Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

இங்கும் அங்கும்

மதராஸின் கதையை முடிப்பதற்கு முன்னால் நகரின் பல பகுதிகளிலுள்ள சில பிரபலமான அடையாளங்களைப் பற்றியும் சொல்வதே சிறப்பாகும்.

கிருத்துவ ஆலயங்கள் குறித்து பேசுகையில் மதராஸிலுள்ள புனித ஜார்ஜ் கதீட்ரல் குறிப்பிடத் தக்கதாகும். 1816இல் இது கட்டப்பட்டபோது ஒரு பெரிய தேவாலயமாக இல்லாமல் சாதாரண ஜபக் கூடமாகவே இருந்தது. அந்நாளில் கிருத்துவர்களுக்கு மதராஸில் பேராயர் அலுவலகம் என்ற ஒன்று இருக்கவில்லை. அது கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது. இக்கட்டத்தில் மதராஸில் ஒரு புதிய தேவாலயம் அவசியத் தேவையாக இருந்தது. மதராஸில் மவுண்ட் சாலைக்கு அருகாமையில் திறந்தவெளிசத்திரம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் பல ஆங்கிலேயர்களின் வீடுகள் உருவானதால் இந்த தேவாலயத்தின் தேவை அவசியமாயிற்று. கோட்டையிலிருந்த புனித மேரி தேவாலயத்திற்கு ஞாயிற்றுகிழமை காலைநேர பிரார்த்தனைக்காக ஆங்கிலேயர்கள் மவுண்டு சாலையைச் சுற்றியிருந்த தங்களது வீடுகளிலிருந்து வந்து போக அதிக நேரம் செலவானது. அதனால் கும்பனி ஊழியர்களின் வசதிக்காக இரண்டாவது ஆங்கிலிகன் தேவாலயத்திற்கான அவர்களது கோரிக்கையை நிர்வாகிகள் நியாயம் எனக் கருதினார்கள். எனவே ஒரு புதிய தேவாலயம் அங்கு நிறுவப்பட்டது. இருபது வருடங்களுக்குப் பிறகு கல்கத்தாவின் தேவாலய மூத்த அதிகாரியாக இருந்த டாக்டர் கோரி மதராஸின் புதிய மதத்தலைவராக நியமிக்கப்பட்ட போது அந்த ஆலயம் புனித ஜார்ஜ் கதிட்ரல் என்ற பெயரைப் பெற்றது. இந்தக் கட்டிடத்திலுள்ள பிரம்மாண்டமும் அழகும் நிறைந்த ஒரு தூணின் உயரம் 139 அடியாகும். ஒரு பரந்த நிலப்பரப்பில் இக்கட்டிடம் உருவானது. அந்தக் காலக்கட் டத்தில் இதைக் கட்டி முடிக்க சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவானது. ஆனாலும் அரசு அதற்கான செலவை மக்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த நிதியைத் திரட்ட ஒரு புதியமுறை பின்பற்றப்பட்டது. அந்நாளில் பரிசுச்சீட்டு விற்பனை அமுலில் இருந்ததால், அரசு ஒரு பரிசுச்சீட்டு நிறுவனம் துவக்கி அதன் விற்பனையின் லாபத்திலிருந்து ஒரு பகுதியை இந்த தேவாலயம் நிறுவ செலவழித்தது. அதற்குப் பிறகும் அரசிடம் நல்ல நிதி நிலைமை நீடித்ததால் அரசு எஞ்சிய தொகையை சாலைகளை செப்பனிடும் பணிக்கும் மற்றும் முக்கிய விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தியது.

புனித ஜார்ஜ் தேவாலயம் கட்டும்போதே, திட்டமிடப்பட்ட “கிர்க்'' எனப்படும் புனித ஆண்ட்ரூ தேவாலயம், எல்லோராலும் அறியப்படாமலே இருந்தது ஆச்சரியமான செய்தியாகும். இந்தியாவில் பணியாற்றிய ஸ்காட்லேண்ட் ராணுவ வீரர்களைத் தவிர்த்து மதராஸிலும், பிரிட்டிஷார் ஆட்சிக்கு உட்பட்ட பல மாகாணங்களிலும் ஸ்காட்லேண்ட் மக்கள் வசித்து வந்தனர். இதை குறிக்கும் வகையில் இன்றும் மதராஸில் ஆண்டர்சன் சாலை, கிரீம்ஸ் சாலை, டேவிட்சன் தெரு, ப்ராடி மாளிகை, லீத் மாளிகை மற்றும் மேக்கித் தோட்டம் போன்ற பல முக்கியமான இடங்கள் இருந்து வருகின்றன. இவையாவும், ஸ்காட்லாண்ட் மக்கள் மதராஸின் வளர்ச்சிக்காக ஆற்றிய முக்கிய பணிகளுக்கான நன்றி கூறும் அடையாளங்களேயாகும்.

