Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

சேப்பாக்கம் அரண்மனை

மதராஸில் உள்ள பல்வேறு முக்கிய கட்டிடங் களில் ஒன்றான இந்த சேப்பாக்கம் அரண்மனை 17ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் தங்கு வதற்காக கட்டப்பட்டு தற்போது வருவாய் துறையைச் சார்ந்த அலுவலகக் கட்டிடமாக விளங்குகிறது. மொகலாய சிற்பக்கலை (Saracenic) பாணியில் கட்டப்பட்ட அரண்மனையை சுற்றி ஒரு காலத்தில் நெடிய மதில் சுவர்கள் அமைந்திருந்ததால் மக்கள் இதன் அழகைக் கண்டு ரசிக்க முடியாமல் போனதும். ஆனால் தற்போது இந்த சுவர்கள் இடிக்கப்பட்டு இதன் தோற்றம் மக்களின் பார்வைக்கு மகிழ்ச்சி அளிப்பதுடன் வாயில்காப்போர் இல்லாததால் தங்கு தடையின்றி மக்கள் உள்ளே சென்றுவரவும் முடிகிறது. ஒரு காலத்தில் இந்த அரண்மனையில் நவாபும் அவனது அந்தப்புற அழகிகளும் ஊழியர்களும் மட்டுமே நடமாடியது போக இன்று பலதரப்பட்ட அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த அரண்மனையில் உலாவருவது ஒரு வியக்கத்தகு மாற்றமே.

இன்று தனி மாகாணங்களாக இருக்கும் நெல்லூர், வடஆற்காடு, தென்னாற்காடு, திருச்சினாப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் அன்று கர்நாடக நவாப் அரசின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. ஆற்காடு நகரம் அன்று இந்த அரசின் தலைநகரமாக விளங்கியது. சில நேரங்களில் கர்நாடக நவாப் ஆற்காடு நவாப் எனவும் அறியப்பட்டார். சேப்பாக்கம் அரண்மனை கர்நாடக அரசின் ஆளுமையில் பல ஆண்டுகள் இருந்தது. இங்குள்ள சில சரித்திர சான்றுகள் மூலம் அரசு குறித்த ஒரு தெளிவான சரித்திரத்தை அறிய முடிகிறது.

ஏற்கனவே கூறியப்படி பிரான்சிஸ் டே மதராஸை வாங்கும் போது அந்நகரம் மங்கிக் கொண்டிருந்த விஜயநகர இந்து சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டிருந்தது. அந்த அரசின் பிரதிநிதியான சந்திரகிரி அரசரிடமிருந்து மதராஸை வாங்கியதற்கான சாசனத்தை டே பெற்றிருந்தார். ஏழு வருடங்களுக்குப் பிறகு சந்திரகிரி அரசர் கோல்கொண்டா சுல்தானால் அரியணையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு மைசூரில் தஞ்சமடைந்தான். அச்சமயம் கோல்கொண்டா சுல்தான் கர்நாடக நவாபையும் மற்றும் ஹைதராபாத் நிஜாமையும் வெற்றி கொண்டதன் காரணத்தால் மதராஸ் கோல்கொண்டா சுல்தான் வசமானது. ஆங்கிலேய கும்பனியார் சுல்தான் அரசிடமிருந்து மதராஸ் தங்கள் வசம் வந்ததை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை சாமர்த்தியமாகப் பெற்றார்கள். ஆனாலும் குறுகிய காலத்தில் சுல்தானின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.

ஷியா வம்சத்தைச் சேர்ந்த கோல்கொண்டா சுல்தான், ஷியாவம்சத்தின் எதிரியும் முழுமையாக இந்தியாவை தன் ஆளுமைக்கு உட்படுத்த விரும்பியவருமான சக்ரவர்த்தி ஔரங்கசீபால் தோற்கடிக்கப்பட்டான்.

ஔரங்கசீப் ஹைதராபாதை ஒரு நிஜாமின் ஆட்சிக்கு உட்படுத்தி அவனை தக்காணத்து அதிபதி ஆக்கினார். அதே போல் கர்நாடகத்தை ஆள ஒரு நவாபை நியமித்து அந்த நவாப் தக்காண அதிபதிக்கு கீழ்ப்படிந்து ஆள உத்தரவிட்டார்.

