ஆங்கிலேயர்கள் விலைக்கு வாங்கிய மதராஸின் சிறிய நிலப்பரப்பில் அவர்கள் காலடி எடுத்து வைத்த போது, போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தில் அதன் அருகாமையிலிருந்த "சாந்தோம்" (Santhome) கிராமத்தில் ரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் நிறைந்திருந்தன. ஆனால் பிரான்சிஸ் டே கும்பனிக்காக விலை கொடுத்து வாங்கிய மதராஸில் அத்தகைய கிருத்தவ தேவாலயங்கள் ஏதுமில்லை. கும்பனியின் அழைப்பையேற்று அநேக போர்ச்சுகீசியர்களும் மதம் மாறிய கிருத்தவர் களும் கும்பனியால் கட்டப்பட்ட வெள்ளையர்நகரத்தில் குடியமர்ந்தனர். அவர்களுக்கான இறைப்பணிகள் சாந்தோமில் இருந்த பாதிரியார்களின் ஒத்துழைப்புடனே நடக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்ட ஒரு வருட காலத்திற்குள்ளாகவே போர்ச்சுகீசிய மதவாதிகள் கோட்டைக்கு வெளியே தேவாலயம் ஒன்றை உருவாக்கினார்கள். இது இன்றும் ஜார்ஜ் டவுனிலுள்ள 'போர்ச்சுகீசிய தெரு" என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. எனவே இது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற இடமாகும்.
மதராஸில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கும் சாந்தோமிலிருந்த போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே ஒரு விரோத போக்கு காணப்பட்டது. இந்நிலையில் மதராஸில் குடியேறிய மக்களுக்கு போர்ச்சுகீசிய மதகுருமார்கள் நடத்தி வந்த இறைபணிகளை கும்பனி நிர்வாகம் அவ்வளவாக ஆதரிக்கவில்லை. பிரான்சிஸ் டே மதராஸ் நகரை வாங்கியதை மைலாப்பூரிலிருந்த போர்ச்சுகீசியர்கள் வரவேற்றாலும் பின்னாளில் அவர்களுக்குள் ஒரு விரோத மனப்பான்மை உருவாகி வளர்ந்தது. ஒரு காலத்தில் ஆங்கிலேயரின் வரவு தங்களது கரங்களை பலப்படுத்தி அதுவே டச்சுக்காரர்களை பணிய வைக்கும் என போர்ச்சுகீசியர்கள் நம்பினார்கள். பின்னாளில் வியாபாரத்திற்காக பிரான்சிஸ் டே வாங்கிய மதராஸ் நகரம் மிக விரைவாக முன்னேற, அதன் காரணமாய் போர்ச்சுகீசியர்களுக்கு கும்பனி யாரிடம் பொறாமையும் கருத்து வேற்றுமையும் உருவாகியது. இவ்வாறு விரோதம் வளர்ந்ததால் கும்பனி நிர்வாகிகள் வெள்ளையர்நகரில் குடியேறிய மக்களுக்கு போர்ச்சுகீசிய குருமார்கள் இறைப்பணியில் உதவுவதை அடியோடு வெறுத்தனர்.