இரண்டாவது ஆங்கிலிகன் தேவாலயத்தை இங்கு கட்டத் தொடங்கிய போது இங்குள்ள ஏராளமான ஸ்காட்லேண்ட் நாட்டு மக்களுக்கு அது கட்டாயம் தேவை என்று இங்கிலாந்து நிர்வாகிகளுக்கு நினைவூட்டப்பட்டது. அவர்களுக்கு என ஒரு தேவாலயம் தேவை என்று உணர்ந்த இங்கிலாந்து நிர்வாகிகள் அதை நிறுவ சம்மதித்தபோது மதராஸில் ஹ்யூ எல்லியட் என்ற ஒரு ஸ்காட்லேண்ட்காரர் ஆளுனராக இருந்தது ஒரு ஒற்றுமையாகும்.

முதிர்ந்த அனுபவம் வாய்ந்த மதத் தலைவர்களும் நிர்வாகத்தினரும் சேர்ந்த குழுக்களின் ஆதிக்கத்தில், மதராஸில் மட்டுமல்லாது பிரிட்டிஷார் ஆண்ட மற்ற இந்திய மாகாண தலைநகரங்களிலும் ஸ்காட்லேண்ட் மக்களுக்காக இம்மாதிரியான தேவாலயங்கள் கட்ட 1815இல் ஒரு அறிக்கை அரசால் வெளியிடப்பட்டது. இந்த தேவாலய நிர்மாணச் செலவுகளை கும்பனியே ஏற்கும் என தீர்மானித்தாலும் தேவாலயங்களைக் கட்ட அதிக பட்சமாக எவ்வளவு செலவிடப்பட வேண்டும் என வரையறுக்கப்படவில்லை. ஆனாலும் கும்பனியாரின் மனநிலையோ பிரம்மாண்டமான, சிறப்புமிக்க, அழகான தேவாலயங்களைக் கட்டி அதை பின்னாளில் ஒரு புகழ் பெற்ற குறிப்பிடத்தக்க அடையாளமாக மாற்றுவதில் குறியாக இருந்தது.

சுமார் .5 இலட்சத்திற்கும் குறைவான செலவில் பம்பாயில் மிக பெரிய அழகான தேவாலயம் ஒன்று உருவானது. ஆனால் மதராஸில் கட்டிய தேவாலயத்தின் கட்டுமானச் செலவு சுமார் 2 ரு லட்ச ரூபாய்க்கு மேல் ஆனது. இது புனித ஜார்ஜ் தேவாலய கட்டுமானத் தொகையைவிட சுமார் 10,000 ரூபாய் அதிகமாகும். இந்த அதிகப்படியான செலவினால், இங்கிலாந்து நிர்வாகிகள் கோபமடைந்தாலும் இந்த தேவாலயம் மதராஸின் ஒரு முக்கிய அடையாளமாகச் சின்னமாக தோற்றமளித்தது.

'மதராஸ் இஞ்சினியர்ஸ்'' என்ற நிர்வாகத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரியான மேஜர் கால்ட் வெல் என்பவரின் திட்டப்படி அந்நிறுவனத்தைச் சார்ந்த மேஜர் டே ஹவிலேண்ட் என்பவரால் புனித ஜார்ஜ் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த "கிர்க்' எனப்பட்ட புனித ஆன்ட்ரூ தேவாலயத்தை அவரே திட்டமிட்டு கட்டியும் முடித்தார். முழுமையாக இந்த பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஹவிலேண்ட், அதனால் மிகவும் பெருமை அடைந்தார். சிலர் இந்த தேவாலயம் குறித்து விமர்சிக்கவும் செய்தார்கள்.

