Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பள்ளிகளின் கதை

மதராஸில் புதிதாய் வந்திறங்கும் எந்தப் பயணியும் இந்நகரைச் சுற்றிப்பார்க்கும் வேளையில் இங்கிருக்கும் கல்வி கூடங்களைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. சிறுவர் பள்ளிகளைத்தவிர உயர்கல்வி கற்பிக்கும் கல்லூரிகளும் மதராஸ் நகர் முழுவதும் பரவியிருந்தன. மதராஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மெரினாசாலை வழியே பயணிக்கும் எந்த ஒரு யாத்திரிகன் கண்ணுக்கும் இந்தக் கட்டிடங்கள் காட்சி தராமல் இருக்க முடியாது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் எதிரே அமைந்த மருத்துவக் கல்லூரியும், எஸ்பிளனேடுக்கு எதிரே அமைந்த இந்துக்களுக்கான பச்சையப்பன் கல்லூரியும், மற்றும் சராசெனிக் (Saracenic) எனப்படும் மொகலாய சிற்பகலை பாணியில் கட்டப்பட்ட உயர்ந்த கோபுரங்கள் கொண்ட சட்ட கல்லூரிக் கட்டடங்களும், பொறியியல் மற்றும் பிரெசிடென்சி கல்லூரியும், பெண்கள் தங்கிப்படிக்கும் ராணி மேரிக் கல்லூரியும், பல்கலைக்கழகக் கட்டிடமுமாக மெரினா கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள இந்த கல்லூரிகளின் வரிசையை காண கண் கோடி வேண்டும். மேலும் வெள்ளை வர்ணம் பூசிய சிறியதொரு மசூதியுடனும் பரந்து விரிந்த மைதானத்துடனும் மகமதியர்களின் கல்லூரி ஒன்றும் நகரின் மையப்பகுதியான மௌண்ட் சாலையில் அமைந்திருந்தது. இதைத் தவிர நகரமெங்கும் ஏராளமான பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஆரம்ப காலத்தில் இந்தப் பள்ளிகளும் கல்லூரிகளும் சிறிய அளவில் துவக்கப்பட்டாலும் பின்னாளில் அவை ஓங்கி வளர்ந்திருந்தன.

பிரெஞ்சுப் பாதிரியார் எப்ரைம் வெள்ளை நகரத்தில் சிறிய அளவிலான ஆங்கிலப் பள்ளியை தன் வீட்டிலேயே துவக்கினார். இப்பள்ளியில் பெரும்பாலும் போர்ச்சுகீசிய மற்றும் யுரேசிய மாணவர்கள் (மைலாப்பூரிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியிருந்த வெள்ளை நகரத்தில் குடியேறியவர்கள்) படித்து வந்தனர். வியாபார நோக்கத்திற்காக சாந்தோம் வந்திறங்கிய போர்ச்சுகீசிய குடும்பங்கள் தங்களது வாரிசுகள் கல்வி கற்க ஏதுவாக ஆங்கிலேயர்களின் எல்லைக்குள் வந்து வசிக்க தொடங்கினர்.

திருமணமாகாத இளைஞர்களே கும்பனியில் ஊழியர்களாகவும் ராணுவ வீரர்களாகவும் பெரும்பாலும் அமர்த்தப்பட்டிருந்ததால் இந்த பள்ளியில் கும்பனி ஊழியர்களின் குழந்தைகள் மிகவும் குறைவு. பாதிரியார் எப்ரைம் ஒரு சிறந்த அறிஞர். இவர் இளம் சிறார்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வமுடையவராக இருந்ததால் பள்ளியில் மாணவர்களுக்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. பின்னாளில் ரோமன் கத்தோலிக்கர்கள் ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளைத் துவக்கினார்கள். 17ஆம் நூற்றாண்டில் ஆர்மேனியன் தெருவில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க ஆலய கட்டிடங்களுக்கு இந்தக் கல்விக்கூடம் மாற்றப்பட்டது. அயர்லாந்தைச் சேர்ந்த புனித பாட்ரிக் (St. Patrick) சகோதரர்களான துறவிகளின் வசம் 1875இல் இந்த பள்ளியின் நிர்வாகம் மாற்றப்பட்டது. பின்னாளில் அடையார் ஆற்றின் தெற்குப் பகுதியில் அமைந்த எல்பின்ஸ்டன் தோட்டப் பகுதிக்கு இந்தப் பள்ளியை மாற்றினார்கள்.

