Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

மதராஸ் ஒரு குட்டிநகரமல்ல

சுமார் 300 வருடங்களுக்கு மேற்படாத காலத்தில், பிரிட்டிஷ் கம்பனியைச் சார்ந்த ப்ரான்சிஸ் டே தங்கள் வியாபாரத்தை பெருக்க ஒரு தகுதியான இடத்தை ஆய்வு செய்ய வந்த போது, வங்கக்கடலும், அவ்வளவாக புகழோ உபயோகமோ இல்லாதிருந்த கூவம் நதியும் சங்கமிக்கும் முகதுவாரத்தில் பரந்து கிடந்த இந்த நிலப்பரப்பைப் பார்த்தவுடன் இந்த இடம்தான் தாங்கள் காலூன்ற சரியான இடமென்று நிர்ணயித்தான். அவன் நினைத்தது பொய்யாக வில்லை.

வங்கக் கடற்கரையில் ஆங்காங்கே அமைந்திருந்த சிறு சிறு குடிசைகளுக்கு வந்து போகும் மனிதர்கள் மீன் பிடிக்க உதவும் கட்டு மரங்கள், காதலனைக் கண்ட காதலிபோல் ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகள், பரபரவென அங்குமிங்கும் ஓடும் சிறு சிறு நண்டுகள் இவைகளைத் தவிர வேறு எந்த சந்தடியும் அங்கு அப்போது காணப்படவில்லை .

காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆரவாரம் மிகுந்த நாட்கள் - மயான அமைதியைத் தழுவிய நாட்கள்; வாட்களின் ஓசையும் பீரங்கிகளின் வெடிச் சத்தமும் நாள் முழுவதும் கேட்ட நாட்கள் - அது அல்லாத அமைதியான நாட்கள் இப்படி எத்தனையோ நாட்களை உள்ளடக்கிய வருடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சென்ற காலத்தில் மதராஸ் ஒரு பெரிய மாறுதலுக்கு உள்ளானது.

ஆங்காங்கே கடற்கரையை ஒட்டி சிதறுண்டு இருந்த சிறு சிறு குடிசைகள் மறைந்து விண்ணைத் தொடும் வானுயர கட்டிடங்கள் வளர்ந்துள்ளன. அதற்குப் பின்னால் புற்றீசல் போல் உருவான நகரம் மேலும் மேலும், வளர்ந்து கொண்டே இருக்கிறது. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பதமாகிப் போன பெரிய கட்டுமரங்கள் மட்டும் இன்னமும் காணாமல் போகாமல் தங்களை நவீனப்படுத்திக் கொண்டுள்ளன. பல பெரிய மற்றும் சிறிய கப்பல்கள் அடிக்கடி மெரினா கடற்கரை அருகே உலவிக் கொண்டிருக்க, அருகிலுள்ள துறைமுகத்தில் இன்னும் பல கப்பல்கள் நின்று கொண்டு இருக்கின்றன. கோட்டையில் அன்று சிறிய அளவில் ஆரம்பித்த பண்டகசாலை என அழைக்கப்பட்ட கும்பனியின் அலுவலகம் இன்று இல்லை . அதற்குப் பதிலாக நகரத்தின் பல பகுதிகளில் பெரிய பெரிய அலுவலகங்களும், வியாபார ஸ்தலங்களும் பரவியுள்ளன. ஆங்காங்கே சிறிய - பெரிய, எந்நேரமும் புகையை கக்கும் புகைக் கூண்டுகளோடு நாள் முழுவதும் சுழன்று ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் சக்கரங்களை உள்ளடக்கிய பல தொழிற்சாலைகள் நிரம்பியுள்ளன.

மதராஸின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு பிரிட்டிஷ்காரர்களின் சக்தி, உழைப்பு மற்றும் விடாமுயற்சி மட்டும் காரணமில்லை. வந்தவர்களை வரவேற்று, அவர்களை மனதார ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு இந்தியர்கள் அளித்த ஒத்துழைப்பும் ஒரு காரணமாகும்.