எனினும் ஔரங்கசீபைத் தொடர்ந்த மற்ற முகலாய சக்கர வர்த்திகளின் ஆட்சியில் முன்னேற்றங்களோ, மாற்றங்களோ இல்லாததோடு அவர்கள் திறமையற்றவர்களாகவே இருந்தனர். பேரரசனான ஔரங்கசீப் மறைந்த பிறகு ஹைதரபாத் நிஜாம் தன்னை ஒரு சுதந்திர மன்னனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு கர்நாடக நவாபை தன் ஆளுமைக்கு உட்படுத் தினான்.

1749இல் நவாப் பதவிக்கு ஒரு போர் நிகழ்ந்தது. பாண்டிச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர்கள் ஒரு நவாபின் வாரிசையும், மதராஸிலிருந்த ஆங்கிலேயர்கள் மற்றொரு நவாபையும் ஆதரித்தனர். இந்நிகழ்ச்சி வீரமும் விவேகமும் நிறைந்த ஒரு எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. பிரிட்டிஷ்காரர்கள் ஆதரித்த நவாபை இந்தப் போரில் வெற்றிப் பெறச்செய்ய தன் எழுதுகோலுக்கு பதிலாக வாளை கையிலிலெடுத்த கிளைவ் ஆற்காட்டை நோக்கி படையெடுத்து வெற்றியும் கொண்டான். அந்த வெற்றியை பாதுகாக்க அங்கேயே பல நாட்கள் முற்றுகையும் இட்டான். கிளைவ் வெற்றி பெற்றதால், வாலாஜாவின் நவாபான முகமது அலி தனக்கு எதிர்ப்புகள் எதுவுமின்றி கர்நாடக நவாபாகப் பதவியேற்றா£ன். பின்னாளில் ஆங்கிலேயர்களின் ஆதரவோடு தன்னை ஹைதராபாத் நிஜாமின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரு சுதந்திர மன்னனாகத் திகழ்ந்தான். வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு நவாபாக பதவியேற்ற பின் அங்கிருந்த அரசியல் உட்பூசல்களை தவிர்க்கவும், அதனால் தனக்கு ஏற்பட இருந்த ஆபத்துக்களை அகற்றவும் ஆங்கிலேய ஆளுனரை அணுகி தானும் தன் குடும்பமும் தங்குவதற்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு அரண்மனை கட்டிக் கொள்ள அனுமதி பெற்றான். அரண்மனையின் கட்டிட வேலைகளுக்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே கோட்டைக்குள் இருந்த ஒரு தெருவுக்கு அரண்மனைத்தெரு என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தத் தெருவில் நவாப் தங்குவதற்கு அரண்மனையும் உருவாக இருந்தது. ஆனால் அத்திட்டம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. அதற்கு அடுத்த வருடம் அரண்மனைக்கட்ட தேவையான ஒரு இடம் தனியாரிடமிருந்து சேப்பாக்கத்தில் வாங்கப்பட்டது. அந்த அரண்மனையைக்கட்ட பிரிட்டிஷ் பொறியாளர்கள் அமர்த்தப்பட்டனர். சில நாட்களில் அங்கு அழகிய மாளிகை ஒன்று உருவானது. இதுதான் சேப்பாக்கம் அரண்மணை உருவான கதை.

அரண்மனையைச் சுற்றிக் கட்டப்பட்ட மதில் சுவற்றுக்குள் தற்போது அரசாங்கக் கட்டிடங்களும் அதை அடுத்த காலி நிலப்பரப்பும் அடங்கி இருந்தன. அக்காலகட்டத்தில் சேப்பாக்கம் அரண்மனையில் பல அரிய பெரிய அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அரண்மனையை கட்டி முடித்தவுடன் நவாப் மதராஸின் ஆளுனருக்கும் மற்ற கவுன்சில் உறுப்பினர்களுக்கும் ஒரு காலை நேர உணவை மாபெரும் விருந்தாக அளித்தான். அந்த உறுப்பினர்களில், பிற்காலத்தில் பிரிட்டிஷ் இந்திய சரித்திரத்தில் புகழ் பெற்ற வாரன் ஹேஸ்டிங்கும் (Warren Hastings) அடங்குவார். காலை விருந்து முடிந்தவுடன் அன்பளிப்பாக ரூ. 30,000த்தை விருந்தினர்களுக்கு நவாப் பகிர்ந்து கொடுத்தான். ஆளுனருக்கு அதிகபட்சமாக ரூ.7000மும் மற்றவர்களுக்கு அவரவர் நிலைக்குத் தக்கவாறு படிப்படியாக தொகையைக் குறைத்தும் கொடுத்து, கடைசி பட்சமாக காரியதரிசிகள் ஒவ்வொருக்கும் ரூ.1000 வீதம் அளித்தான்.