இதன் விதானம் கிரேக்க பாணியில் உருவானது. ஆனால் சில விமர்சகர்களோ அது ஒட்டகத்தின் முதுகைப் போன்று அமைந்துள்ளது என விமர்சித்தார்கள். இந்த விமர்சனத்திற்கு அப்பாலும் இந்த விதானம் இந்த தேவாலயத்தின் உட்பகுதியை மேலும் அழகானதாகத் தோற்றமளிக்கச் செய்தது. இந்த அழகான மேல் விதானத்துடன் அமைந்த தேவாலயம் திறக்கப்பட்டபோது அதன் அழகே ஆபத்தாக மாறியது. ஆலயத்தின்உள் பிரார்த்தனைக்காக எழுப்பப்படும் ஒலிகள் அங்கே கூடியிருந்த மக்களின் மனம் சஞ்சலப்படும் அளவிற்கு எதிரொலித்தது. இந்த குறையை போக்க மேலும் பணம் செலவழிக்கப்பட்டது. இவ்வாலயத்தின் கொடிக்கம்பம் புனித ஜார்ஜ் தேவாலயத்தின் கொடிக்கம்பத்தை விட 27 .5 அடி உயர்ந்து 166 .5 அடியாக இருந்தது.

முந்தைய அத்தியாயத்தில் கூறியப்படி மைலாப்பூரில் இருந்த ரோமன் கத்தோலிக்கர்களின் தேவாலயத்தை பிராட ஸ்டண்டுகளான பிரிட்டிஷ்காரர்கள் அவ்வளவாக ஆதரிக்கவில்லை. மதராஸின் இன்னொரு அடையாளமான இந்த தேவாலயத்தின் தோற்றத்தை படத்தில் காணவும்.

மதராஸின் ஒரு பரந்த நிலப்பரப்பில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் ஜார்ஜ் டவுனுக்கும் இடையே முகமதிய சிற்பக் கலைப்பாணியில் கட்டப்பட்ட சிவப்பு நிற உயர்நீதிமன்ற கட்டிடம் பார்ப்பவர்களை இன்னமும் பரவசத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. அக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமானாலும் இது நவீனமானதாகவே காட்சியளிக்கிறது.

மதராஸின் அந்நாளைய முதுபெரும் வழக்கறிஞர்களின் நினைவாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் பல வழக்கறிஞர்கள் இக்கட்டிடம் உருவாவற்கு முன்பு மதராஸ் துறைமுக வாசலுக்கு எதிரே, தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இயங்கும் கட்டிடத்தில்தான் தொழில் புரிந்தனர். பலவருடங்களாக இந்த இடத்தில்தான் உச்சநீதி மன்றத்தின் மதராஸ் அலுவலகம் செயல்பட்டது. இப்போதுள்ள புதிய உயர்நீதி மன்றக் கட்டிடம் மதராஸின் சட்டத்துறை வளர்ச்சியை சுட்டிக் காட்டும் ஒரு மாபெரும் நினைவகமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் கும்பனி தனது நீதித்துறையின் அலுவலகத்தை கோட்டைக்கு உள்ளேயே அமைத்து ஊழியர்களுக்கு இடையே உண்டான வழக்குகளை விசாரித்து நீதி வழங்கி வந்தது. அந்நாளில், குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக மிக கடுமையானதாக இருந்தன.

அன்றைய ஒரு ஆவணத்தின்படி சாதாரண எழுத்தர் ஒருவர் செய்த சிறு குற்றத்திற்கு தண்டனையாய் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவோ கூர்மையான ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு ஆசனத்தை மரக்குதிரையின் முதுகில் அமைத்து அதன்மேல் குற்றவாளியை அமரும்படி செய்தனர். சில சமயம் குற்றம் கடுமையானதாக இருந்தால் மேற்கூறிய தண்டனையை கடுமையாக்க குற்றவாளியின் காலில் கனமான இரும்பு எடைகளைக் கட்டித் தொங்க விடுவதுமுண்டு.

கோட்டைக்கு வெளியே இருந்த கருப்பர்நகர மக்கள் செய்யும் குற்றங்களை விசாரித்து நீதி வழங்க ஒரு இந்திய அதிகாரி நியமிக்கப்பட்டார்.

