கும்பனி ஒரு கவனமான திட்டத்துடன் வெள்ளையர் மற்றும் கருப்பர்நகரங்களை உருவாக்கியது. இருந்தும் அவர்கள் இதன் வளர்ச்சியைக் கண்டு அவ்வளவாக திருப்தியடைய வில்லை. தங்களது ஆதிக்க எல்லையை விரிவுபடுத்த அங்குள்ள மக்களின் அயராத உழைப்பை ஒரு கருவியாகவே பயன்படுத்தினர். ஒரு காலத்தில் 'பிரான்ஸிஸ் டே" வாங்கியது ஒரு துண்டு நிலமே. அந்த நிலம் அன்று கூவம் முகத்துவாரத்திலிருந்து இன்றைய துறைமுகத்தைக் கடந்த காசிமேட்டுக்கு அருகிலுள்ள இடம் வரை நீளவாக்கில் நீண்டிருந்தது. மறுபக்கத்தில் அகலவாக்கில், வடக்கு ஆறு என அழைக்கப்பட்ட கோசரான் ஓடை (சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் 'பீபில்ஸ் பார்க் 'கிற்கு இடைப்பட்ட ஆறு) வரை பரவியிருந்தது. அன்று பிரான்ஸிஸ் டே வாங்கிய சிறிய நிலத்தை ஒட்டி இன்றைய வளர்ந்துவிட்ட நகரத்தின் மற்ற பகுதிகள் எப்படி கும்பனி வசம் வந்தது என்பது பற்றி அறிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யம் மிகுந்த கட்டமாகும்.
பல்வேறு காலங்களில் மதராஸ் பட்டணத்தை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த குறுநில மன்னர்களின் பிரதிநிதிகள் அவ்வப்போது பட்டணத்தைச் சுற்றியிருந்த கிராமங்களை கும்பனிக்கு மானியமாக தாரை வார்த்தனர். ''டே'' மதராஸை விலைக்கு வாங்கிய 20 வருடங்களுக்குப் பிறகு முதன் முதலாக திருவல்லிக்கேணி கிராமம் இந்த முறையில்தான் மானியமாக கும்பனிக்குக் கிடைத்தது. கோல்கொண்டா முகமதிய அரசின் பிரதிநிதிக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.175 வாடகையாகத் தரப்பட்டது. கோல்கொண்டா அரசின் வம்சாவளிகளின் ஆட்சி குறுகிய காலத்தில் முடிவுற்றதால் அந்தத் தொகையும் கொடுப்பது நின்றுபோனது. அன்றைய கவர்னர் எலிஹு ஏல் டெல்லியிருந்த முகலாயப் பேரரசன் ஔரங்கசீபுக்கு கொடுத்த ஒரு மனுவின் காரணமாய் கும்பனிக்கு தொண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் போன்ற கிராமங்கள் மானியமாகக் கிடைத்தன. சில நாட்கள் கழித்து ஔரங்கசீபின் மகனின் பதவிகாலத்தில் கும்பனிக்கு சொற்ப வாடகையில் நுங்கம்பாக்கமும் கிடைத்தது. அந்த இடம் அன்று ஐரோப்பியர்கள் வசித்து வந்த முக்கியமான இடமாக இருந்தது. அதை ஒட்டியிருந்த மேலும் 4 கிராமங்கள் மானியமாகக் கும்பனிக்குக் கொடுக்கப்பட்டன. அன்றைய மதிப்பில் 1500 பகோடாக்கள் (சுமார் ரூ. 5250) தான் இந்த கிராமங்களுக்கு (நுங்கம்பாக்கம் மற்றும் அதை ஒட்டிய நான்கு கிராமங்கள்) ஆண்டு வாடகையாகும். இந்த வாடகை மிகவும் சொற்பமானது என்று அரசின் அதிகாரிகள் எதிர்க்குரல் எழுப்பவே அவர்களை மகிழ்ச்சியூட்டி தங்கள் வசம் வைத்துக் கொள்ள ஒரு முகமதியர் மற்றும் பிராமணர் மூலம் ரூ.700/-ஐ அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும்படி கையூட்டாக கும்பனியினர் அனுப்பினார்கள். அந்த அதிகாரிகளும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு ஆவணங்களைச் சரிசெய்தனர். இதன் மூலம் கையூட்டு என்பது அன்றைய நாளிலேயே வழக்கிலிருந்தது என்பது தெளிவாகிறது.
