Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

கோட்டையில் புனித மேரி தேவாலயம்

இந்தியாவில் பிராடஸ்டண்டு (Protestant) களுக்கான மிகப்பழமை வாய்ந்த தேவாலயம் மதராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலயம் எனச் சொல்லலாம். 1680இல் கட்டப்பட்ட இந்த தேவாலய கட்டிடமே (சிதைந்து போன கோட்டையின் மதில் சுவர்களைத் தவிர்த்து) மதராஸிலிருக்கும் மிகப் பழமையான ஆங்கிலேயக் கட்டிடமுமாகும். மதராஸ் நகரம் கும்பனியரால் நிறுவப்பட்டு வளர்ந்து வந்த நிலையில் அதன் ஊழியர்களுக்கு ஒரு தேவாலயமோ அல்லது மத குருவோ இருந்ததில்லை , அதே நேரம் அதன் ஊழியர்களின் சமூகத்திற்கு பொருட் செலவு செய்து ஒரு பிரார்த்தனைக் கூடம் அமைப்பது அவசியம் எனவும் அவர்கள் கருதவில்லை . ஆனாலும் அக்காலத்தில் ஞாயிற்று கிழமைகளில் காலை, மாலை நேர பிரார்த்தனை கூட்டங்கள், சரியான இடங்கள் இல்லாத காரணத்தால் தவிர்க்கப்படவு மில்லை. ஆளுனரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளோ தலைமை வகித்து தேவாலய ஊழியங்களைச் செய்து வந்தனர்.

அதே நேரம் போர்க்சுகீஸிய ஆதிக்கத்தில் இருந்த சாந்தோமில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு போதுமான மத குருமார்கள் நிறைவாகவே இருந்தனர். அவர்கள் அங்குள்ள போர்ச்சுகீசியர்களுக்கு மட்டுமல்லாமல் வெள்ளையர்நகரம் மற்றும் கருப்பர்நகர வாசிகளான ரோமன் கத்தோலிக்கர் களுக்கும் மதகுருவாய் இருந்து பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்த மூன்று வருடங்களுக்குள் வெள்ளையர்நகரத்தில் ரோமன் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகாரித்ததால் அன்றைய ஆளுனர் பிரெஞ்சு பாதிரியார் ஒருவரின் தலை மையில் ஒரு தேவாலயத்தை அங்கு நிர்மாணிக்க அனுமதித்தார்.

கத்தோலிக்கர்களை வெகுவாக ஆதரிக்காத ராணி எலிசபத்தின் காலத்தில் உருவான கிழக்கிந்திய கும்பனியின் மதராஸ் குடியிருப்பில், ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இருந்தும், பிராடஸ்டெண்டு (Protestant) களுக்கென ஒரு தேவாலயம் இல்லாதது வியப்பையே அளிக்கிறது.