கும்பனியின் அதிகாரமும் அலுவல்களும் அதிகரிப்பதற் கேற்ப பல்வேறு நீதிமன்றங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டன. அன்றைய ஆவணங்களின்படி மக்கள் தொகை பெருக்கத் தினால், குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி அதனால் இத்தகைய அதிகரிக்கப்பட்ட நீதிமன்றங்களும் அவசியமாயின.

அந்நாளில் மதராஸின் பரந்து நீண்ட கடற்கரையில் வசித்த டச்சு நாட்டு வியாபாரிகளுக்கு அடிமைகளாக பணிபுரிய சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்பட்டு வந்தனர். இத்தகைய குற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்ததால் கடத்தப்பட்ட சிறுவர்களை கண்டுபிடிக்கும் பணி மிகவும் சிரமமானதாய் இருந்தது. அடிமைகளை விற்கும் வியாபாரம் அந்நாளில் இங்கு மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் பரவியிருந்தது.

'செயின்ட் ஜார்ஜ் கோட்டை" கவுன்சிலர்களின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஆவணத்தின்படி 1687ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஃப்ரேசர் என அழைக்கப்பட்ட ஒரு நபர் 40 சிறுவர்களை விலைக்கு வாங்கி கும்பனிக்கு அடிமைகளாக தரவேண்டும் என உத்தரவிடப் பட்டிருந்தது. இளமையும் பலமும் மிக்க இந்த அடிமைகள் கும்பனியின் படகுகளை செலுத்துவது, அவற்றை கரையில் கட்டி இழுப்பது, கப்பலுக்குள் சாமான்களை ஏற்றி இறக்குவது போன்ற கடுமையான பணிகளைச் செய்வதற்காக அமர்த்தப்பட்டனர்.

இப்படிப்பட்ட அடிமைகள் குறித்த வழக்கு ஒன்று 1665ஆம் ஆண்டில் முதன் முதலாய் நீதி மன்றத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட திருமதி டவேஸ் என்ற பெண்மணி தன்னிடம் வேலை செய்து வந்த ஒரு அடிமைப் பெண்ணை கொலை செய்து விட்டார் என்பதுதான் அந்த வழக்கு.

வெனிஸ் நகர நீதிபதிகளைப்போன்று ஆட்சியில் இருந்த ஆளுனரே நீதி வழங்கும் நீதிபதியாக இதை விசாரித்துத் தீர்ப்பு சொல்ல காத்திருக்கையில், அங்கு அமர்வில் இருந்த 12 ஜூரிகளும் குற்றவாளியான திருமதி டாவேஸ்தான் அந்த அடிமைப் பெண்ணைக் கொலை செய்தார் என்று ஒரு மனதாக தீர்மானித்தனர். இருப்பினும் அந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு அவளுக்கு மரண தண்டனை வழங்குவது அவசியமில்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் குற்றம் ஒன்று புரியப்பட்டால் அதற்கான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்று ஒரு சட்டமிருந்ததால் திருமதி டாவேஸ் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவளுக்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்க இயலாத ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஆளுனருக்கு வருத்தம் அளித்தது. வேறு வழியின்றி அவளை விடுவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு ஆளுனர் இங்கிலாந்திலுள்ள நிர்வாகி களுக்கு, தான் வழங்கிய எதிர்பாராத அந்த தீர்ப்பை தானே ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சட்டம் குறித்த தன் அறிவு சிறப்பாக இல்லையென்றும், இந்த தீர்ப்பில் தான் தவறு செய்து விட்டதாகவும் வருத்தப்பட்டு கடிதம் எழுதினார். இதன் விளைவாக இங்கிலாந்து நிர்வாகிகள் உடனடியாக இரண்டு புதிய நீதிபதிகளை நியமிக்க ஆளுனரை அனுமதித்தனர். அதன்பின் எல்லா வழக்குகளும் இந்த நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வந்தன. மாற்றமே இயற்கையின் நியதி. அந்த விதிக்கு உட்பட்டு மாற்றத்தின்பின் மாற்றம் என நீதித்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும் புதிய நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை அதிகரித்த வண்ணமே இருந்தது. இன்று நம் கண் முன்னே பரந்து விரிந்து கிடக்கும் உயர்நீதிமன்றமும் அதன் கீழ் ஆங்காங்கே நீதி வழங்கும் பல்வேறு சிறு சிறு நீதிமன்றங்களும் உருவாகி உள்ளன. மதராஸில் சட்டம் மற்றும் நீதித்துறையின் வளர்ச்சி, அரசின் முயற்சியால் எவ்வாறு புதிய மாற்றங்களுக்கு வித்திட்டது என்பது தெளிவாய் விளங்குகிறது.

