ஹெத்செப்த் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அவளுடைய தந்தையான பாரோதுத்மோஸ் / குறித்துத் தெரிந்து கொள்வது மிக அவசியமானது. போன அத்தியாயத்தில் நாம் பார்த்த பாரோ ஆமோசின் மகன் பாரோ அமனோதெப் 1. அமனோதெப்பிற்கு வாரிசு என்கிற வகையில் புழுப் பூச்சிக்கூட உண்டாகாததால் அவன் ஒரு ஈக்கட்டான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவு அவனுக்குப் பிறகான வாரிசு யார் என்று அறிவிப்பது. இதற்கு அமனோதெப் எடுத்த முடிவு யாரையாவது தன்னுடைய வாரிசாகத் தத்துயெடுத்துக் கொள்வது என்பது. அதன்படி தன்னுடைய தளபதிகளில் மிக அற்புதமான தலைமைத் திறனும் போர் குணமும் கொண்ட துத்மோஸ் -யை பாரோவுக்கான அடுத்த வாரிசாக அறிவித்தான் அமனோதெப். துத்மோஸ் / சாதாரண நிலையிலிருந்து உயர்ந்தப் பதவிக்கு வந்தவன். அதனால் அவனை அடுத்தப் பாரோவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் அரண்மனையில் சூழ்ச்சிகள் உருவானது.
துத்மோஸ் அரண்மனை சூழ்ச்சிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு அடுத்தப் பாரோவாகப் பதவியேற்றுக்கொண்டான். எகிப்தின் நான்கு எல்லைகளையும் தாண்டி தூரக் கிழக்கு நாடுகளிலும் தெற்கு ஆப்பிரிக்க எல்லைகளிலும் எகிப்து வல்லரசாக மாறியது இவனுடைய ஆட்சியின் கீழ்தான். தெற்கில் நுபியாவைக் கடந்தும் வடக்கில் டைகிரீஸ், யூப்பிரடிஸ் நதிப் பகுதி நாடுகளையும் கடந்து எகிப்தின் எல்லையை விரிவாக்கியவன் துத்மோஸ். எகிப்தின் நான்கு திசைகளிலும் இவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எதிரிகள் தெறித்து ஓடும் அளவிற்கு இராணுவ வெற்றிகளை அள்ளிக் குவித்தான். எகிப்தில் பாரோ அரச பரம்பரை ஆட்சித் தொடங்கி 1500 வருடங்கள் கழித்து எகிப்தை உலகின் வல்லரசு நாடாக மாற்றிக்காட்டினான் அவன். இத்தகைய வல்லமைப் படைத்ததுத்மோசுக்கு முதல் மகளாகப் பிறந்தவள் ஹெத்செப்த். தந்தையின் துணிச்சல் மற்றும் மன வலிமையில் பாதிக் கூடவா அவளுக்கு இல்லாமலிருந்திருக்கும். இருந்தது. துத்மோசின் துணிச்சலும் மன வலிமையும் அச்சரம் பிசகாமல் அவளுக்கும் இருந்தது.
ஹெத்செப்த்தின் வாழ் நாள் கனவே தன்னுடைய தந்தைக்குப் பிறகு எகிப்திய வல்லரசின் அடுத்தப் பாரோவாகத் தான் பதவியேற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். ஆனால் அவளுடைய கனவு பலிக்கத்தான் எகிப்தில் வாய்ப்பில்லாமல் இருந்தது. எகிப்திய பாரோ சித்தாந்தத்தைப் பொறுத்தவரையில் இந்தப் புவியில் கடவுளின் பிரதியாக ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். பெண்கள் ஆண் பாரோக்களின் ஆட்சிக்கு உதவியாக வேண்டுமானால் இருக்கலாம். அப்படித்தான் ஹெத்செப்த்துக்கு முற்பட்ட காலங்களில் நடந்திருக்கிறது. இந்தச் சித்தாந்தத்தை எப்படியாவது உடைத்துவிட்டுத் தான் அடுத்தப் பாரோவாக வந்துவிடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தாள் ஹெத்செப்த். ஆனால் துத்மோஸ் இறந்த பிறகு அவனுடைய மகனான - ஹெத்செப்த்தின் தம்பியுமான - துட்மோஸ் II-விற்குப் பாரோ முடி சூட்டப்பட்டது. துட்மோஸ் II-வே ஹெத்செப்த்தின் கணவனும் கூட
துட்மோஸ் II இள வயதிலேயே இறந்துவிடப் பாரோ பதவி காலியானது. துட்மோஸ் II-விற்கும் ஹெத்செப்த்திற்கும் ஆண் வாரிசு பிறக்கவில்லை. ஆனால் மற்றொரு மனைவியின் மூலம் துட்மோஸ் II என்கிற ஆண் வாரிசு ஒன்று இருந்தது. ஆனால் அந்த ஆண் வாரிசு கைக் குழந்தையாக இருந்தபடியால் அடுத்தப் பாரோ யார் என்கிற குழப்பம் தென்படத் தொடங்கியது. ஹெத்செப்த் மிகச் சரியாக இந்தக் குழப்பம் ஏற்படுத்திய சூழ்நிலையைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டாள். எகிப்து கண்ட முதல் பெண் பாரோவாகத் தன்னை அறிவித்துக்கொண்டாள் ஹெத்செப்த். அதுவரை ஆண் பாரோக்களுக்கே பழகியிருந்த அரச இயந்திரம் முதல் முறையாக அதிகாரப் பூர்வப் பெண் பாரோவிற்குக் கீழ் இயங்கப் பழகிக்கொள்ள வேண்டியதானது.