இந்தியாவைச்சார்ந்த, சக்தியும் திறமையும் வாய்ந்த, மக்களின் பங்கும் மதராஸின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என அறியும் போது நம்மிடையே ஒரு மனநிறைவு நிச்சயம் உண்டாகும்.

இயற்கையாய் அமைந்த துறைமுகம் இல்லாமை, எப்போதும் கொந்தளிக்கும் வங்கக் கடலலைகள், அவ்வளவாக உபயோகமில்லாத கடலில் வந்து கலக்கும் கூவம் நதி, மற்ற முக்கிய நகரங்களுக்கும் மதராஸுக்கும் இடையே இருந்த தூரத்தின் தொலைவு, அடிப்படை வியாபார எதிரிகளான போர்ச்சுகீசியர்கள் வணிகத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வதற்காக மதராஸின் அருகிலுள்ள மைலாப்பூரில் ஆங்கிலேயர்களுக்கு முன்பே கூடாரம் அமைத்தது போன்ற பல்வேறு சாதகமில்லாத சூழ்நிலைகள் இருந்தும் மதராஸ் இன்று ஏறக்குறைய ஐந்து லட்சம் மக்கள் வசிக்கும் ஒரு முக்கிய நகரமாக உள்ளது.

அதன் தொழில் வளமும் வணிக வளமும் நாளுக்கு நாள் இமாலய வெற்றியை எதிர் நோக்கி வளர்ந்து கொண்டே இருப்பதால் அதன் ஜனத்தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மதராஸின் ஜனத் தொகை பெருகப் பெருக மக்களுக்கு தேவையான வீடுகள் ஆங்காங்கே கட்டப்பட்டன. ஆனாலும் மக்களின் தேவை மேலும் மேலும் அதிகரிக்கவே புதிய புறநகர் பகுதிகள் உருவாகி கொண்டேயிருக்கின்றன. மதராஸில் ஏற்கனவே இருந்த பரந்த தோட்டங்களுடன் கூடிய வீடுகள், வீடும் தோட்டமும் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவைகள் வீடுகட்டும் மனைகளாக மாற்றப்பட்டன. ஒருவருக்கு சொந்தமாக இருந்த பரந்த இடம் இன்று இரண்டு அல்லது மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி வீடுகள் உதயமாயின. சந்தடி மிகுந்த, குறுக்கும் நெடுக்குமான சிறு, சிறு தெருக்களைக் கொண்ட ஒரு சில பேட்டைகளைத் தவிர மதராஸ் பொதுவாக ஜனத்தொகை மிக்க நகரமல்ல. எனவே அதிக அளவில் வீடுகள் ஆங்காங்கே தோன்றினாலும் இங்கு இன்னமும் விசாலமான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு காலத்தில் மதராஸ் ''தொலைதூர நகரம்'' என்று அழைக்கப்பட்டது. ஒரு பேட்டையிலிருந்து இன்னொரு பேட்டைக்குச் செல்ல நெடுந்தூரம் கடக்க வேண்டியிருந்தது. இதன் எல்லைக்குள் இன்னமும் பரந்து விரிந்த காலி இடங்கள் உள்ளன. பல தோட்ட வீடுகள் மாலைப் பொழுதுகளை மக்கள் நிம்மதியாக கழிக்க தக்கவாறு இன்னமும் ஒரு கிராமிய சூழ்நிலையில் உள்ளன.

மற்ற நகரங்களைப் போலவே மதராஸும் அழுக்கும் அசுத்தமும் நிறைந்த வீதிகளையும், வீடுகளையும், குறுக்கும் நெடுக்குமான சந்தடி மிகுந்த தெருக்கள் அடங்கிய பேட்டைகளையும் கொண்டிருக்கிறது. பணத்திற்கு உடலை விற்கும் கணிகையர் கூட்டம் நிறைந்த பகுதிகளும் ஆங்காங்கே பரவியிருக்கின்றன.

இந்த நகரம் ஒரு திட்டமோ வரைபடமோ தீட்டி உருவாக்கப்பட்டதல்ல. அந்தக்கால ரோமாபுரியைப் போல வந்தவர்களை வரவேற்கக்கூடிய ஒரு நகரமாய் ஜொலிக்கின்றது. அனைவரும் உரிமையோடு வாழ சகல வசதிகளுடனும் இடம் கொடுக்கின்றது.