எப்ரைம் பாதிரியார் கும்பனி சிறுவர்களுக்கான கல்விப் பணியை தொடங்கியபின் சுமார் 30 ஆண்டுகளுக்கு கும்பனி யார் கல்வி சம்பந்தமான எந்த அலுவல்களையும் கவனிக்க வில்லை. அவர்களது கவனம் எப்போதும் வியாபார வளர்ச்சியை ஒட்டியே இருந்தது. அதன்பின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர பிராடெஸ்ண்ட் பிரிவைச் சேர்ந்த மாஸ்டர் பாட்ரிக் வார்னர், அங்கிருந்த தேவாலயத்தை மேற்பார்வை இடும் பணியில் இருந்தபோது கோட்டையில் ரோமன் கத்தோலிக்க குருமார்களின் ஆதிக்கம் குறித்து லண்டனில் இருந்த நிர்வாகிகளுக்கு ஒரு விரிவான கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக அவர் கும்பனி நிர்வாகிகளை நேரிடையாக சந்தித்து மதராஸ் விவரங்கள் குறித்து பேசப்போவதாக ஒரு அச்சுறுத்தலோடு இங்கிலாந்து சென்று தன்னுடைய கோரிக்கைகளுக்கு நிர்வாகிகளை செவிசாய்க்க வைத்தார். அதன் காரணமாய் அடுத்த ஆண்டே கும்பனியின் லண்டன் நிர்வாகிகள் ஒரு பிராடஸ்டண்ட் மத குருவை பள்ளி ஆசிரியராக அனுப்ப நேர்ந்தது. லண்டன் நிர்வாகிகள் மதராஸ் ஆளுனருக்கு இந்த ஆசிரியர் பணி நியமனம் குறித்து எழுதிய கடிதத்தில் மாஸ்டர் பாட்ரிக்வார்னரின் விடா முயற்சியே அதிகம் எதிரொலித்தது.

பின்னாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அநேக கும்பனி ஊழியர்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித் தார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தேவையான அடிப்படைக் கல்வியும், அடிப்படை கணிதமும் கற்பிக்க திறமையான ஆசிரியரான ரால்ப் ஒர்டே என்பவரை கோட்டைக்கு நிர்வாகம் அனுப்பி வைத்தது. இந்தக் கல்வி குழந்தைகளுக்கு இலவசமாக கற்பிக்கப்பட்டது. அது தவிர மதராஸில் இருந்த போர்ச்சுகீசிய குழந்தைகளுக்கும் ஜென்டூஸ் எனப்பட்ட தெலுங்கு மொழி பேசும் இனத்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்தக் கல்வியை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது உள்ள மதராஸில் குடியேறிய ஹிந்துக்கள் தமிழர்களாக உள்ளார்கள். ஆனால் பிரான்சிஸ் டே மதராஸை விலைக்கு வாங்கிய நாட்களில் ஜென்டூஸ் எனப்படும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகமாகவும் தமிழர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் இருந்தார்கள். இந்தக் குழந்தைகளுக்கு கிருத்துவமத பிராடஸ்டண்ட் பிரிவுக் கொள்கைகளைக் கல்வியோடு சேர்த்து போதித்தார்கள்.

1677இல் ரால்ப் ஓர்டேயும், அவரை ஆசிரியராக நியமிக்க அனுப்பப்பட்ட நியமன கடிதமும் ஒரேக் கப்பலில் வந்து இறங்கிய நாளே மதராஸில் ஆங்கிலக் கல்வியின் ஆரம்ப நாளென சரித்திரத்தில் குறிக்கலாம். இந்த நாள்தான் ஆங்கில அரசு கல்விப்பணியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளாகும். அன்று ரால்ப் ஓர்டேயால் விதைக்கப்பட்ட சிறிய விதை இன்று விழுதுவிட்டு வேரோடிய ஆலமரமாய் மதராஸ் நகரெங்கும் வளர்ந்துள்ளது.

வளர்ந்து வரும் மதராஸ் நகரில் கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியரை நியமித்த பிரிட்டிஷ் அரசு ஒரு சிறந்த பணியை செய்ததென்றே கருதலாம். கடமைக்காக விதியே என்று ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்காமல் ஒரு சிறந்த தகுதியான கல்விமானான ரால்ப் ஓர்டேயை நியமித்த ஆங்கில அரசு பாராட்டுக்குறியதே. ஆங்கிலேய அரசு அவருக்கு உரித்தான சரியான ஊதியத்தை அளித்ததும் பாராட்டுக்குரியதே.

அவர் தனது உணவை கோட்டையில் இருந்த பொது சாப்பாட்டு அறையில் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டாலும் ஆண்டுக்கு சுமார் 50 பவுண்டுகள் அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. அந்த ஊதியம் ஒருசில கோட்டை கவுன்சில் உறுப்பினர்களின் ஊதியத்தை விட அதிகமாகும்.

அவர்பெற்ற ஊதியம் அன்றையக் காலக்கட்டத்தில் குறைவானதல்ல என்றும் அது ஒரு சிறந்த ஊதியம் என்றும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

ரால்ப் ஒர்டே ஒரு சிறந்த ஆசிரியர். அவர் தனது ஐந்து வருட இடைவிடாத கடும் உழைப்பால் உடல் நலம் குன்றினார். கடுமையான ஆசிரியர் பணியிலிருந்து தன்னை விடுவித்து அதற்கு பதிலாக கும்பனியின் மற்ற பணியில் அமர்த்துமாறு கேட்டுக் கொண்டார். கும்பனி அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு பதிலாக ஒரு புதிய பள்ளி ஆசிரியரை நியமித்தது. கும்பனியில் ஓர்டே சிறப்பாக பணியாற்றியதன் காரணமாக சில வருடங்களுக்குப்பிறகு கீழைநாடான சுமத்ராவின் மேற்குக் கடற்கரை பகுதியில் ஒரு தொழிற்சாலையை அவரைக்கொண்டே நிறுவச் செய்து அதன் மேலாளராக அவரை அமர்த்தியது.

ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து மதராஸின் ஆளுனராக உயரும் அளவிற்கு அவர் தகுதி பெற்றிருந்தாலும், சுமத்ராதீவு சென்று பணியாற்றிய நாட்களில் அவர் உடல் நலம் குன்றினார். மதராஸில் இறங்கிய பத்துவருடங்கள் பணியாற்றி சுமத்ரா சென்ற அங்கு சுமத்ராவில் அவர் மரணமடைந்தார்.

1688இல் அரசு சாசனப்படி மதராஸை நிர்வகிக்க ஒரு புதிய மாநகராட்சி உருவானது. அந்த மாநகராட்சியின் முக்கிய பணிகளில் ஒன்று கருப்பர்நகரத்தில் ஒரு பள்ளியை உருவாக்கி அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கில கல்வியும் அடிப்படைக் கணிதமும் பயில வசதிகள் செய்வதாகும். இதன்பின் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆளுனராக பொறுப்பேற்ற எலிஹு ஏல் மக்களிடமிருந்து வரி வசூலித்து அதன் மூலம் கல்விப்பணியும் மற்ற வசதிகளும் செய்து தர மாநகராட்சிக்கு அதிகாரம் இருந்தும் அவ்வாறு அது செய்வ தில்லை என புகார் செய்தார். கும்பனியும் மாநகராட்சியும் இதுபோன்ற பணிகளைச் செய்ய போதிய நிதிவசதி இல்லை என்று திரும்பத் திரும்ப கூறிவந்தார்கள். மேலும் மாநகராட்சி, கருப்பர்நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வரி கட்டும் பழக்கமோ அல்லது ஏனைய விதிமுறைகளோ தெரியாது என்ற ஒரு காரணத்தையும் முன் வைத்தது. வரி வசூலை கட்டாயப்படுத்தினால் அங்கு வசிக்கும் மக்கள் நகரத்தை ஒட்டு மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்றும் மற்றும் புதிய நபர்கள் கருப்பர்நகர எல்லைக்குள் காலடி வைக்க மறுப்பார்கள் என்றும் மாநகராட்சி மேலும் ஒரு காரணத்தைக் காட்டியது. இது போன்ற காரணங்களால் கருப்பர்நகர குழந்தைகள் ஆங்கில கல்வி கற்க பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை .

இதனிடையே வெள்ளையர்நகரத்தில் ஓர்டே ஆரம்பித்த பள்ளி, அவரை தொடர்ந்து திறமையான ஆசிரியர்கள் பதவிக்கு வந்ததால் வெகு சிறப்பாய் வளர்ந்து வந்தது. ஆங்கில ஆரம்பக்கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் போதிக்கப் பட்டது. இதில் ஆங்கிலேய, யுரேசிய, கிருத்தவ இந்தியர்கள் மற்றும் இந்துக்களின் குழந்தைகளும் அடக்கம்.

இந்தப்பள்ளி கோட்டையிலிருந்த புனித மேரி தேவாலயத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டாலும் ஆலய நிர்வாகிகள் பள்ளியை நிர்வாகம் செய்வது தங்கள் பணி அல்ல என்று மறுத்தனர். மேலும் அரசே ஒரு புதிய இலவசப் பள்ளியை இங்கிலாந்திலிருந்து குடியேறிய பிராடஸ்டெண்ட் குழந்தைகளுக்காக அமைக்க வேண்டும் எனவும் கூறினார்கள். அந்தப் பள்ளி இங்கிலாந்தில் இருக்கும் நன்கொடை பள்ளிகள் போல அமைய வேண்டும் எனவும் விரும்பினார்கள். 1715இல் அவ் வண்ணமே இங்கிலாந்து நிர்வாகிகளின் அனுமதியோடு ஒரு புதிய பள்ளி ''புனித மேரி தேவாலய தர்ம பள்ளி" என்ற பெயரில் துவக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தப் பள்ளி இருந்த இடம் ஆண்களின் சரணாலயமாக மாறியது.

'புனித மேரி தேவாலய தர்ம பள்ளி" பல ஆண்டுகளுக்கு ஆண் பெண் இரு சாரார்களுக்கும் நிறைவான கல்விப் பணியை செய்து வந்தது. பின்னாளில் அது ஆண்களுக்கான சரணாலயமாக மாற்றப்பட்டபின்பும் தனது சேவையைத் தொடர்ந்தது. தற்போது அந்தப்பள்ளி பூந்தமல்லி சாலையில் ஒரு பரந்த இடத்தில் இருந்து வருகிறது.

