Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

மதராஸும் வங்கக்கடலும்

இன்று மதராஸ் ஒரு புகழ்பெற்ற முக்கிய துறைமுக நகரமாக விளங்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இந் நகரத்துக்கு ஒரு சரியான துறைமுகம் இல்லாததால் இங்குவரும் வணிகக்கப்பல்களும் பயணிகள் கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்க வேண்டிய நிலை. அந்நாளில் பயணிகளும், சரக்குகளும் நடுக்கடலில் நின்றிருந்த கப்பல்களிலிருந்து சிறு படகுகள் மூலம் கரைக்கு வரவேண்டியிருந்தது. வங்கக் கடலில் தொடர்ந்து வீசி வந்த உயரமான அலைகளின் சீற்றத்தால் கரைக்கு வந்து சேர அந்த சிறு படகுகள் மிகுந்த சிரமத்தையும் அபாயத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

மதராஸ் கவுன்சில் உறுப்பினர்களில் மூத்தவரான வாரன் ஹேஸ்டிங்ஸ் பொதுப் பணித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்தபோது கப்பலிலிருந்து சிறுபடகுகள் கரைக்கு வந்து சேர ஏதுவாக கடலில் ஒரு மேடைப்பாதை அமைக்குமாறு நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருந்தார். பல காலகட்டங்களில் பல பொறியாளர்கள் வாரன் ஹேஸ்டிங்கின் விருப்பப்படி கடலில் ஒரு மேடைப்பாதை அமைக்க முயன்றும் அது 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை செயலாக்கப்படவில்லை. கடைசியாக ஒரு மேடை அமைந்தது. ஆனால் ஹேஸ்டிங்ஸ் கூறியபடி அது கற்களால் அமைக்கப்பட்ட ஒரு பாதையல்ல. மரத்தாலும், இரும்பாலும் கட்டப்பட்ட மேடையாகும். அது பயணிகளையும் வணிகச் சரக்குகளையும் எல்லாப் பருவ நிலைகளிலும் ஏற்றி இறக்க சௌகரியமாக இருந்தது. 1881இல் கோடையில் இந்த மேடையை அடித்தளமாக வைத்து ஒரு சிறிய துறைமுகம் உருவாகியது. ஆனாலும் அதற்காக அவர்கள் அடைந்த மகிழ்ச்சி சொற்ப நாட்களே நிலைத்தது. அந்த ஆண்டின் மழை காலத்தில் மதராஸைத் தாக்கிய ஒரு புயல் அந்த புதிய துறைமுகத்தை சின்னாபின்ன படுத்திவிட்டது. 15 வருடங்களுக்குப் பிறகு புதிய திட்டத்தோடு மீண்டும் துறைமுகம் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் பெரும் புயலை எதிர்ப்பார்த்த காலங்களில் அலையின் சீற்றம் அந்தத் துறைமுகத்தைத் தாக்கக் கூடும் என்றுணர்ந்து கப்பல்கள் நடுக் கடலிலேயே தங்குவது பத்திரமானதாக கருதப்பட்டது. அதனால் எச்சரிக்கைகளும் விடப்பட்டன. சில வருடங்களில் பல்வேறு புதிய உத்திகளால் மதராஸ் துறைமுகம் பலப்படுத்தப்பட, கப்பல் வணிகத்திற்கு இந்த துறைமுகம் மிகவும் வசதியானதாக மாற்றப்பட்டது. சரக்குகளை ஏற்றி இறக்க மற்றும் பயணிகள் ஏறி இறங்க வசதியாக துறைமுக மேடையருகே கப்பல்கள் நிறுத்தப்பட்டதும், மெல்ல மெல்ல கடல் வாணிபம் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மதராஸ் துறைமுக சுவர்கள் புயலால் பாதிக்கப்பட்டதால், தொடர்ந்து அதை கண்காணிக்கும் பொறுப்பும் வளர்ந்தது.