அவளுக்கு எதிராக அரண்மனைத் தொடங்கி அனைத்து மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக் குரல்களை ஒன்றுமில்லாமல் ஆக்கினாள். அவளுடைய தந்தை ஏற்கனவே எகிப்தை உலகின் வல்லரசு நாடாக மாற்றிவிட்டிருந்ததால் அவள் மேற்கொண்டு படையெடுப்புகள் நிகழ்த்தி எகிப்தின் எல்லைகளை மேலும் மேலும் விரிவாக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. இதன் காரணமாக அவளுடைய கவனம் உள் நாட்டில் பல பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியெழுப்புவதில் திரும்பியது. நான் ஏற்கனவே பார்த்த பாரோ ராமேசிஸ்சிற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டும் காரியத்தைச் செய்தவள் ஹெத்செப்த், இப்படிக் கணக்கெயில்லாமல் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே போகிறாளே அராஜகமால்ல இருக்கு என்று பார்ப்பவர்கள் முனுமுனுக்கும் அளவிற்கு வடக்கில் சீனாய் மலைத் தொடங்கித் தெற்கே நுபியாவில் இருக்கும் பூஹென் கோட்டைவரை ஹெத்செப்த்தின் பிரம்மாண்ட கட்டிடங்களின் அணிவகுப்புதான்.
இதில் குறிப்பாக அவள் கவனம் செலுத்தியது தீப்ஸ் நகரில்தான். தீப்ஸ் நகரின் இப்ட்சட் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற அமூன்-ரா கோயிலின் அமைப்பையே தலை கீழாகப் புறட்டிப்போட்டுவிட்டாள். அமூன்-ரா கோயில் நினைத்தே பார்க்க முடியாத பிரம்மாண்டத் தோற்றத்தை பெற்றது. கோயிலின் நுழைவாயிலில் அவளுடைய ஆறு மிக மிகப் பெரிய உருவச் சிலையை நிற்கவைத்தால், அதுவும் அவளுடைய கண்களை நிறைவாக்காததால் விண்ணைத்தொடும் மூன்று ஆப்லிஸ்க்குகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. இந்த மூன்றில் ஒரு ஆப்லிஸ்கின் கீழ்ப் பகுதியில் தன்னைக் குறித்து இப்படிக் கல்வெட்டாகப் பொறித்துவைத்திருக்கிறாள், "மனம் முழுக்க நிறைந்திருக்கும் அன்புடன் இந்தக் காரியத்தை எனது தந்தை அமூனுக்காகச் செய்திருக்கிறேன்...... இனி வரும் எதிர்காலச் சந்ததி இதை உணர்ந்து கொள்ளும்படி அழைக்கிறேன், இந்த நினைவுச் சின்னத்தை எனது தந்தைக்காக நான் உருவாக்கியதை அவர்கள் மனதில் நிறுத்துவார்களாக.... நான் அரண்மனையில் உட்கார்ந்திருக்கும் சமயம் ஒன்றில் என்னை உருவாக்கியவரைக் குறித்து நினைத்துப் பார்த்தேன். எனது மனம் அவருக்கு என்று சொர்கத்தைத் தொடும் உயரம் கொண்ட இரண்டு ஆப்லிஸ்குகளைக் கட்டும்படி கட்டையிட்டது..... இனி வருங்காலத்தில் வரும் சந்ததி என்னுடைய இந்த நினைவுச் சின்னத்தைப் பார்த்து என்ன சொல்வார்கள் என்பதைக் குறித்தும் நான் செய்த இந்தக் காரியத்தைக் குறித்து எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பதைக் குறித்தும் நினைத்துப் பார்த்து என்னுடைய மனம் அலைபாய்கிறது.... இங்கே நான் கூறியிருப்பதை யாரும் மிகையானது என்று அறிவிக்க வேண்டாம்."