புரசைவாக்கத்திற்கும் எழும்பூருக்கும் இடைப்பட்ட வேப்பேரி கிராமம் அன்று பல்வேறு பெயர்களில் ஆவணங்களில் இடம் பெற்றிருந்தது. அந்த இடத்தை நிர்வாக காரணங்களுக்காக கும்பனி தன் வசமாக்க பல முயற்சிகள் எடுத்தது. ஆளுனர் ஏலின் தொடர்ந்த முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. பின் 1742இல் ஆற்காடு நவாப் வசம் இருந்த அந்த இடத்தை கும்பனி அவனிடமிருந்து பெற்றது. அதைக் கைப்பற்றிய விதம் மிகவும் சுவாரசியமானது.
அந்த நிலத்தை ஆண்ட ஆற்காடு நவாபிற்கு முன் பதவியிலிருந்த நவாப் திடீரெனக் கொல்லப்பட்டான். கர்நாடக நவாப் அரசோ கொலை செய்த எதிரியின் திட்டத்திற்கு இணங்காமல் கொலை செய்யப்பட்ட நவாபின் மகனையே மீண்டும் பதவி ஏற்கச் செய்தது. இந்தப் புதிய நவாப் அப்போது கருப்பர்நகரத்தில் இருந்த ஒரு பெரிய மாளிகையில் வசித்த அனுபவமில்லாத இளைஞர். கும்பனி இந்த சந்தர்ப்பத்தை தந்திரமாகப் பயன்படுத்தி கூவம் நதியை ஒட்டியிருந்த ஒரு பெரிய தோட்டத்தின் (தற்போது பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இருக்கும் இடம்) மாளிகைக்கு அவனை நகர்வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்று அவன் பதவியேற்பை பிரம்மாண்டப்படுத்தியது. விழா முடிந்ததும் அவனை மீண்டும் அவனது கருப்பர்நகர மாளிகைக்கு ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். இந்த அரசியல் சூதாட்டத்தின் விளைவாக அந்த அனுபவமற்ற நவாபிடமிருந்து வேப்பேரி கிராமத்தை இலவசமாகப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அதைச் சுற்றியிருந்த பெரம்பூர் மற்றும் இதர கிராமங்களையும் அவர்கள் வசம் சேர்த்துக்கொண்டனர். நவாப் அடைந்த மனமகிழ்ச்சியின் காரணமாக இந்த இடங்கள் கும்பனிக்கு தாரை வார்க்கப்பட்டன. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அந்த நவாப் இரு வருடங்களுக்குள்ளாகவே அவன் தந்தையைக் கொலை செய்த அதே எதிரிகளால் கொலை செய்யப்பட்டான். இது கும்பனிக்கு சாதகமாகவே அமைந்தது.
1749இல் சாந்தோமை கைவசப்படுத்திய விதமும் ருசிகரமானதே. அக்காலத்தில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் என்ற இரு பெயர்கள் ஒரே இடத்தைக் குறிக்க பயன்படுத்தப் பட்டவையாகும். காலப்போக்கில் இவை இரண்டும் தனித்தனி இடங்களாகவே கருதப்பட்டன. மைலாப்பூர் ஒரு புராதன இந்திய நகரமாக கிருஸ்து பிறப்பதற்கு முன்னமே இருந்து வந்திருக்கிறது. சாந்தோம் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த போர்ச்சுகீசியர்களால் மைலாப்பூரின் அருகில் அமைக்கப்பட்ட ஒரு புதிய குடியிருப்பாகும். ஏசுவின் பிரதிநிதியான செயின்ட் தாமஸ் தென்னகம் வந்தபோது மைலாப்பூருக்கு அருகே கொலை செய்யப்பட்டார் என்ற கூற்று அது சமயம் நிலவி வந்தது. போர்ச்சுகீஸியர்கள் இந்த மண்ணில் வந்து இறங்கிய போது அந்த புனித மதகுருவின் பதப்படுத்தப்பட்ட உடலைக் காண விரும்பினர். ஆனால் அவர்கள் கண்டதோ சிதிலமடைந்த ஒரு கிருஸ்தவ தேவாலயத்தையும் அதை ஒட்டிய ஒரு கல்லறையையும் மட்டுமே. அதையே செயின்ட் தாமஸின் கல்லறை என்று நம்பினர். அந்த இடத்தில் உடனடியாக போர்ச்சுகீஸிய மடாலயம் ஒன்றை உருவாக்கினர். அந்த இடத்தைச் சுற்றி அவர்கள் தங்களுக்கென ஒரு நகரத்தை அமைத்துக் கொண்டனர். சில நாட்களில் அது ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக உருவானது. அதைச் சுற்றி ஒரு மதில் சுவரை எழுப்பி சாந்தோமிலிருந்து ஆங்கிலேயர் வசமிருந்த மைலாப்பூரைப் பிரித்தனர். 