இன்று மதராஸ் ஒரு மிகமுக்கிய துறைமுக நகரம். கடல் வாணிபத்தையே நம்பி வாழ்பவர்களுக்கு அது ஒரு முக்கிய துறைமுக நகரமாக விளங்கினாலும் மற்றவர்களுக்கு அது கடலை ஒட்டி அமைந்த ஒரு நகரம் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் ஏதுமில்லை. மதராஸிலிருந்த பெரும்பாலான மக்கள் கடல் தங்கள் அருகில் இருப்பதை பெரிதாக உணர்வதே யில்லை. இருப்பினும், வளர்பிறை நாட்களில் பலத்த அலைகளின் ஓசையும் இரவு நேரங்களில் ஏற்படும் கடும்குளிர் காற்றுமே அவர்களுக்குக் கடலை நினைவூட்டியது. மதராஸின் பெரும்பாலான மக்கள் வசிக்கும் இடங்கள் கடலின் அருகே இல்லாததும் இதற்கு ஒரு காரணம். துறைமுகத்தின் தெற்கு பக்கத்தில் கட்டப்பட்ட சுவர் கடலின் சீற்றத்தை ஒருவாறு தணிக்கப் பயன்பட்டது. கடற்கரைச்சாலை என அழைக்கப்பட்ட சாலை கடலை விட்டு வெகு தூரம் விலகியே இருந்தது. அந்த சாலையிலிருந்த வீடுகளின் மேல் தளத்தில் சென்று பார்த்தால் மட்டுமே கடலின் அலைகளைக் காண முடியும். தென்புறம் அமைந்திருந்த பிரமாண்டமான "மெரினாசாலை'' அதன் முக்கியத்துவத்தை இழந்து வந்தது. அங்கிருந்த கடல் பகுதி நீள அகலத்தில் வெறும் உலர்ந்த மண்களால் ஆன மணற்பரப்புடன் நீல நிற ரிப்பன் இணைக்கப்பட்டது போல் காட்சியளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கடல் நிலத்தை விட்டு விலகியதே இதற்கு காரணமாகும்.

ஆரம்ப நாட்களில் மதராஸ் ஒரு கடல் சார்ந்த நகரமாகவே இருந்தது. வெள்ளையர் மற்றும் கருப்பர் நகரங்கள் கடலை ஒட்டியே அமைந்திருந்தன. கும்பனியின் கப்பல்கள் அங்கு வந்து போகும் காட்சிகள் காண்பதற்கு ரம்மியமாக இருந்தன. நுரைகள் தழும்பும் அலைகளில் படகுகள் கடல்வாயில்வரை வரும்பொழுது கோட்டைச் சுவற்றில் அலைகள் கடல்நீரை வாரி இறைக்கும். கரையில் வந்திறங்கும் துணிமூட்டைகள் அணி, அணியாக கடல்வாயில் வழியே கோட்டைக்குள் இருந்த கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. துவக்க காலத்தில் கும்பனியார் அவர்களது வணிகத்திற்கு முதல் தர கப்பல்களையே உபயோகப்படுத்தி வந்தனர். பின்னாளில் போர்ச்சுகீசியர் மற்றும் டச்சுக்காரர்களுடன் அடிக்கடி ஏற்பட்ட போரினால், கும்பனி இங்கிலாந்து அரசின் அனுமதி யோடு அந்தக் கப்பல்களிலேயே ஆயுதங்களைப் பொருத்தி ராணுவ வீரர்களைக் கொண்ட கப்பல்களாக அவற்றை மாற்றி, தேவைப்பட்டால் சண்டையிடவும் வசதியாக அவற்றை அமைத்தனர்.

இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியே கப்பல்கள் பயணித்தால் பயணம் சுமார் மூன்று நான்கு மாதங்களோ, அதற்கு மேலாகவோ நீடிக்கும். இளைஞர் ராபர்ட் க்ளைவ் கும்பனியில் எழுத்தராகப் பணியாற்ற இந்தியாவுக்கு பயணித்தபோது பலத்த எதிர்காற்று தாக்கியதால் கப்பல் தலைவன் "அட்லாண்டிக் கடலில் கப்பலை செலுத்தி தென் அமெரிக்க துறைமுகத்தில் வெகு நாட்கள் தங்கியதால் ராபர்ட் க்ளைவ் சரளமாக ஸ்பானிஷ் மொழியில் பேசும் வல்லமை பெற்றான். அவன் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட ஒரு வருட காலத்திற்குப் பிறகுதான் மதராஸின் கரையை அடைந்தான் என்பது செய்தி.

கும்பெனியில் ஊதியம் பெற்று மதிப்புமிக்க ஊழியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்திலிருந்து மதராஸிற்கு புறப்படும் ஒவ்வொருவரும், கடற் பயணத்தில் இயற்கையால் ஏற்படும் அபாயங்களை தவிர வழியிலேற்படும் கடற் சண்டைகளில் கைதாகி பாண்டிச்சேரிக்கோ, படாவியா (Batavia)விற்கோ சென்று சிறைவாசம் அனுபவித்ததுமுண்டு.