1645இல் அங்கிருந்த சிப்பாய்கள், தங்கள் ஆத்மாவை சுத்தப்படுத்த கட்டாயம் ஒரு மதகுரு தங்களுடன் தங்கியிருக்க வேண்டுமென்று அளித்த மனுவை, கோட்டையை சார்ந்த பிரதிநிதி மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்களின் வலியுறுத்தலால் அடுத்த வருடமே ஒரு மதகுரு செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிராடஸ்டெண்டுகளுக்காக ஒரு ஆலயம் உருவாகாத நிலையில் அவர்களுக்கான மதக்கூட்டங்களும் பிரார்த்தனைகளும் நடைபெற கோட்டைக்குள் ஒருதனி அறை ஒதுக்கப்பட்டது. அந்தக் கூட்டங்களில் எல்லா இளைஞர்களும் தினமும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும், அது தவிர்க்கப்பட்டால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டுமெனவும் கோட்டையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு 16 வருடங்களில் பல குருமார்கள் பொறுப்பேற்றனர். அதனால் இடைவிடாது அங்கு பிரார்த்தனை கூட்டங்கள் நடந்து வந்தன. கும்பனியின் வளர்ச்சி காரணமாக வெள்ளையர் நகரத்தில் மக்கள் கூட்டம் பெருகி வந்தது அங்கு ஒரு சிறிய தேவாலயம் கட்டப்பட்டும் அது போதுமானதாக இல்லை. இந்நிலையில் கும்பனியின் நெடு நாள் ஊழியத்தில் இருந்த ஸ்ட்ரீ ன் ஷாம் மாஸ்டர் (Streynsham Master) மதராஸ் கவர்னராகப் பொறுப்பேற்றதும் முதல் பணியாக ஒரு தேவாலயம் கட்டத் தேவையான நிதி உதவியை மக்களிடம் வேண்டினார். மக்கள் தன்னிச்சையாக நன்கொடை தந்து, தென்னிந்தியாவில் பெருகிவரும் கிருத்துவ மக்கள்தொகைக்கு ஏற்ப ஒரு தேவாலயத்தை அமைக்க உதவும்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். முதலில் அவர் தனது நிதியாக முதலில் நூறு பகோடாவை (சுமார் 350 ரூபாய்கள்) அளித்து பட்டியலைத் துவக்கினார். அந்தத் தொகை இன்றைய (1825) மதிப்பில் ஏதுமில்லாமல் இருந்தாலும், அது ஸ்ட்ரீன் ஷாம் மாஸ்டரின் ஒரு மாத ஊதியத்தை விட அதிகமாகும்.

அந்நிதிக்கு கவுன்சிலர்கள், எழுத்தர்கள், பயிற்சியாளர்கள் மற்றுமுள்ள ஊழியர்கள் கணிசமான தொகையை கொடுத்து உதவினார்கள். அதன் காரணமாய் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் புனித மேரிமாதா தேவாலயம் கட்டப்பட்டு 1680-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மக்களின் பிரார்த் தனைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதுசமயம் கோட்டையின் பீரங்கிகள் முழங்கி கம்பீரமாய் ஆலயத்தின் திறப்பு விழாவை பறைசாற்றின. பின்னாளில் தேவாலய கோபுரமும் புனித அறையும் சேர்க்கப்பட்டன. இன்று (1825) இருக்கும் இந்த தேவாலயம் சுமார் 250 ஆண்டுகளுக்குமுன் இரண்டாம் சார்லஸ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என கருதப்படுகிறது.

இந்த தேவாலயம் மதராஸ் கோட்டைக்குள் கட்டப்பட்டப் பொழுது இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருந்த சில தேவாலயங்கள் ஒரு பெரிய தீவிபத்தில் அழிந்ததால் அவைகளும் புதிப்பிக்கப்பட்டு மேலும் பல புதிய தேவாலயங்களும் அங்கு நிர்மாணிக்கப்பட்டன. இது ஒரு வியத்தகு ஒற்றுமையாகும். இந்த தேவாலயங்கள் அனைத்தும் நிர்மாணிக்க காரணமாக இருந்தவர் சர் கிருஸ்டோபர் ரென் (Sir Christopherwren) என்பவராவார். அவர் தலைமையில் லண்டனில் சிரத்தையோடு தேவாலயங்கள் கட்டப்பட்ட வேளையில் மதராஸில் இருந்த ஷாம் மாஸ்டர் ஒரு புதிய உத்வேகத்தோடு இந்த நற்பணியைத்துவக்கினார். இதன் காரணமாகவோ என்னவோ கோட்டையின் புனித மேரி மாதா தேவாலயம் லண்டனில் அமைந்த தேவாலய பாணியிலேயே அமைந்துள்ளது.