1642ஆம் ஆண்டு மதராஸ் உருவான மூன்றாவது ஆண்டில் பாதிரியார் எப்ரைம் (Ephraim) என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த மதகுரு எதேச்சையாக மதராஸ் வந்து சேர்ந்தார். அவர் பாரிசிலிருந்து பெகு (Pegu) என்ற இடத்திற்கு இறைபணியாற்ற அனுப்பப்பட்டார். இந்தியாவில் சூரத் நகரிலிருந்து மசூலிப்பட்டணம் வரை பயணித்து அங்கிருந்து கும்பனியின் கப்பல் மூலம் பெகுவை அடைய அவருக்கு ஆணையிடப்பட்டிருந்தது. இருப்பினும் அவருக்கு இந்த தகவல் தாமதமாகக் கிடைத்தது. மேலும் மசூலிப்பட்டணத்திலிருந்து பெகுவுக்கு புறப்பட வேண்டிய கப்பல்கள் மதராஸிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்ததால் அவர் தனது பயணத்தை மசூலிப்பட்டணத்திலிருந்து தெற்கு முகமாய் பயணித்து புதிதாய் கும்பனியால் உருவாக்கப்பட்ட மதராஸை வந்து சேர்ந்தார். பெகுவுக்கு செல்ல வேண்டிய கப்பல் உடனடியாக இல்லாததால் எப்ரைம் பாதிரியார் சில காலம் மதராஸில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அந்த குறுகிய காலத்தைக்கூட வீணாக்க விரும்பாத எப்ரைம் பாதிரியார் அங்கிருந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்கு இறைபணியாற்றினார். அரசு மற்றும் இதர ஆவணங்களின் படி எப்ரைம் ஒரு தகுதி வாய்ந்த சிறந்த மதகுரு ஆவார். மேலும் இவர் மக்கள் மதிக்கத்தக்க கிருத்தவராய் இருந்ததோடு, பன்மொழிகளில் சரளமாக உரையாடவும் வல்லமை பெற்றிருந்தார். பிரெஞ்சு மொழி ஆங்கிலம், போர்ச்சுகீசிய மற்றும் டச்சு மொழிகளில் இவருக்கு பரிச்சயம் இருந்தது. இவருக்கு பெர்சிய மற்றும் அரேபிய மொழிகளிலும் உரையாடத் தெரிந்திருந்தது. மேலும் பிரெஞ்சுக்காரர்கள் இயற்கையிலேயே மற்றவர்களை எளிதில் தங்களது ஆற்றலால் கவரக் கூடியவர்கள் என்பதால் அவருடைய சுமுகமான உரையாடல்கள் மூலம் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றார்.
மதராஸில் குடியேறிய போர்ச்சுகீசிய ரோமன் கத்தோலிக்கர்களுக்கு போர்ச்சுகீசிய மதகுருமார்கள் இறைப்பணி ஆற்றுவதை கும்பனி நிர்வாகத்தினர் விரும்பாத நிலையில், எப்ரைம் பாதிரியாரிடம் மதராஸிலேயே தங்கி மக்களுக்கு இறைப்பணியாற்றி உதவ வேண்டுமென கும்பனியார் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற கும்பனி ஆளுனரும், பிரெஞ்சுப் பாதிரியாரான எப்ரைமை இங்கு தங்க அனுமதித்ததோடு அவருக்கு தேவையான வசதிகளையும் அத்துடன் ஒரு தேவாலயம் கட்டத் தேவையான இடத்தையும் தர சம்மதித்தார். இதை பிரெஞ்சுப் பாதிரியார் விரும்பினாலும், பிரெஞ்சு அரசின் கட்டளைப்படி 'பெகு" நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்ததாலும் மதராஸின் தேவாலய நிர்வாகம் சாந்தோம் பிஷப்பின் கீழ் இருந்ததாலும், தன்னைவிட போர்ச்சுகீசிய பாதிரிமார்கள் இறைப்பணியாற்றுவதையே அவர்கள் விரும்புவார்கள் என்றெண்ணி சற்றே தயங்கினார். கும்பனி தனது செல்வாக்கினால் பாரிஸில் இருந்த உயர்மட்ட நிர்வாகிகளை அணுகி எப்ரைம் பாதிரியார் மதராஸிலேயே மக்களுக்கு இறைப்பணியாற்ற வேண்டும் என்ற விருப்பதைத் தெரிவித்தது. அத்துடன் கும்பனி இத்தாலியில் ரோம் நகரத்தில் இருந்த போப் ஆண்டவரை அணுகி பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த மதராஸ் தேவாலய நிர்வாகம் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திலிருந்த சாந்தோம் நிர்வாகத்திடமிருந்து தனிப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தது. அதற்குத்தக்கபடி போப் ஆண்டவர் தக்க ஆணைகளைப் பிறப்பித்தார். இதன் காரணமாக கோட்டைக்கு வெளியிலிருந்த வெள்ளையர் நகரத்தில் புனித ஆண்ட்ரூவுக்கு ஒரு தேவாலயம் கட்டவும், பாதிரியார் தங்கவும் தகுந்த இடத்தை கும்பனியார் ஏற்பாடு செய்தனர். அந்த ஆலயம் தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ளது. பல ஆண்டுகள் இந்த ஒரு தேவாலயமே ஆங்கில குடியிருப்பில் இருந்து வந்தது.