1715இல் துவங்கப்பட்ட இந்த பள்ளி குறிப்பாக ஆங்கிலேயர்களின் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்க ஏதுவாக இருந்ததால் மற்ற உள்ளூர் இந்தியக் குழந்தைகளின் படிப்பு கேள்விக் குறியானது. தொடர்ந்து இந்திய குழந்தைகள் கல்வி கற்க எந்தவிதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கிருத்துவ மத பிரசார கழகம் மதராஸில் இந்திய குழந்தைகளுக்காக பல பள்ளிகளை துவக்கி அவர்களது ஆரம்பக் கல்விக்கு அடிகோலியது. 1715இல்தான் பிராடஸ் டென்ட் பிரிவைச் சேர்ந்த ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் மதராஸில் துவக்கப்பட்டன. கிருத்துவ மத பிரச்சாரக்குழு இந்தக் கல்விப் பணிகளை உடனடியாக துவக்க இயலாத நிலையில் தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் லூதரன் மிஷனின் (மதத்தொண்டு மையம்) உதவியை நாடினார்கள். இதன் பொருட்டு ஒரு டேனிஷ் மந்திரி மதராஸுக்கு அனுப்பப்பட்டு இந்த பணிகள் தொடர்ந்தன.

பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கிய மதராஸ்பட்டணம் நாளடைவில் அதிக மக்கள் வசிக்கத் தகுந்த ஒரு பெரிய நகரமாக உருவெடுத்தது. மேலும் ஐரோப்பிய பெண்கள் விரும்பி வசிக்கக் கூடிய ஒரு நகரமாகவும் மாறியது.

பெரும்பாலான கும்பனி ஊழியர்கள் மணவாழ்க்கைக்குத் தயாராக இருந்ததாலும், தனியே வாழும் ஊழியர்களைவிட மணம் முடித்த ஊழியர்கள் நிலையாக தங்கி சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்று இங்கிலாந்து நிர்வாகிகள் கருதியதாலும், அழகான தகுதியான இளம் பெண்களை இங்கிலாந்திலிருந்து மதராஸிற்கு அனுப்பி வந்தார்கள். இங்குள்ள ஊழியர்கள் இங்கிலாந்துக்குச் சென்று அங்கு தங்கள் தகுதிக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேட விருப்பமோ வசதியோ இல்லாத நிலையில் கும்பனியின் இந்த ஏற்பாடு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இதன் காரணமாய் மதராஸில் மணமான ஆங்கிலேய ஜோடிகள் தொடர்ந்து அதிகரிக்க, அவர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் வசதியாய் வாழ்ந்து வந்த யுரேசிய குழந்தைகளுக்கும் தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் அல்லாமல் மற்ற உயர்தர ஆரம்பகல்வி அளிக்கும் பள்ளிகளின் தேவையும் அதிகரித்தது. வீட்டிலேயே தகுந்த திறமையான ஆசிரியர்களைக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அளித்து வந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல தனியார் ஆரம்பப் பள்ளிகளின் தேவை அதிகரித்தது. அத்தகைய பள்ளிகள் காலப்போக்கில் மெல்ல மெல்ல மதராஸில் உருவாகும் என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள்.

முதன் முதலாக தனியார் ஆரம்பப் பள்ளிகள் மதராஸில் எப்பொழுது துவக்கப்பட்டது என்று திட்டவட்டமாக கூற இயலாது. ஆனாலும் அந்நாளில் மிகப் பிரபலமான 'மதராஸ் கொரியர்'' என்ற ஆங்கிலப்பத்திரிகையில் 1790ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை வைத்து அந்த ஆண்டில்தான் ஆண் குழந்தைகளுக்கென்று ஒரு ஆங்கிலேய ஆரம்பப் பள்ளி உருவானது என்று நம்பலாம்.

அக்காலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற கல்விமான், ஜான் ஹோம்ஸ் என்பவர், கருப்பர்நகரத்தில் "மதராஸ் அகடமி'' என்ற பெயரில் ஒரு ஆரம்பப் பள்ளியைத் துவக்கி அதில் ஆங்கிலம் படிக்க, பேச, எழுத மற்றும் ஆரம்பக் கணிதம், சரித்திரம், பூகோளம், இவையல்லாது மற்ற மொழிகளான பிரெஞ்சு, க்ரீக் மற்றும் லட்டின் போன்ற மொழிகளையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த மற்ற நகரங்களின் சில ஐரோப்பிய குழந்தைகள் பள்ளியிலேயே தங்கி படிக்க தேவையான வசதிகளை ஜான் ஹோம்ஸ் செய்தார். இந்த வசதி ஐரோப்பிய ஆண் குழந்தைகளைத் தவிர பெண் குழந்தைகளுக்கும் வசதியாக இருந்ததால் ஜான் ஹோம்ஸின் இந்தத் திட்டம் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஹோம்சின் இந்த திட்டத்தில் சேர ஏராளமான ஐரோப்பிய பெண் குழந்தைகள் தயாராக இருந்த நிலையில் ஜான்ஹோம்ஸ் ஒரு வசதியான இடத்தில் பெண் குழந்தைகளுக்கென தனியே ஒரு விடுதியை ஆண்கள் விடுதியிலிருந்து வேறுபடுத்தி அமைத்தார்.