மதராஸில் முதன்முதலில் இலக்கிய மற்றும் விஞ்ஞான அமைப்புகள் எவ்வாறு துவங்கின என்று ஆராய்ந்தால் அது புதிய சுவையான கதையாக அமையும்.

அந்நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் இத்துறையின் வளர்ச்சிக் குறித்து அறிஞர்களின் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மற்ற பகுதியில் உள்ளவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள போதுமான பத்திரிகைகள் இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளே நடைபெற்ற விஞ்ஞானம் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தங்களுக்குள்ளாகவே கலந்துபேசி ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அந்நாளில் இந்தியாவில் விஞ்ஞான கழகங்களும் விஞ்ஞானிகளும் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயல்பட்டது போல் தற்போது நடைபெறுவதுதில்லை என்பது தெளிவாகிறது.

அதிர்ஷ்டவசமாக மதராஸிற்கு அந்நாளில் குடிபெயர்ந்த மக்களில் பெரும்பாலோர் அறிவுப்பசியும், விஞ்ஞான பார்வையும் கொண்டிருந்தனர். அவர்கள் உண்மையாகவும் தீவிரமாகவும் அக்கறை செலுத்தி கடுமையாக உழைத்ததால் தான் அந்த உழைப்பு நேரடியோகவோ அல்லது மறைமுக மாகவோ இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

மதராஸில் வசித்த கும்பனியின் ஊழியர் ஒருவர் வான சாஸ்திரத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டதால் தன் வீட்டிலேயே தனது சொந்த செலவில் ஒரு வானிலை ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரத்தில் பொழுது போக்காக அதில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்த கூடம் ஒரு வளர்ச்சி பெற்ற வானிலை ஆராய்ச்சிக் கூடமாய் வளர்ந்து இன்று இந்தியாவின் கால நேரங்களைக் கணிக்கும் ஒரு முக்கியமான ஆராய்ச்சிக் கூடமாக மதராஸில் இருந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி கூடத்திற்கு வித்திட்டவர் வில்லியம் பெட்ரீ என்ற கும்பனியின் ஊழியர். தன்னுடைய ஆர்வத்தாலும், அறிவாலும் வானசாஸ்திரத்தில் அதிக நாட்டமும் புலமையும் பெற்றிருந்ததால் பின்னாளில் அரசுப்பதவியில் பல உயர்வுகளைக் அடைந்தபோதும் தன்னுடைய ஓய்வு நேரத்தை உபயோகமாக செலவிடுவதற்காக இந்த ஆராய்ச்சிக் கூடத்தை தனது செலவிலேயே தன்னுடைய நுங்கம்பாக்கம் வீட்டில் நிறுவினார்.

பெட்ரீ ஒரு நீண்ட விடுமுறையைக் கழிக்க இங்கிலாந்து சென்ற போது தனது உபகரணங்களை உபயோகிக்க அரசை அனுமதித்தார். 1791இல் அவர் மீண்டும் விடுமுறை கழிந்து மதராஸ் திரும்பியபோது அரசே மதராஸில் ஒரு வானிலை ஆய்வுக்கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்க பெட்ரீயையே நியமித்தது.

இதே காலகட்டத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்ற மற்றுமொரு ஆர்வமிக்க விஞ்ஞானி கும்பனியின் மருத்துவத்துறையில் பல காலம் சேவை செய்துவிட்டு, பிறகு, ஆண்டுக்கு 2500 பவுண்ட் ஊதியத்தில் கும்பெனியின் மருத்துவ உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ, தன்னுடைய ஊதியத்தின் பெரும் பகுதியையும், ஓய்வு நேரத்தையும் தோட்டக்கலை வளர்ச்சிக்கென செல வழித்தார். இன்று பைகிராப்ட்ஸ் தோட்டம், துள்ளோச் தோட்டம் என்று அழைக்கப்படும் தோட்டங்களும் அதிலுள்ள தோட்ட வீடுகளும் அடங்கிய ஏறக்குறைய 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை, ஜேம்ஸ் ஆண்டர்சன் நுங்கம்பாக்கத்தில் வாங்கினார். அவர் தன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை சுமார் 25 ஆண்டுகள் தன்னுடைய ஓய்வு நேரத்தையும், மிஞ்சிய ஊதியத்தையும் தோட்டக் கலையை மேம்படுத்த செலவழித்து அதில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு அழகிய, அலங்காரமான தோட்டங்களை உருவாக்கினார்.