அதனால் இதுபோன்ற பயணங்கள் பல கப்பல்கள் அடங்கிய ஒரு குழுவாக, பயமின்றியும் பாதுகாப்பாகவும் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டன. அம்மாதிரி பயணங்களில் ஒரு வழியாக மதராஸில் வந்து இறங்கிய பயணிகள் தங்கள் பயணம் நல்ல முறையில் அமைந்தது குறித்து பாராட்டிக் கொள்வார்கள்.

நெடுந்தூரத்தில் இருந்து ஒரு புதிய கும்பனி கப்பல் கரைநோக்கி வந்தால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மக்களின் ஆர்வம் அதிகரிக்க, அனைவரும் கப்பலின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். அந்நாளில் தொலைபேசியோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ இல்லாத தால் கப்பலின் வரவு குறித்து எந்தவித முன்னறிவிப்பும் இருக்காது. தொலைதூரத்தில் கப்பலின் உயர்ந்த கொடிக் கம்பத்தில் கொடி பரப்பதை பார்ப்பதன் மூலம்தான் மக்கள் கப்பலின் வரவை அறிய முடியும். கும்பனியின் கப்பல்கொடி வெள்ளை நிற பின்னணியில் ஏழு சிவப்பு நிற நேர்கோடுகளைக் கொண்டு, மேற்பகுதியின் ஓரத்தில் செயின்ட் ஜார்ஜின் சின்னமான சிலுவை பொறிக்கப்பட்டிருக்கும். கப்பலின் வருகையை ஒட்டி துப்பாக்கிச் சத்தம் எழுப்பப்படும். வழக்கமாக குறிப்பிட்ட கீழ்திசைகாற்று வீசும் பருவகாலத்தில் கும்பனி கப்பல்கள் பயணிகளோடும் வாணிபப் பொருள்களோடும் வந்து சேரும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். கப்பல் வரும் காலங்களில் கோட்டையில் உள்ள கொடிமரக் காவலாளி மிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். கும்பனி கப்பலின் வருகை பற்றி தகவல்கள் கிடைத்தவுடன் வெள்ளைநகரத் தெருக்களில் பரபரப்பும் ஒரு புதிய உற்சாகமும் ஏற்பட, கப்பல் கரையை நெருங்க நெருங்க மக்களின் அந்த உணர்வு உச்சக்கட்டத்தை அடையும். கப்பல் கரையைத் தொட்டு நங்கூரமிட்ட பின் கப்பலின் தலைவன் தரையிலிருக்கும் கும்பனி பணியாட்களுடன் வணக்கங்களைப் பரிமாறிக் கொள்ளும் வரை அந்தப் பரபரப்பு நீடித்திருக்கும். அந்த பரபரப்புக்கும் உற்சாகத்திற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. மாதக்கணக்கில் தங்கள் உறவினர்களிடமிருந்து தகவல்கள் ஏதும் கிடைக்காததால் இந்தக் கப்பலிலாவது கடிதங்கள் வராதா என்ற ஏக்கமே அந்த பரப்பரப்பிற்கு காரணமாகும்.

தனிநபர்களின் கடிதங்களில் உறவினர்களின் சுகதுக்கங்கள் குறித்த தகவல்களும், கும்பனியின் அலுவலக கடிதங்களில் புதிதாய் பணியில் நியமிக்கப்பட்டவர்களின் பெயர்களும் மற்றும் உத்தியோக உயர்வுடன் சில தண்டனைகள் குறித்த தகவல்களும், கூடவே வியாபார சம்பந்தமான விஷயங்களும் இடம் பெற்றிருக்கும். கும்பனி செய்திக் கடிதங்களும் பல புதிய தகவல்களை ஏந்தி வரும். அந்நாளில் தினசரி செய்திப் பத்திரிகைகள் இல்லாததே இதற்கு காரணம். இந்த செய்திக் கடிதங்களில் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் தலைநகர் லண்டனில் நடந்த பொது விஷயங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த செய்திகள் எதுவாக இருந்தாலும் அவையாவும் காலம் கடந்த செய்திகளேயாகும். இரண்டாம் ஜேம்ஸ் இங்கிலாந்தின் அரச பதவியை விட்டுக்கொடுத்து பிரான்சுக்கு சென்று விட்டான். அதன் காரணமாக வில்லியம் மற்றும் மேரி அரியணை ஏறிய 12 மாதங்களுக்குப் பிறகும் மதராஸ்வாழ் மக்கள் இரண்டாம் ஜேம்ஸின் மேல் தங்களுக்கிருந்த விசுவாசத்தால் 'ஜேம்ஸ் மன்னர் வாழ்க" என்று கோஷமிட்டு கொண்டிருந்தார்கள். பிறகு ஒருநாள் மதராஸ் கும்பனியில் பணியாற்றிய மக்கள் காலம் கடந்த இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றார்கள்.