சில நாட்களில் மதராஸ் அகடெமியின் வளர்ச்சி பிரமிக்க வைத்தாலும் ஆண் & பெண் இருபாலரும் சேர்ந்து தங்கிப் படிக்கும் இந்த முறையை ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் பாராட்டவில்லை. அடுத்த வருடமே பெண்கள் விடுதியைச் சேர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த திருமதி முர்ரே என்ற ஆசிரியை, பெண் குழந்தைகளுக்கென கருப்பர்நகரத்தில் புதிதாக தங்கிப் படிக்கும் வசதி கொண்ட ஒரு பள்ளியை உருவாக்கப் போவதாய் விளம்பரப்படுத்தினார். அந்தப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளுடனும் இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளைப் போலவே சிறந்த கல்வி, பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தரக்கூடிய பயிற்சிகள் தரப்படும் என உறுதியளித்தார். அந்தப் பள்ளியின் பாடதிட்டம் மதராஸ் அகடமியின் பாடதிட்டத்தைப்போல் அல்லாது பெண் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட திட்டமாகும். அந்தப் பாட திட்டத்தில் ஆங்கிலம் எழுத, படிக்க, பேச மற்றும் அடிப்படை கணிதம், ஐரோப்பிய இசை, பிரெஞ்சு மொழி, ஓவியம், நடனம் போன்ற பயிற்சிகளும் நளின கலைகளும் மற்றும் குரோஷா ஊசியில் தையல் கலை, பூ வேலை போன்ற பெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கும். மேற்சொன்ன இந்த இரு பாடதிட்டங்கள்தான் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பிய ஆண் பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளில் போதிக்கப்பட்டவையாகும்.

இந்தப் பள்ளிக்கூடங்களில்தான் ஆங்கிலேய மற்றும் இந்திய மாணவர்களுக்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி போதிக்கப்பட்டது. இந்திய குழந்தைகளுக்கான பள்ளிகள் தனியார்களாலும், கிருத்துவ மிஷினரிகளாலும் நடத்தப்பட்டு அதில் ஆரம்பக் கல்வி மட்டுமே போதிக்கப் பட்டது. அந்நாளில் ஆரம்பக் கல்வியைத்தவிர மற்ற உயர் படிப்பிற்கான கல்விக் கூடங்கள் மதராஸிலோ அல்லது இந்தியாவின் மற்ற பகுதிகளிலோ இந்தியர்களுக்குக் கிட்டும் சூழ்நிலை உருவாகவில்லை.

ஆனால் இந்நிலை 1828 முதல் 1835 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங்க் பிரபு காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் கல்வித்துறையில் பலபுதிய திட்டங்கள் உருவாகி சிறப்பாக நடந்தேறின. அதுசமயம் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பூரண அமைதி நிலவியதால் இந்த கல்விதிட்டங்கள் நிறைவேற ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகியது.

இந்த காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் கல்வி புரட்சி ஏற்பட்டு டர்ஹாம் மற்றும் லண்டன் பல்கலை கழகங்கள் துவக்கப்பட்டன. அதுசமயம் "விஞ்ஞான வளர்ச் சிக்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பு" என்ற அமைப்பு ஒன்றும் உருவானது. இதன் எதிரொலி இந்தியாவிலும் ஒலித்தது. வில்லியம் பெண்டிங்க் பிரபு இதற்கான தளராத முயற்சிகளை மேற்கொண்டு இந்தியாவின் கல்வி முன்னேற்றத்திற்கு காரண கர்த்தா ஆனார். 1835ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது. வில்லியம் பெண்டிங் பிரபுவின் அயராத முயற்சிக்கு இது ஒரு சாட்சியாகும். இவர் காலத்தில்தான் இந்தியாவின் கல்வி முறை சீர்திருத்தப்பட்டது.

பின்னாளில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட மெகாலே பிரபு கல்வி குறித்த ஒரு பிரபலமான அறிக்கையில், இந்தியாவின் அனைத்து அரசுப் பள்ளிகளும் பிராந்திய மொழிகளில் கற்பிப்பதை கைவிட்டு ஆங்கில மொழி ஒன்றையே கற்பிக்க வேண்டும், மற்ற பாடங்களான சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம் போன்றவைகளும் ஆங்கிலமொழி மூலமாகவே கற்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மெகாலேயின் இந்த திட்டம் சரியா தவறா என்பது ஒரு புறமிருக்க, அதை ஒப்புக் கொண்ட வில்லியம் பென்டிங்க் பிரபுவின் அரசு ஒரு ஆணை மூலம் எல்லா பள்ளிகளும் இத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று அறிவித்தது. மேலும் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, பின்னாளில் அரசு பணியில் பணியாற்ற விரும்பும் இந்தியர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம் என்றும் கூறி வந்தது. அதனால் எழுந்த இந்தியர்களின் எதிர்ப்பையும் ஒருவாராக சமாளித்தது. அன்னாளில் அரசுப்பணியே மேலானது என்று கருதிய இந்தியமக்களுக்காக ஆங்கில மொழியை கற்பிக்கும் பள்ளிகள் துவக்கப்பட்டன. இதனால் சில வருடங்களுக்குள்ளாகவே இந்தியாவின் எல்லாப் பகுதி களிலும் பல முக்கியமான பள்ளிகள் நிறுவப்பட்டன.