இருப்பினும் பின் வரும் நாட்களில் வாலாஜா நவாபிற்கும் மதராஸின் அப்போதைய ஆளுனருக்கும் இடையே சரியான நட்புறவு இருக்கவில்லை.

1780இல் ஹைதர் அலி ஒரு மாபெரும் படையோடு திடீரென கர்நாடகத்தின்மேல் படையெடுத்து பிரிட்டிஷ் படைகளை சிதற அடித்தான். ஹைதர் அலியின் மகனான திப்புவும் தந்தையை போலவே பிரிட்டிஷ் படைகளை கதி கலங்க செய்தான். மதராஸில் கும்பனி வசம் இருந்த கஜானா போரினால் காலியானது. நவாபின் தலைநகர் எதிரிகள் வசம் இருந்ததால் அவராலும் இந்தப் போருக்கு பொருளுதவி செய்ய இயலவில்லை. ஆனாலும் கடைசியாக போரில் திப்பு தோற்கடிக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ்காரர்கள் சாதுரியமாக கர்நாடகத்தின் வரவு செலவுகளை தங்களுடைய கண்காணிப்பில் வைத்துக்கொண்டனர். சில மாதங்களுக்குப் பிறகு கர்நாடகத்தின் வரவு செலவுகளை பிரட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தது ஒரு தவறான செயல் என நவாப் உணர்ந்தான். பிறகு அதை ரத்து செய்ய வேண்டும் என அவன் கோரிக்கை வைத்ததும், புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர் பாரோன் மகார்ட்னே (Baron Macartney) நவாபை தன்னுடைய சாகசமான வார்த்தைகளால், அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும்படி செய்தான். நவாப் இது குறித்து பல்வேறு கடிதங்களை தன் அரசு சார்பாக கும்பனி நிர்வாகத்திற்கு எழுதினான். மேலும் ஒரு குறிப்பிட்ட கடிதத்தில் தன்னை ஆளுனர் மகார்ட்னே அவமதித்ததோடு மரியாதை குறைவாகவும் நடத்தினார் என குறிப்பிட்டிருந்தான். மற்றொரு கடிதத்தில், மிகவும் விரிவாக, அவன் எந்தெந்த சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டான் என்பதை விளக்கமாக எழுதியிருந்தான். இதனால் இங்கிலாந்திலிருந்த கும்பனி நிர்வாகிகள் பலமும், தகுதியும் வாய்ந்த நவாபின் கருத்தை ஏற்று அவனுக்கு சாதகமான முடிவை எடுத்தனர். இதனைக் கேள்வியுற்ற மகார்ட்னேயின் நண்பர்கள், கும்பனி நிர்வாகிகள் பணபலம் படைத்த நவாபிற்கு சாதகமாக முடிவெடுத்தது பற்றி கூறியதும் அந்த அவமானத்தைப் பொறுக்காத மகார்ட்னே தனது ஆளுனர் பதவியை உதறி விட்டு இங்கிலாந்துக்கு போய்ச் சேர்ந்தான். இதன் பின் நவாபிற்கும் மதராஸிலிருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே இருந்த நல்லுறவு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. வாலாஜா நவாப் தனது 78வது வயதில் இயற்கை எய்தியதும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தில் அவனது மரணம் பற்றிய சிறு குறிப்பு வெளியாகியது. அவனுக்குப் பிறகு பதவியேற்ற அவனது மகன் உம்தத் உல்- உமாராவின் அரசியல் வாழ்க்கை பிரகாசமானதாக இருக்கவில்லை . உமாரா பதவியேற்றபின் நவாபின் வரவு செலவுகள் பிரிட்டிஷாருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என ஆளுனர் விடுத்த வேண்டுகோளை நவாப் நிராகரித்தான். அதனால் கோபமுற்ற ஆளுனர் இது சம்பந்தமாக நவாபை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் நவாப் கோபமுற்றான். இந்தத் தருணத்தில் திப்புசுல்தான் கும்பனியுடன் மீண்டும் ஒரு படையெடுப்புக்குத் தயாராகி, தன் தலைநகரைக் காக்க பெரும் பராக்கிரமத்துடன் சண்டையிட்டு மரணமடைந்தான். அவன் மரணத்திற்குப் பிறகு, திப்புவிற்கும் மற்றவர்களுக்குமிருந்த கடிதப்போக்குவரத்துகளை ஆராய்ந்த கும்பனியார், ஆற்காடு நவாப் பிரிட்டிஷார் குறித்து பெரும்பாலான தகவல்களை திப்புவிடம் அளித்திருப்பது தெரியவந்து, அதை ஒரு ராஜதுரோக குற்றமாக தீர்மானித்தனர்.