புனித மேரி தேவாலயத்தின் சுவர்கள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தன. இவ்வாலயத்தை நிர்மாணிக்கும் பொழுது பிற்காலத்தில் எதிரிகளால் செயின்ட் ஜார்ஜ் கோட்டைத் தாக்கப்பட்டால் பீரங்கி குண்டுகள் இந்த தேவாலயத்தையும் தாக்கக்கூடும் என நினைத்த ஆளுனரும் உடன் இருந்தவர்களும் தேவாலயத்தின் மேற் கூரையை பீரங்கி குண்டுகள் தகர்க்காவண்ணம் அமைத்தனர். இருந்தாலும் அவர்கள் பயந்த படியே இந்த தேவாலயம் எதிரிகளால் பல முறை தாக்கப்பட்டது. 1746இல் பிரெஞ்சுப் படைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை முற்றுகை இட்டபோது பிரிட்டிஷ் படை வீரர்கள் தங்கள் மனைவிமார்கள், குழந்தைகள் மற்றும் பணியாளர்களை பீரங்கி குண்டு துளைக்காத அந்த தேவாலயத்தில் வைத்து கோழிகள் குஞ்சைகாப்பது போல காத்து வந்தனர். போர் ஓய்ந்த இடைவேளைகளில் அவர்களும் அங்கு தஞ்சம் புகுந்தனர்.

பிரெஞ்சுப் படைகள் கோட்டையைக் கைப்பற்றி இருந்த மூன்று ஆண்டு காலம், தாங்களும் அத்தகைய முற்றுகைக்கு ஒரு நாள் ஆளாவோம் எனக் கருதி பீரங்கி குண்டுகள் புகாவண்ணம் அமைக்கப்பட்ட அந்த தேவாலயத்தை தானியக் கிடங்காகவும் மற்றும் குடிநீர் சேமிக்க உதவும் நீர் நிலையாகவும் பயன்படுத்தினர். 1746இல் நடைப்பெற்ற போரின் நினைவாக பிரெஞ்சு படையினர் இந்த தேவாலயத்தில் இருந்த இசைக் கருவி ஒன்றை பாண்டிச்சேரிக்கு எடுத்துச் சென்றனர்.

போர் முடிந்து மதராஸ் கும்பனி வசம் ஒப்படைக்கப்பட்ட சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் பிரெஞ்சுப் படைகள் கோட்டையை முற்றுகையிட்டனர்.

இந்த இரு முற்றுகைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷார் கோட்டையில் குண்டு புகாத சில வீடுகளை அமைத்து அதில் பெண்களையும், குழந்தைகளையும் தங்கச் செய்தனர். தேவாலயம் படைவீடாகவும், அதன் கோபுரம் கண்காணிக்கும் நிலையாகவும் உபயோகப்படுத்தப்பட்டன. பிரெஞ்சுப் படைதளபதி கௌண்ட் லாலி, கோட்டையை கைப்பற்ற முடியாத காரணத்தால் நம்பிக்கை சிதைந்த நிலையில் களத்திலிருந்து பின் வாங்கினான். குண்டு புகா வண்ணம் கட்டப்பட்ட தேவாலயமானாலும் இந்த முற்றுகையின் காரணமாக அதன் சில பகுதிகள் சிதைந்து போயின. அதை மீண்டும் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு பிரெஞ்சுப்படையை பழி வாங்க ஒரு சரியான சந்தர்ப்பம் உருவானது. இதைப் பயன்படுத்தி அவர்கள் பாண்டிச்சேரியைக் கைப்பற்றி அங்குள்ள கோட்டை கொத்தளங்களைத் தரைமட்டமாக்கினர். செயின்ட் மேரி தேவாலயத்திலிருந்து பிரெஞ்சுப்படைகளால் எடுத்துச் செல்லப்பட்ட இசைக் கருவியையும் மற்றும் தங்களால் சூரையாடப்பட்ட மற்ற பொருள்களையும் ஆங்கிலேயர்கள் மதராஸுகே கொண்டு வந்தனர். இதனிடையில் செயின்ட் மேரி தேவாலயத்திற்கு புதிதாக ஒரு இசைக்கருவி வாங்கப் பட்டுவிட்டதால், பாண்டிச்சேரியிலிருந்து எடுத்து வந்த இசைக்கருவி வேறொரு கிராம தேவாலயத்திற்கு அனுப்பப்பட்டது. பாண்டிச்சேரியிலிருந்து அவர்கள் எடுத்துவரப்பட்ட பொருள்களில் லாஸ்ட் ஸப்பர் (Last Supper) நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு நேர்த்தியான வண்ண ஓவியமும் இருந்ததென சில அலுவலகக் குறிப்புகள் மூலமாக தெரிகிறது. இந்த ஓவியம் இன்றும் (1921) மேரி மாதா தேவாலயத்தில் உள்ளது. ஆனாலும் இந்த ஓவியம் எங்கிருந்து வந்ததென அருதியிட்டுக்கூற முடியவில்லை. பிரிட்டிஷ் படைகள் மூன்று முறை பிரெஞ்சு படைகளுடன் போரிட்டு வென்றதன் விளைவாய் பாண்டிச்சேரியிலிருந்த அந்த ஓவியம் ஆங்கிலேயர்களால் ஏதோ ஒரு முறை மதராஸுக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாம் என நம்ப வாய்ப்பிருக்கிறது.