ஒரு காட்டு மரம் போல மனம் போன போக்கில் வளர்ந்துள்ளது. இந்த தாறுமாறான பூதாகர வளர்ச்சியை சிலர் விமர்சிக்கக்கூடும். ஆனாலும் மதராஸ் பல பிரம்மாண்டமான அழகிய அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை உள்ளடக்கியுள்ளது. இன்னமும் விரிவாக்கத்தை தாங்கக் கூடிய அளவிற்கு விரிந்து பரந்த நிலப்பரப்புடன் அழகிய நீண்ட உலகப் புகழ் பெற்ற மெரினா கடற்கரையுடன் ஒரு வசீகர நகரமாக காட்சியளிக்கிறது.

மதராஸின் அழகு, இவற்றையெல்லாம்விட, அதன் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத சரித்திரத்தில் தான் உள்ளது. அக்காலத்தில் பிரிந்து கிடந்த இந்தியாவில் ஆங்காங்கே இருந்த சிற்றரசர்களின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களின் புதிய இந்திய சாம் ராஜ்யத்திற்கு இங்குதான் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. இதன் சரித்திரம் ரத்தம் சிந்தும் யுத்த களங்களால் உருவானது அல்ல. இங்கு குடியேறிய மக்கள் மென்மையான வியாபாரிகள். அவர்களது ஆயுதம் மயிலிறகாலான எழுதுகோலன்றி போர் வாட்கள் அல்ல. அவர்களது அன்றைய ஒரே குறிக்கோள் தங்கள் வியாபாரத்தை அமைதியாகவும் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் செயல்படுத்துவது என்பதுதான். இந்த மாநகர வளர்ச்சிக்கு குறுக்கீடாக அவ்வப்போது சூதும் தந்திரமும் நிறைந்த பிரெஞ்சுக்காரர்கள் போன்ற அரசியல் எதிரிகளும், வியாபார எதிரிகளான போர்ச்சகீசியர்களும், டச்சுர்காரர்களும், இந்திய சிற்றரசர்களான மைசூர், கோல் கொண்டா சுல்தான்கள், ஹைதராபாத் நிஜாம் போன்றவர் களின் எதிர்ப்பும் தாக்குதலும் தொடர்ந்து இருந்து வந்தன. இதனால் மதராஸ் எப்போதும் ஒரு புயலின் மையப் பகுதியை போலவே பரபரப்புடன் இருந்தது. இங்கு அடிக்கடி எழுந்த புயல் சற்று பலமானதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. இந்தப் புயலால் மட்டுமல்லாமல் இயற்கை அன்னையின் சாபமாய் ஏற்கனவே ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட வங்கக் கடலில் அசுரத்தனமாய் அவ்வப்போது வீசிய புயலாலும்கூட இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இங்கு வாழ்ந்த வியாபாரிகள் எதிரிகளின் தாக்குதலை அடிக்கடி சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் செய்த செயல்கள் சில சமயங்களில் கண்டிக்கத்தத்கதாய் இருந்தன. இந்தக் குறைபாடு மனித இனத்திற்கே சொந்தமானதுதான். இதை நீக்கிவிட்டுப் பார்த்தால் மதராஸின் சரித்திரம் மகத்தான சந்ததிகள் வளர்த்த மகோன்னத சரித்திரம் என்பதை, இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் எண்ணி பெருமை கொள்ளலாம்.

மதராஸ் படிப்படியாய், மெல்ல மெல்ல வளர்ந்த நகரம். இதன் கதையை கேட்கும் நமக்கு உற்சாகமும் உத்வேகமும் நிச்சயம் பிறக்கும். இருப்பினும், இந்தக்கதை முழுமையானது அல்ல. வெறும் சுவாரசியமான சில பகுதிகளை மட்டும் உள்ளடக்கியது. இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் மதராஸின் கதை ஒரு சிறிய நகரத்தின் கதை அல்ல என்பதை உணர்ந்தால் இக்கதை எழுதியதின் நோக்கம் நிறைவேறும்.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.