துறைமுகம் வந்தடைந்த கப்பலைச் சுற்றி கட்டு மரங்களும் சிறிய படகுகளும் வழக்கமான மரியாதைகள் செய்த பிறகு கப்பல் தலைவனையும் மற்ற பயணிகளையும் சிறுபடகுகள் மூலம் கரைக்கு அழைத்து வருவார்கள். அங்கு ஆளுனரும் மற்ற கவுன்சில் உறுப்பினர்களும் தங்களுடைய பதவிக்குத் தக்கவாறு சீர்உடை அணிந்து நின்று அவர்களை வரவேற்க கோட்டையின் ''கடல் வாயிலை'' ஒட்டியிருந்த கடற்கரையில் காத்திருப்பார்கள். கரைக்கு வந்த பயணிகளில் சிலர் புதிய எழுத்தர் பயிற்சி பணியில் பணியாற்றுவோரும், போர் காலத்தில் சண்டையிடும் படை வீரர்களும் இருந்திருக்கக் கூடும். அல்லது சில மூத்த ஊழியர்கள் தங்கள் விடுமுறையை இங்கிலாந்தில் கழித்துவிட்டு மீண்டும் பணியாற்ற வந்தவர்களாகவும் இருக்கலாம். மேலும் சில பெண்பயணிகள் இங்கிருக்கும் ஊழியர்களின் மனைவிமார்களோ அல்லது கணவனுடன் வந்தவர்களோ அல்லது கணவனை நாடி வந்தவர்களோ ஆவார்கள். வேறு சில பெண்கள் தங்களது பெற்றோர் மற்றும் நிர்வாகிகளின் அனுமதியுடனோ அல்லது தன்னிச்சையாகவோ தனக்கு நிலையான ஒரு வாழ்க்கைத் துணையைத்தேடி வந்தவர்களாகவும் இருக்கலாம். சிறிய படகுகள் கரையை நெருங்க நெருங்க சீற்ற மிகு அலைகளால் ஏற்பட்ட அதிர்வுகளைக் கண்டு அதில் பயணிக்கும் பெண்களின் பயம் கலந்த கூக்குரல் எழுந்த வண்ணம் இருக்கும். கடல் அலையின் சீற்றத்தால் படகுகள் மேலும் கீழுமாக ஊஞ்சலாடும் போது இத்தகைய கூக்குரல் எழுவது சகஜமே. அந்த அனுபவம் மகத்தானது. ஆனாலும் அது சொற்ப நேரத்திலேயே அடங்கிவிடும். ஏனெனில் சில கடல் தடுப்புகளுக்குப் பிறகு இந்தப் படகுகள் ஒரு அமைதியான, ஆழமற்ற தரைப்பகுதியை அடைந்துவிடும். கரைக்குவந்த இந்தப் படகு களை பலம் மிக்க, அரை நிர்வாண கூலியாட்கள் வேகமாகச் சென்று பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்வார்கள். இல்லையெனில் அந்தப்படகுகள் திரும்பும் அலைகளின் ஓட்டத்திற்கேற்ப மீண்டும் கடலுக்குள் சென்று விடும். அடுத்த அலை கரையை நோக்கி வரும்பொழுது மட்டுமே அந்தப் படகுகள் இவர்களது பாதுகாப்பில் கரைக்கு வந்து சேரும். இப்படியாக பயணித்து அதிலிருக்கும் பயணிகள் கரையில் வந்து இறங்குவார்கள்.