இதன் காரணமாக கர்நாடகத்தை பிரிட்டிஷ் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்த முடிவு செய்தது. இதனிடையே நவாப் நோய்யுற்றதால் உடனடியாக எவ்வித முடிவும் எடுக்கமுடிய வில்லை . நவாப் இறந்த பிறகு சேப்பாக்கம் அரண்மனையை பிரிட்டிஷ் தன் வசமாக்கிக் கொண்டது.

ஆனாலும் நவாபின் மகன் தனது தந்தையின் அரசுரிமை யையும், அரண்மனையையும் பிரிட்டிஷ் அரசு உரிமையாக்கியதை ஏற்க மறுத்ததால் பலவந்தமாக அப்புறப்படுத்தப் பட்டான். அதற்கு பதில் அவனது நெருங்கிய உறவினர் ஒருவரை அரியணையில் அமர வைத்தனர். கர்நாடக அரசு பிரிட்டிஷ் வசம் இருந்ததால் அதற்குப்பின் வந்த நவாபுகள் பெயரளவில் அரசுக் கட்டிலில் அமர்த்தப்பட்டனர். 1855இல் அரியணையிலிருந்த மூன்றாவது நவாப் வாரிசு இல்லாமல் இறக்க நேரிட்டது. இத் தருணத்தில் இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக சரித்திரப் புகழ் வாய்ந்த டல்ஹௌசி பிரபு (Lord Dolhousie) இருந்தான். அவனது தீர்மானத்தின் படி தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களில் யாராவது வாரிசு இல்லாமல் இறக்க நேர்ந்தால் அந்த மாகாணத்தின் அரசு பிரிட்டிஷாருக்கு சொந்தமாகும் என அறிவித்திருந்தான். அதன் காரணமாக கர்நாடக அரசு பிரிட்டிஷ் அரசின் ஒரு அங்கமாக மாறத் தொடங்கியது. இவ்விதமாய் நவாப்களின் வம்ச அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நவாபிற்கு சொந்தமான சேப்பாக்க அரண்மனை பிரிட்டிஷாரால் விலைகொடுத்து வாங்கப்பட்டு ஒரு அரசு அலுவலகமாக மாற்றப்பட்டது.

சேப்பாக்கத்தின் தெருக்களிலும் சந்துகளிலும் வசித்து வந்த எண்ணற்ற முகமதியர்கள் நவாபை ஒரு அரசு வாரிசாக மட்டுமல்லாமல் மதத்தலைவராகவும் மதித்து வந்ததால் அவரது மறைவு அவர்களை மனரீதியாக பாதித்தது. அத்துடன் பிரிட்டிஷாரின் புதிய கொள்கையால் வேறு ஒரு அரசியல் தலைவரோ அல்லது மதத்தலைவரோ நியமிக்கப்படாமலிருந்தது அவர்களை கவலைக்குள்ளாக்கியது. இதன் பிறகு இந்தியப் புரட்சிக்குப் பின் இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசு முகமதியர்களின் மத ரீதியான உணர்வுகளை மதிக்க ஆரம்பித்தது. மறைந்த நவாபிற்கு நெருங்கிய உறவினர் ஒருவரை தேர்ந்தெடுத்து, லண்டனிலிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அனுமதியோடு நவாபின் வம்சாவளி ஆட்சியை தொடரச் செய்தது. அவருக்கு அமிர் - இ - ஆற்காடு அல்லது ஆற்காடு இளவரசர் எனப் பட்டமும் சூட்டியது. இந்த ஆற்காடு இளவரசர் பட்டம், நவாப் பதவியை விட உயர்ந்ததாகும். இளவரசருக்கும் அவரது சுற்றத்தாருக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1,50,000ஐ பிரிட்டிஷ் அரசு செலவு செய்து வந்தது. (கர்நாடகத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுதோறும் கிடைத்த வருவாயை இந்தத் தொகையோடு ஒப்பிடும் போது இது மிக அற்பமானதே.) "அமீர் மஹால்'' என அழைக்கப்பட்ட ஒரு அரண்மனையில் ஆற்காடு இளவரசர் வசித்து வந்தார். இந்த மஹால் ராயப்பேட்டையிலுள்ள ஒரு விசாலமான இடத்தில் அமைந்துள்ளது. அமீர்மஹாலின் உயரமான சிகப்பு நிற மதில் சுவரும் அதை ஒட்டி அமைந்த இரும்புக் கதவுகளும் மஹாலுக்கு ஒரு கம்பீரமான அழகைத் தந்தன. பல நேரங்களில் அந்த இரும்புக் கதவுகளின் வாயிலில் பழைய துப்பாக்கிகளை ஏந்திய காவலாளிகள் காவல் காத்து வந்தனர். அரண்மனையின் மேல் மாடியில் இளவரசருக்கு சொந்தமான இசைக்குழு எழுப்பிய கிழக்கிந்திய இசைகள் இடை இடையே ஒலித்துக் கொண்டேயிருந்தது.