16ஆம் நூற்றாண்டில் விலை மதிப்பற்ற கற்களை வியாபாரம் செய்யும் ஒரு இத்தாலிய வியாபாரி, தான் இந்தியாவில் கண்ட மற்ற இடங்களை போல் சாந்தோமும் மிக அழகான ஒரு நகரமென்று வர்ணித்திருக்கிறார். மேலும் மைலாப்பூர் மண் சுவர்களால் சூழப்பட்ட ஒரு அழகிய இந்திய குடியிருப்பு என்றும் எழுதியுள்ளார். இதனால் மைலாப்பூர் போர்ச்சுகீஸியர் காலத்தில் ஒரு சரித்திர நகரமாக திகழ்ந்தது என்று தெரிகிறது. பிற்காலத்தில் இந்த இரண்டு நகரங்களும் இணைக்கப்பட்டன.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஆங்கிலேயர்கள் வந்த போது போர்ச்சுக்கீஸியர்களின் வியாபாரம் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. கும்பனியின் வியாபார வளர்ச்சி பெருகி வளர வளர போர்ச்சுகீஸியர்களால் வளர்க்கப்பட்ட சாந்தோமின் புகழ் மேலும் மேலும் மங்கிக் கொண்டே வந்தது. சாந்தோமை முதலில் கைப்பற்றியவன் இந்திய மண்ணை ஆண்ட கோல்கொண்டாவின் முகமதிய அரசனாவான். அதன் பின் பிரெஞ்சுப்படைகள் சாந்தோமை அவனிடமிருந்து கைப் பற்றினர். இருவருடங்களுக்குப் பிறகு டச்சுக்காரர்களின் துணையோடு மீண்டும் முகமதிய அரசு அதைச் கைப்பற்றியது.
போருக்குப் பிறகு டச்சுக்காரர்கள் தங்களுக்குக் கிடைத்த பொன், பொருள் போன்ற வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைந்த நிலையில் சாந்தோமை கோல்கொண்டா அரசனிடமே விட்டு வைத்தனர். கும்பனியின் சுயநலத்தோடு கூடிய அறிவுரையைக் கேட்ட கோல்கொண்டா அரசு மைலாப் பூரையும் சாந்தோமையும் பிரித்த சுவர்களை தகர்த்தனர். இந்த சாந்தோம் நகரம் மீண்டும் விற்பனைக்கென அறிவிக்கப்பட்டது. கும்பனியும் போர்ச்சுகீசியர்களும் எப்படியாவது அதை நல்ல விலைக்கு வாங்கி தங்கள் வசமாக்க விரும்பினர். ஆனால் காஸா வெரோனா (Cassa Verona) என்ற பணக்கார முகமதியன் தனக்குச் சாதகமான கோல்கொண்டா அதிகாரிகளிடம் பேசி அந்த இடத்தை இரண்டு வருட அனுபவ பாத்தியதைக்குப் பெற்றுக் கொண்டான். அதன் பிறகு அந்த இடம் பூந்தமல்லியில் இருந்த இந்திய ஆளுமைக்கு அதே முறையில் அளிக்கப்பட்டது. பின்னாளில் போர்ச்சுகீஸியர்கள் அந்த இடத்தை பூந்தமல்லி ஆளுனரிடமிருந்து ஒரு பெரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டனர். 17ஆம் நூற்றாண்டு இறுதியில் இந்திய முகலாய பேரரசரான ஔரங்கசீப் கோல் கொண்டாவை ஆண்ட அரசனை பல்வேறு காரணங்களுக்காக பட்டமிழக்கச் செய்தார். போர்ச்சுகீஸியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய சாந்தோமை விட்டு வெளியேறாத போதும், அது அன்றைய முகலாய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே திகழ்ந்தது. அதை நிர்வகிக்க ஆற்காடு நவாப் முகலாயப் பேரரசால் நியமிக்கப்பட்டார். ஔவுரங்கசீப் இறந்த பிறகு முகமதியப் பேரரசு சிதறுண்ட நிலையில், சாந்தோம் ஆற்காடு நவாபின் தலைமைக்கு உட்பட்ட ஒரு சுதந்திர பிரதேசமாகத் திகழ்ந்தது.