இப்ட்சடில் அவள் கட்டிய பிரம்மாண்ட கட்டிடங்களையெல்லாம் தூக்கி சாப்பிடக் கூடியவை டையர் எல்-பாரி பகுதியில் அவள் கட்டிய கோயில் கட்டிடங்கள். இந்தப் பகுதி அத்தோர் தாய் கடவுளுக்குப் பெயர் போன பகுதி. இந்தப் பகுதியில் அவள் கட்டிய அந்த அட்டகாசமான கோயிலின் பெயர் ஹெத்செப்சத் ஜிசர்-ஜிசரு. இந்தக் கோயிலில் அமூன், ரா, அனுபிஸ் மற்றும் அத்தோர் கடவுள்களுக்கான தனித் தனியான கருவறையும், அவளுடைய தந்தை துத்மோஸ் -கான கருவறையும், அவளுக்கான கருவறையும் இருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டி முடிக்க 13 வருடங்கள் ஆகியிருக்கிறது. இன்றைக்கும் எகிப்தியக் கோயில் கட்டிடக் கலையில் தனித்தும் பார்ப்பவர்களைக் கிரங்கடிக்கக் கூடியதாகவும் இருக்கிறது டையர் எல்-பாரியில் அவள் கட்டிய கோயில், கோயில் கட்டிடக் கலையில் ஒரு புதிய தொடக்கத்தையும் மாற்றத்தையும் ஒருசேர உண்டாக்கி அடுத்து வரவிருந்த பல தலைமுறைகளின் கோயில் கட்டிடக் கலையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது ஹெத்செப்சத் ஜிசர்-ஜிசரு. இந்தக் கோயிலுக்கு முன் ஐந்நூறு அடிகள் தொலைவிற்கு இரு பக்கமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெத்செப் தலைக்கொண்ட ஸ்பிங்ஸ் மிருக சிலைகள் இருக்கின்றன.
பொது வெளியில் ஆளுமைக் கொண்டவளாக ஒரு பெண் திகழ்ந்தாலும் சமூகம் அவளைச் சாதாரண இயல்புகள் கொண்ட பெண்ணாகத்தான் பார்க்கும். அதிலும் ஆணாதிக்க வெறியும், பொறாமை புகையும் கொண்ட மனங்கள் அவள் மீது அவதூறுகளைப் பரப்பாமல் இருந்துவிடுமா என்ன. பெண் மீது கள்ளத் தொடர்பு அவதூறு பரப்புவதில்தானே கள்ள மனங்களுக்குக் களியாட்ட மகிழ்ச்சி, ஹெத்செப்த் மீதும் இப்படியொரு கள்ளத் தொடர்பு அவதூறு உண்டு. பப்பைரஸ் ஆவணங்கள் இதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்றாலும் ஹெத்செப்த் டையர் எல்-பாரியில் கட்டிய சில கட்டிடங்கள் இது பற்றி மறைமுகமாகப் பேசுகிறது. ஹெத்செப்த்தின் இரகசிய காதலனாக இருக்கலாம் என்று அறியப்படுபவன் செனின்முத். அரண்மனை பப்பைரஸ் ஆவணங்கள் செனின்முத் மிகச் சிறந்த படிப்பாளி மற்றும் கலா இரசிகன் என்று நமக்கு அவனைக் குறித்து அறிமுகப் படுத்துகிறது. இவனுடைய இந்தப் படிப்பாளுமை ஹெத்செப்த்தை கவர்ந்த காரணத்தால் அவளுடைய மகளின் ஆசானாகச் செனின்முத் நியமிக்கப்படுகிறான்
ஆனால் உண்மையில் செனின்முத், ஹெத்செப்த்தின் அரசவையில் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறான். எகிப்தைப் பொறுத்தவரையில் ஒரு நபர். பாரோவின் அரசவையில் செல்வாக்கு செலுத்தியவராக இருந்தாரா என்பதை அவர் கட்டும் கட்டிடங்களை வைத்தும், பாரோவின் கல்லறைக் கோயில் கட்டிட வளாகத்தில் அந்தக் குறிப்பிட்ட நபருக்கும் கல்லறை கோயில் கட்டிக்கொள்ளும் அனுமதியும் கோயிலும் இருந்ததா என்பதை வைத்தே மிக எளிதாகக் கணித்துவிடலாம். டையர் எல்-பாரியில் ஹெத்செப்த் கட்டிய கட்டிடங்களுக்கு அருகிலேயே செனின்முத் அவனுக்கென்றுகட்டிக்கொண்டகல்லறையும், கல்லறை கோயில் கட்டிடங்களும் இருக்கின்றன. இந்தக் கட்டிடங்களில் இருக்கும் சில கல்வெட்டுக்கள், ஹெத்செப்த் எகிப்து முழுவதும் கட்டிய கட்டிடங்களும் முக்கியமாக டையர் எல்- பாரியில் எழுப்பிய கட்டிடங்கள் அனைத்தும் இவனுடைய இரசனையின் வெளிப்பாடு என்று சொல்கின்றன. இந்த அனைத்துக் கட்டிடங்களின் கட்டுமான வேலைகளையும் அடி முதல் முடிவரை தன்னுடைய முழக் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறான் செனின்முத். இந்தச் செயல்பாடுகள் அன்றைய எகிப்து முழுவதும் இருவருக்கும் இடையில் அது 'ப்பா என்று ஊரறிந்த இரகசியமாகக் கிசுகிசுக்க வைத்திருக்கிறது.