புனித மேரிமாதா தேவாலயத்தின் உள்ளே ஒரு சரியான வழிகாட்டி இல்லாமல் யாரேனும் நுழைந்தால், அங்கு தளமாக புதைக்கப்பட்டிருக்கும் பல்வேறு காலங்களின் பல்வேறு மொழிகளைக் கொண்ட கல்லறை முகப்புக் கற்கள் இது ஒரு கல்லறை தோட்டமோ என்ற ஐயப்பாட்டை எழுப்பும். இத்தனை சிறிய பரப்பளவில் அத்தனை கல்லறைகள் எப்படி இடம் பெற்றிருக்கும் என்ற சந்தேகமும் எழலாம். அந்த இடத்தில் மக்கிப்போன சவப்பெட்டிகளையோ அல்லது சிதைந்த எலும்புகளையோ காண முடிவதில்லை. மேலும் அந்த கல்லறை முகப்புக் கற்களில் சொல்லப்பட்டிருக்கும் பல்வேறு மனிதர்களைப் பற்றிய வாக்கியங்கள் எல்லாமே உண்மையெனக் சொல்லவும் முடியாது. ஆனாலும் புதைபட்ட அந்த கற்கள் சொல்லும் கதைகள் சுவாரஸ்யம் மிக்கவை. அந்நாளில் கும்பனியார் பயன்படுத்திய கல்லறை வெளி தற்போது சட்டக்கல்லூரி அமைந்துள்ள இடத்தில் (1825) வெள்ளையர் நகர சுற்றுச் சுவரிலிருந்துச் சற்று தள்ளியிருந்தது. பின்னாளில் கருப்பர்நகரைச் சுற்றி மதில் எழுப்பிய போது இந்த கல்லறைத் தோட்டம் கருப்பர்நகர மதிலுக்குள் அடங்கிவிட்டது. அதனால்தான் கருப்பர் நகர எல்லையின் ஒரு ஓரத்தில் இருந்த பிரிட்டிஷாரின் கல்லறைகளுக்கு தகுந்த அந்தஸ்து கிடைக்கவில்லை. எனவே இந்த கல்லறைத் தோட்டம் பல்வேறு காரணங்களினால் பராமரிக்கப்படாமல் பாழ்பட்ட நிலையிலேயே இருந்தது. இங்கு புதைக்கப்பட்ட பெரும்பாலான கும்பனி ஊழியர்கள் சொந்த பந்தமற்ற, திருமணமாகாத இளைஞர்கள். எனவே அவர்களது இழப்பை பெரும் இழப்பென கருதாமலும், இறந்தவர்களுக்கு செய்யப்படும் இறுதி சடங்குகள் முறையாகச் செய்யப்படாமலும் இருந்தன. இறந்து போனவர்களின் உடலை பெரும்பாலும் அவரது சக ஊழியர்களான நண்பர்களே சிறப்பான இறுதி மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர்களுக்கு இறந்து போனவர்களின் வேலை மற்றும் பதவி உயர்வுகள் தங்களுக்கே கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இறந்து போனவர்களால் ஏற்பட்ட காலி இடத்தை நிறப்ப மறுநாளே மற்ற ஒருவருக்கு அப்பதவி அளிக்கப்பட்டு வந்ததால், இது கருதியே அவர்களது எண்ணங்கள் சடலங்களை புதைக்கும் போதும் சுயநலம் கலந்திருந்ததாகக் கொள்ளலாம். எனவே அவர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அவற்றின் மேல் எளிய முறையில் நினைவு மண்டபங்களை கட்டி வந்தனர். இருப்பினும் தங்களுடன் பணியிலிருந்த