும் இத்தகைய படையெடுப்பால் விலைவாசிகள் உயராமல் இருந்திருக்கும் என்றும், ஏறக்குறைய 33 சதுர மைல்களில் அடங்கியிருந்த தோட்ட வீடுகள் எதிரிகளின் குதிரைப்படைகளிடமிருந்து காப்பாற்றபட்டிருக்கும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தனர்.

கிராமங்களைச் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்படாததையே இந்த மனு சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய எல்லைப் பாதுகாப்பகங்கள் எழும்பூர் மற்றும் சாந்தோமில் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்தன. நுங்கம்பாக்கத்திலும், புரசை வாக்கத்திலும் நடுத்தர அளவில் இந்தக் பாதுகாப்பகங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் பல கிராமங்களில் சிறிய அளவில் உருவாக்கப்பட்டன. புரசைவாக்கத்திலும், நுங்கம்பாக்கத்திலும் அமைக்கப்பட்ட எல்லைக் காப்பகங்கள் காலத்தால் அழிந்து போயின. ஆனாலும் பெரிய அளவில் அமைக்கப்பட்ட எல்லைக் காப்பகங்களின் இடிபாடுகள் இன்றும் (1821இல்) எழும்பூர் மற்றும் சாந்தோமில் காணக்கிடைக்கின்றன. சாந்தோம் தேவாலயத்தின் தென்புறம் உள்ள லீத் (Leith) மாளிகை நிலப்பரப்பில் இந்த காப்பகங்களின் சுவடுகள் தென்படுகின்றன. எஞ்சியுள்ள பகுதிகள் பாழடைந்த நிலையில் இருந்தாலும் 15 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிராம்மாண்டச் சுவர்கள் அக்காலத்தில் எந்த நோக்கத்தில் கட்டப்பட்டன என்பதை ஊகிக்க வைக்கின்றன. ஆவணங் களின் குறிப்புப்படி 1751இல் சாந்தோம் எல்லைப்பாது காப்பகம் ஒரு முழுமையான கோட்டையை ஒத்த நிலையில் இருந்துள்ளது. நல்ல ஆழமும் 40 அடி அகலமும் உள்ள அகழி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களோடு அந்தக் காப்பகம் அமைந்திருந்தது. கௌன்ட் லாலியின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் சாந்தோமை முற்றுகையிட்ட நேரத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரி செங்கல்பட்டில் வசித்த ஐரோப்பியர்களுடனும், நான்கு குழுக்களை உள்ளடக்கிய போர்வீரர்கள் மற்றும் 50 குதிரைகளுடனும் அக்காப்பகத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டான். இந்த பாதுகாப்பு நிலையம் மிகுந்த கவனத்தோடு கட்டப்பட்டிருந்தது.

எழும்பூரில் இருந்த எல்லைக் காப்பகம் சாந்தோமைவிட மிகவும் பழமையானது. இந்த காப்பகம் "ஆன்'' (Ann) அரசி இங்கிலாந்தை ஆண்ட காலத்திலேயே கட்டப்பட்டதாகும். அன்றைய எழும்பூர் பரந்த புல்வெளிகளுடன் மரங்களால் சூழப்பட்டு காற்றோட்டமுள்ள இடமாக இருந்ததாலும், ஆங்கிலேயர்கள் தென்னிந்திய மலை வாசஸ்தலங்களை அறியாமல் இருந்ததாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை நெரிசல் மிகுந்து காணப்பட்டதாலும், இந்தக் காப்பகம் நோய்வாய்ப் பட்டிருந்த கும்பெனி ஊழியர்களுக்கும், சிப்பாய்களுக்கும் ஓய்வெடுக்கும் இடமாய் அமைந்தது. பல நேரங்களில் இந்தக் காப்பகத்திலிருந்து எதிரிகளை பீரங்கிகளால் தாக்கும் சப்தம் வந்துகொண்டேயிருந்ததால் இந்தக் காப்பகம் எவ்வளவு அவசியமானது என்று தெரிகிறது. ஹைதர் அலி மற்றும் அவனது மகன் திப்புவின் படைகள் இந்தக் காப்பகத்திலிருந்து சுடப்பட்ட பீரங்கிகளால் தாக்கப்பட்டனர். 1799இல் திப்புவின் மறைவுக்குப் பின் இந்தக்காப்பகத்தின் செயல்பாடு வெகுவாக குறைந்து போயிற்று. அன்று இந்தக் காப்பகம் இருந்த பகுதியில் ஆதரவற்ற "ஆங்கிலோ இந்திய ஆண்கள் சரணாலயம்' ஒன்றும் செயல்பாட்டில் இருந்தது. அதனை விரிவாக்க திட்டமிட்ட மதராஸ் அரசு இந்த எல்லைக் காப்பகத்தை அந்தச் சரணாலயத்திற்கே அளித்துவிட்டது. இந்த இரண்டு அகங்களும் ஒரே மதில் சுவற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்தன. 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சரணாலய நிர்வாகிகள் இந்த இடத்தை தென்னிந்திய ரெயில்வே கம்பனிக்கு விற்று விட்டு பூந்தமல்லி சாலையில் ஒரு இடம் நாடிச் சென்றனர். பிறகு காப்பகத்தின் சில பகுதிகள் ரயில்வே ஊழியர்களின் புழக்கத்திற்குப் பயன்பட்டது. சரணாலய நிர்வாகிகள் எல்லைக் காப்பகத்திலிருந்த ஜன்னல்களே இல்லாத ராணுவக் கட்டிடங்களின் மேல் புதிதாய் ஒரு தளத்தை காற்றோட்டமுள்ளதாக நிறைய ஜன்னல்களுடன் நிறுவினர். அந்த தளம் ஒரு விசித்திரமான வடிவத்தில் அமைந்திருந்தது.

அந்தகட்டிடம் அக் கால போர் நிகழ்வுகளையும் அதற்குப் பின் ஏற்பட்ட அமைதி நிலவிய சூழ்நிலையையும் ஒருங்கே அறிய ஏதுவாக இருந்தது. எல்லைக் காப்பகத்தின் கீழ்த்தளம் முழுவதும் ஜன்னல்கள் இல்லாத பிரமாண்டமான சுவர் களோடு ஒரு விசாலமான இடமாய் இருந்தது. இந்த கட்டிடம் பழங்கால ராணுவக் கட்டிடக் கலையின் நுணுக்கங்களை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருந்தது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.