இந்தக் கிசுகிசுப்பிற்கு வரலாற்று ஆதாரமாக டையர் எல்-பாரியில் செனின்முத் அவனுக்கென்று கட்டிக் கொண்ட ஒரு கட்டிடத்திலிருக்கும் ஓவியத்தைக் காட்டுகிறார்கள் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். அந்த ஓவியத்தில் இரண்டு உருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஆண் மற்றதுப் பெண். இரண்டு உருவங்களும் மிக நெருக்கமாக இருக்கின்றன. நெருக்கமாக என்றால் 'நெருக்கமாகத்தான்'. இந்த ஓவியம் குறித்துச் செனின்முத்தே கூட அறியாமல்தான் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் இது எவர் கண்ணிலும் பட முடியாத இடத்திலிருக்கிறது. மற்றொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது எதேச்சையாக இந்த ஓவியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். செனின்முத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அவனுடைய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஓவியர்கள், ஓய்வாக உட்கார்ந்து ஊர் கதைப் பேசுகின்ற சமயம் ஒன்றின் போது விளையாட்டாக இந்த ஓவியத்தை வரைந்து பார்த்து தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்திருக்கலாம் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி ஒரு சுவாரசியமான விளக்கம் தருகிறார்கள்.
இரகசியக் காதலன் என்கிற அளவில் ஹெத்செப்த்திடம் மிக நெருக்கமாக இருந்த செனின்முத் பல ஆண்டுகள் கழித்து எத்தகைய அடையாளமும் இல்லாமல் திடீரென்று வரலாற்றின் கண்களிலிருந்து மறைந்துப்போய்விட்டான். எகிப்தின் முதல் பெண் பாரோவாக இருந்த வலிமைப் படைத்த நபருக்கு மிக நெருக்கமான ஒரு நபர் எப்படி எத்தகைய வரலாற்றுச் சுவடுகளும் இல்லாமல் காணாமல் போக முடியும் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிலர், ஹெத்செய்த்திற்கு அவன் மீதிருந்த மோகம் தீர்ந்துவிட்ட காரணத்தால் அவன் மிகச் செல்வாக்கான நிலையிலிருந்து சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். சிலர், அவனே அரசாங்க காரியங்களிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டிருக்கலாம் என்கிறார்கள். சிலர், அவன் இயற்கையாக மரணமடைந்துவிட்டிருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ செனின்முத் வந்த சுவடும் போன சுவடும் தெரியாமல் இருந்தாலும் அவன் இருந்த சுவடு மட்டும் அவனுடைய கட்டிடங்கள் வாயிலாக நமக்குத் தெரியவருகிறது. இவன் போன சுவடுதான் தெரியவில்லை அது சாமானியனுக்கு நேரும் விதி என்றால் ஹெத்செப்த்திற்கு இறுதியில் என்ன ஆனது என்பது கூட வரலாற்றின் கண்களிலிருந்து மறைந்தே இருக்கிறது. இது பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு பாரோவாக ஹெத்செப்த் செய்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தைப் பார்த்துவிடலாம்.