ஸ்காட்லேண்டைச் சேர்ந்த கிருத்தவ மிஷினரி (மதத் தொண்டு மையம்) ஒன்று 1837இல் ரெவரண்ட் ஜான் ஆண்டர்சன் என்ற பாதிரியாரை மதராஸுக்கு அனுப்பி இங்கு முதன் முதலாக ஜெனரல் அசெம்பிளி இன்ஸ்டிட்யூஷன் என்ற பெயரில் தென்னிந்தியாவில் ஒரு கல்லூரியைத் துவக்கியது. அது தற்போது மதராஸ் கிருத்தவக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதை துவக்கிய ரெவரண்ட் ஜான் ஆண்டர்சன் பெயரில் ஆண்டர்சன் கூடம் என்ற ஒரு பெரிய கூடம் இன்னமும் கிருத்துவக் கல்லூரியில் இவர் பெயரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

கிருத்துவக் கல்லூரியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு தன்னுடைய அயராத உழைப்பை ஈந்த புனித டாக்டர் மில்லரின் உருவச்சிலை இன்றும் கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் மில்லர் பல வருடங்கள் பணியாற்றியபின் தன்னுடைய முதிய வயதில் தற்போது (1921) ஸ்காட்லண்டில் தன் ஓய்வு காலத்தைக் கழித்து வருகிறார்.

கிருத்துவக் கல்லூரி துவங்கப்பட்ட இரு ஆண்டுகளுக்குப் பிறகு 1839இல் மதராஸ் ரோமன் கத்தோலிக்க மத குருவாய் இருந்த டாக்டர் கார்யூ என்பவரால் புனித மேரி கல்வியகம் துவக்கப்பட்டது. இது 45 ஆண்டுகளுக்குப் பிறகு புனிதமேரி கல்லூரியாக உருவெடுத்து தற்போது ஐரோப்பியர்களுக்கென புனிதமேரி உயர்நிலைப்பள்ளியையும், இந்தியர்களுக்கென புனித கேப்ரியல் உயர்நிலைப்பள்ளியையும் நடத்திவருகிறது,

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1841இல் பிரஸிடென்சி கல்லூரி ஒரு சாதாரண வாடகை அறையில் (பின்னாளில் மாநிலக் கல்லூரியாக மாறிய ஒரு பள்ளி) எழும்பூரில் துவக்கப்பட்டது. இந்தப் பள்ளி துவக்கப்பட்ட நாட்களில் அது அரசு சார்புடையதாக இல்லை. தனியார்கள் சிலரால் துவக்கப்பட்ட இப்பள்ளியின் நிர்வாகம் அன்று மதராஸில் வசித்த ஆங்கிலேய மற்றும் இந்தியபிரமுகர்களில் முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட குழுவின் வசம் இருந்தது.

அதன் முதல்வராக ஒரு அட்வகேட் ஜெனரல் இருந்தார். இந்தப் பள்ளிக்கு துவக்கநாளில் “மதராஸ் சர்வகலாசாலையின் உயர்நிலைப்பள்ளி"" என்று பெயர் சூட்டப்பட்டது. இதன் நிறுவனர்கள் விரும்பியபடி பின்னாளில் கல்லூரியாக மாற்றப்பட்டு அதன் பெயர் மதராஸ் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. அதற்கான சட்டதிட்டங்களை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1860இல் அரசு மதராஸில் ஒரு சர்வகலாசாலையை நிறுவ முன் வந்த போது இப் பள்ளியின் நிர்வாகிகள் பள்ளியை அரசிடம் ஒப்படைத்தார்கள். அதன் பின் அது மாநிலக் கல்லூரி என்று அழைக்கப் பட்டது. இக்கல்லூரி 1870 வரை வாடகை இடத்திலேயே இருந்தது. அதன் பின் தனக்கென ஒரு புதிய கட்டிடத்தை உருவாக்க, அதை எடின்பரோ கோமகன் துவக்கி வைத்தார். அக்கட்டிடம் இன்றும் வங்கக் கடலலைகளை எதிர் நோக்கி அமைந்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி இந்துக்களுக்காக 1842இல் துவக்கப் பட்டது. மற்ற கல்லூரிகளைப் போலவே துவக்க காலத்தில் இதுவும் ஒரு பள்ளிக் கூடமாகவே இயங்கி வந்தது. அன்று கருப்பர்நகரத்தில் துவக்கப்பட்டு பச்சையப்பா மத்தியக்கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. இக்கல்லூரியின் தற்போதைய கட்டிடங்கள் 1850இல் சர்.ஹென்றி பொட்டிங்கர் என்ற மதராஸ் ஆளுனரால் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாக் கூட்டம் இந்திய மற்றும் ஐரோப்பிய பிரமுகர்கள் அடங்கிய கூட்டமாக இருந்தது. பல வருடங்கள் இக்கல்லூரியின் ஆண்டுவிழா ஒரு பெரிய சமுதாய விழாவாகவே நடந்து வந்தது.