பிரெஞ்சுப் பாதிரியாரின் வருகையாலும் ரோம் நகரத்து தலையீட்டாலும் இறைப்பணிப் பிரிக்கப்பட்ட இந்த நிலையை சகித்துக் கொள்ள முடியாத போர்ச்சுகீசிய மதகுருமார்கள் எப்ரைம் பாதிரியாரை ஒரு ஆலய நிர்வாகக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்து அங்கே அவரை கைவிலங்கிட்டு விசாரணைக்காக கோவாவிற்குக் கொண்டுச் சென்றனர். அங்கு விசாரணையின்பேரில் சிறையிலுமடைத்தனர். அவரை விடுவிக்க மதராஸ் ஆளுனர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே அவர் விடுதலை செய்யப்பட்டு மதராஸுக்கு அனுப்பப்பட்டார்.
அதன் பின் எப்ரைம் பாதிரியார் புனித ஆண்ட்ரூ தேவாலயத்தை பெரிய அளவில் புனர் நிர்மாணம் செய்து அதன் திறப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார். அதுசமயம் இதைச் சற்றும் விரும்பாத கோட்டையிலிருந்த பிராடஸ்டென்ட் பிரிவைச் சார்ந்த மாஸ்டர் பாட்ரிக் வார்னர், (Master Patrick Warmmer) ( இங்கிலாந்தில் உள்ள நிர்வாகிகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினான். அதில் ஆளுனராயிருந்த லாங்க் ஹார்ன் (Longhon) என்பவர் இந்த ஆலயத்திறப்பு விழாவின் போது பீரங்கி குண்டுகளை முழங்கச் செய்ததையும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து துப்பாக்கி மரியாதை செலுத்தியதையும் ஒரு புகாராக அனுப்பினான்.
எப்ரைம் பாதிரியார் முன்பிருந்த பழைய கருப்பர் நகரத்தில் கட்டிய தேவாலயம் ஒன்று இன்றைய உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. எப்ரைம் பாதிரியாருக்கு வேலை பளு அதிகரித்ததின் காரணமாய், புதியவிதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிரான்சிஸ்கன் மதகுரு (Capuchin) ஒருவர் அவருக்கு உதவி செய்ய வந்து சேர்ந்தார். எனவே கருப்பர் நகர தேவாலயத்தில் பணிகளைத் தொடர நிரந்தரமாக ஒரு பாதிரியார் இருந்து வந்தார்.
சுமார் 50 வருடங்களுக்கு மேலாக மதராஸில் தன்னலமற்ற சேவை புரிந்து தன்னையே தேவாலயப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட எப்ரைம் பாதிரியார் வயோதிகத்தின் காரணத்தால் மரணமடைந்தார். ஒரு நல்ல, தூய, தியாக உள்ளம் கொண்ட பாதிரியாரை இழந்தது கருப்பர்நகர மக்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவர் இறந்த சில வருடங்களுக்குப் பிறகு புனித ஆண்ட்ரூ தேவாலயம் மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. அதன் உயரமான கோபுரத்தில் ஆலயமணி ஒன்றும் பொருத்தப்பட்டு அந்த ஆலயத்தைச் சுற்றி ஒரு திறந்தவெளி பூங்காவும் அமைக்கப்பட்டது.
முத்தியால்பேட்டை அருகில் இருந்த ஒரு போர்ச்சுகீசிய கல்லறை ஆர்மேனியன் தெருவிலிருந்த ரோமன் கத்தோலிக்க ஆலயத்திற்கும் அதைச் சார்ந்த கட்டிடங்களுக்கும் இடையில் ஒரு மதில்சுவர்போல் மாறியது. அதனுள்ளே ஒரு சிறிய தேவாலயமும் உருவாயிற்று. போர்ச்சுக்கீசியர்களின் கல்லறை வெளிக்கு அருகிலேயே ஆர்மேனியர்களின் கல்லறைவெளியும் இருந்தது. அங்கு ஆர்மேனியர்களுக்கான ஒரு பிரார்த்தனைக் கூடமும் இருந்தது. ஆர்மேனியன் தெருவுக்கு அந்தப் பெயரை அளித்தது இந்த கல்லறைவெளிதான்.