வழக்கமான வணக்கங்களை பரிமாறிய பின் ஆளுனர் இவர்களை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு இவர்களுக்காக காத்திருக்கும் விருந்துக் கூடத்திற்கு அழைத்து வருவார். இவர்களின் வருகை குறித்து அறிந்த மக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அன்று மாலையே ஒரு மாபெரும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். விருந்தில் மகிழ்ச்சியூட்டும் மதுவகைகள் பரிமாறப்பட்ட பின்பு கூடியிருந்த ஆண்களும் பெண்களும் மேலை நாட்டு நடனங்களில் ஈடுபடுவார்கள். இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருமுன்பே திருமண ஆசையோடு இந்தியாவிற்கு வந்த பெரும்பாலான ஆரணங்குகளுக்கு ஏற்ற ஆண்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருப்பார்கள். ஒரு பெண்ணை விரும்பும் இரு ஆண்கள் ஆளுனரின் பார்வை படாத இடத்தில், கட்டிப்புரண்டு சண்டையிட நேர்ந்ததுமுண்டு.

மறுநாள் இறக்குமதியாகும் சரக்குகளை இறக்கும்பணி தொடங்கும். பல நாட்களுக்கு சங்கிலித் தொடர்போல இந்த சிறு படகுகள் வாணிபப் பொருட்களை வரிசை வரிசையாக கரைக்குக் கொண்டு சேர்க்கும். அதில் ஐரோப்பிய துணிகளும், வேறு சில அந்நாட்டு பொருட்களும் அடங்கும். கும்பனி அதை ஒரு நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகும். இது தவிர பீப்பாய் பீப்பாயாக திராட்சை ரசமும் மற்றும் உயர்ரக மதுவகைகளும் தனிப்பட்ட நபர்களின் பயன்பாட்டிற்கும் மற்றும் கும்பனி உபயோகத்திற்கும் இத்துடன் வந்து சேரும்.

எல்லா சரக்குகளையும் இறக்கிய பிறகு நெடுநாள் பயணத் திற்குப் பயன்பட்ட கப்பலின் தரைகளும் மற்றும் அறைகளும் சுத்தமாக்கப்பட்டு மீண்டும் இங்கிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட காத்திருக்கும் இந்திய பஞ்சுப் பொதிகளும், மற்ற இந்தியப் பொருள்களும் பெருத்த லாபத்தில் இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட சிறிய படகுகளின் மூலம் கரையிலிருந்து கப்பலுக்கு வரிசையாக கொண்டு செல்லப்படும்.

ஆரம்பகாலத்தைவிட தற்போது மதராஸின் கடல் வாணிபம் ஒரு பெரிய அளவை எட்டியுள்ளது. இந்நாளில் தினம்தோறும் பெரிய நீராவிக் கப்பல்கள் மதராஸ் துறைமுகத்தை தினம் தினம் முத்தமிட்டு போகின்றன. அந்நாளில் பெரிய கப்பல்கள் அலைபாயும் கடலில் நங்கூரமிட பெரும் சிரமப்பட வேண்டும். ஆனால் தற்போது அதைவிட பெரிய கப்பல்கள் நாள்தோறும் மதராஸை நோக்கி வந்து ஆழ்கடல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பெரிய அளவில் வணிக சரக்குகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. ஆனால், தற்போது முந்திய காலத்து பரபரப்புக்கள் ஏதுமில்லை. வழக்கம் போல தினம் தோறும் மக்களை தெருக்கோடியிலிருந்து வாரிக்கொண்டு செல்லும் ட்ராம் வண்டி போலத்தான் இக்கப்பல்களின் வருகையை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மதராஸில் கொடிகட்டிப் பறந்த அந்நாளைய கடல் வாணிபத்தின் அடிச்சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. உதாரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்க்கு எதிரே வெப்பேரியை நோக்கிச் செல்லும் சாலைக்கு நேவல் ஹாஸ்பிடல் (Naval Hospital) சாலை என்ற பெயரே தற்போதும் நிலவி வருகிறது. ஒரு காலத்தில் வணிக மற்றும் பயணிகள் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகளில் நோய்வாய்பட்டோர்களுக்கென ஒரு மருத்துவமனை இந்த சாலையில் இருந்துள்ளது. அந்த பழைய மருத்துவமனை கட்டிடங்கள் இன்றும் இங்கு சாட்சியாக நிற்கின்றன.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அந்த மருத்துவமனை அழிக்கப்பட்டு அதன் கட்டிடங்களில் ஒரு பீரங்கிவண்டி தொழிற்சாலை இயங்கி வந்தது. அந்த தொழிற்சாலையும் மூடப்பட்டு பல வருடங்கள் சுழன்றோடி விட்டன.