புண்ட் என்கிற இடம் குறித்து அறிந்து கொள்வதில் இன்றையிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த மக்களினம் அனைத்திற்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருந்தது. எகிப்தியர்களுக்கும் அந்த ஆசை இருந்திருக்கிறது. ஹெத்செப்த்திற்கு முன்பு எந்த ஒரு பாரோவும் இந்த ஆசையை நிறைவேற்றும் காரியத்தில் ஈடுபடவில்லை, எகிப்தை வல்லரசாக மாற்றிய ஹெத்செப்த்தின் தந்தையான துட்மோஸ் | கூட இந்த ஆசையை நிறைவேற்ற ஏதும் செய்யவில்லை, ஹெத்செப்த் இந்த ஆசையை நிறைவேற்றி வரலாற்றில் தனக்கென ஒரு நீங்காத இடம் பிடிப்பது என்று முடிவு செய்திருக்கவேண்டும். புண்ட் நிலம் எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடித்து அந்த நில மக்களுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டால் ஹெத்செப்த், அவள் உள்நாட்டில் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டும் காரியத்தில் மிகுந்த கவனம் செலுத்தினாலும் வெளியுறவுக் கொள்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை.
அவளுக்கு முன்பு எந்த ஒரு பாரோவும் செய்திடாத அளவிற்கு உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு வணிகத்தை மிகப் பெரும் அளவில் வளர்த்தெடுத்தால் ஹெத்செப்த், இதன் காரணமாக எகிப்தில் பொருளாதாரம் மிகச் சிறந்த இடத்திலிருந்தது. எகிப்தில் பணப் புழக்கம் கரை புரண்டு ஓடியது. ஆபத்தை ஏற்படுத்தாத வகையில்தான். அவள் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஹெத்செப்த்தின் ஆட்சியை எகிப்தின் பொற்காலங்களில் ஒன்று என்று கூடச் சொல்லலாம். வெளிநாட்டு வணிகத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே புண்ட் நிலத்திற்கான தேடல் பயணமும். புண்ட் நிலப் பகுதி எங்கிருந்தது அல்லது அது இன்றைக்கு எந்தப் பகுதியாக இருக்கும் என்பதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே மிகப் பெரும் அக்கப்போரே நடந்துவருகிறது. அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வணிகப் பொருட்களாகத் தரப்படும் பொருட்களின் பெயரை வைத்து அந்த நிலம் தென்னிந்தியப் பகுதியாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். அனுமானம் மட்டுமே இது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஹெத்செப் தன் நேரடி ஆணையின் கீழ் அனுப்பிவைத்த வணிகக் குழு புண்ட் நிலத்தைக் கண்டுபிடித்து அடைந்து மீண்டும் எகிப்திற்குத் திரும்பிய கப்பலில் பல அரிதான - எகிப்தியர்கள் அதுவரை கண்டிராத - பல பொருட்களை எடுத்து வந்து ஹெத்செப்த்திடம் கொடுத்ததாக டையர் எல்-பாரியில் இருக்கும் ஒரு கட்டிடக் கல்வெட்டு ஓவியம் நமக்குத் தெரிவிக்கிறது. ஹெத்செப்த்தின் இந்த வரலாற்று வெற்றி, அவளுடைய தந்தை உருவாக்கிய எகிப்திய வல்லரசு எல்லாவகையிலும் வல்லரசுதான் என்கிற செய்தியை உலக நாடுகளின் மனங்களில் ஆணியாக அடித்து இறக்கியது.
இத்தகைய அரசியல் வெற்றிகள் ஹெத்செப்த்தை தான் ஒரு ஆண்பாரோ போன்றவள் என்றே உணரவைத்திருக்கிறது. அவளுடைய பல புடைப்புச் சிற்பங்களும் ஆளுயர சிலைகளும் ஆணின் உடலமைப்பிலேயே இருக்கிறது. இது ஆணுக்குத் தான் எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை என்கிற செய்தியை அவளுக்கு எதிராக நொள்ளை நொரநாட்டியம் பேசிக்கொண்டிருந்தவர்களுக்குக் கொடுத்தபடி இருந்திருக்கிறது. 'என்னாது பாரோ ஒரு பொம்பளையா என்னங்கடா இது கொடுமை, கல்யாணத்தைப் பண்ணமா புள்ளையப் பெத்தமா அந்தப்புரத்துக்குப்போய்க் குப்புறப் படுத்தோமா விதி வந்தா மம்மியாகிப் போய்ச் சேந்தோமான்னு இல்லாம, எதுக்கு இவளுக்கு இந்த வேல' என்று ஊருக்கு வெத்து வக்கனைப் பேசிய நான்கு வாய்களின் வாயில் தன் வரலாற்று வெற்றிகளின் மூலம் மண்ணை அள்ளிப்போட்டாள் ஹெத்செப்த் ஊரார்களின் பொறாமைகளுக்குப் பதிலடிக்கொடுத்த அவளால் அரண்மனையில் தோன்றிய ஒரு பொறாமைக்கு எந்த வித பதிலடியும் கொடுக்க முடியாமல் போனது.