பிரெஞ்சுப்படைகள் மதராஸை கைப்பற்றிய காலத்தில் பிரெஞ்சு பாதிரிமார்கள் மூலம்தான் பாரிஸுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன என சில கும்பனியார் குற்றம் சாட்டினர். மூன்று வருடங்களுக்குப் பிறகு மதராஸ் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தபோது, அந்தக் குற்றச்சாட்டின் காரணமாக, புனித ஆண்ட்ரூ தேவாலயத்தை பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆளுனர் கைப்பற்றினார். கும்பனி பிரதிநிதிகள் கைப்பற்றப்பட்ட தேவாலயத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இங்கிலாந்திலிருந்த நிர்வாகிகளை வினவ, அவர்கள் போர்ச்சுகீசியர்களால் உருவாக்கப்பட்ட வெள்ளையர்நகரத்து தேவாலயங்களை உடனடியாக தகர்க்க ஆணையிட்டனர். அந்த ஆணையின் படி போர்ச்சுகீசியர்களின் ஆலயமும் வேப்பேரியிருந்த ஒரு ரோமன் கத்தோலிக்கர் தேவாலயமும் தகர்க்கப்பட்டன.
கருப்பர்நகரத்திலிருந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமும் நகரத்தின் பெரும்பகுதியும் ஏற்கனவே பிரெஞ்சுப்படைகளால் அழிக்கப்பட்டிருந்தன. மற்றொரு ஆணைப்படி மதராஸில் இருந்த கும்பனியின் பிரதிநிதிகள் அவர்கள் எல்லைக்குள் புதிதாக ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் எழும்பாமலும், அந்தப் பகுதிகள் வளர்ச்சியடையாமலும், அந்த இன மத குருமார்கள் தேவாலய பணிகளைத் தொடராமலும் தடுக்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக மதராஸில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவு பூண்டோடு அழிக்கப்பட்டது.
25 வருடங்களுக்குப் பிறகு பிரெஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் பல்வேறு யுத்தங்களில் தோற்கடித்து பாண்டிச்சேரியைக் கைப்பற்றி அங்குள்ள கோட்டை கொத்தலங்களை அழித்தனர். இதன் காரணமாய் இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கதின் புகழ் மங்கத் தொடங்கியது. பிரெஞ்சுப் படைகளின் அபாயம் நீங்கியபின் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு மதகுருமார்கள் மேலிருந்த கெடுபிடிகளைத் தளத்தினர். சில வருடங்களுக்குப் பிறகு இறைபணியாற்றிய கபூசின் எனப்படும் பாதிரிமார்களுக்கு, வேப்பேரி மற்றும் வெள்ளைநகரத்து தேவாலயங்களை இடித்ததற்கு இழப்பீடாக ரூ.50,000/- வழங்கினர். அந்தப் பணத்தில் கபூசின் மதகுருக்கள் மீண்டும் ஓர் புதிய தேவாலயத்தை நிர்மாணித்தனர். 1775இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேவாலயம்தான் இன்று ரோமன் கத்தோலிக்க தேவாலயமாக ஆர்மேனியன் தெருவில் திகழ்கிறது. ஆனால் அந்த தேவாலயத்தின் வெளிப்புற வாயிலிலுள்ள ஒரு கல்லில் தேவாலயம் உருவான வருடம் 1642 என்று பொறிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில்தான் ரோமன் கத்தோலிக்கர்களின் கல்லறைத்தோட்டத்தை நிர்மாணிக்கத் தேவையான நிலத்தை கும்பனியார் மானியமாகக் கொடுத்தார்கள். அதே இடத்தில்தான் எப்ரைம் பாதிரியார் தனது இறைப்பணிகளைத் துவக்கினார். எனவே இது தேவாலயம் கட்டப்பட்ட வருடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கபூசின் மதகுருக்கள் மதராஸில் 1832 வரை ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் மத சம்பந்தமான பணிகளை நிர்வகித்து வந்தனர். அந்த வருடத்தில்தான் நிர்வாகத்தின் ஆட்சிக்குட்பட்ட எல்லைகளை தீர்மானிக்கும் தேவாலய நிர்வாகிகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாகியது.