ஆன்டர்சன் தனது ஓய்வு நேர பணியில் அதிக ஆர்வ முடையவராக இருந்ததால் தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறைகளில் பல பரிசோதனைகளை செய்து அதன் மூலம் மருத்துவ, வியாபார மற்றும் தொழில்துறைகள் சிறப்படைய உதவினார்.

டாக்டர் ''ஆண்டர்சன்ஸ் பொடானிகல் கார்டன்'' என்ற பெயரில் அவரால் உருவாக்கப்பட்ட தோட்டம் பொதுமக்களின் பார்வைக்கும் உபயோகத்திற்கும் திறந்து விடப்பட்டபோது அது மதராஸின் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாய் மாறியது. பெரும்பாலான மக்கள் தங்களது ஓய்வு நேரங்களை அங்கே செலவழித்தனர்.

தனது 72வது வயதில் இயற்கை எய்திய டாக்டர் ஆண்டர்சனின் உடலை அடக்கம் செய்த புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அன்று பிரபலமாயிருந்த சிற்பி சர்.பிரான்ஸிஸ் சான்ட்ரீ என்பவர் ஆண்டர்சன் நினைவாக உருவாக்கிய அழகிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டது. இதற்கான செலவை மதராஸின் மருத்துவத்துறையைச் சார்ந்த பல அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

ஆண்டர்சனால் உருவாக்கப்பட்ட தோட்டம் மதராஸில் எவ்வளவு நாட்களுக்கு நிலை பெற்றிருந்தது என்பதை சொல்வது சற்று கடினமே. டாக்டர் ஆண்டர்சன் மறைவுக்குப் பிறகு தோட்டக்கலையில் அதிக ஆர்வம் காட்டி நேசித்தவர்கள் மதராஸில் அதிகமில்லை என்பதால் அத்தோட்டம் நெடு நாட்களுக்கு நீடித்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் 1835இல் பலரின் விருப்பத்திற்கு எதிராக ஆண்டர்சன் தோட்டத்தில் இரு பெரிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. மீதமிருந்த நிலத்தில் "மதராஸ் விவசாய மற்றும் தோட்டக் கலைக்கழகம்'' என்ற பெயரில் ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்கி அது இன்றுவரை என்ற பெயரில் தேனாம்பேட்டையில் இயங்கி வருகிறது.

பல வருடங்களுக்குக் முன் தொடங்கப்பெற்ற ''மதராஸ் இலக்கியக் கழகம்" இன்று ஒரு நூலகமாக செயல்பட்டு வருகிறது. அந்நாளில் அங்கு இலக்கியம் சார்ந்த பல கூட்டங்கள் நடைபெறும். அதில் சில கட்டுரைகளும் வெளியிடப்படும். அன்று அங்கு வாழ்ந்த ஐரோப்பிய மக்களிடையே இக்கழகம் புகழ் பெற்று விளங்கியது. துவக்க காலத்தில் இக்கூட்டங்களில் விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இடம்பெற்றன. விஞ்ஞானிகள் அந்நாளில் இந்த கட்டுரைகள் குறித்து ஒருவருக்கொருவர் விவாதித்தார்கள். அன்று இந்தியாவிலிருந்த சுற்றுபுற சூழ்நிலை குறித்த கட்டுரைகள் மிகவும் பிரபலமாயிருந்தன. குறிப்பாக கடலில் இனம்பெருக்கி நிலத்தில் வாழும் மதராஸ் நண்டு வகைகள், சேலம் ஜில்லாவிலிருந்த தொன்மையான கல்லறைகள் மற்றும் 'மலபாரின் வயநாடு பகுதியில் கிடைத்த தங்கம்" போன்றவற்றின் தலைப்புகளில் சுவாரசியமான கட்டுரைகள் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப் பட்டும் வந்தன. "லிட்டரரி சொசைடி ஆப் மெட்ராஸ்' என்ற அந்தக் கழகத்தின் பெயர் இன்று வரை நிலைத்திருந்தாலும் அன்றுபோல் இன்று அதில் அறிவியல் மற்றும் இலக்கிய சம்பந்தமான சொற்பொழிவுகள் நடைபெறுவதில்லை . கடைசியாக 1890களில் சில அறிவியல் கூட்டங்கள் நடை பெற்றபோதிலும் அதில் கலந்து கொள்ள ஆர்வமோ அக்கறையோ அன்று வாழ்ந்த மக்களிடையே இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.