1749இல் பிரெஞ்சுப் படைகளால் கைப்பற்றப்பட்ட மதராஸ், ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட "அக்ஸ் - லா - சேப்பலின்'' உடன்படிக்கையின்படி பாரிஸில் இருந்து கிடைத்த உத்தரவின் பேரில் கும்பனி வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கைமாற்றம் அன்றைய பாண்டிச்சேரி ஆளுனராயிருந்த டூப்ளேவிற்கு ஒரு மாபெரும் ஏமாற்றத்தை அளித்தது. மதராஸ் தன் கையை விட்டு போன பிறகு அவன் அதற்கு ஈடாக சாந்தோமைப் பெற திட்டமிட்டான். இத்திட்டத்தை மோப்பமிட்ட கும்பனியார் தங்கள் அருகில் வலிமைமிக்க பிரெஞ்சுப் படை மீண்டும் தலை தூக்காமல் இருக்கவும், டூப்ளேயின் எண்ணத்தை தடுக்கவும் ஆற்காட்டு நவாபை அணுகி சாந்தோம் மற்றும் மைலாப்பூரை மானியமாகத் தங்களுக்கே வழங்க கோரினார்கள். அதற்கு ஈடாக ஆற்காடு நவாப் தான் விரும்பும் நேரத்திலெல்லாம் தனக்கு தேவையான பணத்தையும் மற்றும் போருக்கு தேவையான வீரர்களையும் கொடுக்க வேண்டும் என கம்பனிக்கு நிபந்தனை விதித்தான். அதன்படி ஒரு வழியாக சாந்தோம் ஆங்கிலேய ஆட்சியின்கீழ் வந்தது. அதற்குப் பிறகு கௌண்ட் லாலியின் பிரெஞ்சுப்படையாலும், மைசூர் சுல்தான் ஹைதர் அலியின் படையாலும் சாந்தோம் தொடர்ந்து தாக்கப்பட்டாலும் அது ஆங்கிலேயர் வசமே இருந்து வந்தது.
இன்றுள்ள புதிய நவீன மதராஸ் நகரத்தின் பல்வேறு பகுதிகள் எவ்விதம் ஆங்கிலேயர் வசம் வந்தன என்பது குறித்து மேற்சொன்ன விரிவான தகவல்கள் ருசிகரமானவை என்பதில் ஐயமில்லை . இந்த நகரத்தை அடைய ஆங்கிலேயர்கள் பின்பற்றிய வழிமுறைகள் பல நேரங்களில் போற்றத்தக்கதாய் இல்லாவிட்டாலும் கிழக்கிந்திய கும்பனி தங்கள் வாணிபத்தை காப்பாற்றிக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் "வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்'' என்ற உத்தியைக் கையாண்டதில் தவறு இருக்க நியாயமில்லை,
கும்பனி தனது ஊழியர்களை துவக்கத்தில் வியாபாரத்தில் லாபம் ஈட்டும் நோக்கில் மட்டுமே இந்தியாவிற்கு அனுப்பினாலும், அவர்களால் உருவாக்கப்பட்டு ஆளப்பட்ட மதராஸ்நகரம் நோக்கி மக்கள் கூட்டம் வந்தேறிய வண்ணமே இருந்தது. அதற்கு அன்றைய மக்களிடமிருந்த சுகபோக வாழ்க்கைக் கனவுகளே முக்கிய காரணமாகும்.