இந்த நூலின் முன்பகுதிகளில் ஆங்கிலேயர்கள் மதராஸை வாங்குவதற்கு முன்பே மைலாப்பூரில் இருந்த கிருத்தவ ஆலயங்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் கிடைத்த தகவல்களின்படி ஏசு கிருஸ்துவின் முக்கிய சீடரான செயின்ட் தாமஸ், தனது கீழைநாடுகளின் பயணத்தின்போது பல்வேறு இடங்களில் மதப்பிரசாரம் செய்துள்ளாரென்றும், இறுதியில் அவர் தென்னிந்தியாவின் மிகப்பழமையான இந்துக்களின் தலமான மைலாப்பூரில் தங்கிய காலத்தில் பெரும்பாலான இந்துக்களை மதம் மாறச் செய்தார் எனவும் அறிய முடிகிறது. இந்த மதமாற்றத்தைத் தாங்க முடியாத இந்துமதவாதிகள் அந்த கிருத்தவ மத போதகரின் உயிருக்குக் குறி வைத்தார்கள். இதன் காரணமாக செயின்ட் தாமஸ், மதராஸ் அருகில் உள்ள தற்சமயம் "சின்னமலை" (Little Mount) என்று அறியப்படும் ஒரு குன்றிலிருந்த குகையில் மறைந்து வாழ்ந்தார் என்றும், அது போது அவருக்கு பறவைகள் உணவளித்தாகவும், அவர்தாகத்தைத் தணிக்க குகைக்குள் அற்புதமான ஒரு நீரூற்று உருவானது என்றும் சொல்லப்படுகிறது. அந்த குகையை விட்டு விரட்டப்பட்ட தாமஸ் சின்னமலைக்கு ஒரு மைல் தூரத்திலிருந்த இன்று செயின்ட்தாமஸ் மலை என்றழைக்கப்படும் மலைக்குச் சென்று தங்கியிருந்த போது ஈட்டியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அன்னாரின் புனித சடலம் மைலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது. சின்னமலையில் தற்போது இருக்கும் தேவாலயத்தில் உள்ள குகையில் புனித தாமஸ் மறைந்து வாழ்ந்து வந்தார் எனவும் நம்பப்படுகிறது.
மைலாப்பூரிலுள்ள கதீட்ரலின் முக்கியப் பகுதியில் அவரது சடலம் ஒரு சலவைக்கல் சமாதிக்கு அடியில் புதைக்கப் பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது.
16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மைலாப்பூர் வந்த போர்ச்சுகீசியர்கள் அங்கு சிதைந்து கிடந்த ஒரு பழைய தேவாலயத்தின் மேல் புதிதாய் ஒரு ஆலயம் அமைத்து அதனுள் செயின்ட் தாமஸின் சமாதியை உள்ளடக்கினர். இந்தப் புதிய தேவாலயமே சாந்தோம் கதீட்ரல் என்று அழைக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக் கட்டிடம் 1893ல் இடித்துத் தள்ளப்பட்டது. பிறகு அந்த இடத்தில் (Gothic) கூர்மாட சிற்பப்பாணியில் கட்டப்பட்ட ஒரு அழகிய தேவாலயம் தற்போது காணப்படுகிறது. மைலாப்பூர் மதராஸின் ஒரு புறவெளிப் பகுதியாய் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தாலும் அங்குள்ள தேவாலயத்தை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளை நியமிக்கும் உரிமை போர்ச்சுகீசியர் வசம் இருந்து வந்ததால் அதே பழக்கம் இன்றும் நீடிக்கிறது--