கணிசமான மக்கள் தொகை பெருகப் பெருக, அவர்கள் வசிக்க சந்தடி மிகுந்த மதராஸில் தேவையான இடம் இல்லாத நிலையில், உபயோகப்படுத்தப்படாத கட்டிடங்களை மீண்டும் மக்கள் வசிக்கும் மனைகளாக்கி பயனுள்ளதாக்க விரும்பினார்கள்.

தற்போது, விஜயநகர அரசுக்கு சொந்தமான, சாந்தோமி லிருக்கும் அட்மிராலிடி ஹவுஸ் (Admirality House) அக்காலத்தில் மதராஸில் நடைப்பெற்றிருந்த கடல் வாணிபத்தை நினைவு படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது. அந்நாளில் கிழக்கிந்திய கப்பல் கழகத்தின் அட்மிரல் சாந்தோமில் தங்கி வசித்து வந்த வீடாக அது இருந்தது. அவருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மற்றும் ஒரு வீடு அதே பெயரில் இருந்தது. கோட்டைக்குள் இருந்த அந்த அட்மிராலிடி ஹவுசில்தான் பிரசித்திபெற்ற ராபர்ட் க்ளைவ் தனது திருமணத்திற்குப் பின் வசித்து வந்தான். அந்தக் கட்டிடம் தற்போது தலைமை கணக்கர் அலுவலமாக மாற்றப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் மதராஸ் துறைமுக அதிகாரிகள் வசிக்க தேவையான வீடு ஒன்று பைடன் (Biden) ஹவுஸ் என்ற பெயரில் இருந்தது. சில காலங்களுக்கு அந்த வீடு மாலுமிகளின் வீடு (Sailors Home) என்றே அழைக்கப்பட்டது. இதுவும் மதராஸில் சிறப்பான கடல் வணிகம் நடந்து வந்ததற்கு மற்றுமொரு சாட்சியாகும்.

அது ஒரு புராதனக் கட்டிடமில்லை . ஆனாலும் வணிகக் கப்பல்கள் அதிகம் வந்து போன காலத்தில் கட்டப்பட்டதாகும். இது மாலுமிகளின் இரவு நேர கேளிக்கைகள் நடைபெற்று வந்த இடமாகும். அது ஒரு உணவு விடுதிபோல் அல்லாமல் சற்றே வித்தியாசமானதாக அமைந்திருந்தது. மாலுமிகள் கவுரமாக தங்குவதற்கு ஏற்ற இடமாக இந்த விடுதி இருந்தது. கொரமாண்டல் கடற்கரை என அழைக்கப்பட்ட வங்கக்கடற் கரையில் அந்நாளில் விபத்துகளில் சிக்கிய கப்பல்களின் மாலுமிகள் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. இங்குதங்கும் மாலுமிகள் நீலநிற அங்கியும், அதே நிறத்தில் மேல் உடையும் அணிந்து காதில் தொங்கும் காதணிகளுடன் திரைப்படத்தில் வரும் கடற்கொள்ளைக்காரர்கள் போன்ற வில்லன் சிரிப்பை முகத்திலேந்தி மதராஸ் நகர தெருக்களில், அவர்களுக்கே உரித்தான கெட்ட வார்த்தைகளுடன் எங்கும் சுற்றி திரிவார்கள். நெடுநாளைய கப்பல் பயணத்திற்குப்பின் பைநிறைய காசுடன் வந்திறங்கும் அவர்களால் என்னாளிலும் இந்த பிராந்தியத்தில் முன்னேற்றமோ அமைதியோ ஏற்பட சாத்தியமில்லை. இந்த மாலுமிகள் உலகில் எந்த கடற்கரை நகருக்கு சென்றாலும் முதலில் நாடிச் செல்வது மதுக் கடைகளையே! அதில் நுழைந்து வெளிவரும் அவர்களால் சண்டை சச்சரவுகள் நடைபெறாத நாட்களே இல்லையென ஆவணங்களின் குறிப்பேடுகள் கூறுகின்றன.

இந்த மாலுமிகள் தரையில் இருக்கும் போது எப்படி இருந்தாலும் கடலில் பயணிக்கும் போது ஆங்கிலேய கப்பல் வாணிபத்திற்கு பேரும் புகழும் சேர்க்கும் வகையில், சிறந்த உழைப்பாளிகளாக இருந்தனர்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.