அன்று நிறுவப்பட்ட இந்தக் கழகமும் ''ஆக்ஸிலரி ஆப் தி ராயல் ஏஷியாடிக் சொசைடி'' என்ற கழகமும் காலத்தை மீறி நிலைத்து நின்றாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. அந்த நிலையிலும் அனைத்துத் துறைகளையும் சார்ந்த, சுமார் 50,000 புதிய மற்றும் பழைய, நூல்களை தன் அகத்தே கொண்டிருந்தது ''மதராஸ் இலக்கிய கழகம்'' காலப்போக்கில் பல புதிய புத்தகங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு அக்கழகம் இன்று பொதுமக்களின் உபயோகத்திற்கு ஒரு நல்ல நூலகமாக செயல்படுகிறது.

மதராஸின் அருங்காட்சியகம் ஒரு பிரம்மாண்டமான முக்கிய ஸ்தாபனம், அது தோன்றுவதற்கு மேற்சொன்ன மதராஸ் இலக்கிய கழகமும் ஒரு முக்கிய காரணமாகும். அக்கழகம் மதராஸ் மக்களுக்கு பெரும் பணி ஆற்றியுள்ளது. 1851இல் தன்னிடமிருந்த பழைய பூகோள படிமங்களையும் மற்றும் விலைமதிப்பில்லா அரிய பொருட்களையும் அரசுக்கு இந்தக் கழகம் அன்பளிப்பாக அளித்தது.- அந்த விலை மதிப்பற்ற பழைய பொக்கிஷங்கள் இன்றும் மதராஸ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூகோள படிமங்களை அன்றைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு வைத்திருந்தது. அந்த அலுவலகம் இன்றும் அருங்காட்சியகத்தில் பழமையான ஒரு பகுதியில் உள்ளது. இந்த கலெக்டர் அலுவலகக் கட்டிடம் 1830இல் அரசு வாங்குவதற்கு முன்பு "பாந்தியன்' என்ற தனி நபருக்குச் சொந்தமாய் இருந்தது.

இந்தக் கட்டிடத்தில்தான் முன்பு கூறிய "பழைய கல்லூரி' நிறுவனர்களின் கூட்டங்களும் நடன நிகழ்ச்சிகளும், விருந்து உபசாரங்களும் நடந்து வந்தன. இந்த புகழ்மிக்க புராதன கட்டிடம் அருங்காட்சியகம் அமைந்துள்ள எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ளது.

அலைகள் ஆர்பரிக்கும் மெரினா கடற்கரைக்கு எதிர்புறம் வட்டவடிவில் உள்ள ஒரு அழகிய கட்டிடம் இன்றும் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கிறது. இக்கட்டிடத்திற்கு விசித்திரமானதும் சுவாரசியமிக்கதுமான சரித்திரம் ஒன்று உண்டு. பொதுவாக இந்தக் கட்டிடம் ''ஐஸ் ஹவுஸ்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரே இந்தக் கட்டிடம் எந்த பயன்பாட்டிற்கு உரியது என தெளிவாய் விளக்குகிறது. பல வருடங்களுக்கு முன்பு மதராஸில் பனிக்கட்டி தயாரிக்கும் தொழில் கூடங்கள் தொடங்கப்படாத நிலையில், குளிர்பானங்களின் குளிர்ச் சியையும் சுவையையும் மக்கள் அறியாத காலத்தில், அமெரிக் காவிலிருந்து கப்பல் மூலம் பனிக் கட்டிகளை இறக்குமதி செய்யலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு உதயமாயிற்று. அந்த எண்ணத்தை செயலாற்ற 1840இல் அவருக்கு ஒரு வியாபாரத்திட்டம் உருவானது. ஒரு பெரிய வட்டவடிவான கட்டிடத்தை கடற்கரைக்கு அருகே உருவாக்கி அதில் இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிகளை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல வருடங்களுக்கு இத்திட்டம் வியாபார நோக்கில் வெற்றியுடன் நடைபெற்று வந்தது. மக்களுக்கு நான்கு அணா விலையில் 1 பவுண்டு ஐஸ் கட்டி விற்கப்பட்டது. இன்றும் அக்காலத்தில் வசித்த மக்களுக்கு தாங்கள் விலை கொடுத்து வாங்கிய இந்த பனிக்கட்டிகள் பற்றிய இனிய நினைவுகள் நெஞ்சில் நிலைத்திருக்கும். அன்றைய நாளில் இதுபோன்று பெரிய அளவில் பனிக்கட்டிகளை வாங்கி சேமிக்க இந்த இடத்தைவிட்டால் வேறு இடமில்லை.