மைலாப்பூருக்கென்று ஒரு தனி சரித்திரம் இருந்து வந்துள்ளது. மதராஸின் சரித்திரம் உருவாவதற்கு முன்பே மைலாப்பூரின் சரித்திரம் உருவானது. அந்த புகழ்மிக்க சரித்திரத்தைப் குறித்து சில செய்திகள் சொல்வது மிகையாகாது. மைலாப்பூரும் மதராஸும் பழமையும் புதுமையும் அருகருகே இருப்பது போன்ற ஒரு அற்புதமான அமைப்பாகும். மைலாப்பூர் அல்லது ''மெலியாப்பூர்'' என்றழைக்கப்பட்ட "மயில் நகரம்'', இந்துக்களின் புராதன நகரமாய் 20 நூற்றாண்டுகளுக்கு முன்னமே உருவானதாகும். ஆனால் மதராஸோ ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டநகரமாகும். இந்த மைலாப்பூரில்தான் உலகப் பொதுமறையான திருக்குறளைப் படைத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் அவதரித்தார். இந்த இடத்தில்தான் வைணவ சமூகத்தைச் சார்ந்த பன்னிரு ஆழ்வார்களில் மூத்தவரான பேயாழ்வார் அவதரித்தார். இங்குதான் சைவத் திருமுறைகளைச் சார்ந்த அப்பர், திருஞானசம்பந்தர் மற்றும் சில சிவனடியார்கள் தேவாரம் போன்ற பல பதிகங்களைப் பாடினர். இந்த மைலாப்பூரில்தான் புனித தாமஸின் சடலம் புதைக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படுகிறது. இந்த இடத்தில்தான் மஸ்தான் எனப்படும் ஒரு மகமதிய கவிஞர் வாழ்ந்து பல கவிதைகள் படைத்து மறைந்தார். இத்தகைய பன்மிகு பெருமைகளை உள்ளடக்கிய மைலாப்பூர் மதராஸை விட பழமை வாய்ந்தது என்றாலும் அதற்குண்டான விஞ்ஞான பூர்வ அடிப்படை ஆதாரங்கள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.
மதராஸின் மைலாப்பூர் தேவாலய நிர்வாகத்தில் (டயோசிஸ்) அடங்கிய பல்வேறு கிருத்தவ ஆலயங்கள் குறிப்பாக லஸ் (Luz) தேவாலயம், சாந்தோமிலுள்ள மெட்ரே - டே - டியூஸ் (Madre-De-Deius), தேவாலயம், மைலாப்பூருக்கும் சைதாப்பேட்டைக்கும் இடையில் அமைந்த அடைக்கல மாதாக் கோவில், சின்ன மலை தேவாலயம் மற்றும் செயின்ட் தாமஸ் மலையில் உள்ள தேவாலயம் அனைத்தும் 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் கட்டப்பட்டவைகளாகும். ஆனாலும் கடைசியாகச் சொல்லப்பட்ட செயின்ட் தாமஸ் தேவாலயம் போர்ச்சுகீசியர்கள் வருகைக்கு முன்பிருந்த ஒரு பழைய தேவாலயத்தைப் புதுப்பித்துக உருவாக்கப்பட்டதாகும்.
மதராஸ் பட்டணத்தின் பெயர் மைலாப்பூரில் இருந்த ஒரு ஆலயத்தின் பெயரின்திரிபே என்று ஒரு சிலர் கூறுவது சற்று விந்தையான செய்தியே, பிரான்சிஸ் டேயால் வாங்கப்பட்ட மதராஸ், ஒரு மீனவ குப்பமாக இருந்தாலும் அங்கு குடியேற்றப்பட்ட மீனவர்கள் வணங்கி வந்த தேவாலயத்தின் பெயரான மேட்ரே - டே - டியூஸ் (Madre-De-Deius) என்ற பெயரில் தங்கள் குப்பத்தை அழைத்து வந்ததால் நாளடைவில் அதுவே மருவி மதராஸ் (Madras) என மாறியது என்று சிலர் நம்புகிறார்கள். மதராஸின் பெயர் வந்த காரணம் இதுதான் என்று அருதியிட்டு கூற இயலாவிட்டாலும் இதுவும் நம்பும்படியாகவே இருக்கிறது.