ஒரு நல்ல ஆத்மாவை இழந்த துக்கமும் அவர்களிடையே இருக்கத்தான் செய்தது. இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்து அதை சிறப்புற பாதுகாக்க உறவினர்கள் இல்லாத நிலையில் கல்லறைகள் பாதுகாப்பில்லாமல் அங்கிருந்த கருப்பர்நகர மக்களால் அலட்சியம் செய்யப்பட்டன. 1711 இல் மதராஸ் குறித்து அரசு சாராத சிலரால் எழுதப்பட்டிருந்த குறிப்பில் பிரிட்டிஷாரின் கல்லலறைகளில் அரசு மரியாதை பெற்ற சில கல்லறைகளும் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே வருடம் அரசுக் குறிப்பில் இத்தகைய கல்லறைகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்த கல்லறைத்தோட்டம் பிச்சைக்காரர்களுக்கும், மாடுகளுக்கும் புகலிடமாய் இருந்தது. ஏற்கனவே கூறியப்படி பிரெஞ்சுப் படையெடுப்பில் கருப்பர்நகரமும் அதன் சுற்றுச் சுவர்களும் அழிக்கப்பட்டன. மீண்டும் மதராஸ் ஆங்கிலேயர் வசம் வந்தபோது பாழடைந்து கிடந்த அந்த கருப்பர்நகரத்தை முற்றிலுமாக அழித்தனர். கருப்பர்நகரத்தின் பெரும்பகுதி இரு படைகளாலும் அழிக்கப்பட்ட நிலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளில் ஒரு சில மட்டும் தப்பிப் பிழைத்தன. கருப்பர்நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டதால் அங்கிருந்த கல்லறைகள் வெள்ளையர் நகரத்தின் சுவருக்கு மிக அருகாமையில் அமைந்துவிட்டன. இதனால் கௌண்ட் லாலி (Count Lally) படையெடுத்தபோது இந்தக் கல்லறைகள் அவனது படைவீரர்கள் பதுங்கி தாக்க உதவியாக இருந்தன. ஒரு காலத்தில் நாய்களும் நரிகளும் நிறைந்த இந்த மயானபூமி இப்போது வெறிபிடித்த பிரெஞ்சுப்படை ஓநாய்களால் சூழப்பட்டிருந்தது. 67 நாட்கள் முற்றுகையின் பொழுது இந்தப் புதைகாடுகள் பிரெஞ்சுப் படையின் படை வீடாக இருந்தன. இறந்தவர்களுக்கு மரியாதை தரும் பொருட்டு அழிக்கப்படாமல் விட்டிருந்த இந்தக் கல்லறைகளே எதிரிகளுக்கு ஒரு மறைவிடமாகவும், புகலிடமாகவும் இருப்பதைக் கண்ட பிரிட்டிஷார், அந்த இடத்தை அடியோடு அழிக்கத் தீர்மானித்தார்கள். இந்தக் கல்லறைகள் அழிக்கப்பட்ட போது அதன் முகப்புக் கற்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோட்டையின் உள்ளிருந்த (முன்பு நாம் குறிப்பிட்ட) தேவாலயத்தில் தளமாகப் உபயோகப்படுத்தப்பட்டன. பின்னொரு சமயம் அதே கற்கள் பீரங்கிகளை பொருத்தும் தளம் அமைக்கவும் பயன்பட்டன.