மெரினாவில் உள்ள சேப்பாக்கம் அரண்மனையை சரித்திரக் கண்ணோடு நோக்கினால் அது ஒரு வெறுமையான அரசு அலுவலக கட்டிடம் அல்ல என்ற உண்மைத் தெரியவரும். ஒரு காலத்தில் அந்த அரண்மனையைச் சுற்றியிருந்த மதில் சுவர்களுக்குள் பல பிரம்மாண்டமான மத நிகழ்ச்சிகளும் மற்ற பல்வேறு சிறப்பு வைபவங்களும் நடந்து வந்திருக்கின்றன என்பதை கற்பனையில் உணர முடிகிறது. சிறப்பான சீருடை அணிந்த காவலாளிகள் அந்த அரண்மனையின் முன்புறம் உள்ள தோட்டத்தினுள் கம்பீரமாய் குதிரைமேல் அமர்ந்து மகிழ்ச்சி ததும்ப உலாவந்த காட்சியை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ராஜகம்பீரத்துடன் கூடிய உடைகளை அணிந்த நவாப் அரண்மனைப் படிகளின் கீழே ஒய்யாரமாய் இறங்கி, அங்கே முன்னங்கால்களை மடக்கி குனிந்து நின்று கொண்டிருக்கும் யானையின் மேல் ஏறி வெள்ளி அம்பாரி மீது அமரும் காட்சி நம் கண்முன்னே ஒரு திரைப்பட காட்சி போல் விரிகிறது. கீழ்த்திசை நாட்டின் இசைகள் ஒலிக்க, மெல்ல அந்த ஊர்வலம் சாலையைக் கடந்து செல்லும் நிகழ்ச்சியை மனக் கண்ணால் உணர முடிகிறது. அந்த அற்புதமான வண்ணமய காட்சிகளை மேல் மாடியிலிருந்த பல ஜன்னல்களில், எந்த ஜன்னலிலிருந்து அரண்மனையின் அந்தப்புற அழகிகள் கவனித்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் இன்று அந்த காட்சிகள் அனைத்தும் மறைந்துபோய் மறந்த நிலையில் இருக்கின்றன. அதற்கு பதிலாக, இன்று வேலை முடிந்த களைப்போடு மாலை வேளைகளில் வீடு திரும்பும் அரசு ஊழியர்களின் அணிவகுப்பைத்தான் அங்கு காண முடிகிறது. அருகே அமைந்த மெரினாவில் “மதராஸ் பாதுகாப்பு படையினர் '' இசைக்கும் கிழக்கிந்திய சேர்ந்திசைதான் இந்த அணிவகுப்பிற்கு பின்னணியாக அமைகிறது. அந்த இசைக்குழுவைச் சுற்றி வயதான பாட்டிமார்களும், குழந்தைகளும் குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நாம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தாலும் சில நேரம் நாம் கடந்த காலத்தில் வாழ்ந்த உணர்வு நம்மிடையே வியாபித்து விடுகிறது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.