பச்சையப்பர் என்பவர் ஒரு ஆன்மிகவாதி. இவர் கும்பனியின் முகவராகப் பணியாற்றியபோது கிடைத்த வருமானம் ஒரு லட்சம் பகோடாவில் (சுமார் 3.5 லட்சம் ரூபாய்கள்) கோவில் பணிகளுக்கென ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தினார். அவர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார். அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் அதன் விதிகளைப்புறக்கணித்ததால் மதராஸ் உயர்நீதிமன்றம் அந்த நிதியை தன் ஆளுமைக்குள் உட்படுத்திய போது அதன் மதிப்பு 2 மடங்காகி ஏறக்குறைய ஏழரை லட்சம் ரூபாயாக உயர்ந்திருந்தது. பச்சையப்பரின் உயிலின்படி மூன்றரை லட்ச ரூபாயை கோவில் மற்றும் தர்ம பணிகளுக்கென ஒதுக்கி விட்டு மீதித்தொகையை கல்வி வளர்ச்சிக்கென அவர் பெயரிலேயே செலவிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிகளும் சம அளவில் மேற்கொள்ளப் பட்டன. 1842இல் அயர்லாந்திலிருந்த 'பிரசன்டேஷன் ஆர்டர் 'ஐச் சேர்ந்த கன்னிமார்களின் குழு ஒன்று மதராஸுக்கு வந்து கருப்பர்நகரத்தில் பெண்களுக்கென ஒரு பள்ளியைத் துவக்கினார்கள். ஜார்ஜ் டவுன் கான்வென்ட் என்று துவக்கப்பட்ட அப்பள்ளி குழந்தைகள் தங்கிப் படிக்கு மிடமாகவும் மற்றும் அனாதைக் குழந்தைகள் காப்பகமாகவும் செயல்பட்டது. பின்னாளில் இவர்களது நிர்வாகத்தில் வேப்பேரி மற்றும் இதர முக்கிய இடங்களிலும் அதை போன்ற கான்வென்ட் பள்ளிகள் துவக்கப்பட்டன.

இந்தியாவில் கல்விக்கு முதலிடமும், முக்கியத்துவமும் பிரபு டல்ஹௌஸியின் காலத்தில்தான் அளிக்கப்பட்டது. 1848 முதல் 1856 வரை டல்ஹௗசி ஆண்ட எட்டு ஆண்டு காலத்தில் கல்வி முறைப்படுத்தப்பட்டு அதைக் கண்காணிக்க பொது கல்வித்துறை இயக்குனர் என்ற ஒரு பதவியும் உருவாக்கப்பட்டது. அந்த இயக்குனரின் கீழ் பள்ளிகள் இயங்கத் தலைப்பட்டன. மேலும் கல்வி வளர்ச்சிக்கும், கல்விக்கூடங்களுக்கும், பல்கலைக் கழகங்களை உருவாக்கவும் அரசாங்கம் தாராளமாக நிதி உதவிகளை வழங்கியது. கல்வியின் மேன்மை பற்றி எடுத்துரைக்க தனியே ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டு அது ''இந்திய அறிஞர்களின் அறிக்கை'' என அழைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் படிதான் கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இன்று "ஆசிரியர் கல்லூரி'' என அழைக்கப்படும் கல்லூரி 1856இல் ஒரு சாதாரண அரசுப்பள்ளியாகத் தான் உருவானது. பெரும்பாலான பள்ளிகளில் திறமையாகக் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களை உருவாக்க இக்கல்லூரி துவக்கப்பட்டது. 1857இல் உயர்கல்வி மற்றும் கல்விக் கூடங்களின் வளர்ச்சிகளை நிர்வகிக்க மதராஸ் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

இன்றும் நிலைத்திருக்கும் பிரபலமான பள்ளிகளில் ஒன்றான, ராயப்பேட்டை ஹாரிஸ் உயர்நிலைப் பள்ளி 1856இல் கிருத்துவ ஆலய மிஷினரி கழகத்தால் மகமதிய மாணவர்கள் படிப்பதற்காக துவக்கப் பட்டது. அப்போதைய ஆளுனராக இருந்த ஹாரிஸ் பிரபுவின் பெயரே இந்தப் பள்ளிக்குச் சூட்டப்பட்டது.