பிரிட்டிஷ்காரர்களின் கல்லறைத் தோட்டம் முற்றிலும் அழிக்கப்பட்ட போதிலும், இரு கல்லறைகள் மட்டும் நினைவுச் சின்னங்களாக இன்னமும் சட்டக்கல்லூரியின் வெளியே காணப்படுகின்றன. அந்தக் கல்லறைகளின் வாசகங்களை இன்னமும் நம்மால் படிக்க முடிகிறது. கடந்த காலத்தின் சுவாரசியமான சம்பவங்களை இந்த நினைவுச் சின்னங்கள் நினைவூட்டி கொண்டிருக்கின்றன. தேவாலயத்தின் கோபுரம் போல கட்டப்பட்ட கல்லறை, பெரும் சோகத்திலாழ்ந்த பெண் ஒருத்தியால் அவளது முதல் கணவருக்காக உருவாக்கப்பட்டது. அதே கல்லறையில் அவளுடைய இரண்டாவது கணவரால் கிடைத்த நான்கு வயது குழந்தையும் புதைக்கப்பட்டது. அவளது முதல் கணவர் ஜோஸப் ஹிம்மர்ஸ் (Joseph Hynmers) ஒரு மூத்த கவுன்சில் உறுப்பினர். அவர் 1680இல் இறந்தார். அவளது இரண்டாவது கணவர் ஏற்கனவே குறிப்பிட்ட மதராஸ் ஆளுனர் எலிஹு ஏல் ஆவார். முதல் கணவர் மறைந்த ஆறு மாத காலங்களில் அவளது மறுமணம் நடைப்பெற்றது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை டேவிட் நான்கு வயதில் இறந்த போது அவளது முதல் கணவரின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டான். இரண்டாவது கல்லறை இதைவிட சுவாரசியமானது. 18ஆம் நூற்றாண்டில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கம்பனி ஊழியத்தில் இருந்த பொழுது இறந்து போனார்கள். பௌனீ (Powney) குடும்பத்தைச் சார்ந்த இறந்து போன பல்வேறு வீரர்களின் சடலங்கள் ஒரே சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன. பல கல்லறைகள் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்ட போது 'பௌனீ' குடும்பத்தைச் சேர்ந்த பலர் இன்னமும் கம்பனி ஊழியத்தில் இருந்ததால் இந்தக் கல்லறை மட்டும் ஒரு நினைவுச் சின்னமாய் நிலைத் திருக்கிறது.