கால மாற்றத்தில் மதராஸிலேயே பனிக்கட்டி தயாரிக்கும் தொழிற்கூடங்கள் உருவாகின. இதனால் மிகவும் மலிவான விலையில் பனிக்கட்டி மக்களுக்குக் கிடைத்ததால் வியாபார நோக்கில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தன் மதிப்பை மெல்ல மெல்ல இழந்தது. பின்னாளில் அக்கட்டிடத்தை ஒருவர் விலைக்கு வாங்கி வட்டச்சுவர்களில் ஜன்னல்கள் அமைத்து அதை மக்கள் வசிக்கும் இல்லமாக மாற்றினார். மதராஸில் புதிய துறைமுகம் உருவான நிலையில் மெரினாவின் இக்கட்டி டத்திற்கு எதிரே இருந்த கடல் உள் வாங்கியதால், ஒரு நீண்ட அகலமான வெள்ளை மணல் பரப்பு உருவாயிற்று.

வட்டவடிவில் அந்தக் கட்டிடம் இருந்ததால் அதில் வசிக்க மக்கள் முன் வரவில்லை. ஆனாலும் தர்ம சிந்தனை படைத்த சில ஹிந்து தாளாளர்கள் அக்கட்டிடத்தை வாங்கி பிரபலமான மத போதனையாளர்கள் மதராஸுக்கு விருந்தினராக வரும் காலங்களில் தற்காலிக தங்குமிடமாக உபயோகித்தார்கள். மக்களுக்கு சேவைசெய்யும் மதபோதகர்கள் ஜாதிவித்தியாசமில்லாமல் இந்த இடத்தில் தங்க அனுமதிக்கப் பட்டனர். எல்லா இந்து மத போதகர்களுக்கும் அளிக்கப்பட்ட இந்த வசதியை ஒரு சிலரே பயன்படுத்தினர். எனவே இந்த பெரிய கட்டிடம் மெல்ல மெல்ல சந்தடியில்லாத ஒரு மாளிகையாக மாறியது.

சில வருடங்களுக்கு பின் அரசு அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கி ஒரு உன்னதமான சேவைக்கு பயன்படுத்தியது. பிராமண விதவைகளான இளம் பெண்கள் தங்கும் இல்லமாக அந்தக் கட்டிடத்தை மாற்றியமைத்தது. ஒரு காலத்தில், இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிகளை பாதுகாக்க கட்டப் பட்ட இக்கட்டிடம் இன்று பால்ய வயது அந்தண கைம்பெண்களின் இருப்பிடமாக மாறியது ஒரு விந்தையே. உருகும் பனியை உருகாத நிலையில் வைத்திருக்க உதவிய இக்கட்டிடம், இளம் கைம்பெண்களின் கண்ணீரைத்துடைத்து அவர்களைக் காக்கும் இல்லமாக உருவெடுத்த அதிசயத்தை என்னவென்ற சொல்ல! ஆனாலும் காலம் செல்லச் செல்ல நல்லெண்ணங்கள் உருவாகி இந்த இளம் விதவைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி தோன்றி அவர்களின் வாழ்வு மீண்டும் மலர்ந்தால், அந்தக் காலகட்டத்தில் இந்த கட்டிடத்தின் அவசியமே இல்லாது போகும்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.