1857இல் இன்றும் பிரசித்தமாக உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சி காலத்தில் பதவியில் இருந்த யுரேசிய பிரஜையான கேப்டன் ஜான் டவ்டன் தனது பதவி காலத்தில் சேர்த்த ஏராளமான சொத்துகளில் ஒரு பகுதியை வேப்பேரியில் கல்விக்காக நிறுவிய 'தி பேரண்டல் அகடமி' என்ற நிறுவனத்திற்கு மானியமாக அளித்தார். பின்னாளில் அவரது மறைவுக்குப் பிறகு அவரின் நினைவாக அந்த அகடமி 1855இல் டவ்டன் கல்லூரி என்று மாற்றப்பட்டு, ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்காக இன்றுவரை பணியாற்றிவருகிறது.

பின்னாளில் தர்மசிந்தனையுள்ள இந்திய செல்வந்தர் களால் அநேக மாணவ மாணவிகள் கல்வி பயில பல பள்ளிகள் மதராஸ் மகாணத்தில் துவங்கப்பட்டன.

கல்விக் கூடங்கள் குறித்து பேசுகையில் அதற்காக உள்கட்டமைப்புகள் குறித்தும் பேசலாம். நுங்கம்பாக்கத்தில் உள்ள "பொது கல்வித்துறையின் இயக்குனர் '' அலுவலகம் அதில் முக்கிய இடம் பெறும். நுங்கம்பாக்கத்தில் ஒரு பரந்த நிலப்பரப்பில் கூவம் நதியை ஒட்டி அமைந்துள்ளது இக் கட்டிடம். இங்கு அமைந்திருந்த கல்லூரி அந்நாளில் "பழைய கல்லூரி" என்று அழைக்கப்பட்டது.

இக்கட்டிடத்தின் வாசலிலும் உள்ளேயும் உள்ள வேலைப்பாடு மிக்க இரு வளைவுகள் காண்போரை இன்றும் பிரமிக்க வைக்கும். இவ்வளைவுகள் பல்வேறுபட்ட விசித்திரமான மனித முகங்களையும் பல்வேறு தேசக் கொடிகளையும் மற்றும் அபூர்வமான வரைகணித வடிவுகளையும் உள்ளடக்கியுள்ளன. சுமார் 100 வருடங்களுக்கு முன் இயற்கை எய்திய மூரத் என்ற ஆர்மேனிய செல்வந்தரே இந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர். இதில் உள்ள இந்த அலங்கார வளைவுகள் அவரது குடும்பத்தின் நினைவாக எழுப்பப்பட்டவை என யூகிக்கலாம். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூரத்தின் மகன் அரசுக்கு இக்கட்டிடத்தை விற்றான். அரசின் இந்த இடத்தில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான கல்லூரி ஒன்று துவங்கப்பட்டது. இதன் காரணமாகவே இதற்கு 'பழைய கல்லூரி'' என்ற பெயர் வந்தது. இந்தக் கல்லூரியில் அவர்கள் பயிற்சி பெறாவிட்டாலும், பின்னாளில் அங்கு அவர்கள் ஒன்றாகத் தங்கி கூடி மகிழ ஒரு இடமும், உணவருந்த ஒரு உணவகமும் இருந்து வந்தது. அன்னாளில் இக்கட்டிடத்தில் இருந்த ஒரு பெரிய கூடத்தில் பொழுதுபோக்கு கலைஞர்களால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் மற்ற சமூக நல கூட்டங்களும் நிகழ்ந்து வந்தன. இக்கட்டிடத்தின் புகழ் மிக்க இரு வளைவுகளும் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அது போலவே அதன் பெயரான "பழைய கல்லூரி'' இன்றும் நிலைத்திருக்கிறது. ஆனால் அந்த சங்கம் என்றோ கலைக்கப் பட்டுவிட்டது.

இடுப்பில் நீள கயிறுகளுடன் கூடிய உடை அணிந்து அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்களின் ஆவிகள் ஏதும் அக் கட்டிடங்களில் வருவதில்லை . அங்கு பயின்ற இளைஞர்கள் கூட்டமும் இப்போது அங்கு காணப்படவில்லை. இந்தக் கட்டிடத்தின் பெரிய கூடத்தில் தற்போது மனதை கவரும் இசையோ அல்லது நாடக வசனங்களோ எதிரொலிக்கவில்லை. மாறாக, தற்போது குல்லாய் அணிந்த குமாஸ்தாக்கள் மட்டுமே மேஜையில் குனிந்து தங்களது இறகுப் பேனாக்களின் நீல நிற மசியால், இங்கு கும்பல் கும்பலாக பள்ளி வளர்ச்சிக்காக நிதி வேண்டி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெரிய கூடத்தில் இப்போது தட்டச்சு இயந்திரங்களின் ஒலியைத்தான் கேட்க முடிகிறது.

மதராஸில் கல்வி வளர்ந்த கதைக் குறித்து சொல்லும் போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் துவக்கப்பட்ட ஒரு சிறு பள்ளி, இப்படி ஆலமரமாய் வளர்ந்து பரந்து விரிந்திருக் கிறது என்று நினைக்கையில் பிரமிப்புதான் உண்டாகிறது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.