கோட்டை தேவாலயத்தில் தளமாய் புதைக்கப்பட்ட கல்லறை முகப்புக்கற்கள் பெருமளவு ரோமன் கத்தோலிக்கர்களைச் சார்ந்தவையேயாகும். பிரெஞ்சுப் படைகளின் போருக்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட வெள்ளையர்நகரத்து ரோமன் கத்தோலிக்க கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட முகப்புக்கற்களே இவையென நம்பலாம். தேவாலயத்தை சுற்றியுள்ள தளத்தில் அழிக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட முகப்புகற்கள் புதைக்கப்பட்டிருப்பினும், அதில் உள்ள மற்ற சில கல்லறைகள் கம்பனியில் பணிபுரிந்த அதிகாரிகளின் நினைவாக புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. புனித மேரி மாதா தேவாலயத்தில் இருக்கும் பல நினைவுச் சின்னங்கள் சரித்திரப் புகழ் வாய்ந்தவை. நெஞ்சுவரை செதுக்கப்பட்டு நிமிர்ந்து நிற்கும் சிலைகளின் வரலாற்றை அறிய இந்த தேவாலயத்தை மிகவும் உண்ணிப்பாக சுற்றி வரவேண்டும். இருப்பினும் இந்த தேவாலயத்தில் புதைக்கப்பட்ட முதல் நபர் பற்றி தகவல்கள் ஏதும் இல்லை. மிக விசித்திரமான சூழ்நிலையில் இறந்து போன ஆளுனர் பிகாட் பிரபுவின் சமாதியே இந்த ஆலயத்தில் முதன் முதலாக நிறுவப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிகாட் தனது 18வது வயதில் மதராஸுக்கு கும்பனியின் எழுத்தர் பணியில் சேர இங்கிலாந் திலிருந்து வந்து சேர்ந்தான். அவனது அயராத, திறமையான உழைப்பினால் 36வது வயதில் மதராஸின் ஆளுனராக நியமிக்கப்பட்டான். அவனுடைய எட்டாண்டுகால ஆட்சியில் தான் பிரெஞ்சுப் படைத் தளபதி கௌண்ட் லாலி மதராஸை 67 நாட்கள் முற்றுகை இட்டிருந்தான். ஆளுனரான பிகாட்டின் அயராத உழைப்பும், தளராத மன உறுதியும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ஒரு வெற்றிகரமான எதிர்ப்பை உருவாக்கி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கௌண்ட் லாலியிடமிருந்து காப்பாற்றியது. மதராஸின் முன்னேற்றத்திற்காக பல கடும் தொண்டுகள் ஆற்றி தனது 45வது வயதில் ஆளுனர் பதவியை துறந்து இங்கிலாந்து திரும்பியபோது, அவனது உழைப்பிற்கு அடையாளமாய் கிழக்கிந்தியக் கும்பனி ''கடுமையாக உழைத்து பிரிட்டிஷ் பாரம்பரியத்தை காத்தவர்'' என்ற விருதை அளித்தது. இந்த விருதின் மூலம் அவனுக்கு அயர்லேண்டில் சில பண்ணைகள் இனாமாக கிடைத்தன. மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த கவர்னர் பதவியை அவன் உதறியிருந்தால், அவன் தன் இறுதி நாட்களை அயர்லாந்து பண்ணையில் சுகமாய் கழித்திருக்க முடியும். 12 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அவன் முன்பு வகித்த அதே பதவியை திறமையோடு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல! காலங்கள் மாறும் & மாறின & மாறிவிட்டன. அன்று எடுத்த வெற்றிகரமான வழிமுறைகள் மீண்டும் இன்று செல்லுபடி ஆகாது என்றது சரித்திரம், பிரபு பிகாட் இந்த முறை ஆளுனராக பதவியேற்ற போது இருந்த சூழ்நிலை முதலில் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டவை. அவன் முதலில் பதவி வகித்த காலத்தில் அவனுடன் பணியாற்றிய சக நண்பர்கள் அவனுக்கு உதவியாக இருந்தனர். ஆனால் அவன் இரண்டாம் முறை ஒரு வயதான அறிவு முதிர்ந்த ஆளுனராக, மதராஸ் வந்த போது அவன் கீழ் பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கு அவன் ஒரு புதிய நபராகவும், வேற்று நபராகவும் காணப்பட்டான். மேலும் அதுசமயம் சில அலுவலக இடர்பாடுகளும் ஊழியர்களிடையே நிலவியது.

பிகாட் பிரபு தனது பதவியின் இறுதி காலத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, கோபம் மிகுந்தவனாக காணப்பட்டான். அவன் தனது கவுன்சில் உறுப்பினர்களிடம் அடிக்கடி வாதித்து சண்டையிட்டதால் ஆறு ஏழு மாத காலங்களுக்குள் கோட்டை நிர்வாகத்தில் ஒரு நெருக்கடி நிலை உருவாயிற்று. இளமைகாலத்தில் அவனது ஆணைக்கு அனைவரும் கட்டுப் பட்டனர். ஆனால் காலம் மாறியது. இன்றுள்ள இளம் ஊழியர்கள் எதிர்க்குரல் எழுப்பியதால் சில கவுன்சில் உறுப்பினர்களை மட்டுமெல்லாமல் படைத்தளபதியையும் கைது செய்ய உத்தரவிட்டான். ஆனால் அதற்கு மாறாக கவுன்சில் உறுப்பினர்கள் ஆளுனர் பிகாட்டை கைது செய்தனர். இது ஒரு துணிகரமான செயலாக அமைந்தது. ஒரு நாள் மாலை நண்பர்களோடு இரவு விருந்துண்ண சென்ற போது அவன் கைது செய்யப்பட்டான்.

அவன் செயின்ட்தாமஸ் மவுண்டில் உள்ள ஒரு வீட்டில் கைதியாக சிறை வைக்கப்பட்டான். ஏறக்குறைய ஒன்பது மாத காலம் அவன் சிறைப்பட்டிருந்த சமயம், வெற்றியடைந்த கவுன்சிலர்கள் தங்கள் செயல்பாட்டை கும்பனியிலிருந்த நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தினர். பிகாட்பிரபு நோய் வாய்ப்பட்ட போது அவன் அரசுமாளிகைக்கு மாற்றப்பட்டு அங்கேயே மரணமடைந்தான். சில அரசு குறிப்புகளின் படி அவனது சடலம் அரசு மரியாதைகளுடன் முதன் முதலாக கோட்டையிலுள்ள புனித மேரி மாதா தேவாலயத்தில் புதைக்கப்பட்ட போதும் அவனது நினைவாக கல்லறை எதுவும் கட்டப்படவில்லை. அவனது உடல் புதைக்கப்பட்ட இடம் இதுதான் எனக் கூறப்பட்டாலும் அது ஒரு யூகமே. கோட்டையிலுள்ள மேரி மாதா தேவாலயம் 250 ஆண்டுகளுக்கு உட்பட்டதேயாகும். இருப்பினும் இங்கிலாந்திலுள்ள நூற்றுக் கணக்கான கருஞ்சுவர்களாலும், பச்சை நிற கொடிகளாலும் சூழப்பட்ட பழமைவாய்ந்த தேவாலயங்களைவிட இது கவர்ச்சியற்றதாகவே காட்சியளிக்கிறது. இருந்தும் இந்த ஆலயம் புகழுக்கும் பெருமைக்கும் உரியதாகவே இருந்தது.

ஆங்கிலேயரின் திறமையான நிர்வாகத்தாலும் இந்தியர்களின் ஒத்துழைப்பாலும் உருவாக்கப்பட்ட மதராஸ் நகரம் மிகவும் சரித்திர புகழ்பெற்ற நகரமாகும். இந்நகர கோட்டையில் அமைந்த புனித மேரி மாதா தேவாலயம் மிகப் பழமையானது என்றாலும் இதுவே மதராஸ் நகர வளர்ச்சியின் முதல் அத்தியாயமாகத் திகழ்கிறது. இங்கிலாந்து மக்கள் கூட்டம் கூட்டமாய் மங்கிய நிலவொளியில் சுகமாய் சுற்றி வருவதற்கேற்ப அமைந்துள்ள இங்கிலாந்தின் மெல்ரோஸ் அபே (Melrose Abbey) தேவாலயம் போல் கவர்ச்சிகரமாக அமையாவிட்டாலும் புனித மேரிமாதா தேவாலயத்தையும் அங்குள்ள கல்லறைகளையும் நினைவாலயங்களையும் பகல் நேரங்களில் சுற்றிப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவமே.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.